Published:Updated:

`காதலும் கடந்து போகும்' | OPEN-ஆ பேசலாமா - 10

ப்ரேக்கப்

பெரும்பாலானவர்கள் புதிய காதல் உறவுக்குள் செல்வதன் மூலமும், திருமணம் செய்து கொள்வதன் மூலமும் பிரேக் அப் துயரில் இருந்து விடுபடுகிறார்கள். அப்படியான புதிய உறவுக்குள் செல்கிற வரையில் பிரேக் அப்பின் தாக்கம் இருக்கவே செய்யும்

`காதலும் கடந்து போகும்' | OPEN-ஆ பேசலாமா - 10

பெரும்பாலானவர்கள் புதிய காதல் உறவுக்குள் செல்வதன் மூலமும், திருமணம் செய்து கொள்வதன் மூலமும் பிரேக் அப் துயரில் இருந்து விடுபடுகிறார்கள். அப்படியான புதிய உறவுக்குள் செல்கிற வரையில் பிரேக் அப்பின் தாக்கம் இருக்கவே செய்யும்

Published:Updated:
ப்ரேக்கப்

காதல் உறவு எவ்வளவு உன்னதமானதோ அந்த விசைக்கு எதிர் விசையாக காதல் முறிவு (break up) துயர்மிகுந்தது. ஒன்றாத உறவில் சகித்துக்கொண்டு இருப்பதைக் காட்டிலும் ப்ரேக் அப் நல்லது என்று சொல்லப்பட்டாலுமே அப்பிரிவு ஏற்படுத்தும் தாக்கத்தைக் கடந்து செல்வது மிக எளிதான காரியமல்ல. அதன் நினைவுகள் மேலும் மேலும் துயர் கூட்டுபவை. காதல் முறிவு தரும் துயரில் இருந்து விடுபடுவது எப்படி என்பது குறித்து இந்த அத்தியாயத்தில் உரையாடுவோம்...

``நீண்ட காலம் புரிந்துணர்வற்ற, கசப்பான அனுபவத்தை அதிகம் தரும் ஓர் உறவை பிரேக் அப் செய்வதில் எந்தத் தவறும் இல்லை” என்கிறார் மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்…

 ``ஓர் உறவுக்குள் ஏன் சென்றோம், ஏன் இருக்கிறோம், அதன் அர்த்தம் என்ன என்பதை அனைவரும் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். இப்படியான தெளிவு இல்லாமலே பலரும் ஓர் உறவுக்குள் நுழைந்து கஷ்டப்படுகின்றனர்.  அதன் பிறகு அந்த உறவில் இருந்து வெளியே வரலாமா வேண்டாமா, தன்னுடன் உறவில் இருப்பவரை ஏமாற்றி விடக்கூடாது, கஷ்டப்படுத்தி விடக்கூடாது, உறவை முறித்துக்கொண்டால் மற்றவர்கள் தவறாக நினைப்பார்கள் என நினைத்தே திருமணம் வரை கொண்டு சென்று, பலர் வாழ்க்கை முழுவதும் துயரத்தை அனுபவிக்கின்றனர்.

மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்
மனநல மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்

ஓர் உறவுக்குள் செல்வதற்கு முன்னர் சில விஷயங்களை யோசிக்க வேண்டும், குறிப்பாக அந்த உறவு எந்த அளவுக்கு இருவருக்கும் பரஸ்பர உதவியாக உள்ளது, நம் துணை நம்மை மனதளவிலும், உடலளவிலும் காயப்படுத்தாமல் இருக்கிறாரா, பரஸ்பரம் இருவரது தனிப்பட்ட முன்னேற்றத்திற்கு உதவிகரமாக இருக்கிறாரா, இருவருக்கும் எண்ண ஒற்றுமை இருக்கிறதா, எதிர் காலம் குறித்த சிந்தனை இருவருக்கும் இருக்கிறதா என்பதை எல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எந்த தனி மனிதரும் பெர்பெஃக்ட்டான நபராக இருக்க முடியாது. அதேபோல், ஆண், பெண் உறவு குறித்து பட்டப்படிப்பு படித்துவிட்டு யாரும் உறவுக்குள் இறங்குவதில்லை. சோதனை முயற்சியாகத்தான் ஓர் உறவே தொடங்குகிறது. அதில் ஒருவரை, ஒருவர் புரிந்துகொள்ள முயலும் போது, சண்டைகள் வரலாம், எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என்பது குறித்து ஒருவர் மீது ஒருவர் ஆதிக்கம் செலுத்தலாம், பொசசிவ்னஸ் வரலாம்.

