Published:Updated:

ஆங்ரி பேர்டு மனைவியை அமைதியாக்கும் 6 டிப்ஸ்!

Couple fighting
Couple fighting ( Representational Image )

தன் பிறந்த வீடு பற்றிய ரொம்பவும் பர்சனலான விஷயங்களை, 'நம்ம புருசன்தானே' என்ற நம்பிக்கையில் உங்களிடம் மட்டும் பகிர்ந்திருப்பார் மனைவி.

`கல்யாணமான புதுசுல எப்பவும் சிரிச்ச முகமாத்தான் இருப்பா. ஆஹா... என் பொண்டாட்டிக்குக் கோபமே வராதுன்னு நான்கூட ரொம்ப சந்தோஷப்பட்டிருக்கேன். ஆனா, இப்போ எதுக்கெடுத்தாலும் எரிஞ்சு விழறா... சிரிக்கவே மறந்துட்டா...' - திருமணமான சில வருடங்களில் பல கணவர்களும், தங்கள் மனைவிகள் மீது சொல்கிற புகார் இது. புகாரை சற்று தள்ளி வைத்துவிட்டு, மனைவி எரிந்து விழுவதற்கான காரணங்களை கொஞ்சம் யோசித்தாலே ஆங்ரி பேர்டு மனைவி அன்பான மனைவியாகி விடுவார். இந்தக் கால மனைவிகள், கணவர் மீது எரிச்சல்படுவதற்கான காரணங்களையும் தீர்வுகளையும் சொல்கிறார் சைக்காலஜிஸ்ட் சரஸ் பாஸ்கர்.

'வீட்டைக் குப்பைத்தொட்டியாக்குவதற்கு நானிருக்கேன்' பேர்வழி கணவர்கள் மீது மனைவிக்கு எரிச்சல் வரவில்லையென்றால்தான் ஆச்சர்யம்!

ஈர டவலை எங்கே போடுறீங்க?

குளித்துவிட்டு, உடம்புத் துடைத்த டவலை நீங்கள் என்றைக்காவது ஞாபகமாக, கொடியில் காய வைத்திருக்கிறீர்களா? ஆஃபீஸுக்கு கிளம்புகிற அவசரத்தில் ஈர டவலை படுக்கை மீதுதானே விட்டெறிந்துவிட்டு செல்கிறீர்கள்... குடும்பத்தை மட்டும் கவனித்துக்கொள்கிற மனைவி என்றாலும் சரி, வேலைபார்க்கும் மனைவி என்றாலும் சரி, நீங்கள் விட்டெறிந்துவிட்டுப் போன ஈர டவலால் சொதசொதத்துப்போன படுக்கையைப் பார்க்கும்போது உங்கள் மனைவி ஆங்ரி பேர்டு ஆவதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை.

`எத்தனை தடவை சொன்னாலும் புரியாது' என்று உங்களைத் திட்டி, `வளர்த்தவங்களைச் சொல்லணும்' என்று உங்கள் அம்மாவைத் திட்டி வீடே போர்க்களமாகும். தீர்வு, ஈர டவலை படுக்கையின் மீது விட்டெறியாமல் இருப்பது மட்டும்தான்.

நல்ல ஹோட்டல்ஸ் தெரியுமா?

பல தலைமுறைகளாக நடந்துகொண்டு வருகிற பழைய பிரச்னைதான் இது. 'ஒரு அவசரத்துக்குக்கூட உங்களை மார்க்கெட்டுக்கு அனுப்ப முடியலை. காயெல்லாம் சொத்தை, முத்தல்னு வாங்கிட்டு வந்திருக்கீங்க' என்று மனைவியிடம் வாங்கிக்கட்டிக்கொள்ளாத கணவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். சமைக்க நேரமில்லாத இன்றைய தலைமுறை மனைவிகள், `அந்த பிராண்டுல தோசை மாவு நல்லாவே இருக்காது. அதைப்போய் வாங்கிட்டு வந்திருக்கீங்க' என்றோ, 'நல்ல ஹோட்டலா பார்த்து டின்னர் ஆர்டர் செய்யக்கூடாதா. குருமாவை வாயிலேயே வைக்க முடியலை' என்றோ எரிச்சல்படலாம். நான்கு நல்ல ஹோட்டல்களையாவது தெரிந்து வைத்திருப்பதுதான் இதற்குத் தீர்வு.

Couple
Couple
Representational Image

வீட்டைச் சுத்தமாக்க உதவி செய்வீர்களா?

