சென்னையைச் சேர்ந்த மருத்துவரும் உளவியல் ஆலோசகருமான ஷர்மிளாவும் அவரின் டீன் ஏஜ் மகள் ஆஷ்லியும் `பேரன்ட்டீனிங்' என்ற பெயரில் பெற்றோர்களுக்கும் பதின்பருவ பிள்ளைகளுக்கும் விழிப்புணர்வு பயிற்சி வகுப்புகள் எடுப்பவர்கள். இதுவரை பத்தாயிரத்துக்கும் மேலான குடும்பங்களில் மாற்றங்களை நிகழ்த்திக் காட்டியிருப்பவர்கள். பிள்ளைகளைக் குறைசொல்லும் பெற்றோர்களுக்கு தன் வயதினரின் குரலாக ஆஷ்லியும், பதின்பருவத்தினரிடம் பெற்றோர்கள் உணரும் பிரச்னைகளை, எதிர்பார்க்கும் மாற்றங்களைப் பெற்றோர் சமூகத்துக் குரலாக ஷர்மிளாவும் பகிர்ந்துகொண்ட தகவல்கள் அவள் விகடன் இதழில், 13 அத்தியாயங்களில் வெளிவந்திருக்கின்றன. பெற்றோருக்கும் டீன் ஏஜ் பிள்ளைகளுக்குமான உறவுச்சிக்கல் பற்றி பகிர இன்னும் ஏராளமான விஷயங்கள் இருப்பதால் விகடன்.காமில் தொடர்ந்து பேசுகிறார்கள் டாக்டர் ஷர்மிளாவும் அவரின் மகள் ஆஷ்லியும்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
டாக்டர் ஷர்மிளா - ஆஷ்லி
உங்களுக்கு நினைவிருக்கிறதா? பிள்ளை வளர்ப்பு எனும் சவாலில் முழுமையாக இறங்குவதற்கு முன் நீங்கள் எப்படிப்பட்ட பெற்றோராக இருக்க வேண்டும் என்று உங்களுக்குள் ஒரு கற்பனை நிச்சயம் இருந்திருக்கும். உதாரணத்துக்கு, பிள்ளைகளுடன் மிகவும் நட்பாக, கலகலப்பாக நடந்துகொள்ளும் பெற்றோராக இருக்க வேண்டும் என ஆசைப்பட்டிருப்பீர்கள். பிள்ளைகளுக்கும் உங்களுக்குமான உறவு இணக்கமானதாக இருக்க வேண்டும் என நினைத்திருப்பீர்கள். சேர்ந்து சாப்பிட வேண்டுமென கனவு கண்டிருப்பீர்கள். ஆனால், பிள்ளைகள் பதின்ம வயதில் அடியெடுத்து வைக்கும்போது உங்கள் கற்பனைகள் அனைத்தும் தகர்ந்து, யதார்த்தம் அதற்கு நேரெதிராக இருப்பதை உணர்ந்திருப்பீர்கள். வீட்டுக்குள் எப்போதும் சத்தம், அழுகை, உணர்வுக் கொந்தளிப்புகள் என அந்தச் சூழலே வேறு மாதிரி இருக்கும். என்னதான் நடக்கிறது... இதெல்லாம் எப்படி நடக்கிறது எனப் பெற்றோர்களுக்கு பல கேள்விகள் இருக்கும். இத்தகைய சூழலை எப்படித்தான் சமாளிப்பது? பிள்ளைகள் அவர்களுடைய செயல்களுக்கு பொறுப்பேற்க வைப்பதில் பெற்றோரின் பங்கு என்ன?
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSசீக்கிரமே தொடங்குங்கள்
தங்களுடைய பொருள்களைப் பத்திரமாக வைத்துக்கொள்ளவும் தங்களுடைய இருப்பிடத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ளவும் குழந்தைகளை சிறிய வயதிலேயே பழக்க வேண்டியது அவசியம். அதை அவர்களின் அன்றாட வழக்கமாக மாற்றிவிடுங்கள்.
ரியாக்ட் செய்வதில் கவனமாக இருங்கள்
ஒருவேளை உங்கள் குழந்தை தன் இருப்பிடத்தை களேபரமாக வைத்திருப்பதைப் பார்த்தால் உடனே கோபப்பட்டு குரல் எழுப்பாதீர்கள். `நீ என்ன பண்ணி வச்சிருக்கேன்னு பார்த்தியா... சரி வா இதை எப்படி சரி செய்யலாம்னு பார்க்கலாம்' என்று அந்தச் சூழலை இலகுவாக அணுகுங்கள்.

