Published:Updated:

தாலியில் `தமிழ்', பறையிசை, திருக்குறள் புத்தகம்; கவனத்தை ஈர்த்த தமிழ் மரபுத் திருமணம்!

சீனிவாசன் - ஆஷா திருமணம்

நிச்சயதார்த்தம் முதல் திருமணம் வரை அனைத்து நிகழ்வுகளையுமே வித்தியாசமான முறையில் செய்திருக்கின்றது இந்தக் காதல் ஜோடி...

தாலியில் `தமிழ்', பறையிசை, திருக்குறள் புத்தகம்; கவனத்தை ஈர்த்த தமிழ் மரபுத் திருமணம்!

நிச்சயதார்த்தம் முதல் திருமணம் வரை அனைத்து நிகழ்வுகளையுமே வித்தியாசமான முறையில் செய்திருக்கின்றது இந்தக் காதல் ஜோடி...

Published:Updated:
சீனிவாசன் - ஆஷா திருமணம்

வாழ்வின் முக்கியத் தருணமான திருமணத்தை சிறப்பாகவும் பலரும் ஆச்சர்யப்படும்படி பிரமாண்டமாகவும் செய்ய வேண்டும் என்கின்ற கனவு இங்கு பலருக்கும் இருக்கிறது. ஒருசிலர் மட்டும்தான் விதிவிலக்காக, திருமணங்களில் எளிமையையும், புதுமையையும் விரும்புகின்றனர். அப்படியான ஒரு தம்பதிதான் ஓசூரைச் சேர்ந்த சீனிவாசன் - ஆஷா.

சீனிவாசன் - ஆஷா திருமணம்
சீனிவாசன் - ஆஷா திருமணம்

சீனிவாசன் `நண்பர் டிராவல்ஸ்’ என்ற பெயரில் பிசினஸ் செய்து வருகிறார். ஆஷா, தனியார் பள்ளி ஆசிரியை. இருவரும் தமிழ்ப் பண்பாடுகளை மீட்டுருவாக்கம் செய்துவரும் `தமிழ் தேசக் குடியரசு இயக்கம்’ என்னும் அமைப்பில் இணைந்து செயல்பட்டு வந்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர, இரண்டு வருடங்கள் காதலித்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். போராடி பெற்றோர்களிடம் சம்மதம் பெற்று ஜூலை 16-ம் தேதி, ஓசூரில் சாதிமறுப்புத் திருமணம் செய்திருக்கின்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வழக்கமான திருமண முறைகளைப் போல் இல்லாமல், தாம்பூலத் தட்டில் திருக்குறள் புத்தகத்தை வைத்து நிச்சயம் செய்ததில் ஆரம்பித்து, திருமணத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை ஒலிக்கவிட்டது, மங்கள இசைக்குப் பதிலாக பறையிசை, தமிழ் என்ற எழுத்து பொறிக்கப்பட்ட தாலி, அசைவ விருந்து என திருமணத்தில் பல புதுமைகளைச் செய்து அசர வைத்திருக்கின்றனர்.

சீனிவாசன் - ஆஷா திருமணத்தில் பறையிசை
சீனிவாசன் - ஆஷா திருமணத்தில் பறையிசை

புதுமைத் தம்பதியான சீனிவாசன் - ஆஷா ஆகியோரிடம் பேசினோம். ``எங்க ரெண்டு பேருக்குமே தமிழ் மொழி மேல் பெரும் ஆர்வமும் மரியாதையும் உண்டு. அதே மாதிரி சாதி, மத, ஆண் - பெண் பாகுபாடு இல்லாத சமூகம் உருவாக வேண்டுமென நினைப்பவர்கள் நாங்கள். அதனாலதான், பெற்றோர்கள் சம்மதத்தோட, சாதி மறுப்புக் காதல் திருமணம் செஞ்சிருக்கோம். எங்களோட திருமணம் வழக்கமான திருமணங்கள் மாதிரி இல்லாம, வித்தியாசமானதா இருக்கணும்னு நினைச்சோம். அப்படித்தான் இந்தத் தமிழ் தாலி, பறையிசைன்னு தமிழ் மரபுத் திருமணம் செய்யணும்ங்கிற ஐடியா எங்களுக்கு வந்துச்சு. கல்யாணத்துக்கு வந்திருந்தவங்களும், `இது வித்தியாசமா, புதுசா இருக்கே’ன்னு ஆச்சர்யப்பட்டுப் பாராட்டினாங்க. நாங்களும் செம ஹேப்பி” என உற்சாகமானார் ஆஷா.

