Published:Updated:

`தோல்விகளை சந்திக்கவும் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுங்கள்!' - பாய்ஸ், கேர்ள்ஸ், பேரன்ட்ஸ் - 4

Parenting (Representational Image)

பெற்றோரும் பிள்ளைகளை எப்போதும் தோல்விகளிலிருந்து பாதுகாக்கவே முனைகிறார்கள், முயல்கிறார்கள். தோல்வி நல்லது என்பதைப் பெற்றோரும் உணர்ந்து, பிள்ளைகளுக்கும் உணரச் செய்ய வேண்டும். வெற்றிக்கு அடிப்படையே தோல்விதான் என்பதை, பிள்ளைகளுக்குச் சொல்லி வளர்க்க வேண்டும்.

`தோல்விகளை சந்திக்கவும் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுங்கள்!' - பாய்ஸ், கேர்ள்ஸ், பேரன்ட்ஸ் - 4

பெற்றோரும் பிள்ளைகளை எப்போதும் தோல்விகளிலிருந்து பாதுகாக்கவே முனைகிறார்கள், முயல்கிறார்கள். தோல்வி நல்லது என்பதைப் பெற்றோரும் உணர்ந்து, பிள்ளைகளுக்கும் உணரச் செய்ய வேண்டும். வெற்றிக்கு அடிப்படையே தோல்விதான் என்பதை, பிள்ளைகளுக்குச் சொல்லி வளர்க்க வேண்டும்.

Published:Updated:
Parenting (Representational Image)

சென்னையைச் சேர்ந்த மருத்துவரும் உளவியல் ஆலோசகருமான ஷர்மிளாவும் அவரின் டீன் ஏஜ் மகள் ஆஷ்லியும் `பேரன்ட்டீனிங்' என்ற பெயரில் பெற்றோர்களுக்கும் பதின்பருவ பிள்ளைகளுக்கும் விழிப்புணர்வு பயிற்சி வகுப்புகள் எடுப்பவர்கள். இதுவரை பத்தாயிரத்துக்கும் மேலான குடும்பங்களில் மாற்றங்களை நிகழ்த்திக் காட்டியிருப்பவர்கள். பிள்ளைகளைக் குறைசொல்லும் பெற்றோர்களுக்கு தன் வயதினரின் குரலாக ஆஷ்லியும், பதின்பருவத்தினரிடம் பெற்றோர்கள் உணரும் பிரச்னைகளை, எதிர்பார்க்கும் மாற்றங்களைப் பெற்றோர் சமூகத்துக் குரலாக ஷர்மிளாவும் பகிர்ந்துகொண்ட தகவல்கள் அவள் விகடன் இதழில், 13 அத்தியாயங்களில் வெளிவந்திருக்கின்றன. பெற்றோருக்கும் டீன் ஏஜ் பிள்ளைகளுக்குமான உறவுச்சிக்கல் பற்றிப் பகிர இன்னும் ஏராளமான விஷயங்கள் இருப்பதால் விகடன்.காமில் தொடர்ந்து பேசுகிறார்கள் டாக்டர் ஷர்மிளாவும் அவரின் மகள் ஆஷ்லியும்.

டாக்டர் ஷர்மிளா

``பெரும்பாலான பெற்றோர்கள் பிள்ளைகளை வெற்றியை நோக்கிப் பயணிக்க மட்டுமே பழக்குகின்றனர். தோல்வியும் வாழ்க்கையில் சகஜம் என்பதையோ, அது பல வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக்கொடுக்கும் என்பதையோ கற்றுக் கொடுப்பவர்கள் அரிது.

Parenting (Representational Image)
Parenting (Representational Image)

தோல்வி என்பதும் வாழ்க்கையில் ஓர் அங்கம்தான். தோல்விகளை எதிர்கொள்வதும் அவற்றிலிருந்து மீள்வதும் உங்கள் டீன் ஏஜ் பிள்ளைகளை வலிமையானவர்களாகவும், வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளத் தகுதியானவர்களாகவும் மாற்றும். ஆனால், பிள்ளைகளால் தோல்விகளை அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. ஏதேனும், தவறாக நடந்துவிட்டாலோ, தோல்வியடைந்தாலோ அவர்கள் பதற்றத்துக்குள்ளாகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் பெரும்பாலான குழந்தைகள் தோல்விக்கு பயந்து ஒதுங்குகிறார்கள்... காரணம், தோல்வியால் ஏற்படும் நன்மைகள் அவர்களுக்குப் பயிற்றுவிக்கப்படுவதில்லை.

