Published:Updated:

என் கணவரை அவர் அம்மா அப்பாவுடன் பேசவைப்பது எப்படி? #LetsSpeakRelationship

ஆ.சாந்தி கணேஷ்

என் கணவர், அவர் அம்மா அப்பாவிடம் பேசுவதை நிறுத்திவிட்டார். கிட்டத்தட்ட ஒரு வருடமாக இப்படித்தான் இருக்கிறார். இதற்கு நான்தான் காரணம் என்று குற்றம்சாட்டுகிறார்.

#LetsSpeakRelationship
#LetsSpeakRelationship

''எனக்குத் திருமணமாகி நான்கு வருடங்களாகின்றன. திருமணமான இரண்டாவது வருடம் என் மாமனாருக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. அப்போது, 'உங்களுக்கு நாங்க இருக்கோம்பா 'என்று நான் அவருக்கு ஆறுதல் கூறினேன். உடனே என் கணவருடைய குடும்பம், 'எங்களுக்குக் கொஞ்சம் கடன் இருக்கு. உன் நகைகளைக் கொடு' என்று கேட்டார்கள். நானும் கொடுத்தேன். ஒரு வருடம் கழித்து அடகு வைத்த நகைகளுக்கு வட்டியைக் கட்டு என்றவர்கள், அந்த நகைகளை மீட்டுத் தரவேயில்லை. அதைப்பற்றி நான் கேட்டதற்கு 'வீட்டைவிட்டு வெளியே போ' என்றார்கள். நாங்களும் வெளியேறிவிட்டோம். அதன் பிறகு அவர்கள் நகைகளை மீட்டுக் கொடுத்துவிட்டார்கள். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு என் கணவர், அவருடைய அம்மா அப்பாவிடம் பேசுவதை நிறுத்திவிட்டார். கிட்டத்தட்ட ஒரு வருடமாக இப்படித்தான் இருக்கிறார். இதற்கு நான்தான் காரணம் என்று குற்றம் சாட்டுகிறார். என் கணவர் அவருடைய பெற்றோரிடம் பேசுவதற்கு ஒரு வழி சொல்லுங்களேன்.''

- பெயர் வெளியிட விரும்பாத சின்ன சேலம் வாசகியின் இந்தக் கேள்விக்கு மனநல மருத்துவர் பூங்கொடி பாலா பதில் சொல்கிறார்.

''உங்கள் புகுந்த வீட்டாரின் கஷ்டத்துக்கு நீங்கள் நகைகள் கொடுத்து உதவியது நல்ல விஷயம்தான். அவர்கள் அதற்கான வட்டியை உங்களையே கட்டச் சொன்னார்கள் என்று எழுதியிருக்கிறீர்கள். அதாவது, உங்களையும் உன் கணவரையும்தானே அப்படிச் சொல்லியிருப்பார்கள்... அந்த இடத்திலேயே தன் பெற்றோர்மீது உங்கள் கணவருக்கு வருத்தம் வந்திருக்கலாம். 'எப்படிப்பட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி நீங்கள் நகைகளைத் திரும்பக் கேட்டீர்கள்' என்று தெரியவில்லை. அந்த வார்த்தைகளைச் சற்று யோசித்துப் பாருங்கள். அதில் மரியாதைக்குறைவான அல்லது உங்கள் கணவரின் மனம் நோகும்படியான வார்த்தைகள் எதையாவது சொன்னீர்களா என்று யோசியுங்கள்.

#LetsSpeakRelationship
#LetsSpeakRelationship

அடுத்தது, உங்கள் மாமனார் மாமியார் உங்களை வீட்டைவிட்டு வெளியே அனுப்பிய விஷயமும் உங்கள் கணவரை அதிகம் பாதித்திருப்பது நன்குத் தெரிகிறது. ஸோ, உங்கள் கணவருடைய மனதில் நீங்கள் நகைகளைக் கேட்டது அல்லது கேட்ட விதம், அவருடைய அப்பா அம்மா உங்களை வீட்டைவிட்டு வெளியே அனுப்பியது இரண்டும் மிகப்பெரிய காயத்தை ஏற்படுத்தியிருக்கலாம். அதனால்தான், தன் பெற்றோரிடமே அவர் பேசாமல் இருக்கிறார். அதற்கு உங்களையே காரணமாகக் குறிப்பிடுகிறார்.

இந்த நேரத்தில், நீங்கள் செய்ய வேண்டியது அவரிடம் இது பற்றி அடிக்கடி பேசாமல் இருப்பதுதான் நல்லது. அதற்குப் பதில், ஒரு வாட்ஸ் அப் மேசேஜில் நகைகளைத் திருப்பிக் கேட்டபோது நீங்கள் இருந்த மனநிலையை எடுத்துச் சொல்லுங்கள். தவறாக வார்த்தைகளை விட்டிருந்தீர்களென்றால், அதற்கு மன்னிப்புக்கூட கேட்கலாம்.

இதை நேரிடையாகப் பேசும்போது உங்களால் முழுதாக எல்லாவற்றையும் சொல்ல முடியாது என்பதால்தான் மெசேஜ் செய்யச் சொல்கிறேன். அவருடைய அப்பா - அம்மா மீதான கோபம் காலப்போக்கில் மட்டும்தான் சரியாகும். உங்களால் முடிந்தால் இந்தப் பிரச்னை தொடர்பாக அவருடைய பெற்றோரிடம் பேசிப் பாருங்கள். வழி கிடைக்கவில்லை என்றாலும், உங்கள் குற்றவுணர்வாவதுக் குறையும்.

#LetsSpeakRelationship
#LetsSpeakRelationship