Published:Updated:

``கல்யாணத்துக்குப் பிறகும் லவ் புரொபோஸல் வருது..!'' - வழிகாட்டும் ஃபாத்திமா பாபு

''உலகத்துல சில உயிரினங்கள் தன்னோட இணையைத் தவிர, வேறொரு இணையோட சேரவே சேராது. அதோட உடற்கூறியல் அமைப்பு அப்படி.''

திருமணமும் காதலும்
திருமணமும் காதலும்

கிரஷ்ஷும் லவ்வும் திருமணத்துக்கு முன்னால் வருகிற விஷயங்கள் என்றுதான் சில வருடங்கள் முன்புவரை நம்பிக்கொண்டிருந்தோம். ஆனால், அவையிரண்டும் தற்போது திருமணம், குழந்தைகள் என்றானபின்கூட வர ஆரம்பித்திருக்கின்றன. இதற்கு ஆண், பெண் என்ற பேதமும் இல்லையென்ற நிலைதான் தற்போது...

திருமணமான பெண் ஒருவர், 'கணவர், இரண்டு குழந்தைகள் என்று நிம்மதியாக வாழ்ந்துகொண்டிருக்கிறேன். இந்த நிலையில், நெருங்கிய நண்பனிடமிருந்தே எதிர்பாராத லவ் புரொபோஸல் வந்திருக்கிறது. என்ன செய்வது' என்று, சமீபத்தில் தன் முகநூல் சுவரில் வருத்தப்பட்டிருந்தார். இதுபோன்ற காதல்களை திருமணமான பெண்களும் சரி, ஆண்களும் சரி, எப்படி ஹேண்டில் செய்வது என்று ஃபாத்திமா பாபுவிடம் கேட்டோம்.

''இந்த விஷயத்தை, மத்தவங்களுடைய பர்சனல் விஷயமாகத்தான் நான் முதல்ல பார்ப்பேன். திருமணப் பந்தத்துக்குள்ள இருக்கிற ஒரு பெண்ணுக்கு, இப்படி வெளியில இருந்து ஒரு லவ் புரொபோஸல் வந்தா, 'அதுல தனக்கு விருப்பமில்லை'ங்கிறதை முடிவு செய்றதும் 'நோ'ன்னு முகத்துக்கு நேரா சொல்றதும் அவங்க கையிலதான் இருக்கு. ஸோ, சம்பந்தப்பட்டப் பெண்களே இதை எப்படிச் செய்றதுன்னு முடிவு செஞ்சுக்கட்டும்.

ஃபாத்திமா பாபு
ஃபாத்திமா பாபு
facebook

இதையும்தாண்டி, 'ஒரு கைடன்ஸ் வேணும்'னு கேட்கிறவங்களுக்குச் சொல்றேன். கணவன், குழந்தைன்னு இருக்கிற ஒரு திருமணமான பொண்ணுக்கிட்ட வேறொரு ஆண் 'ஐ லவ் யூ' சொன்னா, ஒரு பாஸ் பட்டனை அழுத்திட்டு உங்க மனசை கொஞ்சம் கவனியுங்க.

இன்னமும் ஒரு ஆணைக் கவர்ற அளவுக்கு தன்கிட்டே அழகும் இளமையும் இருக்குன்னு சந்தோஷப்படறீங்கன்னு அர்த்தம்.
Woman
Woman

உங்களுக்கே தெரியாம மனசுக்குள்ள மெல்லிசா ஒரு பெருமை வருதான்னு கவனியுங்க. வந்துச்சுன்னா, நீங்க அந்த புரொபோஸலை விரும்பறீங்கன்னு அர்த்தம். இதன்மூலமா, இன்னமும் ஒரு ஆணைக் கவர்ற அளவுக்கு தன்கிட்டே அழகும் இளமையும் இருக்குன்னு சந்தோஷப்படறீங்கன்னு அர்த்தம். இதை ஓவர்கம் பண்ணி வந்துட்டீங்கன்னாலே, நீங்க பிரச்னைன்னு நினைக்கிற விஷயம் வராமலே போயிடலாம்.

இப்படியொரு அனுபவத்தை ஆண் ஒரு சாதனையா, தன் கிரீடத்துல சேர்ந்த ஒரு விலைமதிப்பான கல்லா, அழகான இறகாத்தான் பார்ப்பான்.
Love
Love

அடுத்து, புற அழகை புறம் தள்ளுற மனப்பான்மை. இன்னிக்கு இந்தப் பக்குவம் நிறைய பேர்கிட்டே இருக்கு. அதே நேரம், புற அழகு மனிதர்களுடைய மனங்களைப் பேதலிக்க வைக்கக்கூடியதுன்னு எல்லோருக்குமே தெரியும். அதனால, லவ் சொல்ற ஆண் கமல்ஹாசன் மாதிரி இருந்தா என்ன சொல்வோம், பார்க்கிறதுக்கு அழகோ வசீகரமோ இல்லாத ஒரு ஆண் லவ் சொன்னா என்ன சொல்வோம் அப்படிங்கிறதை யோசிச்சுப் பாருங்க. இதுல இருந்து, உங்க மனசு புற அழகுல மயங்குதான்னு உங்களுக்கே தெரிஞ்சுடும். இதையும் ஓவர்கம் பண்ண முயற்சி செய்யுங்க.

இதையும்தாண்டி, இன்னொரு விஷயம் சொல்றேன். உலகத்துல சில உயிரினங்கள் தன்னோட இணையைத் தவிர, வேறொரு இணையோட சேரவே சேராது. அதோட உடற்கூறியல் அமைப்பு அப்படி. ஆனா, மனித இனம்கிறது ஒரேயொரு துணையோட மட்டுமே சேர்ற மாதிரி வடிவமைக்கப்படலை. இந்த நிதர்சனத்தையும் புரிஞ்சுக்கோங்க'' என்றவரிடம், இதே சம்பவம் ஒரு ஆணுக்கு நிகழ்ந்தால் எப்படி ஹேண்டில் செய்வது என்றோம்.

Couple
Couple

'திருமணத்துக்கு வெளியே இருந்து ஒரு ஆணுக்கு காதல் கிடைக்குதுன்னா, அதை எந்த ஆணுமே தவறவிட மாட்டாங்க. இப்படியொரு அனுபவத்தை ஆண் ஒரு சாதனையா, தன் கிரீடத்துல சேர்ந்த ஒரு விலைமதிப்பான கல்லா, அழகான இறகாத்தான் பார்ப்பான். பெண்களுக்கு மட்டும்தான் இந்தக் குழப்பம், பயம் எல்லாமே... அதனால, இந்த விஷயத்துல உங்க உள்ளுணர்வு என்ன சொல்லுதோ அதைக் கேளுங்க. அது உங்களுக்கு எப்பவுமே கஷ்டம் கொடுக்காது, கஷ்டத்துலேயும் தள்ளாது'' என்று முடித்தார் ஃபாத்திமா பாபு.