Published:Updated:

எனக்கு 48, உனக்கு 50; நடுத்தர வயதிலும் தாம்பத்யம் இனிக்க இதைச் செய்யுங்கள்! - காமத்துக்கு மரியாதை 10

Couple (Representational Image) ( Photo by Jonathan Borba from Pexels )

எத்தனையோ பிரச்னைகள் மனசுக்குள்ள ஓடிட்டிருந்தாலும், மனசுக்குப் பிடிச்ச பாட்டு காதுல விழறப்போ அதை ரசிக்கிறோம்தானே... அதே மாதிரிதான் தாம்பத்திய உறவும். வாய்ப்பு கிடைக்கிறப்போ பார்த்துக்கலாம்னு இல்லாம, வாய்ப்பை ஏற்படுத்தி உறவு வெச்சுக்கணும்.

எனக்கு 48, உனக்கு 50; நடுத்தர வயதிலும் தாம்பத்யம் இனிக்க இதைச் செய்யுங்கள்! - காமத்துக்கு மரியாதை 10

எத்தனையோ பிரச்னைகள் மனசுக்குள்ள ஓடிட்டிருந்தாலும், மனசுக்குப் பிடிச்ச பாட்டு காதுல விழறப்போ அதை ரசிக்கிறோம்தானே... அதே மாதிரிதான் தாம்பத்திய உறவும். வாய்ப்பு கிடைக்கிறப்போ பார்த்துக்கலாம்னு இல்லாம, வாய்ப்பை ஏற்படுத்தி உறவு வெச்சுக்கணும்.

Published:Updated:
Couple (Representational Image) ( Photo by Jonathan Borba from Pexels )

இந்த வார காமத்துக்கு மரியாதை நடுத்தர வயதினருக்கானது என்பதை தலைப்பே உங்களுக்குச் சொல்லும். மனமும் உடலும் நிறைந்து காமத்தை அனுபவிக்கிற வயது வாழ்வின் மத்தியில்தான் என்கிறார்கள் பாலியல் நிபுணர்கள். யதார்த்தமாக யோசித்தாலும் நடுத்தர வயதில்தான், தாம்பத்திய உறவில் சம பகிர்தல், `என்ன நினைச்சுப்பாளோ / நினைச்சுப்பாரோ' என்ற பயமற்ற ஈடுபாடு, அனுபவம் என்று பல ப்ளஸ் இருக்கும். ஆனால், நம் நாட்டில் நிலைமையே வேறு மாதிரிதான் இருக்கிறது.

``பிள்ளைங்க எல்லாம் வளர்ந்துட்டாங்க. இனிமே இதையெல்லாம் கொஞ்சம் அடக்கி வாசிக்கணும் அல்லது தவிர்த்துடணும்'' என்று முடிவெடுத்து விடுகிறார்கள் பலர். பிள்ளைகளுக்குத் திருமணமாகியிருந்தாலோ `பேரன், பேத்தி எடுக்கிற வயசுல இதென்ன கருமம்' என்று அருவருப்பு காட்டுகிறார்கள் சிலர். இதில் இன்னொரு வகையும் இருக்கிறது.

`இந்த ஆளு சின்ன வயசுல தினமும் தண்ணியடிச்சிட்டு வந்து என்னை அடிப்பான். எனக்கு விருப்பமில்லைன்னாலும் விட மாட்டான். இப்பதான் நான் நிம்மதியா இருக்கேன்.'

இள வயதில் மனைவியை அவமரியாதையாக நடத்துகிற கணவர்களுக்கு, மத்திம வயதிலும் இறுதியிலும் மனைவியின் பராமரிப்பு வேண்டுமானால் கிடைக்கலாம். நட்பும் காமமும் அவ்வளவாகக் கிடைப்பதில்லை. விதிவிலக்குகள் இருக்கலாம்.

