Published:Updated:

`2 குழந்தைகளைத் தனியாக வளர்க்க முடியுமா?’- வாசகி பிரச்னைக்கு நிபுணரின் தீர்வு #LetsSpeakRelationship

``யார் துணையும் இல்லாமல் மகனையும் பார்த்துக்கொண்டு, இன்னொரு குழந்தையையும் பெற்று வளர்க்க முடியுமா என்று பயமாக இருக்கிறது.''

Mom and son
Mom and son

எனக்குத் திருமணமாகி 8 வருடங்கள் ஆகின்றன. நான், என் கணவர், ஏழு வயது மகன் என சிறிய, அன்பான குடும்பம் என்னுடையது. கடந்த ஐந்து வருடங்களாக மாமனார், மாமியாருடன்தான் வசிக்கிறோம். அதாவது, ஒரே காம்பவுண்டில் இரு வீடுகளில் தனித்தனியாக வசிக்கிறோம். மாமனார் ரொம்ப நல்லவர். ஆனால், வீட்டைப் பொறுத்தவரை மாமியார் ராஜ்ஜியம்தான். அவருடைய பேச்சுக்கள் எதுவும் பிடிக்காததால் நான் உட்பட யாரும் அவருடன் பேசுவதில்லை. என் மாமனாருக்காகப் பொறுத்துக்கொண்டு வாழ்கிறோம்.

mother and kids
mother and kids

இந்த இடத்தைவிட்டு வெளியேற வாய்ப்பே இல்லை என்கிற அளவுக்குக் கடினமான சூழ்நிலை. என் பிரச்னை என்னவென்றால். என் கணவர் இரண்டாவது குழந்தை வேண்டும் என்கிறார். எனக்கோ, யார் துணையும் இல்லாமல் மகனையும் பார்த்துக்கொண்டு, இன்னொரு குழந்தையையும் என்னால் வளர்க்க முடியுமா என்று பயமாக இருக்கிறது. எப்போதும் இதே சிந்தனையாகவே இருக்கிறேன். தீர்வு சொல்லுங்களேன். (தயவுசெய்து மாமியாரிடம் இணக்கமாகச் செல்லுங்கள் என்று மட்டும் சொல்லாதீர்கள். அந்த அளவுக்குக் காயப்பட்டிருக்கிறேன்)

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

தீர்வு சொல்கிறார் மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்.

''அன்பான குடும்பம் என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அது என்றும் அப்படியே தொடர என் வாழ்த்துகளை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் கேள்வியில் இருந்து நான் புரிந்துகொண்டது, உங்கள் மாமியாரைத் தவிர்த்து மற்ற எல்லோருடனும் நீங்கள் இணக்கமாக இருக்கிறீர்கள் என்பதுதான். உங்கள் பிரச்னைக்கு முதல் தீர்வு உங்கள் கணவர்தான். இரண்டாவது குழந்தைக்கு ஆசைப்படுவதோடு நின்றுவிடாமல், குழந்தை வளர்ப்பிலும் அவர் பங்கெடுத்துக்கொள்வாரா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். ஒருவேளை கைக்குழந்தை வளர்ப்பில் அவருக்கு அனுபவமில்லை என்றால், மூத்த மகன் பராமரிப்பு மற்றும் படிப்பு விஷயத்தில் அவரை ஈடுபடுத்தலாம்.

Moms and Kids
Moms and Kids

அடுத்ததாக, உங்கள் பெற்றோர் உங்களுக்கு அருகில் இருக்கிறபட்சத்தில் அவர்களால் உங்களுக்கு உதவ முடியுமா என்று கேட்டுப் பார்க்கலாம். இது இரண்டாவது தீர்வு. ஒருவேளை உங்கள் கணவர் அடிக்கடி டூர் போவது மாதிரியான வேலையில் இருந்தாலோ அல்லது உங்கள் பெற்றோர் உதவி செய்கிற சூழலில் இல்லையென்றாலோ, உங்கள் உதவிக்கு ஒரு பெண்மணியை வேலைக்கு வைத்துக்கொள்ளலாம். இதற்கென்று மாதா மாதம் ஒரு தொகை தேவைப்படுமென்பதால், முன்கூட்டியே உங்கள் கணவரிடம் பேசி முடிவெடுத்துக்கொள்ளுங்கள். ஒரு குடும்பத்தில் இரண்டாவது குழந்தை என்பது நல்ல விஷயம்தான். ஆல் த பெஸ்ட்!

uravugal@vikatan.com
uravugal@vikatan.com