குளியல், பல் துலக்குதல், நோ லிப் கிஸ்... கொரோனா காலத்தில் பாதுகாப்பான தாம்பத்யம்! #LetsSpeakRelationship

``குறித்த தேதியில் முடித்தே ஆக வேண்டுமென்பதற்காக, இந்தக் கொரோனா நேரத்தில் திருமணம் செய்து வைத்தால், சம்பந்தப்பட்டவர்களிடையே திருமணமான புதிதில் இருக்கிற அந்நியோன்னியம் குறைந்துதான் காணப்படும்.''
``கொரோனா பிரச்னை வந்ததிலிருந்து தாம்பத்ய உறவில் நிம்மதியாக ஈடுபட முடிவதில்லை. நான், என் மனைவி இருவருமே வேலைபார்ப்பவர்கள் என்பதால் இன்னும் பயமாக இருக்கிறது. பயந்து பயந்து உறவில் ஈடுபட்டாலும் கொரோனாவுக்கு முந்தைய காலகட்டம் போல அதிலொரு நிறைவு இருப்பதில்லை. நாங்களாவது பரவாயில்லை, திருமணம் முடித்து பல வருடங்கள் ஆகிவிட்டன. இந்த லாக்டெளன் நேரத்தில் திருமணம் முடித்த இளம் தம்பதிகளின் நிலைமையை நினைத்துப் பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு இருக்கிறதா..?"

விகடனின் uravugal@vikatan.com என்ற மெயிலுக்கு வாசகர்கள் தங்களுடைய ரிலேஷன்ஷிப் தொடர்பான பிரச்னைகளை அனுப்பி வைத்து அதற்கான தீர்வுகளைக் கேட்பார்கள். அப்படி வந்த மெயில் ஒன்றுக்குத் தீர்வு சொல்கிறார் பாலியல் நிபுணர் மருத்துவர் டி.நாராயண ரெட்டி.
``கொரோனா வைரஸ், உலகத்துக்குள் அடியெடுத்து வைத்ததில் இருந்து பல பிரச்னைகளை ஏற்படுத்தி வருகிறது. அதில், தம்பதிகளுக்கு இடையேயான நெருக்கம் பற்றிய பயமும் ஒன்று. வெளிப்படையாகக் கேட்பதற்கு தயக்கப்படுகிற கேள்வியைத் தைரியமாகக் கேட்டிருக்கிறீர்கள். நல்ல விஷயம்.
கணவன் - மனைவியே என்றாலும் நெருக்கமாகப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் மாஸ்க் போட்டுக்கொள்ளுங்கள். கைகளைப் பிடித்துக்கொண்டு பேசுகிறீர்கள் என்றால், சானிட்டைசர் தடவிக்கொள்ளுங்கள். வேறு வழியில்லை. நியூ நார்மலில் இதுவும் ஒன்று.
வாய் மற்றும் மூக்கு வழி வெளியேறுகிற நீர்த்துளிகளால்தான் கொரோனா வைரஸ் பரவும் என்பதால், உதட்டு முத்தத்தைத் தவிர்த்து விடுவதே பாதுகாப்பு. குழந்தைக்காகத் திட்டமிடுகிறவர்கள் தவிர்த்து, மற்றவர்கள் உறவின்போது பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றுங்கள்.
உங்கள் இருவருக்கும் கொரோனா இல்லையென்பது, சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெரிந்தால் பயப்படாமல் தாம்பத்ய உறவு கொள்ளலாம்.
வழக்கமான காய்ச்சலுக்கான அறிகுறிகளும் கொரோனாவுக்கான அறிகுறிகளும் ஒரே மாதிரி இருப்பதால், இருவரில் ஒருவருக்கு காய்ச்சல், இருமல் போன்ற பிரச்னைகள் இருந்தாலும் உறவைத் தவிர்த்து விடுவதே புத்திசாலித்தனம்.

தினமும் வேலைக்குச் சென்று வரும் தம்பதியர் என்றால், வீட்டுக்கு வந்தவுடனே குளித்து விடுங்கள். அலுவலகத்தில் இருமிக்கொண்டிருந்த ஒரு நபர் மாஸ்க்கை கீழே இறக்கிவிட்டு, உங்களிடம் பேசியதாக சந்தேகம் வந்தாலோ, அலுவலகம் சென்ற அன்று திடீரென ஜலதோஷம் வந்தாலோ அன்றைக்கு உறவில் ஈடுபடாதீர்கள். பயந்து பயந்து ஈடுபடுகிற தாம்பத்ய உறவில் எந்த நிறைவும் கிடைக்காது.
தினசரி அலுவலகம் சென்று வருவதால் கொரோனா வருவதற்கு வாய்ப்பு குறைவுதான். ஏனென்றால், அலுவலகத்தில் முகத்துக்கு மாஸ்க், சமூக இடைவெளி என்று பெரும்பாலும் கவனமாகவே இருப்போம். ஆனால், காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட் போன்ற கூட்ட நெரிசலான இடங்களுக்குச் சென்று வரும்போதுதான் கொரோனா வைரஸ் பரவுவதற்கு வாய்ப்பு அதிகம்.

வெளியில் இருந்து வீட்டுக்கு வந்தவுடன் குளியல், இரவு படுக்கச் செல்வதற்கு முன்னால் பல் துலக்குதல், உதட்டு முத்தமில்லாத தாம்பத்யம் ஆகியவையுடன் பயமில்லாமல் வாழுங்கள்.
லாக்டெளன் நேரத்தில் திருமணம் செய்தவர்களின் நிலைமை குறித்து வருத்தப்பட்டிருந்தீர்கள். அது மிகவும் சரி. குறித்த தேதியில் முடித்தே ஆக வேண்டுமென்பதற்காக, இந்தக் கொரோனா நேரத்தில் திருமணம் செய்து வைத்தால், சம்பந்தப்பட்டவர்களிடையே திருமணமான புதிதில் இருக்கிற அந்நியோன்யம் குறைந்துதான் காணப்படும். என்னைப் பொறுத்தவரை, இந்த வருடத்தின் கடைசி வரை திருமணங்களை நடத்தாமல் இருப்பதே பாதுகாப்பு."