தொடர்ந்து பேசிய சீனிவாசன், ``நிச்சயம் செஞ்சப்பவே திருவள்ளுவர் படத்தை சபையில வச்சதோடு, தாம்பூலத் தட்டுல பூ, பழத்தோட திருக்குறள் புத்தகத்தையும் வச்சு நிச்சயம் செஞ்சிக்கிட்டோம். அதேமாதிரி கல்யாணப் பத்திரிகையைக்கூட வழக்கமான பாணியில் அடிக்காம திருவள்ளுவர், பெரியார், அம்பேத்கர் போன்றோரது படத்தைப் போட்டு, `இணையேற்பு விழாவுக்கு வாங்க'ன்னுதான் கொடுத்தோம். அப்பவே, `என்ன கல்யாணப் பத்திரிகையில சாமி படத்தையே காணோம்னு’ பலரும் கேட்டாங்க.

சீனிவாசன் - ஆஷா திருமணம்
சீனிவாசன் - ஆஷா திருமணம்

அதேமாதிரி, திருமணத்தன்று மந்திரங்களுக்குப் பதிலாக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை ஒலிக்க வச்சோம். மேள - நாதஸ்வர இசைக்குப் பதிலாகப் பறையிசை இசைக்க வச்சோம். தமிழ் என்ற எழுத்தோடு `ஃ’ என்ற ஆயுத எழுத்தை தங்கத்தில் செய்து தாலிக்கு பதிலாகக் கட்டினேன். வள்ளுவர் சொன்ன அறம், பொருள், இன்பம் என்பதைக் குறிக்கும் வகையில்தான் ஆய்த எழுத்தை தாலியில் டிசைன் செய்திருந்தோம். அதேமாதிரி திருமணத்துல அசைவம் போடக் கூடாது என்கின்ற பிம்பத்தை உடைச்சு மட்டன் பிரியாணி, சிக்கன் கபாப் போட்டோம்.

இது எதுக்குமே எங்க ரெண்டு பேர் குடும்பமும் ஆரம்பத்துல ஒத்துக்கலை. ஆனா நாங்க, `இப்படித்தான் செய்ய ஆசைப்படுறோம்’னு பிடிவாதமா இருந்தோம். ஆங்கிலக் கலப்பு, மும்மொழிக் கொள்கை போன்றவற்றால் கொஞ்சம் கொஞ்சமா தமிழ் அழிஞ்சுக்கிட்டு வருது. எனவே, தமிழையும் தமிழ் மரபையும் அழியாம மீட்டெடுத்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு போய்ச் சேர்க்கணும் என்பதில் நாங்க உறுதியா இருக்கோம். அதோட ஒரு சிறிய முன்னெடுப்பாகத்தான் எங்க திருமணத்தைச் செஞ்சிருக்கோம்” என்றார்

இந்தத் தமிழ் மரபுத் திருமணத்துக்கு முன்னின்ற தமிழ் தேசக் குடியரசு இயக்கத்தின் மாநிலப் பொறுப்பாளர் தமிழரசனிடம் பேசினோம். ``இந்தத் தமிழ் மரபுத் திருமணம் தமிழ்நாட்டுல வேற எங்கயும் நடந்த மாதிரி தெரியலை. ஒரு புது முயற்சியாக இதை முன்னெடுத்திருக்கோம். எந்த வழக்கமான சடங்குகளையும் செய்யாம, மணமக்களோட குடும்ப உறுப்பினர்கள் மாலையும், தமிழ்த் தாலியும் எடுத்துக் கொடுக்க சிம்பிளா திருமணம் நடந்தது.

தமிழ் தாலி
தமிழ் தாலி

தாலி அணிவிக்கிறதுக்கு முன்னாடி மணமக்கள் ரெண்டு பேரும், `வள்ளுவர் நமக்கு வழங்கிய அறநெறியின் வழியாகவும்; அம்பேத்கர், பெரியார் போன்றோரை வழிகாட்டியாகக் கொண்டு தன் குடும்பம் - தன் வீடு - தன் சொத்து என்றில்லாமல்... நம் இனம் - நம் மொழி - நம் நாடு என்பதற்காக இறுதிவரை போராடுவோம். குரல் கொடுப்போம். ஆண், பெண் என்பது உயிரில் எந்த வேற்றுமையும் இல்லை என்பதால் எந்த பாரபட்சமும் இல்லாமல் குடும்பம் நடத்துவோம்’ என உறுதிமொழி எடுத்துக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தனர்.

அதேமாதிரி அட்சதை என்ற பெயரில் நாம் உண்ணும் அரிசியை வீணாக்கக் கூடாது என நினைத்தோம். அதற்குப் பதிலாக `மணமக்கள் வாழ்க’ என மூன்று முறை சொல்லச் சொல்லி பூக்களைத் தூவி, கைதட்டி வாழ்த்தச் சொன்னோம். தமிழ் மரபுகளையும், தமிழ்க் கலைகளையும் மக்களிடம் சேர்த்து வரும் எங்களுக்கே, இந்தத் திருமணம் வித்தியாசமாக இருந்தது” என்றார்.

தமிழைப் போலவே உங்கள் வாழ்வும் செழித்துத் தழைக்க வாழ்த்துகள்!