`லாக்டௌன்... வீடியோ காலில் இறுதிச்சடங்குகள்... ஆறுதலுக்கான வழி!' - மனநல மருத்துவர்

இறந்தவரின் உடலை நேரில் பார்த்து, தொட்டு அழும்போது அவர் இழப்பால் ஏற்பட்ட துக்கம் ஓரளவு குறையும் என்பது உண்மை. ஆனால், இறுதிச் சடங்குக்கு நேரில் வர முடியாதவர்களுக்கு இந்த வாய்ப்புக் கிடைப்பதில்லை.
கொரோனா... நாம் நினைத்துப் பார்க்காத ஒரு வாழ்க்கையைக் கடந்த மூன்று மாத காலமாக நம்மை வாழ வைத்துக்கொண்டிருக்கும் நுண்ணுயிரி. உண்ணும் உணவில் தொடங்கி ஊர்கூட்டிச் செய்யும் திருமணம் வரை எத்தனையோ மாற்றங்கள்.

இதனால் ஏற்பட்ட பல மாற்றங்களை எளிதில் ஏற்றுக்கொண்ட நாம் சிலவற்றை மட்டும் ஏற்றுக்கொள்ள முடியாமல் இயலாமையில் தவித்து வருகிறோம். அதில் ஒன்று, உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீட்டுச் சுக, துக்கங்களில் கலந்துகொள்ள இயலாதது.
குறிப்பாக ஊரடங்கு, கொரோனா பயம், போக்குவரத்துக்கு வசதியின்மை போன்ற பல காரணங்களால் தங்கள் குடும்பத்தினரின் இறுதிச் சடங்கில்கூட பங்குபெற முடியாத நிலை வெளியூர், வெளிநாடுகளில் வசிக்கும் சிலருக்கு ஏற்பட்டிருக்கிறது. இது போன்றதொரு சம்பவம் அவர்களுக்கு அதீத மன உளைச்சலை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. இதிலிருந்து ஓரளவேனும் விடுபட வீடியோ கால் வழியாக இறுதிச் சடங்குகளில் பங்கு பெறுவது தீர்வாக இருக்கும் என்கிறார்கள் உளவியல் ஆலோசகர்கள்.

தனக்கு நெருங்கிய ஒருவரின் இறுதிச் சடங்கில் பங்குபெற முடியாத ஒருவரின் மனநிலை எப்படி இருக்கும்? வீடியோ காலில் இறுதிச் சடங்குகளில் பங்குபெறுவது அவர் மனதில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்? - உளவியல் ஆலோசகர் மினி ராவிடம் பேசினோம்.
"தனக்கு வேண்டப்பட்ட ஒருவரின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள முடியாத நிலையில் இருப்பவர்களின் மனநிலையை வார்த்தைகளால் கூற முடியாது. அவர் இறந்துவிட்டார் என்ற துக்கத்துடன், கடைசியாக அவர் உடலைக்கூடப் பார்க்க முடியவில்லையே என்ற குற்ற உணர்வும், அதனால் ஏற்படும் மன உளைச்சலும் சம்பந்தப்பட்டவரை வாட்டி வதைக்கும். கடந்த சில மாதங்களில் இந்த மனநிலையில் பலரைக் காணமுடிகிறது.

லாக்டௌன் காரணமாகச் சிலர் தங்கள் பெற்றோரின் இறுதிச் சடங்கில்கூடக் கலந்துகொள்ள முடியாத பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. இறந்தவரின் உடலை நேரில் பார்த்து, தொட்டு அழும்போது அவர் இறப்பால் ஏற்பட்ட துக்கம் ஓரளவு குறையும் என்பது உண்மை. ஆனால், இறுதிச் சடங்குக்கு நேரில் வர முடியாதவர்களுக்கு இந்த வாய்ப்புக் கிடைப்பதில்லை.
இதுபோல் நெருக்கடியான நிலையில் இருப்பவர்களுக்கு ஆறுதல் கூறுவது கடினம்தான். ஆனால், அவர்களின் துக்கத்தையும் மன உளைச்சலையும் சிறிதளவேனும் குறைக்க ஒரு வழி இருக்கிறது. உறவினர்களின் இறுதிச் சடங்கில் நேரடியாகக் கலந்துகொள்ள இயலாதவர்கள் வீடியோ கால் வழியாகக் கலந்துகொள்ளலாம்.

இப்போது திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் பலர் வீடியோ கால் வழியே பங்குபெறுகிறார்கள். 'சுப நிகழ்வுகளுக்கு இந்த முறை ஓகே. ஆனால், துக்கத்துக்கு இந்த முறை பொருந்துமா' என்று தோன்றலாம். நிச்சயம் பொருந்தும் என்றே சொல்வேன். இதை நானே உணர்ந்திருக்கிறேன். கடந்த லாக்டௌன் காலத்தில் என் உறவினர்கள் மூன்று பேர் காலமானார்கள்.
அவர்களின் குழந்தைகள், உறவினர்கள் எல்லோரும் வெளிநாடுகளில் இருந்த நிலையில் அவர்களால் இறுதிச் சடங்கில் பங்குபெற முடியவில்லை. அவர்களுக்கிருந்த ஒரே வாய்ப்பு... வீடியோ கால் மட்டும்தான். நேரில் வர முடியாத உறவினர்கள் வீடியோ கால் மூலம் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு தங்கள் துக்கத்தை வெளிப்படுத்தினார்கள். வீடியோ வாயிலாகவே இறந்தவருக்குச் செய்யப்படும் சடங்குகளை எல்லாம் பார்த்தார்கள்.

நேரில் கலந்துகொள்ள முடியவில்லை என்றாலும் இறந்தவரின் முகத்தை இறுதியாக வீடியோ கால் மூலமாகப் பார்க்க முடிந்ததை நினைத்து ஆறுதல் அடைந்தார்கள். எனவேதான், தங்களுக்கு வேண்டப்பட்டவரின் இறுதிச் சடங்கில் நேரடியாகக் கலந்துகொள்ள முடியாதவர்கள் வீடியோ கால் வழியாகவாவது கலந்துகொள்ளுங்கள் என்று கூறப்படுகிறது. 'இறுதியாக அவர் முகத்தைக்கூடப் பார்க்க முடியவில்லையே' என்று மன உளைச்சலுக்கு ஆளாகாமல் தவிர்க்க இந்த வழிமுறை உதவும்" என்றார் அவர்.
மரணம் குறித்த இந்தத் தலைமுறையினரின் எண்ணங்கள் பற்றிப் பேசிய மினி ராவ்,

"ஒருவரின் இழப்பு தரும் சோகம், எந்தத் தலைமுறைக்கும் ஒரே மாதிரிதான் இருக்கும். 50 வருடங்களுக்கு முன்பு, தன் தந்தையை இழக்கும் சூழலில் நம் தாத்தாக்களும் அப்பாக்களும் எப்படித் தவித்தார்களோ, அதே தவிப்புதான் கடந்த 50 நாள்களுக்கு முன்பு தன் தந்தையை இழந்த இந்தத் தலைமுறை இளைஞருக்கும் ஏற்பட்டிருக்கும். சோகம் ஒன்றேதான். ஆனால், அதை வெளிப்படுத்தும் முறைகள் வேண்டுமானால் காலத்தைப் பொறுத்து மாறியிருக்கலாம்.
முன்பெல்லாம் ஒருவர் இறந்துவிட்டால் ஒப்பாரி வைப்பார்கள், இறுதி ஊர்வலத்தில் பலவிதமான சடங்குகள் எல்லாம் செய்வார்கள். இந்த நிலை இப்போது மாறியிருக்கலாம். கால மாற்றத்தால் இந்த வழக்கங்களிலிருந்து இந்தத் தலைமுறை விலகிச் செல்ல நேரலாம். என்றாலும், இழப்பின் வலியை அவர்கள் உணர்வதில் மாற்றங்கள் இல்லை. வீடியோ காலில் துக்கத்தில் கலந்துகொள்வது, கொரோனாவால் நேர்ந்த விதி. அப்படிக் கலந்துகொள்பவர்களின் சோகமும் வலியும், எந்த வகையிலும் குறைவானதாக இருக்காது'' என்றார் அவர்.