Published:Updated:

ரிலேஷன்ஷிப்பில் சண்டை வந்தால் என்ன செய்ய வேண்டும்? #AllAboutLove - 09

ரிலேஷன்ஷிப்
News
ரிலேஷன்ஷிப் ( Pixabay )

`சேதுபதி' படத்தில் விஜய் சேதுபதி மனைவியை அடித்துவிடுவார். தவற்றை உணர்ந்து சமாதானம் பேச வருபவரைக் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க சொல்வார் ரம்யா நம்பீசன். விஜய் சேதுபதியும் செய்வார். இதைச் சரியென்பவர்களும், ஓவர் திமிரு என்பவர்களும் உண்டு.

இந்தத் தொடரை வாசிக்கும் கல்லூரி மாணவி ஒருவர் மெயில் அனுப்பியிருந்தார். `நீங்க சொல்ற மாதிரி கரெக்டா, பெர்ஃபக்டா நம்மளால இருக்க முடியுமா? இதெல்லாம் நிஜத்துல சாத்தியமா?" எனக் கேட்டிருந்தார்.

நியாயமான கேள்விதான். அவரிடம் நான் திருப்பிக் கேட்ட கேள்வி: `இது சாத்தியமான்னு கேட்கிறதுக்கு முன்பு, இவையெல்லாம் சரியா?"

மீண்டும் ஒருமுறை அனைத்து அத்தியாயங்களையும் படித்துவிட்டு பதில் அனுப்பினார்.

``சரிதான். ஆனால், சாத்தியமா?"

இந்தத் தொடரின் நோக்கம் ஆண் - பெண் உறவில் ஒவ்வொருவரும் சந்திக்கும் சிக்கல்களைக் களைவதுதான். மனிதர்கள் தனித்தன்மையுடையவர்கள். எல்லோருக்குமான பொதுவான விஷயங்கள் என்பவை மிகச் சொற்பம். எனவே, இவை சாத்தியமா என்பது அவரவர் காட்டும் முனைப்பைப் பொறுத்தது. ஆனால், இப்படியெல்லாம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றினால் சரிதான். அதில் ஏதேனும் மாற்றுக் கருத்து இருந்தால் பேசலாம் என்றேன். ஏதுமில்லை அவரிடம். உங்களுக்கு இருந்தால் கமென்ட்டில் சொல்லுங்கள். பேசுவோம்.

இந்த வாரம், மிக முக்கியமான வாரம். சண்டை வாரம்.

Relationship fight
Relationship fight
pixabay

எந்த ரிலேஷன்ஷிப்பும் சந்தோஷங்கள் மட்டுமே நிறைந்தது கிடையாது. 5 வருடங்களுக்கு முன்பிருந்த நாமே இப்போது மாறியிருக்கிறோம்.10 ஆண்டுகளுக்கு முன்பு நாம் ரசித்த, மதித்த, விரும்பிய விஷயங்கள் எல்லாவற்றையும் இப்போதும் அப்படியே பார்க்கிறோமா? இல்லையெனும்போது, இரண்டு தனித்தனி மனிதர்கள் இணைந்து உருவாகும் ரிலேஷன்ஷிப்பில் கருத்து வேற்றுமைகளோ, விவாதங்களோ, விருப்பு வெறுப்புகளோ எப்படி வராமல் போகும்? முதலில், ரிலேஷன்ஷிப்பில் சண்டையும் விவாதமும் தவறல்ல எனப் புரிந்துகொள்வோம். அதை எப்படிக் கையாள்வது என்பதுதான் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது. சண்டையே போடாதவர்கள் Perfect couple அல்லர்; எந்த சண்டை வந்தாலும் அதைச் சரியாகக் கையாண்டு, அடுத்த சண்டைக்குத் தயாராக இருப்பவர்களே Perfect couple. பிரச்னைகளை மூடி வைத்துக்கொள்பவர்களைவிட பேசி, சண்டையிட்டு தீர்த்துக் கொள்ளும் ஜோடி மகிழ்ச்சியாக வாழ்வதாக ஒரு சர்வே சொல்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இந்த விஷயத்தில் எல்லோரும் மனதில் நிறுத்த வேண்டிய ஒரு ஃபார்முலா இருக்கிறது. `Hate the fight; Not the person'

இது கொஞ்சமல்ல; ரொம்பவே கஷ்டம். ஆனால், மனித இனத்தின் அடிப்படை குணங்களைப் புரிந்துகொண்டால் கொஞ்சம் எளிதுதான். நாம் அனைவரும் தவறு செய்யக்கூடியவர்களே. தவறே செய்யாத மனிதன் கிடையாது. அந்தத் தவற்றை நாம் மன்னிக்கிறோமோ, அதைச் செய்தவரை நம் வாழ்வில் தொடர அனுமதிக்கிறோமா என்பதெல்லாம் அடுத்து. முதலில், தவறு செய்தவரை ஒரேடியாக நிராகரிப்பதைக் கைவிடுவோம்.

ஒருவரை அயோக்கியன் என்பதற்கும் அவர் செய்தது அயோக்கியத்தனம் என்பதற்கும் இருக்கும் வித்தியாசத்தை அறிய வேண்டும். யாரும் அயோக்கியர்கள் கிடையாது. அவர்கள் செய்த ஒரு சில செயல்கள் அப்படி என யோசிக்கத் தொடங்குவோம்.

Relationship
Relationship
Pixabay

சரி, ஒரு ரிலேஷன்ஷிப்பில் முதல் சண்டை எப்போது வரும்?

`ஹனிமூன் பீரியட்' எனப்படும் ரிலேஷன்ஷிப்பின் ஆரம்பக் காலத்தைத் தாண்டியவுடன்தான் பெரும்பாலும் முதல் சண்டை வருகிறது. சிலருக்கு சில ஆண்டுகள் ஆகலாம். முதல் டேட்டிங்கிலே சண்டையிட்டவர்களும் உண்டு. அது அவரவர் பொறுமை, புரிந்துணர்வு, இயல்பு என நிறைய காரணிகளால் மாறுபடும்.

சண்டையிடும்போது நாம் செய்யாமல் இருக்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன. எதற்காகச் சண்டை என்பதைவிட எப்படிச் சண்டையிட்டோம் என்பதே பிரச்னையைப் பெரிதாக்கும்.

1. எந்தக் காரணத்தைக் கொண்டும் ஒருவரின் சுயமரியாதையைப் பாதிக்கும் விஷயங்களைச் சொல்லி சண்டையிடாதீர்.

2. மகிழ்ச்சியாக இருந்த தருணங்களில் உங்கள் பார்ட்னர் உங்களிடம் சொன்ன ரகசியங்களை, சண்டையின்போது சொல்லிக் காட்ட வேண்டாம். உதாரணமாக, உங்கள் பார்ட்னர் அவர் பெற்றோரிடமோ முந்தைய ரிலேஷன்ஷிப்பிலோ செய்த தவற்றை உங்களிடம் சொல்லியிருந்தால், அதைச் சொல்லி இப்போது அவர் செய்வது தவறென சொல்ல வேண்டாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

3. நீங்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் சொற்கள் என்றாலும்கூட, சண்டையின்போது கவனமாகப் பயன்படுத்தவும். `கோவத்துல சொல்லிட்டேன். அந்த அர்த்தத்துல சொல்லல' என்பதுதான் பெரும்பாலான சமயம் காதலர்களின் வாதமாக இருக்கும். நீங்கள் அப்படிப்பட்ட சொற்களைப் பயன்படுத்தக்கூடாது என்பதுதான் விஷயம்.

4. எதற்காகச் சண்டை வந்ததோ, அந்தக் காரணத்தைத் தாண்டி மற்றவற்றைப் பேச அது நேரமல்ல. எனவே, அந்தக் குறிப்பிட்ட செயலைப் பற்றியும் அது தொடர்புடைய விஷயங்கள் பற்றியும் மட்டுமே பேசுங்கள்.

இப்படியெல்லாம் யோசித்துக் கோவப்பட முடியுமா எனக் கேட்க வேண்டாம். உங்கள் வாழ்க்கையும் ரிலேஷன்ஷிப்பும் மகிழ்ச்சியாக இருப்பதற்காக இதைச் சொல்லவில்லை. நீங்கள் ஒரு நல்ல மனிதராக இருப்பதற்கே இந்த குணம் வேண்டும்.

A relationship with no arguments is a relationship with a lot of secrets
Unknown

உண்மையில், முதல் சண்டைதான் அந்த ரிலேஷன்ஷிப்பின் அடித்தளம் எந்த அளவுக்குத் திடமாக இருக்கிறது என்பது உணர்த்தும் நிகழ்வு. நிறைய பேருக்கு முதல் சண்டை எதற்காகப் போட்டோம் என்பதுகூட சில மாதங்களுக்குப் பிறகு மறந்துபோகும். எனவே, அதை நினைத்து பயப்பட வேண்டாம். ஆனால், ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். முதல் சண்டையை சமாளிக்க சில சமரசங்கள் நிச்சயம் தேவைப்படும். அந்தச் சண்டைக்குப் பிறகு உங்கள் ரிலேஷன்ஷிப்பில் நிச்சயம் சில மாற்றங்கள் நிகழும். அது என்ன மாதிரியான மாற்றம் என்பது நீங்கள் செய்யும் விஷயங்களைப் பொறுத்தே அமையும்.

சண்டைக்குப் பிறகு?

1. நீங்கள் முதலில் அமைதி கொள்ளுங்கள். கோவத்தில் சண்டை போடலாம். சமாதானம் செய்ய முடியாது.

2. முதலில் யார் பேசுவதென காத்திருக்காதீர்கள். உங்களுக்குக் கோபம் போய்விட்டால், உடனே சமாதானம் பேசிவிடுங்கள். காலம் அதிகரிக்க அதிகரிக்க, அந்தச் சண்டை சமாதானம் ஆகும் வாய்ப்புகள் குறையும்.

3. அவர் உங்கள் காதலர். எதிரியல்லர். அதனால் நீங்கள் மனமிரங்கி பேசலாம். இருவருக்கும் பிடித்த விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன. அதனால்தான் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறீர்கள். அதை மறந்துவிடாதீர்கள்.

4. மன்னிக்க முன் வாருங்கள். கோவத்தில், `அந்த அர்த்தத்துல சொல்லல' எனச் சொன்னதுபோல, வெறும் மன்னிப்பு வேலைக்காவாது. அர்த்தம் பொதிந்த மன்னிப்புகளே காதலைக் காப்பாற்றும்.

Vijay sethupathi
Vijay sethupathi
Sethupathi movie

`சேதுபதி' படத்தில் விஜய் சேதுபதி மனைவியை அடித்துவிடுவார். தவற்றை உணர்ந்து சமாதானம் பேச வருபவரைக் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க சொல்வார் ரம்யா நம்பீசன். விஜய் சேதுபதியும் செய்வார். இதைச் சரியென்பவர்களும், ஓவர் திமிரு என்பவர்களும் உண்டு. இதில் நான் கவனிப்பது, ஒருவர் செய்த தவறுக்கு இணையான அளவு மன்னிப்பும் இருக்க வேண்டும். அது மனதிலிருந்து கேட்க வேண்டும்; செய்ய வேண்டும். சிலர் ஒரு தடவை மன்னிப்பென்றாலே போதுமென சமாதானம் ஆகிவிடுவர். சிலருக்கு 1,000 முறை எழுதித் தர வேண்டியிருக்கும். தவறு யார் பக்கம் என்பதும், உங்கள் பார்ட்னர் என்ன செய்தால் சரியாவார், அவர் எதிர்பார்ப்பு என்ன என்பதையும் தெரிந்து இந்த மன்னிப்பு கேட்கும் படலம் நிகழ வேண்டும். சேதுபதி படத்தில் அது காதலுடன் இயல்பாக நிகழும். அப்படியின்றி, `மன்னிப்பு கேட்டால்தான் என் ஈகோ சரியாகும்' என பார்ட்னரை இழிவு செய்ய முயல்வது அந்த ரிலேஷன்ஷிப்புக்கே பிரச்னையாகத்தான் முடியும். உங்களுக்குத் தேவை மன்னிப்பா இல்லை, அந்த ரிலேஷன்ஷிப்பா என்பதை யோசித்துக் கொள்ளுங்கள்.

எல்லாவற்றையும்விட, மிக முக்கியமானது ஒரு சண்டையிலிருந்து இருவரும் என்ன கற்றுக்கொண்டார்கள் என்பதுதான். அதைச் செய்யாமல், வெறும் சண்டை மட்டுமே போட்டுக் கொண்டிருப்பதால் பயனில்லை. ஒரே தவற்றை மீண்டும் செய்வது ஒகே. ஆனால், மீண்டும் மீண்டும் செய்வதும், அப்படி ஒருவரைச் செய்யபடி இன்னொருவர் நடப்பதும் நல்ல ரிலேஷன்ஷிப்புக்கான அறிகுறி அல்ல.

ரிலேஷன்ஷிப்பின் அழகு நம்மைப் பற்றி நாமே புரிந்துகொண்டு, அதன் மூலம் ஒரு சிறப்பான மனிதராக மாறுவதற்கு உதவும் என்பதும்தான். அதற்கு சின்னச் சின்ன சண்டைகள் தேவை. சண்டையை சரியாகப் போடவும், சண்டைக்குப் பிறகான சூழலைச் சமாளிக்கவும் முடியுமென்றால் ஜாலியாகச் சண்டை போடுங்கள். ஊடலும் காதல்தான் என்கிறார்கள் கவிஞர்கள்.

- காதலிப்போம்