Published:Updated:

`சுதந்திரத்தைப் பார்க்கணும்போல இருக்கு... ஆனா, முடியல!' - கலங்கும் கீதா

ஆ.சாந்தி கணேஷ்

'சுதந்திரத்தோட ஒரு போட்டோ பார்க்கணும்'னு கேட்டாகூட காட்ட மாட்டேங்கிறாங்க.

Geetha
Geetha

சென்ற வருடம் சுதந்திர தினத்தன்று தன் வீட்டுக்கு அருகே இருந்த கழிவுநீர்க் கால்வாயில் கிடந்த பச்சிளம் குழந்தையொன்றை காப்பாற்றினார் கீதா. சுதந்திர தினத்தன்று மீட்டெடுத்ததால், குழந்தைக்கு 'சுதந்திரம்' என்று அவரே பெயரும் இட்டார். குழந்தையைத்தானே தத்தெடுத்து வளர்க்க ஆசைப்பட்ட கீதாவால், நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக அதைச் செய்ய முடியவில்லை.

அதன் பிறகு, குழந்தைகள் காப்பகத்தில் இருந்த சுதந்திரத்தை முறைப்படி தத்தெடுத்துச் சென்றனர் ஒரு தம்பதியர். சுதந்திரத்தைக் காப்பாற்றிய கீதாவின் ஈர நெஞ்சைப் பாராட்டி, எழும்பூர் குழந்தைகள் அரசு மருத்துவமனையில் குழந்தைகளைப் பராமரிக்கும் அரசாங்க வேலை வழங்கப்பட்டது. 'எல்லாம் என் பேரன் சுதந்திரம் கொடுத்த வாழ்க்கை' என்று பூரித்துப்போய் நமக்கு பேட்டிக் கொடுத்தார் கீதா.

என் வீட்ல இருந்து இங்கே ஹாஸ்பிட்டல் வர்றதுக்கு மூணு பஸ் மாற வேண்டியிருக்கு. அதுக்கு நான் வாங்குற சம்பளம் கட்டுப்படியாகலை.''
கீதா

`தற்போது எப்படியிருக்கிறார் கீதா; மருத்துவமனை வேலை எப்படியிருக்கிறது; சுதந்திரத்தைப் பார்த்தாரா?' அவரிடமே கேட்டோம்.

''சுதந்திரத்தை ஒரு குடும்பம் தத்தெடுத்துட்டுப் போறப்போகூட, 'நீங்க பிரியப்பட்டா அவனைப் பார்க்கலாம்'னுதான் சொன்னாங்க. அதுக்கு என்ன பண்றதுன்னு தெரியலை. இப்போகூட, சுதந்திரம் இருந்த காப்பகத்துலேருந்து மாச மாசம் போய், அவனைப் பார்த்துட்டு வர்றாங்க. ஆனா, 'நான் சுதந்திரத்தோட ஒரு போட்டோ பார்க்கணும்'னு கேட்டாகூட காட்ட மாட்டேங்கிறாங்க. ஆனா, சுதந்திரத்தை ஒரு பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவங்கதான் தத்தெடுத்து இருக்காங்கன்னு கேள்விப்பட்டேன். அந்த வகையில எனக்குப் பெரிய நிம்மதி'' என்றவர், தன்னுடைய வேலையைப் பற்றியும் சொன்னார்.

''அங்கே ஓ.பியிலதான் வேலைபார்த்துக்கிட்டிருந்தேன். என் டியூட்டி ஹவர்ஸ் முடிஞ்சுகூட வேலைபார்த்து எல்லார்கிட்டேயும் நல்ல பேர் வாங்கினேன். ஆனா, என் வீட்ல இருந்து இங்கே ஹாஸ்பிட்டல் வர்றதுக்கு மூணு பஸ் மாற வேண்டியிருக்கு. அதுக்கு நான் வாங்குற சம்பளம் கட்டுப்படியாகலை. போதாக்குறைக்கு, என்னை ஹவுஸ் கீப்பிங் வேலையில மாத்திப்போட்டுட்டாங்க. அங்கே சோப்புத் தண்ணியில கால்வச்சு வழுக்கிவிழுந்துட்டேன். அதுல இடுப்புல அடிபட்டுடுச்சு. இத்தனை கஷ்டத்தோட அந்த வேலைக்குப்போக முடியலைங்க. அதான் விட்டுட்டேன்'' என்றவர், குழந்தை சுதந்திரம் தொடர்பான தன் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்.

geetha
geetha

'மனசுக்குள்ள சுதந்திரத்தைப் பார்க்கணும்னு ஏக்கமா இருக்கு. என்னைப் பார்த்தா என்மேலே அவன் பாசம் திரும்பிடும்னு நினைக்கிறாங்களோ என்னவோ... பெத்தாதான் பிள்ளை இல்லம்மா. அவனை நான் மனசார ஆசீர்வாதம் பண்றேன்'' என்கிற கீதா, படுத்தப்படுக்கையாக இருக்கிற வயதானவர்களைப் பார்த்துக்கொள்கிற வேலைக்கு, அடுத்த மாதத்திலிருந்து போகப் போகிறாராம்.