ரோல் சேஞ்ச் முதல் சாப்பிடும் முறைவரை... லாக்டவுணில் குடும்பத்தில் சந்தோஷம் பெருக 5 டாஸ்க்குகள்!

"கொரோனா கொடுமையானதுதான். கொல்கிறதுதான். முடக்கிப்போட்டுவிட்டது, அச்சுறுத்துகிறது எல்லாம் சரி. கூடவே மற்றொன்றும் செய்திருக்கிறது."
`உறவுகள் மேம்பட', `மனதோடு ஒரு சிட்டிங்', `உஷார் உள்ளே பார்' போன்ற மனிதவள மேம்பாட்டு நூல்களை எழுதிய சோம.வள்ளியப்பன் `எமோஷனல் இன்டெலிஜென்ஸ்' குறித்து 6 ஆண்டுகள் ஆய்வுசெய்து பிஹெச்.டி பட்டம் பெற்றவர். 700-க்கும் மேற்பட்ட பயிற்சி வகுப்புகளும் நடத்தியவர். லாக்டவுண் நாள்களில் குடும்பத்தில் உறவுகள் மேம்பட செய்ய வேண்டியவை பற்றிய ஆலோசனைகளைத் தருகிறார் அவர்.
``அடிக்கடி இல்லாவிட்டாலும் அவ்வப்போது கேள்விப்படும் ஒரு வார்த்தை `க்வாலிட்டி டைம்’. க்வாலிட்டி டைம் என்றால், `தரமான நேரம்' என்பது நேரடி மொழிப்பெயர்ப்பு. ஆனால், பொருள் என்னவென்றால், முழுவதும் சரியான முறையில் செலவு செய்யப்படும் நேரம்.

பரபரப்பான வாழ்க்கையில் பலருக்கும் பற்றாக்குறையாக இருக்கும் ஒரு வளம்.
கிடைக்கும் நேரத்தை எல்லாம் வேலை, தொழில், வியாபாரத்தில் ஈடுபடுத்திவிட்டு, மீதமிருக்கும் நேரத்தில் பயணம் போன்ற அதன் துணை வேலைகளில் செலவு செய்துவிட்டு, குடும்பத்தினருடன் செலவுசெய்ய நேரமில்லாமலேயே ஓடுகிறது பலரின் வாழ்க்கை.
அதற்கு இப்போது போடப்பட்டிருக்கிறது ஒரு பிரேக்.
கொரோனா கொடுமையானதுதான். கொல்கிறதுதான். முடக்கிப்போட்டுவிட்டது, அச்சுறுத்துகிறது எல்லாம் சரி. கூடவே மற்றொன்றும் செய்திருக்கிறது.
ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே இருக்கவேண்டிய கட்டாயம். வெளியில் போக முடியாது, கூடாது. இந்த நிலையை வாய்ப்பாகவும் பார்க்கலாம். ஆமாம், இந்த நேரம்தான் குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே வீட்டில் ஒன்றாக இருக்க முடிகிறது. பள்ளி, கல்லூரி, அலுவலகம் இல்லை. இப்படி எல்லோருக்கும் ஒன்றாக நேரம் கிடைப்பது மிக மிக அரிது. இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

குடும்பத்தில் அனைவரும் வீட்டிலிருக்கும் இந்நேரத்தில், முன்போலவே அவரவர் வேலைகளைச் செய்யக்கூடாது. சிலர் தொலைக்காட்சிப் பெட்டியுடனேயே இருப்பார்கள். சிலர் மொபைல்போனே கதியாக. வழக்கம்போல அம்மா/மனைவி சமையலறையில். இதை மாற்றுவதற்கான மிக நல்ல வாய்ப்பு இது. அதற்கு என்ன செய்யலாம்?
ஆக்டிவிட்டி 1 - ரோல் சேஞ்ச் (Role Change)
ஒரு நாள் முழுக்க அப்பா/கணவன் என்பவர் அம்மா/மனைவி செய்த வேலைகளைச் செய்ய வேண்டும். அது எவ்வளவு சிரமமானதாகவும், தெரியாததாகவும் இருக்கட்டும். கணவன் ஒரு நாளின் முழு சமையல் பொறுப்பையும் எடுத்துக்கொள்ள வேண்டும். மனைவியிடம் யோசனைகள் வேண்டுமானால் கேட்டுக்கொள்ளலாம். கூடவே, இதுநாள்வரை மனைவி செய்த ஒரு நாளின் மற்ற வேலைகளையும் செய்ய வேண்டும். ஒருவேளை வேலைக்கு ஆள் இருந்த வீடுகள் என்றால், அந்த வேலைகளை மனைவி/அம்மா செய்யலாம். இதேபோல மற்றவர்களும் இயன்ற அளவு வேலைகளை மாற்றிச் செய்யலாம். ஆனால், இது ஒரு முழு நாள் பொறுப்பாக அமைய வேண்டும்.

