Published:Updated:

திருமணத்தைப் பதிவு செய்யும் நடைமுறைகள்- விரிவான வழிகாட்டுதல்! #DoubtOfcommonMan

சு.சூர்யா கோமதி

குடும்ப அட்டை, குழந்தையின் பிறப்புச்சான்று போன்றவற்றுக்கு அடிப்படை, தம்பதிகளின் திருமண சான்றிதழே.

திருமண பதிவு
திருமண பதிவு

திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்கும் தம்பதிகள் தங்களின் திருமணத்திற்கான அடையாளமாக திருமணத்தை பதிவு செய்து கொள்வது 2009-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. திருமணத்தைப் பதிவு செய்தால் மட்டுமே அரசின் திருமண உதவித்தொகைகளையும் பெறமுடியும் என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.குடும்ப அட்டை, குழந்தையின் பிறப்புச்சான்று போன்றவற்றுக்கு அடிப்படை, தம்பதிகளின் திருமண சான்றிதழே. திருமணம் முடிந்த 90 நாட்களுக்குள் அதைப் பதிவு செய்யவேண்டும்.

#DoubtOfcommonMan
#DoubtOfcommonMan

"திருமணத்தை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவுசெய்ய என்னென்ன ஆவணங்கள் தேவை? திருமணம் நடைபெற்று 2 வருடங்களாகிவிட்டது. இதுவரைப் பதிவு செய்யவில்லை. இப்போது பதிவு செய்யலாமா?" என்று விகடனின் விகடனின் #DoubtOfcommonMan பக்கத்தில் வாசகர் பிரதீப் கேள்வி எழுப்பியிருந்தார்.ஒய்வு பெற்ற கூடுதல் பதிவுத்துறை தலைவர் ஆறுமுக நயினாரிடம் இந்தக் கேள்வியை எழுப்பினோம்.

"தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம் 2009-ன் படி திருமணப்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தின்படி திருமணம் முடிந்த தம்பதிகள் 90 நாட்கள் முதல் 150 நாட்களுக்குள் தங்கள் திருமணத்தை பதிவுசெய்ய வேண்டும். திருமணத்தைப் பதிவு செய்யாதவர்கள் அரசின் திருமண உதவித் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கமுடியாது. 150 நாட்களுக்குள் பதிவு செய்யாதவர்கள் பின் எப்போதுமே தங்கள் திருமணத்தைப் பதிவுசெய்ய இயலாது. திருமணத்தை பதிவு செய்யாதவர்கள் மீது சட்டப்படி நடிவடிக்கை எடுக்கவும் இந்த சட்டம் வழிவகுத்துள்ளது.

திருமணம்
திருமணம்

பதிவு செய்யும் முறை :

திருமணம் முடிந்த தம்பதிகள் https://tnreginet.gov.in/portal/ என்ற இணையதள பக்கத்தில் உள்ள திருமணப்பதிவு என்ற பகுதிக்குச் சென்று, அதில் உள்ள விண்ணப்பத்தை இணையத்திலேயே பூர்த்தி செய்யவேண்டும். விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்யும்போது கேட்கப்படும் ஆவணங்களை ஸ்கேன் செய்து மணமக்களின் புகைப்படங்களுடன் சேர்த்து இணைக்கவேண்டும்.

விண்ணப்பித்து முடித்தவுடன் உங்கள் பகுதியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தின் இணையதள பக்கத்திற்கு உங்கள் விண்ணப்பம் அனுப்பிவைக்கப்படும். அதன்பின், சிலமணி நேரங்களில் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து உங்களுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும். அதில் உங்கள் திருமணத்தை பதிவுசெய்துகொள்ள, நீங்கள் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வரவேண்டிய தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். குறிப்பிடப்பட்ட தேதியில் உங்களின் ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, ஒரிஜினல் ஆவணங்களுடன் உங்களின் இணையர் மற்றும் சாட்சி கையொப்பமிட மூன்று நபர்களுடன் சார்பதிவாளர் அலுவலகத்திற்குச் செல்லவேண்டும்.

திருமணப் பதிவு
திருமணப் பதிவு

இணைக்க வேண்டியவை :

ஆன்லைன் விண்ணப்பம் திருமணம் நடந்ததற்கான ஆதாரங்கள் ( திருமண அழைப்பிதழ், கோவில், பள்ளிவாசல், சர்ச் என எங்கு திருமணம் நடந்ததோ அதற்கான ரசீது ) முகவரிச் சான்றுக்காக வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை... இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல் வயதுச் சான்றுக்காக பிறப்புச் சான்றிதழ் ,கல்விச் சான்றிதழ் ஓட்டுநர் உரிமம் அல்லது குடும்ப அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல் சாட்சி கையொப்பம் இடும் மூன்று நபர்களின் அடையாள அட்டை மணமக்களின் நான்கு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள்

திருமணத்தைக் காலதாமதமாக பதிவு செய்வதற்கான வழிமுறைகள் :

'தமிழ்நாடு திருமணம் பதிவுச் சட்டம் 2009'-ன்படி உங்கள் திருமணத்தை 150 நாள்களுக்குப் பின் தமிழ்நாடு திருமண பதிவின்கீழ் பதிவுசெய்ய இயலாது. அதற்கு மாற்றாக, எந்த மதத்தின்படி உங்களுக்குத் திருமணம் நடந்ததோ அந்த மதச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யலாம். உதாரணத்துக்கு, இந்துக்கள் எனில் இந்து திருமண சட்டத்தின் கீழும், கிறிஸ்தவர்கள் எனில் கிறிஸ்துவ திருமணசட்டத்தின் கீழும், இஸ்லாமியர்கள் எனில் இஸ்லாமிய முறைப்படி தங்கள் திருமணத்தைப் பதிவு செய்து திருமணத்தை முறைப்படுத்திக்கொள்ள முடியும்.

தாமதமாகப் பதிவதால் உங்கள் திருமணம், தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம் 2009'-ன் படி அங்கீகரிக்கப்பட மாட்டாது.
ஒய்வு பெற்ற கூடுதல் பதிவுத்துறை தலைவர் ஆறுமுக நயினார்

திருமண சான்று தொலைந்தால் :

2016-ம் ஆண்டுக்குப் பின் பதிவு செய்தவர்களின் திருமண சான்றுகள் அனைத்துமே இணையத்தில் தகவல்களாக உள்ளது. எனவே எப்போது வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து, உங்கள் பகுதி சார்பதிவாளரிடம் கையொப்பம் பெற்று, அசல் சான்றிதழாக மாற்றிக்கொள்ளலாம். 2016-ம் ஆண்டுக்குமுன் திருமணத்தைப் பதிவு செய்தவர்கள் எனில், இதற்குமுன் உங்கள் திருமணத்தை எங்கு பதிவு செய்தீர்களோ அதே அலுவலகத்தில் சார்பதிவாளரிடம் மனுகொடுத்து உரிய ஆவணங்களை சமர்ப்பித்து மனு கொடுக்கலாம்.

கட்டணம் :

90 நாள்களுக்குள் பதிவு செய்தால் 100 ரூபாய் கட்டணமாகச் செலுத்தவேண்டும். 91 முதல் 150 நாள்களுக்குள் பதிவு செய்தால் அபராதக் கட்டணம் 50 ரூபாயுடன் 150 ரூபாய் செலுத்தவேண்டும். திருமணத்தைப் பதிவு செய்து தருவதாக உங்களை அணுகும் இடைத்தரகர்களை நம்பாதீர்கள். ஆயிரக்கணக்கான ரூபாய்களை பறித்துவிடுவார்கள்.

தமிழ்நாடு திருமண பதிவுச் சட்டம்
தமிழ்நாடு திருமண பதிவுச் சட்டம்

மேலும் அதிக தகவல்களுக்கு

https://tnreginet.gov.in/portal/ என்ற இணையதள பக்கத்தையோ, 044-24640160 என்ற தொடர்பு எண்ணையோ அணுகலாம். அல்லது உங்கள் பகுதியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று விவரம் கேளுங்கள்..."