Published:Updated:

`டீனேஜ் காதல்'னு ஒண்ணு கிடையவே கிடையாது; ஏன் தெரியுமா? - காமத்துக்கு மரியாதை - 6

டீன் ஏஜ்ல, குறிப்பா பள்ளி நாள்கள்ல வர்ற இனக்கவர்ச்சிக்கு அடிப்படை காதலா, காமமா? இதைப் பெற்றோர்கள் எப்படி அணுகணும்? மனநல மருத்துவர் சுபா சார்லஸ் சொல்வதைக் கேளுங்கள்...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

டீன் ஏஜ்ல வருவது காதலா, காமமா அப்படிங்கிற  டாபிக்குள்ள போறதுக்கு முன்னாடி, டீன் ஏஜ் காதலைப்பத்தி பேசின ரெண்டு தமிழ்ப்படங்களைப் பத்திப் பார்க்கலாம். முதல்படம் சுரேஷும் சாந்தி கிருஷ்ணாவும் இணைந்து `பன்னீர் புஷ்பங்கள்'. நாயகனும் நாயகியும் ஸ்கூல் ஸ்டூடன்ட்ஸ். ஆரம்பத்துல ஃபிரெண்ட்ஸா பழகுறவங்க, அந்த வயசுக்கே உரிய இனக்கவர்ச்சியில் ரெண்டு பேரும் சிக்கித் தவிச்சிட்டிருப்பாங்க. இந்த நேரத்துல அவங்களோட பெற்றோர்களும் சில ஆசிரியர்களும் விஷயத்தைப் பெருசாக்க, வீட்டை விட்டே ஓடிப்போயிடுவாங்க.

அவங்க ஏறின டிரெயின்ல, அவங்களைப் பத்தி நல்லா தெரிஞ்ச ஆசிரியர் ஒருவர் இருப்பார். அவருக்கு டீன் ஏஜ்ல வர்ற இனக்கவர்ச்சி பத்தின சரியான புரிந்துணர்வு இருக்கும்.  அதனால, ரெண்டு பேருக்கும் `இது காதல் இல்ல; அதுக்கான வயசும் இது இல்ல'ன்னு  புரிய வெச்சு, ரெண்டு பேரையும் அவங்க வீட்ல கொண்டு போய் சேர்ப்பார். 

தனுஷ் -ஷெரின் துள்ளுவதோ இளமை
தனுஷ் -ஷெரின் துள்ளுவதோ இளமை
ரிலேஷன்ஷிப்பின் முதல் 6 மாதங்கள் ஏன் முக்கியம்? #AllAboutLove - 8

இதே மாதிரியான கதைதான். காலத்துக்குத் தகுந்த மாதிரி வேறொரு கோணத்துல இருந்து `துள்ளுவதோ இளமை'யில் அணுகியிருப்பார் டைரக்டர் செல்வராகவன். டீன் ஏஜ் இனக்கவர்ச்சியில விழாம இருந்தாலும் நாயகியை சந்தேகப்படுவார், அவங்க அப்பா. நாயகனோட அப்பாவோ, வீட்ல ஒரு டீன் ஏஜ் பையன் இருக்கிற உணர்வுகூட இல்லாம, குடிச்சிட்டு வந்து மனைவியோட உடலுறவு வெச்சுப்பார். இந்தப் படத்தோட நாயகனும் நாயகியும்கூட ஒரு கட்டத்துல டீன் ஏஜ் இனக்கவர்ச்சியில விழுவாங்க. வீட்ல பிரச்னை அதிகமாக, ஒருகட்டத்துல மனசு வெறுத்துப்போய் நண்பர்களோடு வீட்டை விட்டே ஓடிப்போவாங்க. போன இடத்துல நாயகனுக்கும் நாயகிக்கும் உடல்ரீதியான உறவு நடந்திடும். அதன்பிறகு, தங்களோட தவற்றை உணர்ந்து, படிப்பு, வேலைன்னு ரெண்டுபேரும் அவங்கவங்க வாழ்க்கையில் செட்டிலாகிறதா படம் முடியும். 

ரெண்டு படங்களுமே டீன் ஏஜ்ல வர்ற இனக்கவர்ச்சியை, அதாவது காமத்தை காதல்னு போற்றிப் புகழ்ந்து படத்தோட இறுதியில் நாயகனையும் நாயகியையும் சேர்த்து வெச்சிருக்காது. பொதுவாக, பள்ளி நாள்கள்ல வர்ற லவ்வோட முடிவு  நிஜத்துலேயும் இப்படித்தான் இருக்கும். படிப்பு, வேலைக்கு நடுவிலே டீன் ஏஜ் இனக்கவர்ச்சியை  காதலா  மெயின்டெய்ன் செஞ்சு, அதைத் திருமணத்துல முடிக்கிறவங்க இருந்தாலும் அவங்களோட எண்ணிக்கை என்னவோ ரொம்ப  குறைச்சல்தான்.

