Published:Updated:

``என் காதலி நல்லவள். ஆனால் அவளுடைய அலுவலக நண்பர்கள்..?'’’- வாசகர் பிரச்னைக்கு நிபுணரின் ஆலோசனை

''எனக்கு மரியாதை கொடுத்துப் பழகுவதாக இருந்தால் நம்முடைய நட்பு தொடரும். இல்லையென்றால் வெறும் சகஊழியராக மட்டும் பழகலாம் என்று சொல்லிவிடு.''

Love
Love

''நான் மென்பொருள் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறேன். இதற்கு முன் நான் வேலைபார்த்த அலுவலகத்தில், என்னுடன் பணிபுரிந்த பெண்ணைக் காதலிக்கிறேன். எங்கள் பெற்றோர்களும் திருமணத்துக்கு சம்மதித்துவிட்டார்கள். வரும் ஏப்ரலில் திருமணம். இந்த நேரத்தில் என் மனதுக்குள் எக்கச்சக்க போராட்டங்கள்.

அவளை நான் மிகவும் நேசிக்கிறேன். அவளும் அப்படித்தான். அதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், அவள் எந்நேரமும் வாட்ஸ அப்பில் தன் நண்பர்களுக்கு மெசேஜ் செய்துகொண்டிருப்பதுதான் வருத்தமாக இருக்கிறது. இதில் திருமணமான ஆண்களும் அடக்கம். ஒரு நண்பனை 'மச்சி' என்று அழைத்து மெசேஜ் அனுப்புகிறாள். அவளுடைய போனை எடுத்து மெசேஜ்களைப் படிப்பது தவறுதான். என்ன செய்வது?

love
love

இரவு 11 மணிக்கு மேலும்கூட, ஏன் சில நாள்களில் விடியற்காலையில்கூட தன் நண்பர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறாள். கேட்டால், அலுவலக போன் கால் என்கிறாள். ஒரு முறை இதுபற்றி அவளிடம் வெளிப்படையாகவே பேசிவிட்டேன். 'அவர்கள் எல்லாம் எனக்கு நிறைய உதவி செய்பவர்கள்' என்கிறாள்.

காதலி இப்போது வேலைபார்க்கும் அலுவலகத்தில்தான், நான் இதற்கு முன் வேலைபார்த்தேன் என்பதால், அவள் தன் நண்பர்கள் எனக் குறிப்பிடுகிற நபர்கள் எல்லாம், பெண்கள் விஷயத்தில் என் காதலி நினைப்பதுபோல நாகரிகமானவர்கள் இல்லை என்பதும், திருமணமான பெண்களைக்கூட தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பவர்கள் என்பதும், அவர்களுடன் பழகியவன் என்ற முறையில் எனக்கு நன்கு தெரியும். ஆனால், இவற்றையெல்லாம் என்னவளிடம் சொன்னால், 'அப்போ நீயும் அப்படித்தானா?' என என்னையும் நினைத்துவிடுவாளோ என்ற எண்ணம், அவளிடம் அவர்களைப் பற்றிச் சொல்வதிலிருந்து என்னைத் தடுக்கிறது.

என் காதலியாகவே ஒருமுறை, தன் ஆண் நண்பர்கள் சில முறை தேவையற்ற வார்த்தைகளை தன்னிடம் பேசினார்கள் என்று என்னிடம் பகிர்ந்திருக்கிறாள். 'அவர்களிடம் பேசாதே' என்றேன். கேட்டுக்கொண்டாள். ஆனால், அடுத்த சில நாள்களில் மறுபடியும் பேச ஆரம்பித்துவிட்டாள். 'அவர்கள் மன்னிப்பு கேட்டுவிட்டார்கள், அதனால்தான் பேசுகிறேன்' என்றாள். இப்படிப், பல முறை அவள் நண்பர்களுடன் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டு விலகுவது, பின்னர் மீண்டும் பேசுவது என்று இருக்கிறாள்.

என் காதலி மிகவும் நல்லவள். என் நம்பிக்கைக்கு உரியவள். அதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், அவளுடன் பழகுகிற ஆண்கள் அப்படிப்பட்டவர்கள் இல்லை. அதை எப்படி இவளுக்குப் புரியவைப்பது? விரைவில் என் மனைவியாகப் போகிறவளுக்கு 100% பாதுகாப்பை உறுதிசெய்யவே நினைக்கிறேன். இந்தப் பிரச்னையிலிருந்து நான் மீண்டு வர உதவி செய்யுங்களேன்.''

பெயர் வெளியிட விரும்பாத வாசகர்.

love vs smart phone
love vs smart phone

சமீபகாலமாக விகடன் டாட் காமில், வாசகர்களின் உறவுகள் தொடர்பான பிரச்னைகள் மற்றும் சந்தேகங்களுக்கு உளவியல் நிபுணர்களிடம் பேசி, தீர்வுகளை வெளியிட்டுக்கொண்டிருக்கிறோம். தங்கள் பிரச்னைகளை வாசகர்கள் uravugal@vikatan.com என்ற மெயில் ஐடிக்கு அனுப்பலாம். பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகர்கள் அதையும் உங்கள் மெயிலில் குறிப்பிட்டு அனுப்புங்கள். இனி, இங்கு இடம்பெற்றுள்ள இந்த வாசகரின் பிரச்னைக்கான தீர்வாக, உளவியல் ஆலோசகர் சரஸ் பாஸ்கர் கூறுவதைப் பார்க்கலாம்.