நாளடைவில் இந்த முரண்களை இருவரும் களைய வேண்டும். அப்படியான தெளிவு ஏற்படும் போதே அந்த உறவு நீடித்து நிலைத்திருக்க முடியும். ஒருவேளை உறவில் யாரோ ஒருவருக்கு இந்தத் தெளிவு குறைவாக இருந்து சண்டைகள் ஏற்பட்டு, இந்த உறவில் நீடிப்பது நிம்மதியின்மையைத் தருமானால், பிரேக் அப் குறித்து சிந்திப்பதில் தவறில்லை. அதே நேரம் உடனடியாக அந்த முடிவை எடுக்க வேண்டியதில்லை, ஆழ்ந்து சிந்தித்து, திடமாக முடிவை எடுக்கலாம்.

ஓர் உறவை பிரேக் அப் செய்த பிறகு, ஆண், பெண் இருவருக்குள்ளும் நிறைய மாற்றங்கள் வரும், அதுநாள் வரையிலான நம்பிக்கை, கனவுகள் தகர்ந்து மன அழுத்தத்திற்குள் இருவரும் ஆட்படலாம். இனி வாழ்க்கையில் புதிதாக உறவு ஏற்படுமா, நண்பர்கள், உறவினர்கள் இதை எப்படி அணுகுவார்கள் என்கிற குழப்பங்களும், நாம் காதல் உறவுக்கு தகுதியற்றவரா என்ற அவநம்பிக்கையும் ஏற்படலாம்.

பிரேக் அப் என்பது காதல் அத்தியாயத்தின் முடிவு கிடையாது. நாம் காதலிக்கும் நபர்தான் நம் வாழ்க்கை என ஒரு கட்டம் வரை நினைத்திருந்திருக்கலாம். ஆனால், அந்த உறவினால், நன்மையை விட, கெடுதலே அதிகம் என்றால், அந்த உறவை முறித்துக் கொள்வது சிறந்த முடிவு என்பதை உணர்ந்து தெளிவடைந்தாலே அதில் இருந்து மீளலாம்” என்கிறார் ஸ்வாதிக் சங்கரலிங்கம். 

 ``ஆண், பெண் உறவுகள் எதுவும் நீண்ட நாள்கள் நீடித்திருக்க வாய்ப்புகள் இல்லை என்பதே எனது தனிப்பட்ட கருத்து” என்கிறார் மானுடவியலாளரான மோகன் நூகுலா…

``ஓர் உறவைத் தொடங்கும் போதே அந்த உறவு ஒருநாள் முறிந்து போகும் சாத்தியம் இருக்கிறது என்பதை அறிந்து வைத்திருந்தாலே பிரேக் அப் ஆகும் போது காயப்பட மாட்டோம். ஆனால், இங்கு யாரும் உறவைத் தொடங்கும்போது அது பிற்காலத்தில கசப்பால் நிறையும் என்பதை உணர்வதில்லை. மற்ற எல்லா உறவுகளைக் காட்டிலும் காதலில் உடல் மற்றும் மனம் சார்ந்த தீவிர பிணைப்பு இருப்பதால் இந்த உறவு எல்லாவற்றையும் விட முக்கியமானதாகத் தெரிகிறது. காதலில் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாத அன்பு இருப்பதாக பாவனை செய்கிறோம். அந்த எண்ணம் உடைந்து போகும்போது, நமது ஈகோவும் உடைந்து போகிறது, அதனைத்தான் தாங்கிக்கொள்ள முடியாமல் புலம்புகிறோம். இந்த ஈகோ இல்லாமல் இருந்தாலே பிரேக் அப்பில் இருந்து எளிதாக விடுபட்டு விட முடியும். ஆனால், அது சாத்தியமில்லாத சமூக சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

மோகன் நூகுலா
மோகன் நூகுலா
படம் : சொ.பாலசுப்ரமணியன்

அதற்கு காரணம் மனிதர்கள் நாகரிகமடைந்த காலத்தில் இருந்தே திருமண உறவை நோக்கி நகர்ந்ததும், காதலை இச்சமூகம் புனிதப்படுத்தியதும், நம்முடைய ஆழ்மனதில் அந்த உறவைத் தக்க வைக்க நினைக்கிறது.

