
13 வயதை எட்டிவிட்டாலே எதிர்பாலினத்தின்மீது ஈர்ப்பு வருவது இயற்கை. அப்படி ஈர்ப்பு வரவில்லை என்றால்தான் பிரச்னை. அந்த ஈர்ப்பைப் பதின்பருவப் பிள்ளைகள் பலரும் காதல் என நினைத்துக் குழம்புகிறார்கள்
நான் வசிக்கும் தெருவில் வசிக்கிறார் அந்தப் பெண். கல்லூரி முதலாமாண்டு மாணவியான அவருக்கு, பள்ளிக்காலத்திலிருந்தே ஸ்கூல் சீனியருடன் காதல். கல்லூரியில் சேர்ந்த பிறகும் அது தொடர்ந்தது. பெண்ணின் பெற்றோருக்கு விஷயம் தெரிய வரவே, படிப்பை நிறுத்தி உடனடியாகத் திருமணம் செய்துவைக்கவும் முடிவு செய்தனர். அதை எற்றுக்கொள்ள முடியாமல், 18 வயதில் வீட்டை விட்டு வெளியேறி, காதலரைத் திருமணம் செய்துகொண்டார். பெற்றோருக்கு மிஞ்சியது மனவருத்தமும் ஏமாற்றமும்தான்.
பிள்ளைகளின் பதின்பருவக் காதலைப் பெற்றோர் கையாளத் தெரியாததால் நடக்கும் இத்தகைய சம்பவங்களை தினம் தினம் கேள்விப்படுகிறோம். பிள்ளைகளின் காதலை அணுகுவது எப்படி, கையாள்வது எப்படி எனத் தெரிந்திருந்தால், ஒருவேளை பிரச்னை சுமுகமாக முடிந்திருக்க்லாம். அதற்கான வழிகாட்டுதல்களைத் தருகிறார் மதுரையைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் சுரேஷ்குமார்.

‘‘13 வயதை எட்டிவிட்டாலே எதிர்பாலினத்தின்மீது ஈர்ப்பு வருவது இயற்கை. அப்படி ஈர்ப்பு வரவில்லை என்றால்தான் பிரச்னை. அந்த ஈர்ப்பைப் பதின்பருவப் பிள்ளைகள் பலரும் காதல் என நினைத்துக் குழம்புகிறார்கள். வெளிப்படையாகச் சொல்லப்போனால் அது ஒருவிதமான பாலியல் ரீதியான ஈர்ப்பு மட்டுமே. இந்தத் தெளிவு பிள்ளைகளுக்கு வேண்டும். ஈர்ப்பையும் காதலையும் பகுத்தறிய, பெற்றோர்தான் வழிநடத்த வேண்டும். அதையும் தாண்டி பதின்பருவ ஈர்ப்போ, நட்போ ஆண்டுகள் கடந்து காதலில் முடிவதும் உண்டு.
பெற்றோருக்குச் சில அறிவுரைகள்....
பிள்ளைகள் காதலிக்கும் விஷயம் பெற்றோருக்குத் தெரியவந்தால் உடனே உணர்ச்சிவயப்பட்டு, அவர்களைக் கண்டிப்பது, மிரட்டுவது என காரியத்தில் இறங்கவேண்டாம். செய்யக்கூடாத குற்றச்செயலைச் செய்தவர்களைப் போல அவர்களை அணுகாமல், நம்பிக்கையூட்டும் வார்த்தைகளைச் சொல்லி ஆறுதலாக இருக்கவேண்டும்.

பதின்பருவத்தில் காதல் வயப்பட்ட பிள்ளைகளுக்கு, பெற்றோர்கள் என்ன சொன்னாலும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இருக்காது. எனவே சதா அறிவுரைகள் சொல்வதைத் தவிர்த்து, அவர்களுடன் நெருங்கிப் பழகி அவர்களது காதலின் சாதக பாதகங்களைப் புரியவைக்க முயலலாம்.
மகிழ்ச்சியைத் தரக்கூடிய எல்லா ஹார்மோன்களும் காதலிக்கும்போது உச்சத்தில் இருக்கும். அப்போது யார் என்ன அறிவுரைகள் சொன்னாலும் பெரிதாகப்படாது. அப்போதைக்கு மட்டும் கேட்டுக்கொண்டு, மீண்டும் காதல் தொடர்பான செயல்களில்தான் ஈடுபடுவார்கள். பெற்றோர் இதைப் புரிந்துகொண்டு, அவர்களின் போக்கிலேயே போய்தான் வழிக்குக்கொண்டு வரவேண்டும்.

காதலிக்கும்போது என்னென்ன தவறுகள் செய்யக்கூடாது என்று வெளிப்படையாகப் பிள்ளைகளிடம் எடுத்துச் சொல்லவேண்டும். பாலியல் தொடர்புகள் வைத்துக்கொள்வது, தேவையில்லாமல் வெளியில் சுற்றுவது போன்ற செயல்களைச் செய்யவேண்டாம் எனவும் அவற்றால் வரும் பாதிப்புகளையும் எடுத்துச் சொல்லவேண்டும். கடினமான சொற்களால் திட்டிக் காயப்படுத்தக்கூடாது. அப்படிச் செய்யும்போது குடும்பத்தையே முழுவதும் வெறுத்துவிடுவார்கள். யாரும் தேவையில்லை, காதல் ஒன்றே போதும் என்று வீட்டை விட்டே வெளியேறிவிடுவார்கள். இதனால், பிற்காலத்தில் பிள்ளைகள் பொருளாதாரம் உட்பட நிறைய பிரச்னைகளைச் சந்திக்கவேண்டி இருக்கும். பெற்றோரின் பக்குவமான அணுகுமுறையால்தான் பிள்ளைகள் இத்தகைய முடிவுகளை எடுக்காமல் தடுக்கமுடியும்.
காதலை எதிர்க்காமல், குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்கலாம். படிப்பு, வேலை என வாழ்க்கையில் செட்டிலாகும்வரை காத்திருக்கச் சொல்லலாம். அதன் பிறகும் காதலில் உறுதியாக இருந்தால், திருமணம் செய்துவைப்பது குறித்துப் பெற்றோர் யோசிக்கலாம். சில நேரங்களில் ஆரம்பித்த வேகத்திலேயே பலரின் காதல் முறிந்துவிடுவதைப் பார்க்கிறோம். காதலுக்கு ஆதரவாக இருப்பது மட்டுமன்றி, பிரேக் அப்பை சந்தித்த பிள்ளைகளுக்கும் பெற்றோரின் ஆதரவு மிகமுக்கியம்.’’