'' 'என் காதலி மிகவும் நல்லவள், என் நம்பிக்கைக்கு உரியவள்' என்று நீங்களே குறிப்பிட்டிருப்பதால் இதுவொரு பிரச்னையே இல்லை. அடுத்து, உங்கள் காதலியின் இடத்திலிருந்து சில கருத்துகளை உங்களுக்குத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

வேலைக்குச் செல்லும் பெண்கள், பணிபுரியும் இடத்தில் ஆண், பெண் வித்தியாசமில்லாமல் அனைவரிடமும் சகஜமாகப் பேசிப் பழகுவது இயல்பான விஷயம்தான். ஒருவேளை உங்கள் காதலி கலகலப்பான சுபாவம் கொண்டவராக இருந்தால், சகஜமாகப் பேசிப்பழகுவது சற்று அதிகமாகவும் இருக்கலாம். அதனால், இந்த விஷயத்தில் நீங்கள் பயப்படும் அளவுக்கு இதை ஒரு பெரிய பிரச்னையாக உங்கள் காதலி பார்க்காமல் இருக்கலாம். அல்லது எந்தச் சூழலையும் தன்னால் சமாளித்துவிட முடியும் என்ற தைரியத்தில்கூட அந்த ஆண் நட்புகளைத் தொடர்ந்துகொண்டிருக்கலாம்.

'' 'அவர்கள் எனக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார்கள். அதனால்தான் அவர்களை மன்னித்து மறுபடியும் நட்பை தொடர்கிறேன்' என்று உங்கள் காதலி சொல்வதிலும் நியாயம் இருக்கிறது.''
உளவியல் நிபுணர் சரஸ் பாஸ்கர்

தன்னுடன் பணிபுரியும் நண்பர்கள் தன்னிடம் தவறான வார்த்தைகளை உபயோகித்ததை உங்கள் காதலியே உங்களிடம் கூறியிருக்கிறார். இதன்மூலம் தனக்கு நடந்தவற்றை உங்களிடம் பகிர்கிற இயல்பு அவருக்கு இருப்பது புரிகிறது. இன்னொரு முறை இதே போன்றதொரு சம்பவம் நடக்கும்போது, உங்கள் காதலியிடம் 'குறிப்பிட்ட அந்த ஆணின் நட்பில் நீயே சில எல்லைக்கோடுகளை வகுத்துக்கொள். 'எனக்கு மரியாதை கொடுத்துப் பழகுவதாக இருந்தால் நம்முடைய நட்பு தொடரும். இல்லையென்றால் வெறும் சகஊழியராக மட்டும் பழகலாம்' என்று சொல்லிவிடு. எனக்கு உன் மரியாதை மிகவும் முக்கியம். அது எந்த வகையிலும் அடக்குமுறை அல்ல, என் அன்பின் வெளிப்பாடு என்பதைப் புரிந்துகொள்' என்று சொல்லுங்கள். இதன் மூலம் உங்கள் காதலியின் பாதுகாப்பு மற்றும் மரியாதையின் மீது உங்களுக்கு இருக்கிற அக்கறையை அவருக்குப் புரிய வைக்கலாம்.

'அவர்கள் எனக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார்கள். அதனால்தான் அவர்களை மன்னித்து மறுபடியும் நட்பை தொடர்கிறேன்' என்று உங்கள் காதலி சொல்வதிலும் நியாயம் இருக்கிறது. ஆனால், இந்த இடத்தில்தான் அந்த ஆண்களுடைய தவறான இயல்புகளைப் பற்றி நீங்கள் சொல்ல வேண்டியதும் அவசியமாகிறது. இது கொஞ்சம் சிக்கலான விஷயம்தான். அப்படிச் சொல்லும்போது, நீங்கள் அவரை சந்தேகப்படுவதாக உங்கள் காதலி நினைத்துக்கொள்ளலாம். அல்லது நீங்கள் அவரை அடக்கியாள நினைப்பதாக நினைக்கலாம். மேலும் உங்களுக்கு, 'அந்த ஆண்களின் சுயரூபத்தை பற்றிச் சொன்னால், என்னையும் தவறாக நினைத்துவிடுவாளோ' என்ற அச்சமும் இருக்கிறது.

