Published:Updated:

கோ-சிஸ்டர்களுக்கு இடையில் பிரச்னைகள் ஏற்படுவது ஏன்? தீர்வு என்ன? #LetsSpeakRelationship

Woman (Representational Image)
Woman (Representational Image) ( Pixabay )

உங்கள் கோ-சிஸ்டர் தவறே செய்திருந்தாலும் அதை மன்னிக்க முடிகிறதா என்று பாருங்கள். உங்களுடைய மன்னிப்பு பாசிட்டிவ் வைப்ரேஷனாக மாறி, அவருடைய மனதை மாற்றும். தீர்வு கிடைக்கும்.

``நான் கூட்டுக் குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டவள். என் கோ- சிஸ்டரால் நிறைய பிரச்னைகளைச் சந்தித்துவருகிறேன். இதிலிருந்து எப்படி மீள்வது? உங்கள் uravugal@vikatan.com பகுதியில் என் பிரச்னைக்கு ஒரு தீர்வு சொல்லுங்களேன்.

- பெயர் வெளியிட விரும்பாத விகடன் வாசகி.''

பதில் சொல்கிறார் மனநல நிபுணர் லட்சுமி பாய்.

``கோ-சிஸ்டரால் பிரச்னைகளைச் சந்தித்துவருகிறேன் என்று சொல்லியிருக்கிறீர்களே தவிர, என்ன பிரச்னை என்று உங்கள் மெயிலில் குறிப்பிடவில்லை. அதனால், கோ-சிஸ்டர்களுக்குள் எந்தெந்த காரணங்களால் பிரச்னைகள் வருகின்றன என்பதைச் சொல்கிறேன்.

எந்த அறிமுகமும் இல்லாத இரண்டு பெண்கள், திருமணத்துக்குப் பின் ஒரே வீட்டில், அண்ணன், தம்பி எனத் திருமணம் முடித்து கோ- சிஸ்டர்ஸாக, நெருங்கிய உறவாக வாழ ஆரம்பிக்கிறார்கள். இவர்களுக்கிடையே அழகு, பணம், அறிவு, புத்திசாலித்தனம், படிப்பு, பர்சனாலிட்டி என நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதுவே போட்டியாகவும் மாறலாம். தன்னைவிட தன் கோ-சிஸ்டர் அழகானவராக இருந்தாலோ, வசதியானவராக இருந்தாலோகூட நீங்கள் சொல்வதுபோல பிரச்னைகள் வரலாம். அதனால், உங்களிடம் `நான் ரொம்ப அழகு', `நான் படித்தவள்' என்பதுபோன்ற எண்ணங்கள் இருக்கின்றனவா என்று உங்களை நீங்களே பரிசோதித்துப்பாருங்கள். அப்படியிருக்கிறது என்றால், அந்த குணத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.

அடுத்தது மனித எண்ணங்கள். நம் மனதில் நாளொன்றுக்கு 60,000 எண்ணங்கள் வரும். இவற்றில் நல்லவை கெட்டவை இரண்டும் இருக்கும். ஒருவேளை பணம், அழகு இவற்றில் ஒன்று உங்கள் கோ-சிஸ்டரிடம் அதிகமாக இருந்து, அதனால் உங்களுக்கு ஏற்பட்ட பொறாமையால் பிரச்னை வருகிறதா என்பதை கவனித்து, இருந்தால் சரிசெய்துகொள்ளுங்கள்.

மேலும், உங்கள் கோ சிஸ்டருக்குப் பிடித்த ஒரு பொருள் உங்களிடம் இருக்கலாம். அதை வாங்க முடியாத சூழலில் அவர் இருக்கலாம். அதை அவருக்கு ஒருமுறைகூட நீங்கள் பகிராமல் இருக்கலாம். இதுவும் அவர் உங்களிடம் பிரச்னை செய்வதற்குக் காரணமாக இருக்கலாம். அப்படி ஏதாவது இருக்கிறதா என்று பாருங்கள்

அல்லது உங்களிடம் இருக்கிற ஒரு ப்ளஸ் காரணமாக நீங்கள் கர்வமாக நடந்துகொள்கிறீர்களா என்பதையும் கவனித்து திருத்திக் கொள்ளுங்கள். இதெல்லாமே உங்களைப் பற்றி நீங்களே தெரிந்துகொள்வதற்கான அனலைஸிங்தான். அட்வைஸ் கிடையவே கிடையாது. தவிர, மேலே சொன்ன இயல்புகள் எல்லாமே மனிதர்களிடையே சகஜம்தான். எனவே, ஒருவேளை உங்களுக்கு அவை இருந்தால், குற்றவுணர்வு ஏற்படாமல், தயங்காமல் உங்களைத் தளர்த்தி மாற்றிக்கொள்ளுங்கள்.

மனநல நிபுணர் லட்சுமி பாய்.
மனநல நிபுணர் லட்சுமி பாய்.

`நீங்க சொல்ற இந்தப் பிரச்னைகள் எல்லாம் என்கிட்ட இல்ல, என் கோ-சிஸ்டர்கிட்டதான் இருக்கு' என்கிறீர்களா? எனில், அதற்கான தீர்வும் உங்களிடம் இருக்கிறது.

உறவோ, நட்போ அது நிலைத்திருக்க வேண்டுமென்றால், தழைக்க வேண்டுமென்றால், மற்றவர்களின் தவறுகளை மன்னிக்கத் தெரிந்திருக்க வேண்டும். உங்கள் கோ-சிஸ்டர் தவறு செய்திருந்தாலும் அதை மன்னிக்க முடிகிறதா என்று பாருங்கள். உங்களுடைய மன்னிப்பு பாசிட்டிவ் வைப்ரேஷனாக மாறி, அவருடைய மனதை மாற்றும்.

ஒரு குக்கர் அரிசியில் சிறு துண்டு பாவக்காய் விழுந்தாலும், மொத்த சாதமும் கசந்துவிடுகிறது இல்லையா? அதேபோல்தான், மனங்களுக்குள் சின்ன வெறுப்பு விழுந்தாலும் உறவுக்குள் கசப்பு வந்துவிடும். உங்கள் இருவருடைய உறவுக்குள் இப்படிப்பட்ட வெறுப்பு ஏதாவது இருக்கிறதா என்று கண்டுபிடித்து சரி செய்யுங்கள்.

Woman (Representational Image)
Woman (Representational Image)
Pixabay
கர்ப்பகாலத்திலும் தனிமை! -வாசகியின் வருத்தமும் நிபுணரின் விளக்கமும் #LetsSpeakRelationship

கடைசியாக, ரொம்பவும் சிம்பிளான ஒரு விஷயம். உங்கள் இருவரில் ஒருவர் வேலைக்குச் செல்பவராக இருந்தாலோ அல்லது இருவருமே வேலைக்குச் செல்பவராக இருந்தாலோ, பரஸ்பரம் பேசுவதற்குக்கூட நேரமில்லாமல் போகலாம். மனம்விட்டுப் பேசாத உறவுகளின் நடுவே பிரச்னைகள் சரியாகாது என்பது மட்டுமல்ல, புதிதாகப் பிரச்னைகளும் வரலாம். அதனால், உங்கள் கோ-சிஸ்டருடன் மனம்விட்டுப் பேசுங்கள்; நட்பாக இருக்க முயலுங்கள்.

இருவரும் `நீயா நானா' எனப் போட்டிபோட்டுக்கொண்டு, இருவரில் யார் பெஸ்ட் என்று உலகுக்குக் காட்டிக்கொள்ள நினைக்கும் போட்டி சிலருக்குப் பிடித்தமானதாக இருக்கலாம். சுற்றியிருந்து உங்களைப் பார்ப்பவர்களுக்கும் அது சுவாரஸ்யமாக இருக்கும்

LetsSpeakRelationship
LetsSpeakRelationship
WFH: குடும்பத்தலைவியின் பறிபோன மீ டைம்... நிபுணரின் தீர்வுகள்! #LetsSpeakRelationship

ஆனால், `நாங்கள் எவ்ளோ ஒற்றுமையான கோ-சிஸ்டர்ஸ் தெரியுமா' என்று கைகோத்து, ஆடையிலிருந்து ஆரோக்கியம்வரை ஒருவருக்கு ஒருவர் ஆலோசனை கூறி, ஒற்றுமையாக இருந்து, குடும்பத்தில் அன்பை வளர்த்து, உலகுக்குத் தங்களை `சிஸ்டர்ஸ்'ஆக வெளிப்படுத்திக்கொள்ளும் கோ-சிஸ்டர்ஸின் நிறைவும் மகிழ்வும் இணையற்றது. பார்ப்பவர்களைக் கொஞ்சம் பொறாமையுடன் வாழ்த்தவைப்பது.

நீங்களும் உங்கள் கோ-சிஸ்டரும் அப்படி இணைந்து வாழ என் வாழ்த்துகள்!

இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், ஒரு வீட்டுக்குள் வாழ நேரும்போது வரக்கூடிய பிரச்னைகள், அவற்றுக்கான தீர்வுகளைத்தான் நான் மேலே சொல்லியிருக்கிறேன். உங்களுடைய பிரச்னையை நான் சொல்லியிருப்பதைவிட மிகவும் பர்சனல் என்றால், உளவியல் நிபுணரை சந்தித்து தீர்வு பெறலாம்."

அடுத்த கட்டுரைக்கு