Published:Updated:

மொழிகள் கடந்த உயிர் நேயம்!

டோனி கோவிந்தராஜ் - கரோலின்
பிரீமியம் ஸ்டோரி
News
டோனி கோவிந்தராஜ் - கரோலின்

தாகூரின் எழுத்துகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரின் எழுத்துகளின் வழியே இந்திய வரலாற்றின் மீதான ஆர்வம் அதிகரித்தது.

“டெல்லியின் அந்த மாலைப்பொழுதில் திடீர் நில அதிர்வு. அதிர்ச்சியில் நானும் நண்பர்களும் வகுப்பறையை விட்டு திறந்தவெளிக்கு ஓடினோம். பிரெஞ்சுப் பாடமெடுக்க பிரான்ஸிலிருந்து புதிதாக வந்திருந்த கரோலினை நான் முதன்முதலாக அப்போதுதான் பார்த்தேன். அதன்பிறகு நடந்ததெல்லாம்…” என டோனி கோவிந்தராஜ் சற்று நிறுத்த, மொழி புரியாவிட்டாலும் கரோலின் முகத்தில் வெட்கப் புன்னகை.

இலக்கியங்களின் வழியாக பிரெஞ்சு மொழிமீது பதின்பருவத்திலேயே டோனிக்கு ஈடுபாடிருந்தது. பிரான்ஸ் நாட்டு கரோலினுக்கு இந்திய வரலாற்று ஆராய்ச்சியில் விருப்பம். இருவரின் கனவையும், காதலையும் இணைத்தது டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்.

“தாகூரின் எழுத்துகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரின் எழுத்துகளின் வழியே இந்திய வரலாற்றின் மீதான ஆர்வம் அதிகரித்தது. பிரிட்டிஷ் காலனித்துவ வரலாறு குறித்த ஆராய்ச்சிக்காக என் பல்கலைக்கழகம் என்னை இந்தியாவுக்கு அனுப்பிவைக்க, சில காலம் ஜே.என்.யூ-வுக்கு வந்து தங்கியிருந்தேன். ஆனால் இங்கு என் மாணவன் ஒருவரையே திருமணம் செய்துகொள்வேன் என்பதைக் கனவிலும் நினைக்கவில்லை” - சிரித்துக்கொண்டே சொல்லும் கரோலின் ட்ரென்டாவின் ஆங்கிலத்தில் பிரெஞ்சே அதிகமிருக்கிறது.

“கருத்தரங்குகள், விவாதங்கள் எனப் பரபரக்கும் ஜே.என்.யூ-வின் பொற்காலம் அது. அதற்காகவே வளாகத்துக்குள் காபி ஷாப்கள், உணவகங்கள் இரவு முழுக்க திறந்து கிடக்கும். ஆண் - பெண் பேதமின்றி அரசியல், தத்துவம், இலக்கியம் என விவாதங்களில் தீப்பொறி பறக்கும். இந்தச் சூழலில்தான் எங்களின் சந்திப்பும். இருவரும் நான்கைந்து மணிநேரம் வளாகம் முழுக்கப் பேசிக்கொண்டே நடப்போம். உரையாடலாகத் தொடங்கி விவாதங்களாக மாறி பல நேரங்களில் சண்டையில் முடிப்போம். அறிவுசார் புள்ளியில் தொடங்கிய எங்கள் அறிமுகம் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தது அப்போதுதான்” என கரோலின் சொல்ல, அவரின் கரம்பற்றிப் பேசினார் டோனி.

“படிப்பை முடித்து, திருமணமும் செய்துவிட்டோம். ஆனால், இருவேறான எங்கள் எதிர்காலத்தை ஒன்றாகத் திட்டமிடுவது எப்படி என்ற கேள்விக்கான விடை எங்களிடம் இல்லை. Paris 8 பல்கலைக்கழகத்தில் Psycho-analysis படிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. பிரான்ஸுக்குச் சென்று படிப்பு முடித்தவுடன் அதே பல்கலைக்கழக நூலகத்தின் தத்துவப் பிரிவின் பொறுப்பாளர் பணி கிடைத்தது. அதேவேளையில் கரோலினும் தன் முனைவர் பட்டத்தைப் பெற்றிருந்தார்” என்றார் டோனி.

டோனி கோவிந்தராஜ் - கரோலின்
டோனி கோவிந்தராஜ் - கரோலின்

உலகின் இருவேறு நிலப்பரப்பில் பிறந்து, டெல்லியில் இணைந்த தம்பதிகளின் வாழ்வை காலம் கலைத்துப்போட்டது. 2022, பிப்ரவரி மாதம். ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கியது. 18 வயது நிரம்பிய ஆண்கள் அனைவரையும் உக்ரைன் அரசு கட்டாயமாக ராணுவப் பணியில் ஈடுபடுத்த, ஆயிரக்கணக்கான பெண்களும் குழந்தைகளும் அண்டை தேசங்களில் அகதிகளாகக் குவிந்தார்கள். இந்தச் சூழலில் அந்த மக்களோடு இருக்க விரும்பினார் டோனி. பாரீஸில் இருந்து மூன்று நாடுகளை சாலை வழியாகக் கடந்து உக்ரைன் எல்லைக்குச் சென்றார்.

“பல்கலைக்கழகத்தில்கூட சொல்லாமல் உக்ரைனுக்கு பஸ் ஏறினேன். கடும் நெருக்கடிகளைச் சந்தித்து உக்ரைன் எல்லையிலிருந்த போர் முகாமைச் சென்றடைந்தேன். பழைய ஷாப்பிங் மாலில் மக்கள் தங்குவதற்காக ஏற்பாடு செய்திருந்தது போலந்து அரசு. 15,000-த்துக்கும் மேற்பட்ட மக்கள் குவிந்திருந்தனர். வெவ்வேறு நாடுகளிலிருந்து வந்த நிவாரணப் பொருள்கள் நெறிப்படுத்த யாருமில்லாமல் குவிந்து கிடந்தன. நாங்கள் 150 பேர் தன்னார்வலர்களாக இணைந்திருந்தோம்.

அப்பா, கணவன், உடன்பிறந்தவர்கள் என குடும்ப ஆண்கள் அனைவரும் போர் முனையிலிருக்க, வெறித்த பார்வையுடன் கண்ணீரும் வற்றிப்போயிருந்த பெண்களை என்ன சொல்லித் தேற்றுவதெனப் புரியாமல் தவித்தோம். மறுபக்கம், நடப்பது எதுவும் புரியாமல் புன்னகைக்கும் குழந்தைகள் விளையாடச் சொல்லிக் கை நீட்டுவர். நெருக்கடிகளுக்கு மத்தியிலும் குழந்தைகளோடு விளையாடினோம். உடன் அமர்ந்து ஆறுதலாகத் தாய்மார்களின் கரம் பற்றிப் பேசினோம். ஆற்றாமல் அழுதுகொண்டிருந்த முதியவர்களை இறுக அணைத்துக்கொண்டோம். பலரும் பல மொழிகளில் ஆறுதல் சொன்னோம். பதில் சொற்கள் அவர்களிடமில்லை. முகத்தில் கொஞ்சம் நம்பிக்கை பிறந்திருந்தது எங்களுக்கும் அவர்களுக்கும். எங்கள் பார்வையின் புரிதல்களுக்கு மத்தியில் மொழி அவசியமற்ற ஒன்றானது. குவிந்துகிடந்த உணவுப் பொட்டலங்களை உண்ண மறுத்து இறுகிக் கிடந்த அவர்களின் முகமே பல துயரக் கதைகள் சொன்னது.

மார்ச் 10-ம் தேதி தொடங்கி 12 நாள்கள் முகாமிலிருந்தேன். அதிகாரத்தின் ஆசை நிரம்பிய கரங்கள் ஈவு இரக்கமற்றவை என்பது புரிந்தது. ஏவுகணைகளை இயக்கும் மனித மனங்கள் எவ்வளவு குரூரமானவை என்பதற்கு வயதுபேதமின்றிக் குவிந்திருந்த சடலங்கள் சாட்சிகளாகின. கரோலினையும் அழைத்துக்கொண்டு மீண்டும் அங்கு செல்ல வேண்டும் என்றும் உறுதியாக இருந்தேன். அதற்குள் பல நாடுகளும் இந்தப் பணியில் இறங்கிவிட்டன.

அதன் பிறகு அங்கு செல்லவில்லை. அவர்களுக்கு என்னால் இயன்றதைச் செய்த நிம்மதி மட்டுமிருந்தது. உலக நாடுகள் தங்கள் சகோதர சகோதரிகளின் உடன் நிற்குமென நம்பிக்கையிருக்கிறது” என முடிக்கிறார் டோனி.

ஓராண்டு கடந்தும் உக்ரைன்-ரஷ்யப் போர் முடிவற்று நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இடைப்பட்ட காலத்தில் பிரான்ஸ் நாட்டின் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்று அரசுப் பணியேற்க பயிற்சிகளில் இருக்கிறார் டோனி.

``நான் இந்தியாவுக்கு வேலை தேடிப்போகிறேன். வரலாற்று ரீதியாக இந்தியா ஒரு பழைமையான நாடு. ஆனால், என்னைப் பொறுத்தவரையில் அது இளம் நாடு. இங்குள்ள இளம் சிந்தனை வளம் உலகில் வேறெங்கும் காணக்கிடைக்காது” என்கிறார் கரோலின். எல்லைகள் கடந்து சிறகு விரிக்கும் இந்தக் காதல் பறவைகளுக்கு வானம் வசப்படட்டும்!