ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு.
- திருக்குறள்
(களத்தில் பகைவரைக் கலங்க வைக்கும் என் வலிமை, இதோ இந்தக் காதலியின் ஒளி பொருந்திய நெற்றிக்கு வளைந்து கொடுத்துவிட்டதே!)
பெண்கள் எதை, எப்படி, எப்போது விரும்புகிறார்கள்? இந்தக் கேள்விக்கான பதில் சிதம்பர ரகசியத்தைவிடவும் மிகப் பெரியது, சில காலம் முன்பு வரை! இப்போது பெண்கள் வெளிப்படையாகப் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த மாற்றம் ஆணுக்குப் பலன் அளிக்கக்கூடிய வகையில்தான் அமைந்திருக்கிறது... குறிப்பாகப் படுக்கையறையில்!

பெண்களின் உள்மன விருப்பங்களை அறிய முக்கியமான வாய்ப்பாக அமைவது பாலியல் மொழி. அதென்ன புதிய மொழி?
நீங்களும் உங்கள் இணையும் உங்கள் தேவைகளையும் ஆசைகளையும் எவ்வளவு நன்றாக வெளிப்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்தே நல்ல உடலுறவு அமைகிறது. ஆம்... தகவல்தொடர்பு இங்கேயும் இதிலும்கூட அவசியம். ஆகவே, உங்கள் மன மொபைலில் சார்ஜ் ஏற்றி, ரீசார்ஜும் செய்துகொள்ளுங்கள்.
பெரும்பாலும், பெண்களுக்கு அவர்கள் அனுபவிப்பதை விவரிப்பதற்கான வார்த்தைகள் இதுவரை முழுமையாக இல்லை (கவிதாயினிகள் இந்த வார்த்தைப் பஞ்சத்தைத் தீர்க்க உதவலாம்!). அதுமட்டுமல்ல... மற்ற நுட்பங்களைப் பரிந்துரைப்பதற்குப் போதுமான அனுபவமும் பெண்களுக்கு இல்லை. அப்படியே ஆய்ந்தறிந்து ஒரு பெண் செக்ஸ் பரிந்துரைகள் செய்தாலும், அதை முன்முடிவின்றி ஏற்கும் மனப்பக்குவம் ஆண்களுக்கு உண்டா? மனதைத் தொட்டுச் சொல்லுங்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஆதாம் - ஏவாள் காலந்தொட்டே நெருக்கமான உரையாடல்தான் பாலியல் இன்பத்தை அதிகரிக்கும் எளிதான வழியாக இருக்கிறது. ஆனால், பாருங்கள்... பலர் அந்தத் தருணத்தில் பெருமூச்சு விடுவதற்குத் தவிர, மற்ற நேரத்தில் வாயே திறப்பதில்லை.
சிறப்பான பாலியல் தூண்டுதலுக்கு சில வழிகள் உண்டு!
பல காலமாக விவரிக்க வார்த்தைகளே இல்லாமல்தான் இருந்தது. இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் கொஞ்சிப் பேசும் தருணங்களின் உளவியல் உண்மைகள் வெளிப்படத் தொடங்கியிருக்கின்றன.

பாலியல் ஊடுருவலின்போது குறிப்பிட்ட சில நுட்பங்கள் பயன்படுத்தப்படும்போது பெண்களின் மகிழ்ச்சி அளவில் மாறுபாடுகள் அடைவதை அறிவியல்ரீதியாக அறிய முடிந்திருக்கிறது. இடுப்பு மற்றும் இடுப்பை அசைப்பது, உயர்த்துவது அல்லது குறைப்பதன் மூலம் பல பெண்கள் அதிக இன்பத்தை அடைந்திருக்கிறார்கள். அடுத்ததாக... ஊடுருவல் நிகழும் அதே வேளையில் விரல் அல்லது செக்ஸ் பொம்மையைப் பயன்படுத்தி பெண்ணின் கிளிட்டோரிஸைத் தூண்டும்போது ஏராளமான பெண்கள் பரவச இன்பத்தைப் பல மடங்காக அனுபவிக்கிறார்களாம்.
ஆண்குறியானது உட்புறம் நுழைந்து சட்டென வெளியே வருவதை விடவும் யோனியின் உள்ளே அனைத்து வழியிலும் ஊடுருவி, கிளிட்டோரிஸின்மீது தொடர்ந்து தேய்க்கப்படும்போது எல்லையில்லா இன்பத்தைப் பெண் அடைய முடிகிறது என்கிறார்கள், அந்த இன்பத்தை உணர்ந்த பல பெண்கள்.
இவற்றையெல்லாம் அறியும்போது, `போர்னோ படங்களில் பார்த்ததைப் போலவா செய்ய வேண்டும்? அதெல்லாம் சாத்தியமா?' என்றெல்லாம் மிரள வேண்டாம். மிக எளிமையாக, முனைப்பாக, காரியமே கண்ணாக இறங்கினாலே போதும்... வேறு எந்தப் பிரதாபங்களும் தேவை இல்லை!
அதுமட்டுமல்ல... ஆழ உழ வேண்டிய அவசியம் எல்லாம் இல்லை. ஒரே ஒரு இன்ச் ஆழமே அளவற்ற இன்பங்களை அள்ளித்தரக்கூடிய நுட்பங்களை ஒளித்து வைத்திருக்கிறது. பார்த்துப் பதமாகப் பயன்படுத்தி பரவசம் அடையலாம்!

மொழியே வெற்றிக்கான வழி!
அண்மைக் காலமாகப் பெண்கள் தங்கள் பாலியல் வாழ்க்கையைப் பற்றித் தோழிகளுடன் இயல்பாக விவாதித்து வருகிறார்கள். இந்த மாற்றம் மிகமிக முக்கியமானது, `நான் இதை விரும்புகிறேன், ஏன் நீங்கள் முயற்சி செய்யக் கூடாது?' என்றெல்லாம் பெண்களின் குரல்கள் கேட்கின்றன. அவர்கள் விரும்புவது நிறைய பெண்களால் பகிரப்பட்ட ஒரு முறைதான் என்பதை அவர்கள் உணரும்போது, அதை இயல்பாக எடுத்துக்கொண்டு பரீட்சித்துப் பார்ப்பதும் இயல்பாகிறது. தோழிகளிடம் பாலியல் வார்த்தைகளை வெளிப்படுத்துவது சாத்தியாமானால், இணையுடனும் அந்த விஷயங்களை நம்பிக்கையுடன் பேச முடியும். இது பாலியல் இன்பக் கல்வியில் முக்கியமான ஒரு படி!
தூண்டுதல் மிக முக்கியம்!
கிளிட்டோரிஸைத் தூண்டுவதற்கு பல வழிகள் உள்ளன. விரல் முதல் வாய்வரை பலவும் அதற்கு உதவும். உலகின் பல நாடுகளில் இந்தத் தூண்டுதல் இன்பத்தை அனுபவித்தறியாமலே குழந்தையும் பெற்றுவிட்ட பெண்கள் ஏராளமானோர் உண்டு. எனினும், இந்த வகைத் தூண்டுதல் பெண்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது என்பது உண்மை.
நம் சமூகத்தில் பாலியல் குறித்த தவறான தகவல்களே அதிக அளவில் பரிமாறப்பட்டிருக்கின்றன. உண்மையில்லாத போர்னோக்களே செக்ஸ் என்று பலர் நம்புகிறார்கள். அதனால்தான் பல படுக்கையறைகள் இன்பக்கூடமாக இல்லாமல், துன்பக்கூடமாகவே இயங்குகின்றன. வெளிப்படையான பாலியல் பேச்சுக்கு ஜோடிகள் பழகிவிட்டாலே போதும்... எல்லாம் இன்பமயமாகும்!
பெண்களுக்குத் தங்கள் உறுப்பின் வாயிலாகவே எல்லா மகிழ்ச்சியையும் அளித்துவிட முடியும் என்று அப்பாவி ஆண்கள் நினைக்கிறார்கள். கிளிட்டோரிஸ் தூண்டுதலின் முக்கியத்துவத்தை ஆண்கள் கற்றுக்கொள்ள வேண்டியது இன்று அவசியத் தேவையாகி இருக்கிறது.

பாலியல் இன்பம் பற்றிய கூடுதல் ஆராய்ச்சி தேவை!
செக்ஸ் தகவல்தொடர்பு எவ்வாறு நிகழ்கிறது? பாலியல் நுட்பங்களின் பெயர்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன? இதுபற்றிப் பேசும்போது ஜோடிகள் எப்படி உணர்கிறார்கள்? இவையெல்லாம் மிகவும் சுவாரஸ்யமானவை மட்டுமல்ல; முக்கியமானவையும்கூட!
20 வருடங்களாக ஒன்றாக இருந்திருந்தாலும், ஒரு நாள் இரவில் வெளிப்படையாக அந்த வார்த்தைகளைப் பேசி அவர்கள் மேற்கொண்ட உறவின் இன்பம் அற்புதமாக இருந்ததாக சில தம்பதியினர் கூறுகின்றனர். ஆம்... ஆராய்வதற்கு எப்போதும் புதிய விஷயங்கள் இருப்பது செக்ஸில் மட்டும்தான். இல்லையென்றால் அது போரடித்துவிடுமே!
- சஹானா