குற்றம் சாட்டுவதை நிறுத்துங்கள்
பிள்ளைகள் வளர வளர அடிக்கடி எக்ஸ்கியூஸ் கேட்பதும் அடுத்தவரை குறை சொல்வதும் நடக்கும். `அது என் தப்பே இல்லை...' `டீச்சர் ஒழுங்கா சொல்லிக் கொடுக்கலை...' என்றெல்லாம் தன் தவறுக்கு அடுத்தவர் மீது பழியைப் போடுவார்கள். உங்கள் குழந்தை இப்படி அடுத்தவரைக் குறை சொல்வது தெரிந்தால் அதே சூழலுக்கு அடுத்த முறை அவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று எடுத்துச் சொல்லிப் புரிய வையுங்கள். `அவன் என்னை கிண்டல் பண்ணான்... அதனால அடிச்சேன்...' என்று சொல்லும் பிள்ளையை `அடுத்தவாட்டி அவன் கிண்டல் பண்ணா நான் அந்த இடத்தைவிட்டு நகர்ந்துடுவேன்' என்று சொல்ல வையுங்கள்.
பிரச்னைகளுக்கு தீர்வுகாண கற்றுக்கொடுங்கள்
யாருக்குமே பிரச்னை என்பது பிடிக்காதுதான். ஏதேனும் பிரச்னை என்றால் அதன் பின் விளைவை நினைத்து எல்லோருக்கும் நிச்சயம் பயம் இருக்கும். தவறு செய்வது மனித இயல்புதான். செய்த தவற்றை அது நிகழவே இல்லை என்பதுபோல மாற்றியமைக்க முடியாது. ஆனால், அதே தவறு மீண்டும் நிகழாமல் இருக்க என்ன செய்யலாம் என யோசித்து நடக்க முடியும். அதை உங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுங்கள். பிரச்னைகளுக்குத் தீர்வுகாணும் பொறுப்பை அவர்களிடமே விட்டுவிடுங்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பாதுகாப்பான சூழலை உருவாக்கிக் கொடுங்கள்
பிள்ளைகள் பெரும்பாலும் தாங்கள் செய்த தவறுகளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தவறு செய்தது தெரிந்தால் அடுத்தவர்கள் அவமானப்படுத்தக்கூடும் என்ற பயமே காரணம். இதற்குத்தான் அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை அமைத்துக் கொடுப்பது பெற்றோர்களுக்கு அவசியமாகிறது. தவறுகள் செய்தாலும் அவர்களை நீங்கள் அளவு கடந்து நேசிப்பதை அடிக்கடி உணர்த்துங்கள். அறியாமல் செய்யும் தவறுகளுக்காக பிள்ளைகளை ஒருபோதும் பெற்றோர்கள் வெறுத்து ஒதுக்குவதில்லை என்பதை அவர்களுக்குத் தெளிவுபடுத்துங்கள்.
விதிகளைப் பின்பற்றுவதில் ஒரே மாதிரி இருங்கள்
உங்கள் குடும்பத்துக்கு என இருக்கும் விதிகளை அடிக்கடி அவர்களுக்கு நினைவூட்டி அவர்கள் அவற்றைப் பின்பற்றுகிறார்களா என்பதை நீங்கள் கண்காணிப்பதையும் சொல்லுங்கள். அந்த விதிகளை மீறி ஏதேனும் விஷயங்களைச் செய்யும்போது அவற்றுக்கான பின்விளைவுகளுக்கு பிள்ளைகளே முழுப் பொறுப்பு என்பதையும் புரிய வையுங்கள். தங்களுடைய செயல்களுக்கு தாங்களே பொறுப்பு என்பதை உணர்ந்து ஏற்றுக் கொள்வது பெரியவர்களுக்கே சற்று சிரமமான விஷயம்தான்.

ஆனாலும், பிள்ளைகளுக்கு அதை சிறுவயதிலிருந்தே பழக்கப்படுத்திவிட்டால் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விஷயத்தையும் செய்வதற்கு முன் பலமுறை யோசித்துச் செய்வார்கள். செய்த பிறகு யோசிப்பதைத் தவிர்ப்பார்கள்.
பிள்ளை வளர்ப்பு என்பது சற்றே கடினமான கலைதான். அதிலும் டீன் ஏஜ் பிள்ளை வளர்ப்பு என்பது இன்னுமே சவால்கள் நிறைந்தது. பிள்ளைகள்தாம் எப்போதும் தவறு செய்பவர்கள் என்பதில்லை, பெற்றோர்களும் தவறு செய்பவர்கள்தாம் என்பதைச் சொல்லி, பிள்ளைகள் தவறு செய்யும்போது அதைச் சரிசெய்வதற்கு உதவுங்கள். இந்த அணுகுமுறை பிள்ளைகளுடனான உங்கள் உறவை இணக்கமாக்கும். தங்களுடைய செயல்களுக்கு தாங்களே பொறுப்பேற்க வேண்டியதன் அவசியத்தையும் அவர்களுக்கு உணர்த்தும்.
- ஹேப்பி பேரன்ட்டீனிங்!