Published:Updated:

``டிரெயின்லதான் கால்களை பறிகொடுத்தேன். இப்போ அதே டிரெயின்ல...!?''- நெகிழ வைக்கும் வாணியம்பாடி விஜய்

Vijay
Vijay

"கால் போயிடுச்சேன்னு உட்கார்ந்துகிட்டிருந்தா வாழ்க்கை போயிடும். என் மேல இரக்கப்படறவங்ககிட்ட கெஞ்சிக்கேட்டு வேலைபார்த்தா, எனக்கு என் மேலேயே சுய இரக்கம் வந்துவிடுமோங்கிற பயத்துல நானும் அமைதியா வந்தர்றேன்!"

இரண்டு வருடங்களுக்கு முன்பு, ரயில் விபத்து ஒன்றில் கால்களைப் பறிகொடுத்தார் வேலூர் வாணியம்பாடியைச் சேர்ந்த இளைஞர் விஜய். அவரை நேசித்த ஷில்பா, விஜய் சிகிச்சை பெற்றுவந்த மருத்துவமனைக்கே வந்து, 'கால்கள் போனால் என்ன, தாலிகட்ட கைகள் போதும்' என்று திருமணம் செய்துகொண்டார். விஜய் - ஷில்பாவின் காதலையும் திருமணத்தையும் கனிவுடன் கவனித்தது மொத்த தமிழ்நாடும்.

விஜய் - ஷில்பா
விஜய் - ஷில்பா

பிறகு சென்னை, அரசு மருத்துவமனையில் செயற்கைக்கால் பொருத்திக்கொண்ட விஜய், 'வீட்டுக்குப் போகணும். நான் படிச்ச கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கு ஏத்த வேலை தேடணும். குடும்பத்தைக் காப்பாத்தணும். டிரெயின்ல டி-ஷர்ட் வியாபாரம் பண்ணிக்கிட்டிருக்கிற எங்க அம்மாவை வீட்ல உட்காரவெச்சு சாப்பாடு போடணும்' என்று ஆனந்தக் கண்ணீருடன் விகடனுக்கு பேட்டி கொடுத்துவிட்டு சொந்த ஊருக்குக் கிளம்பினார். தற்போது விஜய் எப்படியிருக்கிறார், வேலைகிடைத்துவிட்டதா என்று அறிய அவரை தொடர்புகொண்டோம்.

Vikatan

''வேலை தேடிப்போற இடங்கள்ல எல்லாம், 'உங்களால இந்த வேலையைச் செய்ய முடியாது தம்பி'னு பரிதாபப்பட்டே எனக்கு வேலை தர யோசிக்கிறாங்க. நானும் இப்போ நார்மல் மனுஷன்தான். கட்டைக்கால்களாவே இருந்தாலும் இப்போ எனக்கும் கால்கள் இருக்கு. கால் போனதுக்குப் பிறகும் நீச்சலடிக்கிறேன், சைக்கிள் ஓட்டுறேன், என் கட்டைக்காலோட டூ வீலர்கூட ஓட்ட ஆரம்பிச்சிட்டேன். கால் போயிடுச்சேன்னு உட்கார்ந்துகிட்டிருந்தா வாழ்க்கை போயிடும். என் மேல இரக்கப்படறவங்ககிட்ட கெஞ்சிக்கேட்டு வேலைபார்த்தா, எனக்கு என் மேலேயே சுய இரக்கம் வந்துவிடுமோங்கிற பயத்துல நானும் அமைதியா வந்தர்றேன்'' - தவிப்பும் தன்மானமுமாகப் பேசுகிறார் விஜய்.

Vijay
Vijay

"வேலூர் மாவட்டத்தைப் பிரிக்கிறதுக்கு முன்னாடி கலெக்டரை பார்த்து வேலைகேட்டு மனுக்கொடுத்தேன். அவர் சொன்னபடி, ஊரீஸ் காலேஜ்ல நடந்த கேம்பஸ் இன்டர்வியூவுல கலந்துகிட்டு பல கம்பெனிகள்ல தேர்வானேன். ஆனா, எந்தக் கம்பெனியில இருந்தும் அப்பாயின்மென்ட் ஆர்டர் வரலை. மாவட்டத்தைப் பிரிச்சதுக்கு அப்புறம் வாணியம்பாடி, திருப்பத்தூர் மாவட்டத்துல வருது. இந்த மாவட்டத்தோட புது கலெக்டரைப் பார்த்தும் மனு கொடுக்கலாம்னு இருக்கேன்.

ஒரு பக்கம் பிரைவேட் நிறுவனங்கள்ல வேலை தேடுறேன், இன்னொரு பக்கம் கவர்ன்மென்ட் வேலைக்காக கலெக்டர் ஆபீஸ்ல மனு கொடுக்கிறேன். வீட்ல சும்மா இருக்கக் கூடாதுனு, வேலை தேடிகிட்டே, காட்பாடியிலயிருந்து கிளம்புற டிரெயின்கள்ல ஹெட் செட் விக்க ஆரம்பிச்சிட்டேன். இதே மாதிரி ஒரு டிரெயின்லதானே என் கால்களைப் பறிகொடுத்தேன்னு தோணுறப்போ மனசை என்னவோ செய்யும். ஆனா, குடும்பத்தைப் பார்க்கணும் இல்ல'' என்பவரின் குரலில் வேதனையும் வருத்தமும் இழையோடுகின்றன.

'ஹெட் செட் வெயிட் இல்லாத பொருள் என்பதால, டிரெயின்ல ஏறியிறங்கி வியாபாரம் பண்றது கஷ்டமா இல்லை'ன்னு அவர் எனக்கு சமாதானம் சொல்றாரு.''
விஜயின் மனைவி ஷில்பா
`உலகம் எப்படிப் பார்த்தால் என்ன.. இது என் வாழ்க்கை!' -வேலூர் மாற்றுத் திறனாளி இளைஞரின் நம்பிக்கை

''நானும் வேலைக்குப் போயிட்டிருந்தேன். என் காலேஜ்லயிருந்து ஒரிஜினல் சர்ட்டிஃபிகேட்ஸை இன்னும் வாங்காததால வேலையை கன்டின்யூ பண்ண முடியலை. சர்ட்டிஃபிகேட்ஸ் வாங்கிட்டு மறுபடியும் வேலைக்குப் போகணும். அவரோட மருத்துவச் செலவுக்காக வாங்கின கடனையெல்லாம் அடைக்கணும்.

'ஹெட் செட் வெயிட் இல்லாத பொருள் என்பதால, டிரெயின்ல ஏறியிறங்கி வியாபாரம் பண்றது கஷ்டமா இல்லை'ன்னு அவர் எனக்கு சமாதானம் சொல்றாரு. விஜய் வேலைகேட்டுப் போற இடங்கள்ல எல்லாம் கூப்பிடறேன்னு சொல்றாங்க. ஆனா, கூப்பிட மாட்டேங்கிறாங்க. மத்தவங்களோட இரக்கமே எங்களுக்குப் பிரச்னையாயிடுச்சு'' - வருத்தத்துடன் சொல்கிறார் விஜய்யின் மனைவி ஷில்பா.

Vijay - Shilpa
Vijay - Shilpa
Vikatan

''கட்டைக்கால் மாட்டுற இடத்துல நீல கலர் பேண்டு போடுவேன். அதுதான் என் தொடையையும் கட்டைக்காலையும் இறுக்கமாகச் சேர்த்துப் பிடிக்கும். போட்டு ஒரு வருஷமாயிடுச்சுங்கிறதால, அந்த பேண்டு லூசாகிடுச்சு. அதை சென்னையிலதான் மாத்த முடியும். அதுக்காக நான் கூடிய சீக்கிரம் சென்னைக்கு வருவேன். அதுக்குள்ள எனக்கு வேலை கிடைச்சிட்டா நல்லாயிருக்கும்'' என்கிற விஜய்யின் குரலில் வாழ்க்கையின் மீதான பேராவல் ததும்புகிறது.

தேடல்களுக்கு நிச்சயம் பலன் உண்டு!

அடுத்த கட்டுரைக்கு