Published:Updated:

உங்களுக்கும் இணைக்கும் இடையில் இந்த `கெமிஸ்ட்ரி' இருக்கிறதா? - பெட்ரூம்... கற்க, கசடற - 15

Couple (Representational Image) ( Photo by Andrea Piacquadio from Pexels )

ஹீரோக்களுக்கும் ஹீரோயின்களுக்கும் மட்டும்தான் கெமிஸ்ட்ரி நன்றாக வொர்க் அவுட் ஆகுமா? காதல் இணைகள் அல்லது தம்பதிகளுக்கு இடையே இந்த வேதியியல் இருக்கிறதா? சரி... ஆக்சூவலி அதென்ன கெமிஸ்ட்ரி? இதற்கான பதிலை கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

உங்களுக்கும் இணைக்கும் இடையில் இந்த `கெமிஸ்ட்ரி' இருக்கிறதா? - பெட்ரூம்... கற்க, கசடற - 15

ஹீரோக்களுக்கும் ஹீரோயின்களுக்கும் மட்டும்தான் கெமிஸ்ட்ரி நன்றாக வொர்க் அவுட் ஆகுமா? காதல் இணைகள் அல்லது தம்பதிகளுக்கு இடையே இந்த வேதியியல் இருக்கிறதா? சரி... ஆக்சூவலி அதென்ன கெமிஸ்ட்ரி? இதற்கான பதிலை கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

Published:Updated:
Couple (Representational Image) ( Photo by Andrea Piacquadio from Pexels )

சிலம்பில் போகிய செம்முக வாழை
அலங்கல் அம்தோடு, அசைவளி உறுதோறும்
பள்ளியானைப் பரூஉப் புறம் தைவரும்
நல்வரை நாடனோடு அருவி ஆடியும்
பல்இதழ் நீலம் படுசுனைக் குற்றறும்
நறுவீ வேங்கை இன வண்டு ஆர்க்கும்
வெறி கமழ் சோலை நயந்து விளையாடலும்
அரியபோலும் காதல் அம்தோழி

- அகநானூறு

(தோழியே... மலையில் செழித்து வளர்ந்து நிற்கும் செவ்வாழைகளின் இலைகள் காற்றில் அசையும். அங்கே உறங்கிக் கொண்டிருக்கும் யானையின் கனத்த உடலை அவை தழுவும். இத்தகைய வளம் மிகுந்த மலை நாட்டைச் சேர்ந்த என் காதலனுடன் அருவியில் நீராட முடியாதா? சுனையில் நீலப் பூக்களைப் பறித்து மகிழ்ந்திருக்க முடியாதா? மணம் வீசும் மலர்களுடைய வேங்கை மரத்தில் வண்டுகள் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும் சோலையில் என் காதலுடன் விளையாட முடியாதா?)

காதலின் பருவங்கள் பற்றியும், காதலின் வகைகள் பற்றியும் உலகம் முழுக்கவே இலக்கியங்கள் உண்டு. கண்டவுடன் காதல், காணாமலே காதல் என வித்தியாசங்களும் உண்டு. காதல் என்ற மூன்றெழுத்து பற்றி இதுவரை மூவாயிரம் கோடி வார்த்தைகளுக்கும் அதிகமாகவே எழுதப்பட்டிருக்கின்றன. ஆனாலும், காதலை அனுபவிக்கிற ஒவ்வொருவருக்கும் புத்தம் புதுசாக, வேறு யாரும் உணர முடியாத அனுபவமாகவே அது இருக்கிறது.

Couple (Representational Image)
Couple (Representational Image)
Photo by Emma Bauso from Pexels

ஹீரோக்களுக்கும் ஹீரோயின்களுக்கும் மட்டும்தான் கெமிஸ்ட்ரி நன்றாக வொர்க் அவுட் ஆகுமா? காதல் இணைகள் அல்லது தம்பதிகளுக்கு இடையே இந்த வேதியியல் இருக்கிறதா? சரி... ஆக்சூவலி அதென்ன கெமிஸ்ட்ரி?

திருமணத்துக்குச் சில மாதங்கள் முன்பு ஓரிரு முறை பார்த்து, மணமாலை மாற்றி, குடும்பம் என்ற அமைப்பைக் கட்டுக்கோப்பாக நடத்தி, முதுமை என்ற முடிவுச் சூழல்வரையில் நீண்டகால பாசப் பிணைப்போடு இருப்பதுதான் நம் இந்தியத் தன்மை. இதில் விழியில் தொடங்கி இதயம் நுழைந்து உயிரில் கலந்த ரொமான்ஸ் காதலும் சேர்த்தி. காதல் பற்றியும், காமம் பற்றியும் மனவியல் நிபுணர்கள் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நம் தலைமைச் செயலகமான மூளையில் நிறைய வேதிப் பொருள்கள் இருப்பதை அறிவோம். அந்த வேதிப் பொருள்கள் காக்டெயில் கலாட்டா நிகழ்த்தும்போதுதான் ரொமான்ஸ் பிறக்கிறது. காதலாக வலுக்கிறது. காமமாக நீள்கிறது. இந்தக் காதல் காக்டெயிலுக்கும், இறுதிவரை இணைந்து `பாசம்' என்ற ஒற்றை வார்த்தையே எல்லாமுமாக வாழும் தம்பதியின் `பிணைப்பு' (Bonding) காக்டெயிலுக்கும் ரொம்பவே வித்தியாசம் இருக்கிறது என்கிறது அறிவியல்.

ஆண் - பெண் இடையிலான காதல், திருமணத்துக்குப் பிறகான பாசப் பிணைப்பு... இவை இரண்டுக்கும் ஒரே விதமான வேதிப் பொருள்களையே மூளை செயல்படுத்துவதாக இதுவரை நம்பப்பட்டது. இது தவறு... இரண்டும் வேறு வேறு என்பதையே இவ்வளவு காலம் ஆராய்ந்து, முடிவாக உணர்ந்திருக்கிறார்கள்.

வட இந்தியத் திருமணங்களில் மெஹந்தி என்கிற மருதாணி இடும் நிகழ்ச்சி முக்கிய வைபவம். அந்த மருதாணியின் அழகுச் சிவப்பு அதிகபட்சம் சில வாரங்கள்தான் நிலைத்திருக்கும். காதலால் இணையும் தம்பதிக்கிடையேயான உடல் கவர்ச்சி வேதியியலும் மருதாணிச் சிவப்புக்கான வேதியியல் மாற்றம் போன்றதே... அந்த ஆரம்பகால ரொமான்ஸ் உணர்வு, சிலபல ஆண்டுகளில் குடும்பச்சூழல் காரணமாகக் குறைந்து போகலாம். சிலருக்கு காணாமலே போய்விடலாம்.

Couple (Representational Image)
Couple (Representational Image)
Photo by Jonathan Borba from Pexels

ஆனால், இணைகளுக்கு இடையேயான நீண்டகால பந்தம், மருதாணிச் சிவப்பு போல வண்ணம் இழந்து போவதல்ல... அந்தப் பிணைப்பு அத்தனை பிரச்னைகளையும் தாண்டி, காலாகாலத்துக்கும் நீடித்திருக்கும் வகையிலேயே மூளை என்ற அதிஅற்புத சாகச இயந்திரம் வேறுவிதமான வேதிப்பொருள்களைச் சுரக்கிறது.

ரொமான்ஸுக்கான வேதிப் பொருள்களையே பிணைப்புக்கும் அது அளித்தால், எந்தக் காதலும் `தெய்வீகக் காதல்' ஆகாமல் சில ஆண்டுகளிலோ, சில மாதங்களிலோ, சில வாரங்களிலோ காணாமல்போகும் அபாயம் உண்டு. அப்படி நேர்ந்தால் அநேகம் பேர் காதல் தோல்வி தாடிக்காரர்களாகவோ, திருமணமாகி குறுகிய காலத்தில் விவாகரத்து வாங்கியவர்களாகவோ இருப்பார்கள். நல்லவேளை!

அண்மையில் வந்த வாட்ஸ்அப் ஜோக் இது... `குண்டாக இருக்கிறார், வழுக்கை வந்துவிட்டது' போன்ற காரணங்களுக்காக வரன்களை நிராகரிப்பவர்கள் பத்தாண்டுகள் கழித்து அதே தோற்றத்தில் உள்ள இணையுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்!

ஆம்... திருமணமான சில ஆண்டுகளில் இருவருமே நல்ல எடைபோட்டு விடக்கூடும். தோற்றப்பொலிவு குறைந்திருக்கக்கூடும். பணம் என்ற எக்ஸ்பிரஸ் ரயிலைப் பிடிப்பதற்காக நேரங்காலம் பார்க்காமல் ஓயாது உழைக்க வேண்டியிருக்கலாம். கொரோனாவில் தொடங்கி, குழந்தைகளின் பள்ளிக்கூட பிரச்னை, மருத்துவம், மோட்டார் ரிப்பேர், வீட்டில் தண்ணீர் இல்லை, வீட்டுக்கு வெளியே மழை வெள்ளம்... இப்படி அன்றாடப் பிரச்னைகளில் சிக்கி அல்லாடலாம். ஆனாலும், தம்பதிகளுக்கான பிணைப்பில் எந்தக் குறையும் இருப்பதில்லை, அதில் ரொமான்ஸ் இல்லையென்றாலும் கூட!

இடைக்காலத்தில் புதிய பறவையை நாடிச்செல்லும் விதிவிலக்குகளையும், அதீத பிரச்னைகளால் விவாகரத்துக்குத் தள்ளப்படும் அப்பாவிகளையும் பற்றி மனவியல் நிபுணர்களின் இந்த ஆய்வு கருத்தில் கொள்ளவில்லை. இப்போது விவாகரத்துகள் அதிகரித்திருந்தாலும்கூட, அந்தச் சதவிகிதம் மிகக் குறைவு என்பதே காரணம்.

ஒரே இணையுடன் வாழ்ந்ததால் போரடித்துவிட்டது என்று பொதுவாக எந்த இந்தியரும் சொல்வதில்லை. குழந்தைகளுக்கு விவரம் தெரிந்த பிறகு பரஸ்பர முத்தமோ, அணைப்போ, கைகளைப் பற்றிக்கொள்ளுதலோகூட இல்லாத தம்பதிகளே இங்கு ஏராளம். இப்படியான வெளித் தேவைகளையும் தாண்டி, அவர்களை மன ஒட்டுதலோடு வைத்திருக்கிறது பாசம் என்கிற அட்டாச்மென்ட்தான்.

Couple (Representational Image)
Couple (Representational Image)
Photo by Jasmine Carter from Pexels

ஆனால், எந்த வயதிலும், எந்தச் சூழலிலும், எந்தப் பின்னணியிலும் காதலும் ரொமான்ஸும் காமமும் மிக அவசியம் என்பதைத்தான் விஞ்ஞானிகள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். ஒன்றுமே இல்லாவிட்டாலும்கூட பிணைந்து இருக்கிற நம் ஜோடிகளின் வாழ்வில், இவையெல்லாமும் சேரும்போது எப்படிப்பட்ட பரவசம் கிடைக்கும் என்று கண்மூடி சில நிமிடங்கள் யோசிக்கலாம். இணையின் கைப்பற்றிப் பேசத் தொடங்கலாம், இனியேனும்!

முதல் பாராவில் உள்ள கேள்விக்கான விடையும் இதே பிணைப்புதான்!

- சஹானா