சமைத்து முடித்த பின், முதலில் மனைவி, பிள்ளைகள் என மற்றவர்களும், இறுதியில் சமைத்தவரான கணவரும் (மீதமிருப்பதை மட்டும்) சாப்பிட வேண்டும். மனைவி/அம்மா, சமையல் மற்றும் கணவர் அன்று செய்யும் வேலைகள் குறித்து கருத்துகள் சொல்லலாம். பிள்ளைகள், தங்கள் பெற்றோர் ஏற்ற ரோலை தாங்கள் இரண்டு மணிநேரம் ஏற்று நடக்கலாம். உதாரணத்துக்கு அப்பா ரோலில் மகன்; மகனாக அப்பா.
தான் ஓர் அப்பாவாக, கணவனாக எப்படி நடந்துகொள்கிறோம் என்பதை அந்தக் குடும்பத்தலைவரால் இப்போது உணரமுடியும். அதேபோல கணவன், மனைவியும் ரோல் மாற்றி நடந்துகாட்டலாம்.
பலன்: அடுத்தவரின் சிரமத்தை உணரமுடியும். தான் நடந்துகொள்வது மற்றவர்களால் எப்படிப் பார்க்கப்படுகிறது என்பதும் புரிய வரும்.
ஆக்டிவிட்டி 2 - மெள்ளச் சாப்பிடு, மென்று சாப்பிடு
ஊரடங்கு நாள்களில் அனைவரும் ஒன்றாகச் சாப்பிட வேண்டும். தரையில் அமர்ந்து சாப்பிட்டால் இன்னமும் நன்மை. சாப்பிடும்போது டி.வி., இடது கையில் மொபைல்போன் கூடாது. தட்டில் வைத்த உணவை உடனடியாகச் சாப்பிடக் கூடாது. சிரிக்காமல், விளையாடாமல் எல்லோரும் அந்த உணவை நன்கு பார்க்க வேண்டும். அதன் பல்வேறு நிறங்கள், அதிலிருந்து வரும் ஆவி ஆகியவற்றையெல்லாம் உன்னிப்பாக வேறு யோசனைகள் ஏதுமின்றி கவனிக்க வேண்டும். அந்த உணவால் உடலுக்கு ஏற்படும் நன்மைகளை நினைத்துப் பார்க்க வேண்டும்.

ஓரளவு உணவைக் கையில் எடுத்து மூக்கின் அருகே கொண்டு சென்று, கண்களை மூடிக்கொண்டு அதன் வாசனையை அறிய வேண்டும்.
முதல் கவளத்தை வாயில் போட்டு, நாக்கால் துழாவி, பின் கொஞ்சம் கொஞ்சமாகப் பற்களால் மெல்ல வேண்டும். அந்த ஒரு வாய் உணவை வாயிலேயே நன்கு அரைத்து அதன் பின்னரே விழுங்க வேண்டும். அடுத்தடுத்த ஒவ்வொரு வாய் உணவையும் இப்படியே நன்கு மென்று சாப்பிட வேண்டும்.
பலன்கள்: கண்கள், மூக்கு, நாக்கு என்று புலன்கள் எல்லாம் உணவின் மீது குவியும்போது, மூளை சாப்பிடுவதற்கு உடலைத் தயார்செய்துவிடும். உமிழ்நீரோடு கலந்து உணவு நன்கு அரைபடும்போதே ஜீரண வேலையில் பாதி முடிந்துவிடும்.
ஆக்டிவிட்டி 3 - 'என்னைத் தெரியுமா? நான்…'
நாம் பெற்ற பிள்ளைகளாக இருந்தாலும் அவர்களை முழுமையாக நமக்குத் தெரியும் என்று சொல்ல முடியாது. அதுபோலவே கணவன், மனைவிக்கும் ஒருவரைப் பற்றி ஒருவருக்கு முழுமையாகத் தெரியும் என்றும் சொல்லமுடியாது. வேலைப்பளு, நேரமின்மை போன்ற காரணங்களால் ஒன்றாக இருந்தும் `தள்ளி’தான் இருந்திருக்கிறோம். அந்த இடைவெளியைக் குறைக்கும் நடவடிக்கை இது.

குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் ஒன்றாக ஓரிடத்தில் கூட வேண்டும். அது மொட்டை மாடியோ, வீட்டு ஹாலோ. கிராமப்புறமாக இருந்தால் வீட்டுக்கு வெளியில். குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே. அடுத்த வீடு போன்ற வேறு எவரையும் சேர்க்கக் கூடாது. ஊரடங்கும் கொரோனாவும் நினைவிருக்கட்டும்.
ஆளுக்கு ஒரு வெள்ளைத்தாள் மற்றும் பேனா கொடுக்க வேண்டும். எல்லோரும் அவர்களைப் பற்றி ஒரு படம் வரைய வேண்டும். அந்தப் படம் எப்படியும் இருக்கலாம்.
உதாரணத்துக்கு, ஒருவர் கழுதைப் படம் வரையலாம் (அது கழுதை மாதிரி இல்லாவிட்டாலும் பரவாயில்லை. அதன் மேல் கழுதை என்று எழுதினால் போதும்). மற்றொருவர் கார் படம் வரையலாம். அதற்குள் இருப்பது தான்தான் என்று அம்புக்குறி போட்டுக் காட்டலாம்.
இப்படியாக எவரும் எதையும் வரையலாம். நான் சொல்வதைக் காட்டிலும் பலரும் பிரமாதமாக வரைவார்கள் என்பது நிஜம்.
எல்லோரும் வரைந்து முடித்த பின்னர், அவற்றை அனைவரும் பார்க்கும் வண்ணம் சுவரில் செல்லோ டேப் கொண்டு ஒட்ட வேண்டும். பின்பு சிறியவர்களிலிருந்து ஒவ்வொருவராக எழுந்து, தாங்கள் தங்களை அந்த விதம் வரைந்ததற்குக் காரணம் சொல்ல வேண்டும்.
ஒருவர் சொல்லும்போது மற்றவர்கள் சிரிப்பதோ, இடைமறித்து மறுப்பதோ கூடாது. சொல்லி முடித்தபின் தேவைப்பட்டால் மேல் விவரங்கள் கேட்கலாம்.
பலன்: ஒவ்வொருவரும் தங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது தெரியவரும். புரிந்துணர்வு அதிகரிக்கும். நெருக்கம் கூடும்.
ஆக்டிவிட்டி 4 - 'எனக்கு ரொம்பப் பிடிக்கும்... ஏன் தெரியுமா?'
மற்றொரு நாள் ஒரு செளகர்யமான நேரத்தில் கூட வேண்டும். ஒவ்வொருவராக குடும்பத்தில் இருக்கும் மற்றொருவர் பற்றி வரிசையாக ஒரு நிமிடம் பேச வேண்டும். உதாரணமாக, `எனக்கு அம்மாவை மிகவும் பிடிக்கும் ஏன் தெரியுமா?’ என்று தொடங்கி, தனக்கு அம்மாவிடம் பிடித்த விஷயங்கள் குறித்துப் பேச வேண்டும். மறந்தும், தவறியும் அம்மாவிடம் பிடிக்காத, மாற்றிக்கொள்ளவேண்டியவை குறித்துப் பேசக் கூடாது.

சொல்லும் விஷயத்துக்கு உதாரணங்கள் சொல்ல வேண்டும். இடையில் யாரும் உதவவோ, மறுத்துப் பேசவோ கூடாது. கேலியும் கிண்டலும் கூடவே கூடாது. எல்லோரும் எல்லோரைப் பற்றியும் சொல்லி முடித்தபின் உடனடியாகக் கலைந்து போய் அவரவர் வேலைகளைச் செய்ய வேண்டும். மேல் விவரங்கள் கேட்பது கூடாது.
பலன்: எல்லோருடைய சுயமதிப்புகளும் உயரும். நெருக்கம் அதிகரிக்கும். சச்சரவுகள் குறையும்.
ஆக்டிவிட்டி 5 - `என்னால் முடியும் தம்பி, தம்பி...'
காலையிலேயே அறிவித்துவிட வேண்டும்... இன்று மாலை சரியாக 6 மணிக்கு எல்லோரும் ஏதாவது ஒன்று செய்து அவரவர் திறமையைக் காண்பித்தே ஆக வேண்டும் என்று. பேசலாம், பாடலாம், படித்துக் காட்டலாம், மனப்பாடம் செய்ததை ஒப்பிக்கலாம், நடித்துக் காட்டலாம், நடனமாடலாம், வரையலாம், கோலம்போட்டுக் காட்டலாம். ஒரே ஒரு ரூல்... எல்லோரும் பாராட்டுகளை மட்டுமே சொல்ல வேண்டும். குறைகள் சொல்லவே கூடாது.

பலன்: ஒருவரின் திறமைக்கான அங்கீகாரம் குடும்பத்திலிருந்து ஆரம்பிக்கும்போது, அவர் தன்னம்பிக்கை பலப்படும்.
மொத்தத்தில், எல்லோரும் சேர்ந்திருப்பது, மற்ற வேலைகள் செய்யாமல், முழுக்கவனத்தையும் குடும்ப உறுப்பினர்கள் மீதே வைப்பது, மற்றவர்களைப் பற்றி தெரிந்துகொள்வது, அவர்களைப் பாராட்டுவது... இதுபோதும் உறவுகள் இறுக, வலுப்பெற!'' என்கிறார் சோம வள்ளியப்பன்.