பெற்றோரும் பிள்ளைகளை எப்போதும் தோல்விகளிலிருந்து பாதுகாக்கவே முனைகிறார்கள், முயல்கிறார்கள். தோல்வி நல்லது என்பதைப் பெற்றோரும் உணர்ந்து, பிள்ளைகளுக்கும் உணரச் செய்ய வேண்டும். வெற்றிக்கு அடிப்படையே தோல்விதான், தோல்விகளைத் தொடாமல் வெற்றி சாத்தியமில்லை என்பதை, பிள்ளைகளுக்குச் சொல்லி வளர்க்க வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உண்மையில் தோல்வியை எதிர்கொள்ளும்போது பிள்ளைகளின் மூளை, அதை ஏற்கப் பழகினால், பக்குவமடையும். அடுத்தடுத்தும் தோல்விகளைச் சந்திக்க நேர்ந்தாலும் அதற்குத் தயாராவார்கள். உடைந்துபோக மாட்டார்கள். தோல்வி என்பது வெற்றியை நோக்கிய முதல் முயற்சி என்பதை பெற்றோர்கள்தாம் பிள்ளைகளுக்குச் சொல்ல வேண்டும். தேவைப்பட்டால் பெற்றோர் தங்களின் அனுபவக் கதைகளை பிள்ளைகளுடன் பகிர்ந்துகொள்ளவும் தயங்கக் கூடாது. தோல்வியடைந்தாலும் பரவாயில்லை, தோல்விகளுக்கு பயந்து முயற்சிகளை நிறுத்தக் கூடாது என்று புரியவைக்க வேண்டும். எப்போதும் வெற்றிக் கொண்டாட்டத் தருணங்களை மட்டுமே அனுபவிக்கப் பழக்காமல், ஏமாற்றமளிக்கும் தருணங்களையும் அனுபவிக்கவும், அந்த அனுபவங்களின் மூலம் இலக்குகளை அடைய மேலும் கடினமாக உழைக்கவும் பிள்ளைகளை வழிநடத்த வேண்டும்.''

பெற்றோராக நீங்கள் என்னவெல்லாம் செய்யலாம்?

உங்கள் பிள்ளையின் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு தோல்வி தருணத்தையும் நீங்கள் தாங்கிப்பிடிக்க முடியாது. அதைத் தாண்டி அவர்களுக்கு சில நேரம் உங்கள் உதவி தேவைப்படும். அவை...

தோல்வியடைவது உங்கள் பிள்ளைக்கு மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்தும்போது...

பள்ளி நாடகத்தில் கலந்துகொள்வதற்கான பிரத்யேக உடையை உங்கள் குழந்தை மறந்துவிட்டாள்(ன்) என வைத்துக்கொள்வோம். அந்த இடத்தில் அவர்களுக்கு வாழ்க்கைப் பாடம் எடுத்துக்கொண்டிருக்க வேண்டியதில்லை. உடையைக் கொண்டுபோய் சேர்ப்பதுதான் சரி.

ஆஷ்லி - ஷர்மிளா
ஆஷ்லி - ஷர்மிளா

உங்கள் குழந்தை ஆபத்தில் இருக்கும்போது....

உங்கள் குழந்தையின் நண்பர்கள் நீச்சலில் நிபுணர்களாக இருப்பதாலேயே நீச்சலுக்குப் புதியவரான உங்கள் குழந்தையையும் நீங்கள் நீச்சல் குளத்தில் ரிஸ்க் எடுக்கச் சொல்லக்கூடாது.

உங்கள் பிள்ளைகள் துன்புறுத்தப்படுத்தப்படும்போது...

எப்போதோ ஒரு முறை உங்கள் பிள்ளை, விளையாட்டு மைதானத்தில் எதிர்கொள்ளும் கருத்துக்கு எதிராக நீங்கள் கொதித்தெழ வேண்டாம். அதே நேரம் உங்கள் குழந்தை அந்த அனுபவத்தைத் தொடர்ந்து அனுபவிப்பது தெரிந்தால் உடனே அதில் தலையிட்டு குழந்தையைப் பாதுகாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆஷ்லி

``டீன் ஏஜராகத் தோல்வியை எதிர்கொள்வது என்பது எங்களுக்கெல்லாம் அவ்வளவு எளிதானதல்ல. ஒரு தோல்வி எங்களுக்குள் எத்தகைய பதற்றத்தை ஏற்படுத்தும், எங்கள் இயல்பு வாழ்க்கையை எப்படி பாதிக்கும் என்பதை மற்றவர்கள் அறிய வாய்ப்பில்லை. ஒருமுறை பள்ளிக்கூடத்தில் கணக்குப் பாடத்தில் ஃபெயில் ஆகிவிட்டேன். என்னால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஒரு பக்கம் அதிர்ச்சி... இன்னொரு பக்கம் என்மேல் எனக்கே கோபம் என இருந்தேன்.

`நான் எப்படி ஃபெயில் ஆனேன்... இந்த ஏமாற்றத்தை என் குடும்பத்தார் எப்படி தாங்கிக்கொள்வார்கள்...' என்றெல்லாம் எனக்குள் ஏகப்பட்ட கேள்விகள். மற்ற பாடங்களில் நல்ல மதிப்பெண்கள் வாங்கியிருந்தும் அதை நினைத்து என்னால் சந்தோஷப்பட முடியவில்லை. கூனிக் குறுகிப் போய் வீட்டுக்கு வந்தேன். தயக்கத்துடன் என் ரிப்போர்ட் கார்டை அம்மாவிடம் நீட்டினேன்.

அம்மா என்னைக் கட்டிப்பிடித்து, `வாழ்த்துகள்' சொன்னார். எனக்குப் புரியவில்லை. `ஆஷ்லி... மத்த பாடங்கள்ல நீ சூப்பரா மார்க் வாங்கியிருக்கே...' என்று கட்டிப்பிடித்ததற்கான காரணமும் சொன்னார்.

``ஆனா, நான் மேத்ஸ்ல ஃபெயிலாயிட்டேனே... அதை நீங்க பார்க்கலையா'' என்றேன்.

Education (Representational Image)
Education (Representational Image)

``அது பரவாயில்லை. அந்த சப்ஜெக்ட்டுல நீ இன்னும் கொஞ்சம் ஹார்டு வொர்க் போடணும். நீ அதுக்கு ரெடியா இருக்கியா?'' என்றார்.

``இருக்கேன்... ஆனா, இந்த விஷயத்தை உங்களால எப்படி இவ்வளவு ஈஸியா எடுத்துக்க முடிஞ்சது'' என்றேன்.

அப்போது அம்மா தன் பள்ளிப்பருவத்தில் தானும் கணிதப் பாடத்தில் ஃபெயிலானதையும், வாழ்க்கை என்பது அத்துடன் நின்றுவிடுவதில்லை, அந்த ஒரு தோல்வி நம் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில்லை என்றும், அந்தத் தோல்விக்கான காரணம் அறிந்து அதன் பிறகு, தன்னைத் தயார்படுத்திக்கொண்ட அனுபவத்தையும் சொன்னார்.

அம்மாவின் இந்த அணுகுமுறை எனக்கு தோல்விக்கான புதிய அர்த்தத்தை விளக்கியது. அதிலிருந்து தோல்விகளுக்கு பயப்படுவதை நிறுத்திவிட்டேன். தோல்விகளைச் சந்திக்கும்போது பதற்றமடையாமல் அமைதியாக எதிர்கொள்ளும் பக்குவத்தையும் பெற்றேன்.''

- ஹேப்பி பேரன்ட்டீனிங்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism