Published:Updated:

காதலுக்கும் காமத்துக்கும் மூளைக்கும் என்ன சம்பந்தம்? பெட்ரூம்... கற்க, கசடற - 16

காதலுக்கும் காமத்துக்கும் மூளைக்கும் உள்ள தொடர்புபற்றி சிக்மண்ட் பிராய்ட் காலம் தொட்டே... ஏன் அதற்கு முன்பிருந்தே ஆராயப்பட்டு வருகிறது. சரி... மூளையில் என்னென்ன காதல்கள் எங்கெங்கே இருக்கின்றன? என்னது, காதல்களா?' என்று பன்மையைப் பார்த்து அதிர்ச்சியடைய வேண்டாம்.

சுனைவாய்ச் சிறுநீரை யெய்தாதென் றெண்ணிப்
பிணைமா னினிதுண்ண வேண்டிக் - கலைமாத்தன்
கள்ளத்தி னூச்சுஞ் சுரமென்பர் காதல
ருள்ளம் படர்ந்த நெறி.

- மாறன் பொறையனாரின் ஐந்திணை ஐம்பது.

(பாலை நிலத்தில் காதல் மான்கள் ஓடிக் களைத்து தாகம் தீர்க்க வேண்டி அலைகின்றன. ஒரு சுனையில் சிறிதளவு நீர் உள்ளது. ஆனால், அது ஒரு மான் அருந்துவதற்கு மட்டுமே போதுமானது. இந்நிலையில், பெண் மான் நீர் அருந்தட்டும் என்கிற காதல் நோக்கோடு ஆண் மான், தான் நீரைப்பருகுவது போலவே பாவனை செய்தது. அதேபோல பெண்மானும் `ஆண் மான் அருந்தட்டும்' என்று நீர் அருந்துவது போலவே பாவனை செய்தது. சுனையின் நீர் தீரவே இல்லை. தம் காதலை இந்த இரு மான்களும் இப்படி வெளிப்படுத்துகின்றன.)

காதலுக்கும் காமத்துக்கும் மூளைக்கும் உள்ள தொடர்புபற்றி சிக்மண்டு ஃபிராய்டு காலம் தொட்டே... ஏன் அதற்கு முன்பிருந்தே ஆராயப்பட்டு வருகிறது. சரி... மூளையில் என்னென்ன காதல்கள் எங்கெங்கே இருக்கின்றன?

Love
Love
Image by Gerd Altmann from Pixabay
உங்களுக்கும் இணைக்கும் இடையில் இந்த `கெமிஸ்ட்ரி' இருக்கிறதா? - பெட்ரூம்... கற்க, கசடற - 15

`என்னது... காதல்களா!' என்று பன்மையைப் பார்த்து அதிர்ச்சியடைய வேண்டாம். ஏனெனில், மூளைக்கு அதையும் தாங்கும் சக்தி உண்டு. காதல் என்ற மலரினும் மெல்லிய உணர்வு ஏற்பட, மூளை எவ்வளவு கடினமாக ஓவர்டைம் செய்ய வேண்டியிருக்கிறது தெரியுமா?

நியூயார்க்கில் உள்ள மானுடவியல் விஞ்ஞானி ஹெலன் ஃபிஷர் இதுபற்றி ஏராளமாகச் சிந்தித்திருக்கிறார். 60 வயதான அந்தப் பெண் விஞ்ஞானி வீட்டிலிருந்து பல்கலைக்கழகத்துக்கு நடந்து செல்லும் வழியில், வயதான தம்பதிகள் கைகோத்துக்கொண்டு அமர்ந்திருப்பதைக் கண்டிருக்கிறார். அதுதான் வயதானவர் களின் பிணைப்புபற்றிய ஆராய்ச்சிக்கான முதல் அம்பு.