இந்தச் சூழலில்தான் காதலில் பிரேக் அப்பை கடக்க மன வலிமையும், மூன்றாம் நபர்களின் ஆலோசனையும் தேவைப்படுகிறது. பெரும்பாலானவர்கள் புதிய காதல் உறவுக்குள் செல்வதன் மூலமும், திருமணம் செய்து கொள்வதன் மூலமும் பிரேக் அப் துயரில் இருந்து விடுபடுகிறார்கள். அப்படியான புதிய உறவுக்குள் செல்கிற வரையில் பிரேக் அப்பின் தாக்கம் இருக்கவே செய்யும். அதை நாம் எதுவுமே செய்ய முடியாது என்ற உண்மையை ஆழமாக உணர்வதன் மூலம், அதன் தாக்கத்தில் இருந்து பகுதியளவு விடுபடலாம்.

தன்னம்பிக்கைப் பேச்சாளர்கள் கூறுவதைப் போன்று முயன்றால் முடியாதது எதுவும் அல்ல, இதுவும் கடந்து போகும் என்கிற கதையெல்லாம் காதல் தோல்விக்கு பொருந்தவே பொருந்தாது. குறிப்பாக நண்பர்கள் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும். ``அந்தக் காதலை தூக்கிவீசிட்டு போயிட்டே இரு” என்று ஒரே வார்த்தையில் யார் வேண்டுமானாலும் எளிமையாகச் சொல்லிவிட முடியும். ஆனால், அது ஏற்படுத்திச் சென்றிருக்கும் தாக்கம் எவ்வளவு ஆழமானது என்பது பாதிக்கப்பட்டவர்களுக்குத் தான் தெரியும். விஷத்தை விஷத்தால் முறி என்பதைபோல ஒரு காதல் முறிவு ஏற்படுத்தும் வெற்றிடத்தை, இன்னொரு காதலைக் கொண்டுதான் நிரப்ப முடியும்” என்கிறார் மோகன் நூகுலா.

பார்வைக் கோணம்

VJ பாரு, தொகுப்பாளர்/நடிகை: என்னைப் பொறுத்தவரை காதல் என்பதே கமிட்மென்ட், அதைக் கொடுக்கிறதுக்கு முன்னாடி நல்லா யோசிச்சுதான் முடிவு எடுக்கணும். ஏன்னா நம்ம குடும்பத்தில் இதை அனுமதிப்பாங்களா, எந்த அளவுக்கு இது வொர்க் அவுட் ஆகும் அப்படிங்கிறது நமக்குத் தெரியும். அதையும் தாண்டி கமிட்மென்ட்ஸ் கொடுக்கும் போது அது நடக்காம போறதுக்கான வாய்ப்பு இருக்குன்னா முன்னாடியே அதை தவிர்த்திடணும்.

இதையெல்லாம் கடந்து ஒருத்தர் மேல காதல் வர்றதைக் கட்டுப்படுத்த முடியாது. அப்படி வந்து அந்த உறவு வொர்க் அவுட் ஆகாம போகுறப்போ மனசுடைஞ்சுதான் போகும். அந்த வலியை அனுபவிச்சுதான் ஆகணும்.

vj பாரு
vj பாரு

நான் அப்படி ஒரு பிரேக் அப்பை எதிர்கொள்ள வேண்டி வந்தால் என்னோட வேலையில் முழு கவனத்தையும் கொண்டு போயிடுவேன், பயணங்கள் போவேன்.  இயல்பிலேயே நான் ஒரு டிராவலரா இருக்கிறதால, புது இடத்துக்குப் போகும் போதும், புது மனிதர்களைச் சந்திக்கும் போதும், காதல் தோல்வி தரக்கூடிய துயரத்தைக் கடந்து போயிடுவேன்.

காதலை ரொம்ப மிகைப்படுத்துறாங்கன்னுதான் எனக்கு எப்பவுமே தோணும். நான் காதலை மதிக்கிறேன், ஆனால், மிகைப்படுத்துதலை ஏற்கலை. தனியாக இருந்து எத்தனையோ பெண்கள் சந்தோஷமா வாழ்ந்துட்டு இருக்காங்க.

காதலை கடந்ததுக்கு அப்பறம் நாம வாழ்ந்து காட்டணும் அப்படிங்கிறதுதான் என்னோட கருத்து. இரண்டு பேர் சேர்ந்து வாழ முடியலையேங்கிற எண்ணம் இருக்கத்தான் செய்யும், ஆனால், அதிகபட்சமா ஒரு வருஷம் வரை அந்தக் கஷ்டம் இருக்கலாம். அதிலேயே காலம் முழுக்க இருந்தா என்னால உயிரோட்டத்தோட வாழ முடியாது. பிரேக் அப் முடிவை நாம எடுத்தாலும் சரி, நம்ம பார்ட்னர் எடுத்தாலும் சரி அதை தைரியமா எதிர்கொள்ளணும். அந்த தைரியம் இல்லைன்னா வாழவே முடியாது. அதில் இருந்து மீண்டு வரணும், அதை பத்தி நண்பர்கள் கிட்ட பேசணும், தோல்வியை மூடி மறைக்கிறதால எதுவும் நடக்கப்போறது இல்லை, நடந்ததுக்கு வருத்தப்பட்டோ, அழுதோ அதை வெளிப்படுத்திடணும், அப்படி இல்லாம மனசுக்குள்ளயே வச்சுக்கிட்டு இருந்தா அது மனசளவுல பாதிப்பை ஏற்படுத்திடும். அதனால பிரேக் அப்பை கடந்து போறதுதான் எளிமையான வழி.

சிலம்பரசன், ஐடி ஊழியர்: காதல்ல பிரேக் அப் சகஜமானது தான், அதைக் கடந்து போறதுக்கு அந்த நபரே தான் அதற்காக முயற்சி பண்ணனும். புரிந்துணர்வு இல்லாமலோ அல்லது இனி இந்த உறவைத் தக்க வச்சுக்க முடியாதுங்குற நிலைமையில்தான், பிரேக் அப் பண்றோம் அதுக்கு அப்புறம் அதையே நினைச்சுட்டு இருக்கிறது சரியானது இல்லை. பெரும்பாலும்  நம்மை நாம எங்கேஜிங்கா வச்சுக்கிறது ரொம்ப முக்கியம், தனிமை தான் பல நேரங்கள்ல நம்மளை காதல் குறித்த சிந்தனையிலேயே இருக்க வச்சிடுது. பழைய ரிலேஷன்ஷிப்பை ஞாபகப்படுத்துற எதையும் வச்சிக்காம இருக்கிறது நல்லது. அதனால, காதலிக்கும் போது ஷேர் பண்ணிக்கிட்ட கிஃப்ட்டை தூக்கி வீசிடணும், எடுத்த போட்டோக்கள் எல்லாத்தையுமே அழிச்சிடணும்.

`காதலும் கடந்து போகும்' | OPEN-ஆ பேசலாமா - 10

கட்டாயமாக போதை மாதிரியான விஷயத்தைத் தொடவே கூடாது, அதுவும் ஒருவகையில் நம்மை நாமே ஏமாத்திக்கிறதுதானே தவிர நிச்சயமா, பிரேக் அப்பில் இருந்து வெளியே கொண்டுவராது. மாணவரா இருந்தா முழு கவனத்தையும் படிப்பிலும், வேலை செய்பவரா இருந்தா முழு கவனத்தையும் இலக்கை நோக்கிச் செல்வதிலும் செலுத்தணும். அதுல கிடைக்கிற வெற்றி நமக்குள்ள ஒரு புத்துணர்ச்சியையும், மன அழுத்தத்தில் இருந்து வெளிய வரவும் உதவும். பிரேக் அப்ங்கிறது வாழ்க்கையில் ரொம்ப சின்ன விஷயம் தானே தவிர, அது நம்மோட வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது இல்லை. இதைப் புரிஞ்சுக்கிட்டாலே போதும்.