Published:Updated:

மாதவன் முதல் ராஸ் கெல்லர் வரை... ரிலேஷன்ஷிப்பில் இவங்க பிரச்னை இதுதான்! #AllAboutLove - 12

FRIENDS series
FRIENDS series

`பிரச்னைகள் புரிகின்றன; அதில் பாதி எங்களுக்கும் நடக்கின்றன. என்ன செய்ய வேண்டும்? எப்படிச் சமாளிக்க வேண்டும்?’ - நண்பர்களால் ரிலேஷன்ஷிப் பாதிக்கப்பட்டவர்களின் கேள்வி இது.

`ஃப்ரெண்ட்ஸ்’ சீரியல்.

உலக அளவில் மிகப்பெரிய ஹிட் ஆன தொலைக்காட்சித் தொடர் என்றால் இதுதான்.

3 ஆண்கள், 3 பெண்கள் கொண்ட இந்த கேங்கில், ராஸ் கெல்லர் காதல் மன்னன். ராஸுக்கும் எமிலி என்ற பெண்ணுக்கும் காதல். ஏற்கெனவே இதே கேங்கில் இருக்கும் ரேச்சலும் ராஸூம் காதலித்து பின் பிரேக் அப் செய்திருப்பார்கள். இது தெரிந்த எமிலி, ராஸை ரேச்சலுடன் பேசக்கூடாது எனச் சொல்வார். அவர் பயத்துக்குக் காரணமிருக்கிறது. எமிலி பேரைச் சொல்ல வேண்டிய ஓரிடத்தில் வாய் தவறி ரேச்சல் பேரைச் சொல்லிவிடுவார் ராஸ். இப்போது என்ன செய்வது என கேங் குழம்பி நிற்கும். அப்போது ராஸே முன்வந்து கேங்கைவிட்டு விலகுவதாகச் சொல்வார். எமிலியை கேங்கில் யாருக்கும் பிடிக்காது. ஆனால், அதை ராஸிடம் சொல்லாமல் மறைப்பார்கள். நண்பர்கள் அப்படித்தான். நண்பருக்கு என்ன பிடிக்கிறதோ அதைத்தான் செய்வார்கள். இறுதியில், எமிலி கேட்பதில் நியாயமில்லை என நினைக்கும் ராஸ், எமிலியைவிட்டு நண்பர்களுடன் இருக்க முடிவு செய்வார். எமிலியும் `அதுதான் உன் விருப்பம்ன்னா எனக்குப் பிரச்னையில்லை. என்னை விட்டுடு’ என பிரேக் அப் செய்துவிடுவார். நம் நாட்டுச் சூழலில் பிரேக் அப் என்பது அவ்வளவு சாதாரணமாகப் பார்க்கப் படுவதில்லை என்பதால், அவ்வளவு எளிதாக பிரச்னை முடியாது. சேர்ந்து இயங்க வேண்டியதுதான் 90% நடக்கும்.

சரி, உங்கள் காதலரின் நண்பரையோ தோழியையோ உங்களுக்குப் பிடிக்காமல் போனால் என்ன செய்யலாம்? அந்த மூன்றாம் நபரை எப்படிச் சமாளிக்கலாம்? `பிரியமான தோழி’ மாதவன் ஞாபகமிருக்கிறதா?

Priyamana thozhi
Priyamana thozhi

ஒற்றுமைகளைக் கண்டறியுங்கள்:

உங்களுக்குப் பிடிக்காத அந்த நபருக்கும் உங்களுக்கும் ஏதாவது சில விஷயங்களில் ஒற்றுமை இருக்கும். இருவரும் விஜய் ஃபேன், கிரிக்கெட் என்றால் சாப்பிடாமல் பார்ப்போம், யுவன் பாடல் கேட்காமல் இரவு தூங்க மாட்டோம், சாப்பிடணும் என முடிவெடுத்தால் சைதாப்பேட்டையிலிருந்து சௌகார்பேட்டைக்கு கூட நடந்தே போவோம்… இப்படி இருவருக்கும் பிடித்த விஷயங்களைப் பட்டியல் போடுங்கள். இது அவர் மீதான நெகட்டிவ் எண்ணங்களை நீக்க உதவும். உங்கள் பார்ட்னர் அந்த நண்பர்/தோழியுடன் அவுட்டிங் திட்டமிட்டால் இவற்றில் ஏதாவது ஒன்றென்றால் ஓகே எனச் சொல்லுங்கள். பெரும்பாலான சமயம் இது வொர்க் அவுட் ஆகும். ஆகவில்லையென்றாலும் அந்த மூன்றாம் நபர் மீதான உங்கள் எரிச்சல் குறையும்.