உளவியல் நிபுணர் சரஸ் பாஸ்கர்
உளவியல் நிபுணர் சரஸ் பாஸ்கர்

பொதுவாக சில ஆண்கள் தங்கள் நண்பர்களுடன் இருக்கும்போது, பெண்களைப் பற்றி தரக்குறைவாகப் பேசுவது, அவர்களைத் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பது என்று இருப்பார்கள். உங்களுடைய பழைய அலுவலக நண்பர்களும் அப்படிப்பட்டவர்கள்தாம் என்று நீங்கள் கூறுகிறீர்கள். 'நண்பனைத் திருமணம் செய்துகொள்ளப்போகும் பெண்ணிடமும்கூட அவர்கள் அப்படித்தான் நடந்துகொள்வார்களா' என்று உங்கள் காதலிக்குக் குழப்பமோ, உங்கள் மீது கோபமோ ஏற்படலாம். அப்போது அவரை மிகவும் கவனமாகக் கையாள வேண்டும்.

ஒருவேளை, அவர்களுடன் நீங்கள் சேர்ந்து பணியாற்றியபோது, நீங்களும் அப்படியான ஓர் இயல்புடன்தான் இருந்தீர்கள் என்றால், ஒரு பாவமன்னிப்பாக அதை உங்கள் காதலியிடம் தெரிவித்து, 'எனக்கென ஒரு பெண் வரப்போகிறாள் எனும்போதுதான், மற்ற பெண்களுக்கான மரியாதையையும் கொடுக்க வேண்டும் என்று உணர்ந்து திருந்திவிட்டேன்' என்று சொல்லுங்கள். அதன்படியே திருந்தியிருப்பீர்கள் என்று நம்புகிறேன். பின்னர், என்னதான் தோழி என்று நேரில் உருகினாலும், பல ஆண்களுடனும் இயல்பான நட்பில் இருக்கும் பெண்களைப் பற்றி, பொதுவாக ஆண்கள் எப்படியான எண்ணவோட்டம் கொண்டிருப்பார்கள் என்பது பற்றி உங்கள் காதலியிடம் கவனமான வார்த்தைகளில் பேசுங்கள். கொஞ்சம் நிதானம், தெளிவான அணுகுமுறை என்று யோசித்து சமயோஜிதமாகச் செயல்படுங்கள்.

couple
couple

இங்கு குறிப்பிடப்பட வேண்டியது, ஆண்கள் அனைவருமே தங்கள் தோழிகளிடம் மனதில் அழுக்குடன்தான் பழகுவார்கள் என்று இல்லை. தூய்மையான அன்புடனும், பரிசுத்தமான நட்புடனும், பெற்றோரை போன்ற பாதுகாப்பு உணர்வைத் தரக்கூடிய அக்கறையுடனும், அவர் மரியாதைக்கு எந்த இழுக்கும் வந்துவிடக் கூடாது என்ற கவனத்துடனும் தங்கள் தோழிகளை பார்த்துக்கொள்ளும் ஆண்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு தம்ப்ஸ் அப்!

சரி உங்களின் அடுத்த பிரச்னைக்கு வருவோம். இரவு நேரங்களில் மெசேஜ் அனுப்பிக்கொண்டிருப்பது. உங்கள் தலைமுறையில் கிட்டத்தட்ட எல்லோருமே இந்தப் பிரச்னையை சந்தித்துக்கொண்டிருக்கிறீர்கள். திருமணம், வீடு, அலுவலகம், குடும்பம், குழந்தை என்று நேர நெருக்கடி வரும்போது இந்தப் பிரச்னை சரியாகலாம் அல்லது குறையலாம். இப்போதைக்கு, திருமணத்துக்குப் பிறகு, இரவு நேரங்களில் தேவையில்லாத போன் கால்கள், மெசேஜ்கள் அனுப்பாமல், நீங்கள் அவருக்கு முன்மாதிரியாக இருந்து, பிரச்னையைச் சரிசெய்ய முயலலாம்.

ஒருவேளை, அவர்களுடன் நீங்கள் சேர்ந்து பணியாற்றியபோது, நீங்களும் அப்படியான ஓர் இயல்புடன்தான் இருந்தீர்கள் என்றால், ஒரு பாவமன்னிப்பாக அதை உங்கள் காதலியிடம் தெரிவித்து, 'எனக்கென ஒரு பெண் வரப்போகிறாள் எனும்போதுதான், மற்ற பெண்களுக்கான மரியாதையையும் கொடுக்க வேண்டும் என்று உணர்ந்து திருந்திவிட்டேன்' என்று சொல்லுங்கள்.''
உளவியல் நிபுணர் சரஸ் பாஸ்கர்

உறவுகளில் சிக்கல்கள் ஏற்படுவது இயல்பான ஒன்று. அந்தச் சிக்கல்களை சரிவர கையாண்டு, உறவை விட்டுக்கொடுக்காது சரிசெய்துகொள்ளுதலே அழகு. காதல் மற்றும் திருமண உறவுகளில் ஏற்படும் குழப்பங்களை கையாள்வதற்கு பொறுமையும், எந்தக் காரணத்தைக் கொண்டும் உறவை இழந்துவிடக் கூடாது என்ற நிதானமும் அவசியம். உங்கள் திருமணத்துக்கு எனது அட்வான்ஸ் வாழ்த்துகள்!''

Love
Love