அடுத்த விஷயம், மேலே இருக்கிற நாலு பேருமே டீன் ஏஜ்க்கே உரிய இனக்கவர்ச்சியில தடுமாறிட்டு  இருக்கிறப்போ, அவங்க குடும்பம் `இந்த வயசுல இது சகஜம்தான். இந்த இனக்கவர்ச்சியை இப்படித்தான்  கிராஸ் பண்ணணும்'னு சொல்லித் தராது. நிஜத்துலேயும் பெரும்பான்மை வீடுகள்ல இதுதான் நிலைமை. அதனாலேயே, அவங்க வீட்டை விட்டுப் போகணும்கிற முடிவை எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவாங்க. சரி, டீன் ஏஜ்ல, குறிப்பா பள்ளி நாள்கள்ல வர்ற இனக்கவர்ச்சிக்கு அடிப்படை காதலா, காமமா? இதைப் பெற்றோர்கள் எப்படி அணுகணும்? மனநல மருத்துவர் சுபா சார்லஸ் சொல்வதைக் கேளுங்கள். 

மனநல மருத்துவர் சுபா சார்லஸ்
மனநல மருத்துவர் சுபா சார்லஸ்

``ஹார்மோன்கள் சுரந்து உடலை  இனப்பெருக்கத்துக்குப் பக்குவப்படுத்துகிற வயசு டீன் ஏஜ். ஹார்மோன்கள் சுரப்பு அந்தப் பிள்ளைங்க உடம்புக்குள்ளேயும் வெளியேயும் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தும். `ஒரு வருஷத்துக்கு முன்னாடியிருந்த பிள்ளையா இது'ன்னு வியக்கிற அளவுக்கு  டீன் ஏஜ்  அவங்க உடம்புல நிறைய அழகியல் மேஜிக்ஸ் செய்யும். அந்த ஏஜ்ல உலகமே நம்மளை வியந்து பார்க்குதுன்னு நினைச்சுப்பாங்க. விளைவு, டிரஸ்ஸிங், பேச்சுன்னு எதிர்பாலினரை ஈர்க்கிறதுக்கு நிறைய மெனக்கெடுவாங்க. இந்த இனக்கவர்ச்சியை பின்னாடி இருந்து இயக்குறது காமம்தான். காதலில்லை. அய்யய்யோ...  காமமான்னு பதற வேணாம். 

வாழ்க்கைக்குக் காமமும் அவசியம். ஒருவர் உடல் மேல் ஒருவருக்குக் கட்டுப்படுத்த முடியாத ஆசை, கொஞ்சம் வெறி இதெல்லாம் இருந்தாதான், அந்த உறவு நீடிச்சு இருக்கும். எவ்ளோதான் பெற்றோர் மேல பாசம்னாலும், `வாழ்நாள் முழுக்க அவங்களோடவே இருப்பேன்'னு எந்த ஆணும் சொல்றதில்லை; எந்தப் பெண்ணும் சொல்றதில்லை. ஆக, அவங்களை வாழ்க்கையோட  அடுத்தகட்டத்துக்கு நகர்த்துறது காமம்தான். மத்த உறவுகளைவிட ரொம்ப நாள் நீடிச்சிருக்கிற உறவுன்னா அது கணவன் - மனைவி உறவுதான். அதுக்கான காரணங்கள்ல  ஒண்ணு காமம்.  அதனால, காமம்ங்கிறது இயல்பானது மட்டுமல்ல, அத்தியாவச மானதும்கூட. ஆனா, இந்தக் காமம் பள்ளிக்கூட  நாள்கள்ல வந்தால்..?'' - தொடர்கிறார் சுபா சார்லஸ். 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``இதுவும் இயல்பான விஷயம்தாங்க. அந்தக் காலத்துல டீன் ஏஜின் ஆரம்பத்துல கல்யாணம் பண்ணி  வெச்சிருக்காங்களே. அப்படின்னா, டீன் ஏஜ்ல காமம்  வரும்கிறது அவங்களுக்குத் தெரிஞ்சிருக்குதானே. அது இயல்பான விஷயம்னு அவங்க புரிஞ்சு வெச்சிருந்தாங்கன்னு தானே அர்த்தம். மனிதன் தோன்றின காலத்துல இருந்தே இப்படித்தான் இருந்திருக்கு. சமூகம் நாகரிகமா மாற ஆரம்பிச்சதும், இருபாலருமே கல்வி, வேலைன்னு அடுத்தடுத்தகட்டங்களை நோக்கி நகர ஆரம்பிச்சாங்க.