எல்லைகளை வகுத்துக் கொள்ளுங்கள்:

உங்களுக்காக உங்கள் பார்ட்னர் அவருக்குப் பிடிக்காத உங்கள் நண்பர் அல்லது நண்பர்களுடன் பழகலாம்; நேரத்தைச் செலவழிக்கலாம். ஆனால், அதையே தொடர் கதையாக்கினால் நல்லதல்ல. அவருடன் பேசி, இருவரும் சேர்ந்து ஓர் எல்லையை வகுத்துக்கொள்ளுங்கள். அவருக்குப் பிடிக்கவில்லை யென்பதற்காக உங்கள் நண்பர்களை நீங்கள் விலக்கி வைத்தால், பின்னர் அது உங்களுக்குப் பிரச்னையாகும். அதனால், யார் வாழ்க்கையிலும் யாரையும் நீக்குவதோ சேர்ப்பதோ தீர்வாகாது. நேரத்தையும், அட்டென்ஷனையும் எப்படிப் பிரித்தளிப்பது என்பதைப் பற்றி யோசியுங்கள். உங்கள் பார்ட்னருக்காக, உங்கள் நண்பர்கள் செல்லும் ஒரு டின்னரை நீங்கள் மிஸ் செய்யலாம். ஆனால், ஒரு நண்பரின் திருமணத்தை மிஸ் செய்ய வேண்டி வந்தால் பிரச்னைதான். இதனால் உங்கள் நட்பு மட்டுமல்ல; உங்கள் ரிலேஷன்ஷிப்பும் பாதிக்கப்படும். உடனே, டைம் டேபிள் போட்டு `சனிக்கிழமை நண்பர்கள்; ஞாயிற்றுக்கிழமை பார்ட்னர்’ என இயங்க வேண்டாம். ரிலேஷன்ஷிப் என்பது எமோஷலானது. அதை இப்படி டெம்ப்ளேட்டாகப் பார்க்க முடியாது; பார்க்கவும் கூடாது.

ஸ்பேஸ் கொடுங்கள்:

நாம் ஏற்கெனவே பார்த்ததைப்போல, ரிலேஷன்ஷிப்பின் தொடக்கத்தில் இருவருக்கும் 24 மணி நேரம் கூடவே இருப்பதும், அல்லது மொபைலில் இணைந்திருப்பதும் தேவையாக இருக்கும். ஆனால், அது மட்டுமே வாழ்க்கையாகாது என்பது பின்னர் தெரிய வரும். எனவே, இருவரும் பார்ட்னருக்கான நேரத்தையும் இடைவெளியையும் கொடுப்பது அவசியம். அந்த இடைவெளி அவர்களுக்கும் பிணைப்பை இன்னும் அதிகமாக்க வேண்டும். அப்படியின்றி, `உனக்கு கிரிக்கெட்தான முக்கியம். போய் விளையாடு. யார் வேணாம்னு சொன்னா’ என்பது போன்ற இடைவெளியாக இருந்தால் அது பிணைப்பை உண்டாக்காது.

Love
Love
Image by Gerd Altmann from Pixabay

பார்ட்னருக்கு உதவுங்கள்:

ஒருவேளை இருவரில் ஒருவர் தனக்குத் தேவையானதைக் கேட்டு வாங்கிக்கொள்ளும் திறமை கொண்டவராக இருக்கலாம். இன்னொருவருக்கும் அந்த ஸ்பேஸ் தேவைப்பட்டாலும் அதைக் கேட்டால் தனக்குக் காதல் குறைந்துவிட்டதென பார்ட்னர் நினைப்பாரோ என அவர் பயப்படலாம். அதனால் கேட்காமலே, மனதுக்குள்ளே குமுறி அதுவே ரிலேஷன்ஷிப்பைப் பாதிக்கலாம். கோவத்தில் `நான் எப்பவாது உன்னை விட்டு போறனா? நீ மட்டும் சினிமா, கிரிக்கெட், ஃப்ரெண்ட்ஸ்ன்னு போயிட்டே இருக்க’ என அவர் சொல்லிவிடலாம். இதையெல்லாம் புரிந்து நீங்கள்தான் பார்ட்னருக்கு உதவ வேண்டும். அவரும் வாழ்க்கையில் ரிலேஷன்ஷிப் தவிர மற்றவற்றில் கவனம் செலுத்த உதவ வேண்டும்.

சாய்ஸ் கொடுக்காதீர்கள்:

எப்போதும், எதற்காகவும் உங்கள் பார்ட்னரிடம் `உனக்கு நான் வேண்டுமா இல்லை அவனா/அவளா?’ என்று கேட்காதீர்கள். பிரச்னையைப் பேசலாம். தீரவே தீராது என்றால் நீங்கள் விலகலாம். அது உங்கள் தேர்வாக இருக்க வேண்டும். பார்ட்னரிடம் இருவரில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கச் சொல்வது புத்திசாலித்தனமான செயலாகாது. அதுவும் நீங்களும் அந்த மூன்றாம் நபரும் ஒரே பாலினம் என்றால் அது இன்னும் சிக்கல் ஆகும். நிச்சயம் அந்த ரிலேஷன்ஷிப் நிம்மதியாக இருவருக்கும் அமையாது. போலவே, `ஏன்லாம் கேட்காத. எனக்கு அவன/அவள பிடிக்கல’ என்பது போன்ற ஸ்டேட்மென்ட், உங்கள் இருவருக்குமிடையேதான் இடைவெளியை அதிகரிக்கும் என்பதை உணருங்கள்.

Relationship
Relationship
Pixabay
இந்த `மெல்லிசான கோடு' ரிலேஷன்ஷிப்புக்கு ரொம்ப முக்கியம்! #AllAboutLove - 10

வெளிப்படையாகப் பேசுங்கள்:

உங்கள் காதலன்/காதலிக்கு நீங்கள்தான் முக்கியம். அதனால் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அந்த மூன்றாம் நபரால் நீங்கள் அசெளகர்யமாக உணர்வதாக அவருக்குத் தெரிய வந்தால் அவரே உங்களிடம் பேசுவார். அந்த சந்தர்ப்பத்தில் மனதிலிருப்பதைப் பொறுமையாகச் சொல்லிவிடுங்கள். மூன்றாம் நபரைப் பற்றி குற்றப் பத்திரிகையாக வாசிக்காமல், அவரால் உங்களுக்கு என்ன பிரச்னை என்பதை எடுத்துச் சொல்லுங்கள். அவரை ஏற்றுக்கொள்ள முயன்றதையும், இனியும் முயற்சி செய்வேன் என்பதையும் உங்கள் பார்ட்னருக்கு புரிய வையுங்கள். அந்த மூன்றாம் நபரின் தனிப்பட குணங்களைக் குறையாக அடுக்காமல், அவரால் உங்கள் இருவருக்குமிடையே என்ன மாதிரி விஷயங்கள் மிஸ் ஆகின்றன என்பதையே முதன்மையாகச் சொல்லுங்கள். நிச்சயம், அவரும் இந்தப் பிரச்னையைச் சரி செய்ய அவரால் ஆனதைச் செய்வார்.

பார்ட்னரே முதன்மை:

ரொமான்டிக் ரிலேஷன்ஷிப்பை விட ஃப்ரெண்ட்ஷிப் பலருக்கு நீடித்திருக்கலாம். அதற்காக, இணையைவிட நண்பர்களே முக்கியம் என நீங்கள் நினைத்தால் `ரிலேஷன்ஷிப்புக்கு நீங்கள் செட் ஆக மாட்டீங்க’ என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. சில சமயம், உங்கள் நண்பர்கள் மீது தவறிருக்காது. ஆனால், நீங்கள் அந்த மூன்றாம் நபருக்கும் கொடுக்கும் முக்கியத்துவம் உங்கள் பார்ட்னருக்கு பிரச்னையை உண்டாக்கும். உங்கள் இணை பயத்தில் தவிக்கலாம். ரிலேஷன்ஷிப்பின் ஆரம்பத்தில் இது அதிகம் நடக்கும். தான் எடுத்த முடிவு சரியா தவறா என்று கூட உங்கள் பார்ட்னர் யோசிக்கலாம். இதில் தவறெதும் இல்லை. உங்கள் மீது முழு நம்பிக்கை வர நீங்களும் கொஞ்சம் முயற்சி செய்ய வேண்டும்.

Relationship (Representational Image)
Relationship (Representational Image)
Image by TanteTati from Pixabay
ரிலேஷன்ஷிப்பிற்கு நடுவே வரும் பெஸ்ட்டிஸ்... என்ன செய்வது? #AllAboutLove - 11

ஆண் - பெண் ரிலேஷன்ஷிப் என்பது பல்லாயிரக்கணக்கான ஆண்டாக மனிதர்கள் முயற்சி செய்துகொண்டேயிருக்கும் ஒரு விஷயம்தான். ஆனாலும், அதற்கு சரியான வழியென ஏதும் கண்டறியப்படவில்லை. எனவே, உங்களுக்கு நிம்மதியான ஒரு உறவு வேண்டுமென்றால் அதீத கவனத்துடன், சின்னச் சின்ன முயற்சிகளும் தேவை. அந்த உழைப்பு முதலீடு உங்கள் மகிழ்சிக்கானது என்பதை மட்டும் உணருங்கள். யாரையும்விட உங்கள் பார்ட்னருக்கு முக்கியத்துவம் கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை.

அடுத்த கட்டுரைக்கு