பல ஆண்டுகளை இந்த ஆராய்ச்சிக்காகவே செலவிட்டிருக்கிறார் ஹெலன். காமம், ரொமான்ஸ், பிணைப்பு எனக் காதலின் எல்லா பண்புகளையும் அலசியிருக்கிறார். அவற்றுக்கான உயிர்வேதியியல் வழிநடைப்பாதைகள் அத்தனைக்கும் பயணம் செய்திருக்கிறார். இந்தப் பண்புகள் எப்படி ஃபெவிகால் போலப் பற்றிக்கொள்கின்றன... எப்படித் தேய்ந்து போகின்றன? இதில் மூளையின் பங்கு என்ன? பங்குச்சந்தை, தங்கம், பெட்ரோல்-டீசல் விலைகளெல்லாம் தாறுமாறாக இருப்பதைப் பற்றி நாம் பேசுவது போல, அவர் காதல் பற்றி சகஜமாகச் சொல்கிறார். அவ்வளவும் அறிவியல்!

``தாம்பத்திய வாழ்க்கையின் சந்தோஷங்களைப் பொறுத்து, அறிந்தோ அறியாமலோ பெண்ணின் மனதில் ஆணைப் பற்றிய ஒரு பிம்பம் உருவாகிறது. பொறுமையில்லாமலும், முரட்டுத்தனமாகவும் ஆண் நடந்துகொள்ளும்போது, அவளால் இன்பத்தை அனுபவிக்க முடிவதில்லை. அதைத் தொடர்ந்து, `அவன் நல்ல கணவனாக, பொறுப்புள்ள தந்தையாக இருக்க மாட்டானோ?!' என்கிற எண்ணம் அவளுக்குள் உருவாகிறது. கணவன் `மிஸ்டர் ரைட்' என்று அறிந்து மகிழவோ, `மிஸ்டர் ராங்' என்று உணர்ந்து வருந்தவோகூட வேதிப்பொருள்களின் காக்டெயில் காரணமாக இருக்கிறது'' என்கிறார் ஹெலன்.

ஏழு மாத காலமாக, காதலே எல்லாமாகத் திரிந்த ஒரு தம்பதியை எம்.ஆர்.ஐ இயந்திரம் மூலம் சோதித்தார் ஹெலன். அந்த இயந்திரத்தில் இருக்கும்போது அவர்களுக்கு இரண்டு படங்கள் காட்டப்பட்டன. ஒன்று காதலரின் படம். இன்னொன்று முன்பின் அறியாதவரின் படம். ஒவ்வொரு படத்தையும் பார்க்கும்போது அவர்களின் மூளைக்குள் நிகழும் வேதியியல் மாற்றங்கள் நுணுக்கமாகப் பதிவு செய்யப்பட்டன. தன் காதலரைப் பார்க்கும்போது, மூளையில் உள்ள மகிழ்ச்சிக்கான பகுதிகள் பரபரப்பாக வேலை செய்தனவாம். மற்றொரு படத்தைப் பார்த்தபோது, ஒன்றும் சொல்லிக்கொள்கிற மாதிரி இல்லை!

Couple (Representational Image)
Couple (Representational Image)
Photo by Jonathan Borba from Pexels

மகிழ்ச்சிக்கான ஏரியாவில் உள்ள `டோபமைன்' என்ற நியூரோ டிரான்ஸ்மிட்டர் உணர்ச்சிமிக்க ஆற்றல், பூரிப்பு, மையப்படுத்தப்பட்ட கவனம், காதல் பரிசு(!) பெறும் வேட்கையென எல்லாவற்றையும் மிகச்சரியான விகிதத்தில் தூண்டிவிட்டது. காதல் என்ற மலரினும் மெல்லிய உணர்வு ஏற்பட, மூளை எவ்வளவு கடினமாக ஓவர்டைம் செய்ய வேண்டியிருக்கிறது பாருங்கள்!