சமையலில் உதவி செய்கிற கணவர்கள் உருவாகிவிட்டார்கள். ஆனால், வீட்டைச் சுத்தம் செய்வதற்கு உதவி செய்கிற கணவர்கள் கிட்டத்தட்ட இன்னும் பிறக்கவே இல்லை என்பதுதான் உண்மை. `வீட்டையும் சுத்தம் செய்ய மாட்டேன்; சுத்தம் செய்ய உதவவும் மாட்டேன்; எடுத்த பொருளை எடுத்த இடத்திலும் வைக்க மாட்டேன். ஆனால், வீட்டைக் குப்பைத்தொட்டியாக்குவதற்கு நானிருக்கேன்' பேர்வழி கணவர்கள் மீது மனைவிக்கு எரிச்சல் வரவில்லையென்றால்தான் ஆச்சர்யம். மாசத்துக்கு ஒருதடவையாவது ஒட்டடைக் குச்சியையோ அல்லது வாக்குவம் கிளீனரையோ கையிலெப்பதுதான் இதற்குத் தீர்வு.

மனைவியின் பர்சனலை வெளியே சொல்வீங்களா?

'எங்கம்மா சரியான தொணதொணப்பு; எங்கப்பா பாவம்', 'என் தம்பி லவ்வுல விழுந்துட்டான்' என்பதுபோன்ற தன் பிறந்த வீடு பற்றிய ரொம்பவும் பர்சனலான விஷயங்களை, 'நம்ம புருசன்தானே' என்ற நம்பிக்கையில் உங்களிடம் மட்டும் பகிர்ந்திருப்பார் மனைவி. 'என் வொய்ஃப் என்கிட்டே எதையும் மறைக்க மாட்டா' என்று பந்தா காட்ட விரும்பி, அதை உங்கள் மனைவியின் புகுந்த வீட்டாரிடம் (!) சொல்லி விட்டீர்கள் என்றால், அப்புறம் செத்தான்டா சேகரு நிலைமைதான் உங்களுக்கு. செல்போனுக்கு பேட்டர்ன் போட்டு வாழ்கிற காலகட்டத்தில் இருக்கிறோம். மனைவி உங்களை நம்பியோ அல்லது யதார்த்தமாகவோ சொன்ன விஷயங்களை மற்றவர்களிடம், குறிப்பாக உங்கள் பிறந்த வீட்டாரிடம் சொல்லவே சொல்லாதீர்கள்.

நீங்கள் மட்டுமல்ல, உங்கள் மனைவியும் டார்கெட், டெட் லைன் என்றுதான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

உங்க மனைவி ஒரு நாளைக்கு எத்தனை ஷிஃப்ட் வேலைபார்க்கிறாங்க தெரியுமா?

வேலைபார்க்கிற மனைவிகளின் கணவர்களுக்கான பாயின்ட் இது. அதிகாலையில் எழுந்து வீட்டு வேலைபார்ப்பது முதல் ஷிஃப்ட், அடுத்து அலுவலக வேலை இரண்டாவது ஷிஃப்ட், இரவு வீட்டுக்குப் போய் மறுபடியும் வீட்டு வேலைபார்ப்பது மூன்றாவது ஷிஃப்ட். இதில் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித் தருவதையும் புராஜெக்ட் செய்து தருவதையும் வேலையில் சேர்ப்பதே இல்லை கணவர்கள். குழந்தைகள் படிப்பு விஷயத்தில் வெறும் கையொப்பம் மட்டும் போடுகிற அப்பாவாக இருக்காதீர்கள். ஏனென்றால், இதுவும் மனைவிகளை எரிச்சல்படுத்துகிற விஷயம்தான்.

உங்க ஸ்டிரெஸ் பஸ்டர் மனைவிகளுக்கு ஸ்டிரெஸ்ஸை கொடுக்கலாம்...

நீங்கள் மட்டுமல்ல, உங்கள் மனைவியும் டார்கெட், டெட் லைன் என்றுதான் வாழ்ந்துகொண்டிருக்கிறார். 'ஸ்டிரெஸ்ஸை விரட்ட சமூகவலைதளங்கள்ல ஆக்டிவா இருக்கேன்; நண்பர்களோட நேரம் செலவிடறேன்' என்று சொல்லி, வீட்டுப் பொறுப்பு அத்தனையையும் மனைவி மீது தள்ளிவிடுகிற கணவர்கள்தான் மனைவியின் ஆகப்பெரும் ஸ்டிரெஸ்ஸே...

'வீதி வரை அல்ல; கடைசி வரை மனைவி!’- சாவிலும் பிரியாத மதுரை தம்பதி!
couple
couple
Representational Image

இந்தக் காரணங்களைத் தாண்டி இன்னும் பல விஷயங்கள், மனைவிகளை எரிச்சல்படுத்தலாம். அவை கணவர்களைப் பொறுத்து மாறுபடும். அதே நேரம் கணவர்களால்தான் அவற்றை வராமல் தடுக்கவும் முடியும்.

அடுத்த கட்டுரைக்கு