Couple (Representational Image)
Couple (Representational Image)
Photo by Jonathan Borba from Pexels

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருமணமான புதிதில், பல காலம் அடக்கி வைத்த உணர்வை வெளிப்படுத்துகிற வேகத்துடன் இருக்கிற காமம், கருத்தரிப்பு, குழந்தை என்னும் அடுத்தகட்டத்தில் கொஞ்சம் அடக்கி வாசிக்கும். குழந்தைகள் வளர ஆரம்பிக்கையில், `ஒரு வாரம், இல்ல பத்து நாளைக்கு முன்னாடி சேர்ந்திருந்தோமா' என்று ஞாபகப்படுத்திக் கொள்கிற அளவில்தான் பெரும்பாலும் தாம்பத்திய உறவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. நடுத்தர வயதிலிருந்துதான், காமத்தை நிதானமாக அனுபவிக்க முடியும். ஆனால், இன்றைக்கு நாற்பதுகளின் இறுதியிலும், ஐம்பதுகளிலும் இருக்கிற தம்பதிகளிடையேயான செக்ஸ் வாழ்க்கை பெரும்பாலும், காமத்தை நிதானமாக அனுபவிப்பதாக இல்லை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மனநல மருத்துவர் அசோகன் பேசுகையில், ``இளவயசுல கணவனும் மனைவியும் டூ வீலர்ல போறப்போ பார்த்தீங்கன்னா, அவங்களுக்கு நடுவுல இடைவெளியே இருக்காது. சில வருடங்கள்ல குழந்தைகள் நடுவுல உட்கார்ந்து சின்ன இடைவெளியை ஏற்படுத்தினாலும் கணவரோட தோள் மேல மனைவியோட கை இருக்கும். நடுத்தர வயசுல இருக்கிற கணவன் - மனைவி டூ வீலர்ல போறப்போ கவனிச்சா, நடுவுல ஒருத்தர் உட்காரலாம்கிற அளவுக்கு இடைவெளி இருக்கும். அப்படியே நெருங்கி உட்கார்ந்திருந்தாலும், வீட்டு சம்பந்தமான ஏதோவொரு விவாதம் ஓடிட்டு இருக்கும். பிள்ளைகளோட மேற்படிப்பு, கல்யாணம்னு எத்தனையோ பிரச்னைகள் மனசுக்குள்ள ஓடிட்டிருந்தாலும், மனசுக்குப் பிடிச்ச பாட்டு காதுல விழறப்போ அதை ரசிக்கிறோம்தானே... அதே மாதிரிதான் தாம்பத்திய உறவும். வாய்ப்பு கிடைக்கிறப்போ பார்த்துக்கலாம்னு இல்லாம, வாய்ப்பை ஏற்படுத்தி உறவு வெச்சுக்கணும்.

மனநல மருத்துவர் அசோகன்
மனநல மருத்துவர் அசோகன்

நடுத்தர வயசு காமம் பத்தி பேசுறப்போ, `கிளிஞ்சல்கள்' படத்துல வர்ற ஒரு சீனும், `வரவு நல்ல உறவு' படத்துல வர்ற ஒரு சீனும் எனக்கு நினைவுக்கு வருது. கிளிஞ்சல்கள் படத்துல சுமனோட அப்பா கேரக்டர், ``எங்க ரூம்ல ஒருநாளும் விளக்கு எரிஞ்சதில்லை. நானும் உங்க அம்மாவும் அந்தளவுக்கு செக்ஸ்க்கு மரியாதை கொடுக்கிறோம்" என்பார்.

வரவு நல்ல உறவுல விசு கேரக்டர் தன்னோட மனைவி கேரக்டருக்கிட்ட, ``நமக்குன்னு தனியா ஒரு ரூம் இருக்கணும்" என்பார்.

அந்தப் படங்கள்ல ஆண் கேரக்டர்கள் பேசினாலும் நிஜத்துல இந்த உணர்வு கணவன், மனைவி ரெண்டு பேருக்குமே இருக்கணும். ரெண்டு பேருமே எமோஷனலா அட்டாச் ஆகியிருக்கணும். அப்படியிருந்தா, சாதாரணமா பேசுறப்போவே உடம்புக்குள்ள குறுகுறுன்னு ஏதோ பொங்கும். பல வருஷங்களுக்கு முன்னாடி நிகழ்ந்த முதலிரவெல்லாம் நினைவுக்கு வரும்.

வளர்ந்த பிள்ளைகளுக்கு பெற்றோர் ஆயிட்டதாலேயே வீட்டுக்குள்ள பாடக்கூடாது, ஒருத்தருக்கு ஒருத்தர் சாப்பாடு பரிமாறிக்கக்கூடாது, அப்படி பரிமாறுறப்போ சாப்பிடுற கணவன் / மனைவி தோள் மேல கை வைக்கக்கூடாது அப்படின்னு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. சின்ன வயசுல அரை வேக்காடு உணவும் பிடிக்கும்; ஜீரணிக்கும். அதுவே நடுத்தர வயசுல நீரிழிவு, ரத்த அழுத்தத்துக்கு ஏத்தபடி பக்குவமா சமைச்சுதானே சாப்பிடணும். அந்த மாதிரிதான் தாம்பத்திய உறவும். வேகம் குறைச்சலா இருக்கும். உறுப்பு வறட்சியா இருக்கும். ஆனா, அன்பு அதிகமா இருந்தா இதெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை. தோணும்போதெல்லாம் உங்க பெட்ரூம் லைட்ஸ் அணைக்கப்படட்டும்'' என்கிறார்.

Couple (Representational Image)
Couple (Representational Image)
Photo by Andrea Piacquadio from Pexels

வாசகர் கேள்வி: திருமணம் முடிந்து 11 மாதம் ஆகிறது. இதுவரை எனக்கும் கணவருக்கும் ஒரு முறை கூட செக்ஸ் நடக்கவில்லை டாக்டர். எங்களுடையது பெற்றோர் பார்த்துச் செய்த திருமணம். ஐந்து முறை முயற்சி செய்து பார்த்தும் முடியவில்லை. எனக்கு வலி தாங்க முடியவில்லை. செக்ஸ் செய்யும்போது உணர்ச்சிகள் வருவதில்லை. மிகவும் வருத்தமாக இருக்கிறோம்.

டாக்டர் பதில்: உங்கள் விஷயத்தில், உங்கள் கணவருக்கு பிரச்னை இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது. அல்லது உங்களுக்கு உறவுப்பாதையில் இறுக்கம் இருக்கலாம். உங்கள் கணவருக்கு உறவுப்பாதைக்குள் செல்கிற அளவுக்கு விறைப்புத்தன்மை இருக்கிறதா, அல்லது அதற்கு முன்னாலேயே விறைப்புத்தன்மை குறைந்துவிடுகிறதா என்பது தெரிய வேண்டும். சிலருக்குத் தொடை பெரிதாக இருக்கலாம். அதனால், மேலே படுத்து உறவுக்கு முயலும்போது சிலருக்கு பொசிஷன் சரியாகக் கிடைக்காது. அதற்கு பதில் முட்டிப்போட்டு உறவில் ஏற்படலாம். உடனடியாக ஒரு பாலியல் மருத்துவரைச் சந்தியுங்கள். இனிமேலும் காலம் தாழ்த்த வேண்டாம்.''

காமத்துக்கு மரியாதை
காமத்துக்கு மரியாதை

இப்படிப்பட்ட காமத்தின் உள்ளும் புறமும் பற்றித்தான் இந்தத் தொடரில் பேசப் போகிறோம்; தெரிந்துகொள்ளப் போகிறோம்; காமத்துக்கும் வக்கிரத்துக்கும் இடையேயான வித்தியாசத்தைத் தெரிந்துகொள்ளப் போகிறோம்; கூடவே தாம்பத்திய உறவில் காமம் சார்ந்து சந்திக்கிற சிக்கல்களுக்கு நிபுணர்களுடன் இணைந்து தீர்வுகளையும் தேடவிருக்கிறோம். உங்கள் துணையிடம்கூட பகிரத் தயங்குகிற பிரச்னைகளுக்கான பதில்கள் நிச்சயம் இருக்கும். இந்தத் தொடரின் வழி உங்கள் அந்தரங்க கேள்விகளை அனுப்ப விரும்புகிறவர்கள் uravugal@vikatan.com என்ற மின்னஞ்லுக்கு அனுப்பலாம்.

- மரியாதை செய்வோம்!