புதிதாகக் காதல் வயப்பட்டவர்கள் இரவுகளில் தூங்க மாட்டார்கள். சூரிய உதயத்தை ஆவலோடு பார்ப்பார்கள். ஓட்டப் பந்தயத்துக்கு அனுப்பினால்கூட ஜெயித்துக் காட்டுவார்கள். அவர்களின் திறமையைக் காட்டிலும் அதிகமான அளவு செயல்படுவார்கள். காதல் ஒருவரை தைரியசாலியாக்குகிறது. பிரகாசமானவராக மாற்றுகிறது. காதலுக்கு முன் செய்யத் தயங்கிய காரியங்களையும்கூட, `ரிஸ்க் எடு தலைவா' என்று செய்யத் தூண்டுகிறது. எல்லாவற்றுக்கும் காரணம் மூளையில் உள்ள வேதிப்பொருள்கள் கன்னாபின்னாவெனக் கூடி கும்மாளம் அடிப்பதுதான்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஹெலன் சந்தித்த ஒரு பெண்ணுக்கு முதல் காதல் 12 வயதில் வந்ததாம்... உயரமாகவும் கம்பீரமாகவுமிருந்த அந்த நபரின் தோற்றத்தைப் பார்த்ததும் அந்தப் பெண்ணுக்குள் ஒரு சிலிர்ப்பு. வீட்டிலுள்ளவர்கள் தவிர வேறு ஆண்களை அவ்வளவு நெருக்கமாகப் பார்த்திராத வயது அது. தினம் தினம் அவரைப் பார்க்கையில் இவளுக்குள் காதல் நெருப்பு நடனமாடியதாம். அவர் ஸ்டைலாக சிகரெட் புகைப்பதுகூட வசீகரமான விஷயமாகவே அப்போது தென்பட்டிருக்கிறது. இப்போது அதையெல்லாம் நினைத்தால் `யோகிபாபு காமெடி' போலச் சிரிப்பு வருகிறது என்கிறாள் அந்தப் பெண்.

``இது போன்ற பால்ய வயது இனக்கவர்ச்சிகளும் ரசாயன விளையாட்டுதான். ஆனால், இதில் வினையாற்றும் மூளையின் வேதிப் பொருள்களுக்கும், நாம் `காதல்' என்று அங்கீகரிக்கும் டிரேட்மார்க் விஷயத்தின்போது மூளை செயல்படும் விதத்துக்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன'' என்கிறார் ஹெலன்.

Couple (Representational Image)
Couple (Representational Image)
Photo by Emma Bauso from Pexels
உடல் எடைக்கும் உடலுறவு மகிழ்ச்சிக்கும் தொடர்பிருக்கிறதா? உண்மை என்ன? பெட்ரூம் கற்க கசடற - 13

எல்லாமே விளையாட்டுதான்... டெஸ்ட் கிரிக்கெட், ஒரு நாள் போட்டி, டி-20 போல ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். நீங்கள் என்ன ஆடினாலும் மூளை மிகத் தெளிவாகச் செயல்பட்டு, அதற்குத் தகுந்தவற்றையே சுரக்கிறது.

அதனால்தான் 12 வயதில் அசட்டுக் காதலை உருவாக்குகிறது. அந்த வயதில் தெய்வீகக் காதலை ஏற்படுத்தினால் என்ன ஆகும்? வாழ்க்கையே சிதைந்துபோகும் அபாயம் அல்லவா அது! மூளை மட்டும் காதலின் எஜமானாக இல்லாது, இதயம்தான் காதலின் அடிப்படை என்றிருந்தால், காதல் போயின் மறு காதல் வரும் சாத்தியம் இல்லவே இல்லை. அடடா... காதலில் தோற்றவர்களுக்கும் இன்னொரு வாய்ப்பு கிடைக்குமா? அல்லது காமக்கடலில்தான் மூழ்க முடியுமா? காதலில் தோல்வி அடைந்து வேறோர் இணையுடன் திருமணம் செய்து தாம்பத்தியத்தைத் தொடங்குகிறவர்கள் எல்லாம் `மெளன ராகம்' பட ரேவதி போலக் கம்பளிப்பூச்சி நினைப்புடனா இருக்கிறார்கள்? சில பல நாள்களில் படுக்கையறையில் அவர்கள் சகஜமாவதற்கும், புதிய வெட்கச் சிவப்புக்குள் செல்வதற்கும் என்ன காரணம்? மூளையேதான்!

- சஹானா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு