கூடல் பெருமானைக் கூடலார் கோமானைக்
கூடப் பெருவேனேல் கூடு என்று – கூடல்
இழைப்பாள் போல் காட்டி இழையாது, இருக்கும்
பிழைப்பில் பிழைபாக்கு அறிந்து
- முத்தொள்ளாயிரம்
(பெரிய குதிரைகள் பூட்டிய தேரில் சேர மன்னன் பவனி வருகிறான். பவனி வரும் அரசனைப் பார்த்தால் மகளுக்கு காதல் நோய் உண்டாகிவிடும் என்று அம்மாக்கள் கதவுகளை அடைக்கிறார்கள். உலா வரும் மன்னனைக் காண கதவைத் திறக்கிறார்கள் பெண்கள். அம்மாக்கள் அடைக்க, பெண்கள் திறக்க, கதவின் தாழ் தேய்கிறது)
உலகம் முழுவதும், டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் குறைந்து வருகின்றன. ஆனால், மருத்துவ உலகத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட பெரும்பாலானோர் இதை அறியவில்லை. அல்லது இந்தப் போக்கின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளவில்லை. இனப்பெருக்கம், ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுள், லிபிடோ மற்றும் கர்ப்ப காலத்தில் சரியான கரு வளர்ச்சி உட்பட இது பல நிலைகளில் பிரச்னையை ஏற்படுத்தும் என்று அறிந்தால் ஆச்சர்யமாகத்தான் இருக்கும்.

விந்தணு எண்ணிக்கையை அச்சுறுத்துவது எது?
ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க வளர்ச்சியை மாற்றுவது எது?
மனித இனத்தின் எதிர்காலத்தைப் பாதித்துக்கொண்டிருப்பது எது?
இந்தக் கேள்விகளை எல்லாம் ஆராய்ந்தால் அவற்றுக்கான விடை என்ன தெரியுமா?
அது நமது நவீன உலகம்!
ஆம்... நாமும் நம் நவீன வாழ்க்கைமுறையும்தான் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் குறைவதற்கு முழுமையான காரணம். எப்படி நமது நவீன உலகம் விந்தணு எண்ணிக்கையை அச்சுறுத்துகிறது, ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க வளர்ச்சியை மாற்றுகிறது மற்றும் மனித இனத்தின் எதிர்காலத்தைப் பாதிக்கிறது என்பதை அறிந்தால் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருக்கும்.
மேற்கத்திய நாடுகளில் ஆண்டுக்கு ஒரு சதவிகிதம் என்கிற கணக்கில் டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் குறைகின்றன. முதலில், இது ஒரு பெரிய விஷயமாகத் தெரியவில்லை, ஆனால் இது ஓர் அபாயகரமான அளவு. இப்படியே சென்றால் பத்தாண்டு களில் 10 சதவிகிதத்துக்கும் அதிகமான சரிவையும், 50 ஆண்டு களில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமான வீழ்ச்சியையும் இது கொண்டு வரும். பண வீக்கத்தைவிட மிக மோசமான வீழ்ச்சி இது. இதற்கிடையில், டெஸ்டிகுலர் புற்றுநோய் விகிதங்கள் மற்றும் விறைப்புத்தன்மை பாதிப்பு ஆகியவையும் இதே விகிதத்தில் அதிகரித்து வருகின்றன. மேலும், கருச்சிதைவு விகிதங்களும் அதிகரிக்கின்றன. இவை எதுவுமே நல்லதல்ல.
இது விந்தணு எண்ணிக்கையை பற்றியது மட்டுமல்ல. இனப்பெருக்க ஆரோக்கியமே ஆபத்தில் உள்ளது.
டெஸ்டோஸ்டிரோன் என்கிற இந்த ஹார்மோன், பெண்களின் ஆரோக்கியத்திலும் ஆண்களின் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

டெஸ்டோஸ்டிரோன் ஓர் `ஆண்' ஹார்மோன் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், பெண்களும் தங்கள் கர்ப்பப்பையில் டெஸ்டோஸ்டிரோனை உற்பத்தி செய்கிறார்கள். ஆண்களைவிட பெண்கள் மிகக் குறைந்த அளவில் உற்பத்தி செய்கிறார்கள் (ஆண்களுக்கு இது விதைப்பையில் செய்யப்படுகிறது). இரு பாலினத்திலும், ஹார்மோன் ஆற்றல் நிலைகள், அறிவாற்றல் செயல்பாடு, லிபிடோ மற்றும் பாலியல் செயல்பாடு ஆகியவற்றை இந்த ஹார்மோன் அளவு பாதிக்கிறது. பெண்களின் பாலுறவு ஆசையின்மை தொடர்ந்து துன்பமாக இருக்கும்போது, அது `ஹைபோஆக்டிவ் பாலியல் ஆசைக்கோளாறு' என்று அழைக்கப்படுகிறது, டெஸ்டோஸ்டிரோன் சிகிச்சையானது மாதவிடாய் நின்ற பெண்களுக்கு மட்டுமே பரிந்துரைக்கப் படுகிறது என்று மகளிர் மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதன் மூலம் ஆண்களைப் போலவே பெண்களின் பாலியல் செயல்பாட்டிலும் டெஸ்டோஸ்டிரோன் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது தெளிவாகிறது.
பெண்களுக்கு, வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் டெஸ்டோஸ்டிரோன் அளவுகளுக்கு ஓர் இனிமையான இடம் உள்ளது. அது அதிகமாகவோ, குறைவாகவோ இருந்தால், இனப்பெருக்க ஆரோக்கியத்தையும் வளர்ச்சியையும் தவறான திசையில் அனுப்பலாம். உதாரணமாக, ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும்போது, அவளுடைய குழந்தை சரியாக வளர, அது சரியான நேரத்தில் கர்ப்பப்பையில் உள்ள டெஸ்டோஸ்டிரோனின் சரியான அளவை வெளிப்படுத்த வேண்டும்.
பெண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் அளவு உயரும்போது - பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்) போன்ற பிரச்னைகள் அதிகரித்து வருவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஒழுங்கற்ற மாதவிடாய், கருவுறுதல் சவால்கள் (அதிக கருச்சிதைவுகள் உட்பட), தேவையற்ற இடங்களில் முடி, முகப்பரு மற்றும் அதிக எடை அதிகரிப்பு... மேலும் அவர்கள் குழந்தைகளைப் பெற்றிருந்தால், அந்தப் பெண் குழந்தைகளுக்கு அதிக உடல் நிறை குறியீட்டெண் (பிஎம்ஐ) இருக்கும் என்று இனப்பெருக்க அமைப்பு மற்றும் பாலியல் கோளாறுகள் ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.

டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் ஏன் மாறுகின்றன?
டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் பெண்களின் மற்றும் ஆண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை இப்போது நாம் அறிவோம். சமீபத்திய ஆண்டுகளில் நிகழும் இனப்பெருக்க மாற்றங்கள் ஓரளவுக்கு மோசமான வாழ்க்கை முறைத் தேர்வுகளால் (புகைபிடித்தல், அளவுக்கு அதிகமாக மது அருந்துதல் போன்றவை) உந்தப்படுகின்றன. ஆனால், உலகம் முழுவதும் தினமும் வெளிப்படும் நூற்றுக்கணக்கான ரசாயனங்களும் இதற்கு முக்கியமான காரணம்தான்.
கட்டுப்பாடற்ற ரசாயனங்கள் கருவுறுதலைப் பாதிக்குமா?
இந்த இனப்பெருக்க ஆரோக்கிய மாற்றங்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டவை என்பது மட்டுமல்ல... அவை பெரும்பாலும் சில பொதுவான காரணங்களால் இயக்கப்படுகின்றன. நாளமில்லா சுரப்பிகளை சீர்குலைக்கும் ரசாயனங்கள் (Endocrine-disrupting chemicals) போன்ற ஹார்மோன்-அபகரிப்பு ரசாயனங்கள் நமது நவீன உலகில் எங்கும் காணப்படுகின்றன. நாம் சுவாசிக்கும் காற்று, நமது உணவு மற்றும் தண்ணீர் மற்றும் நமது சருமத்தில் நாம் பயன்படுத்தும் பொருள்கள் மூலம் அவற்றை உட்கொள்கிறோம். பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பேக்கேஜ் உணவுகள், நான்ஸ்டிக் சமையல் பாத்திரங்கள், மின்னணு சாதனங்கள், அழகுசாதனப் பொருள்கள் மற்றும் தனிப்பட்ட பராமரிப்புப் பொருள்கள், துப்புரவுப் பொருள்கள் மற்றும் நாம் தொடர்ந்து பயன்படுத்தும் பல பொருள்களில் அவை இருக்கின்றன. ஒரு நல்ல செக்ஸுக்கும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலுக்கும் தொடர்பு இருப்பது இப்போது புரிகிறதுதானே?

மனித உடலுக்குள் செல்லும் இந்த ரசாயனங்கள் பாலியல் மற்றும் இனப்பெருக்க வளர்ச்சி மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்தின் கட்டுமானத் தொகுதிகளுடன் அழிவை ஏற்படுத்துகின்றன. இந்த ரசாயனங்கள் 1950-ம் ஆண்டுக்குப் பிறகே அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதற்குப் பிறகே விந்தணுக்களின் எண்ணிக்கை, டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் மற்றும் கருவுறுதல் குறையத் தொடங்கியது. யாருக்கும் தெரியாமலே, இந்த ரசாயனங்கள் நமது டெஸ்டோஸ்டிரோன் அளவையும், ஈஸ்ட்ரோஜன் அளவையும் மாற்றி, மனித இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சியில் தீங்கு விளைவிக்கும்.
இந்த ரசாயனங்கள் பெரும்பாலும் கட்டுப்பாடற்றவை என்பதை பெரும்பாலான மக்கள் உணரவில்லை: நம்பமுடியாத அளவிலான நுகர்வோர் தயாரிப்புகளை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப் படும் எண்ணற்ற ரசாயனங்கள் பெரும்பாலும் கட்டுப்பாடற்றவை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ரசாயனப் பயன்பாட்டின் காரணமாக நாம் நம்மை மட்டுமல்ல; பிறக்காத குழந்தைகளைக்கூட நாம் அறியாமலே சோதனை விலங்குகளாகப் பயன்படுத்துகிறோம். இந்தச் சோதனையானது நமது இனப்பெருக்க ஆரோக்கியத்தையும் மனித இனத்தின் எதிர்காலத்தையும் பாதிக்கிறது.
இனி என்ன செய்யப்போகிறோம்?
- சஹானா