இந்த நேரத்துலதான் டீன் ஏஜ்ல வர்ற காம உணர்ச்சி தப்பா தெரிய ஆரம்பிச்சது. `முளைச்சு மூணு இலை விடல... அதுக்குள்ளே', `இப்பவே பொம்பளை கேக்குதா', 'ஆம்பளை  சொகம் கேக்குதா'ன்னு பெத்தவங்களும் ஆசிரியர்களும் அவங்கவங்க தரத்துக்கு ஏத்தபடி வார்த்தைகளைப் பயன்படுத்தி அசிங்கப்படுத்த ஆரம்பிச்சாங்க.

Love காதல்
Love காதல்
Pixabay

சில வெளிநாடுகள்ல டீன் ஏஜ் கர்ப்பத்தைத் தவிர்க்க, பள்ளிக்கூட மாணவிகளிடம் முட்டை போன்ற உடையக்கூடிய பொருள் ஒன்றை எந்நேரமும் சுமக்கச் சொல்வாங்க. அவங்க படிக்கும்போது, தூங்கும்போது, பாத்ரூமில் இருக்கும்போதுகூட அந்த முட்டை போன்ற பொருளை சுமந்துகிட்டேதான் இருக்கணும். கர்ப்பம்கிறது எவ்வளவு கடினமானது. அது டீன் ஏஜ்ல நிகழ்ந்தா எவ்ளோ கஷ்டப்படணும்  அப்படிங்கிறதை பிராக்டிகலா அந்த மாணவிகளுக்குப் புரிய வைப்பாங்க. அதே மாதிரி, நம்ம சமூகமும் டீன் ஏஜ்ல காமத்துக்கு அடிபணிஞ்சா, அது அவங்க எதிர்காலத்தை எப்படியெல்லாம் பாதிக்கும்னு புரியும்படி சொல்லணுமே தவிர, பிள்ளைகளை மேலே இருக்கிறபடி அசிங்கப்படுத்தக் கூடாது. 

சிலருக்கு `இந்தக் காலத்துலேயும் டீன் ஏஜ் பெண்களுக்கு பெற்றோரே கல்யாணம் செஞ்சு வைக்கிறாங்களே'ன்னு தோணலாம். அது சம்பந்தப்பட்ட குடும்பத்தினரே தீர்மானிக்கிறதால அதை இங்கே யாரும் தப்பா சொல்றதில்லை, அவ்வளவுதான்'' என்கிறார். 

``இந்தக் காலத்து டீன் ஏஜ் பிள்ளைகள் சிலர் ரொம்ப  அழகா தங்களோட காமத்தைக்கட்டுப்படுத்திட்டு படிப்பு, கரியர்னு கடந்திடுறாங்க. ஆனா, இந்த மெச்சூரிட்டி காலேஜ் படிக்கிறப்போ வேணும்னா வரலாமே தவிர, ஸ்கூல் படிக்கிற காலத்துல வர்றதுக்கு வாய்ப்பு ரொம்ப ரொம்ப குறைச்சல். அதனால சிலர் இந்தச் சுழல்ல சிக்கிக்கிறாங்க.

Love
Love
Image by Gerd Altmann from Pixabay
கணவனிடமே நிர்வாணத்துக்கு மனைவி `நோ' சொல்வது ஏன்? - காமத்துக்கு மரியாதை - 4

அவங்களை அசிங்கப்படுத்தாம, அந்தச் சுழல்ல இருந்து மீட்க வேண்டிய கடமை பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தான் இருக்கு. கூடவே சமூகத்துக்கும். கடைசியா  ஸ்கூல்  படிக்கிற டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு ஒரு வார்த்தை.  காமத்தைதான் காதல்னு நாமதான்  ரொமான்டிசைஸ்  பண்ணிட்டிருக்கோம். காமம், கேக்  மாதிரின்னா,  அதுக்கு மேல இருக்கிற கிரீமும்  செர்ரியும்தான் காதல். இதைப் புரிஞ்சுகிட்டா, டீன் ஏஜ்ல வர்ற காமத்தையும் `இது இயல்பான ஒண்ணுதானே'ன்னு லைட்டா எடுத்துக்கிட்டு பாதுகாப்பா கடந்திடுவீங்க'' என்கிறார் மனநல மருத்துவர் சுபா சார்லஸ்.

காமத்துக்கு மரியாதை
காமத்துக்கு மரியாதை

இந்தத் தொடரில், தாம்பத்திய உறவில் காமம் சார்ந்து சந்திக்கிற சிக்கல்களுக்கு நிபுணர்கள் தீர்வு வழங்கவிருக்கிறார்கள். உங்கள் துணையிடம்கூட பகிரத் தயங்குகிற பிரச்னைகளுக்கான பதில்கள்கூட நிச்சயம் கிடைக்கும். இந்தத் தொடரின் வழி உங்கள் அந்தரங்க கேள்விகளை அனுப்ப விரும்புகிறவர்கள் uravugal@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.

மரியாதை செய்வோம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு