Published:Updated:

`யாராவது அவளை மரியாதை குறைவா பேசிட்டா... அதான் திருடுறதை விட்டுட்டேன்!'- மனைவிக்காக திருந்திய கமலக்கண்ணன்

மனைவி கலாவுடன் கமலக்கண்ணன்
மனைவி கலாவுடன் கமலக்கண்ணன்

``எல்லாத்தையும் விட்டுடலாம்னு முடிவு பண்ணி, எனக்குத் தெரிஞ்ச வக்கீலுங்க, போலீஸ்காரங்க எல்லார்கிட்டயும் விஷயத்தைச் சொன்னேன். 'நல்ல முடிவு எடுத்திருக்கடா... போய் குடும்பத்தைப் பாருடா'ன்னு நல்ல வார்த்தை சொல்லி அனுப்பிவச்சாங்க''

வாழ்க்கை பல திருப்பங்களைக் கொண்டது. அதன் எந்த வளைவில் நம் வாழ்க்கையைப் புரட்டிப்போடும் `திடுக்' இருக்கும், எந்த வளைவில் நமக்கான மகிழ்ச்சி காத்திருக்கும் என்பவை எல்லாம் நாமறியாத ரகசியங்கள். ஆனால், அவைதான் நம் வாழ்க்கையின் அடுத்தகட்ட நகர்வுகளைத் தீர்மானிக்கின்றன. கமலக்கண்ணன், அப்படித் தன் வாழ்வில் தனக்கான மகிழ்ச்சி காத்திருக்கும் ஒரு திருப்பத்துக்கு வந்திருக்கிறார்.

கமலக்கண்ணன்
கமலக்கண்ணன்

யார் இந்தக் கமலக்கண்ணன்? 'எனக்குத் திருமணமாகிவிட்டது. இனிமேல் திருடமாட்டேன். என் மனைவிக்காகத் திருந்தி வாழப் போகிறேன்' என்று முடிவெடுத்திருக்கும் ஒரு கணவர். கமிஷனரிடம், திருந்தி வாழப்போகும் தன் வாழ்க்கைக்காக மனு கொடுத்த கையோடு, அங்கேயே தன் கடந்தகாலத்தையும், நிகழ்கால முடிவையும் மீடியாவில் வாக்குமூலமாகவும் கொடுத்திருக்கிறார். அவரிடமும் அவர் மனைவி கலாவிடமும் பேசினோம். தான் தாயில்லாமல் தவித்தது முதல், திருட்டுத் தொழிலில் ஈடுபட்டது, மனைவிக்காக மனம் திருந்தியது என்று மனம்விட்டுப் பேசினார்.

``என் சொந்த ஊரு திருவண்ணாமலை. நாலாங்கிளாஸ் வரைக்கும்தான் படிச்சிருக்கேன். என்னோட சின்ன வயசுலேயே அம்மா தவறிட்டாங்க. சித்தி கொடுமை தாங்கமுடியலை. வயித்துக்குச் சாப்பாடுகூட இல்லாம கஷ்டப்பட்டேன். அதைத் தாங்கமுடியாமத்தான் சொந்த ஊர்லயிருந்து, சென்னைக்கு வந்தேன். இங்க கொருக்குப்பேட்டையில அக்கா வீட்ல தங்கி கொத்தனார் வேலைபார்த்திட்டிருந்தேன். ஞாயித்திக்கிழமையிலகூட வேலைக்குப் போயிடுவேன். அந்த நேரத்துலதான், ஒரு தடவை என் மேஸ்திரிகூட சண்டை வந்திடுச்சு. அவரை அடிச்சிட்டேன்னு என்னை போலீஸ் பிடிச்சிட்டுப் போச்சு. இது நடந்து அஞ்சாறு வருஷமிருக்கும். போலீஸ்ல புடிச்சிட்டுப்போன என்னை அக்காதான் பெயில்ல எடுத்தாங்க.

மனைவியுடன் கமலக்கண்ணன்
மனைவியுடன் கமலக்கண்ணன்

இந்தச் சம்பவத்துக்கு அப்புறமா, திருட்டுத் தொழில் பண்ற ஒருத்தனோடு ஃபிரெண்ட்ஷிப்பாச்சு எனக்கு. அவன் செஞ்ச தப்புக்கு அவனைப் போலீஸ் புடிச்சப்போ என்னையும் சேர்த்துப் புடிச்சிட்டுப் போயிட்டாங்க. ரெண்டாவது தடவையா என்னைப் போலீஸ் புடிச்சதாலே என் பேர்லதான் தப்பு இருக்கும்னு நம்பி எங்க அக்காவும் என்னை பெயில்ல எடுக்கலைங்க. தப்பு செஞ்சவன் சில நாள்ல வெளியே போயிட்டான். ஆனா, எந்தத் தப்பும் செய்யாத நான் பல மாசம் ஜெயில்ல கிடந்தேன். விடுதலையாகி வெளியே வந்ததும் வாழ்க்கையே தப்பாயிடுச்சுங்க. எந்தத் தப்பை செய்யாம நான் ஜெயிலுக்குப் போனேனோ, அதே தப்பை செய்ய ஆரம்பிச்சுட்டேங்க'' என்கிறார்.

தப்பு செஞ்சவன் சில நாள்ல வெளியே போயிட்டான். ஆனா, எந்தத் தப்பும் செய்யாத நான் பல மாசம் ஜெயில்ல கிடந்தேன். விடுதலையாகி வெளியே வந்ததும் வாழ்க்கையே தப்பாயிடுச்சுங்க!
கமலக்கண்ணன்
மனைவி கலாவுடன் கமலக்கண்ணன்
மனைவி கலாவுடன் கமலக்கண்ணன்

``எங்க வீட்ல, இவனுக்கு ஒரு கால்கட்டைப் போட்டாத்தான் திருந்துவான்னு கலாவைப் பொண்ணு பார்த்து எனக்கு நிச்சயம் பண்ணாங்க. கலா, எங்கக்காவுக்கு தெரிஞ்ச பொண்ணு. நான் கொத்தனாரா வேலை பார்த்தப்போயிருந்தே என்னை அதுக்கு நல்லாத் தெரியும். இவன் உழைப்பாளி, ஏதோ சூழ்நிலை காரணமா தப்புப் பண்ண ஆரம்பிச்சிட்டான்னு அது நம்புச்சு. எனக்கும், கல்யாணம்னு ஒண்ணு நடந்தப்புறம்தான் வாழ்க்கை மேல பயம் வந்துச்சு. நாளைக்கு எங்கயிருப்போம், எப்படியிருப்போம்ங்கிற பயம். என் பொண்டாட்டியை நான் கோபமா ரெண்டு வார்த்தை பேசலாம். ஆனா, நான் பண்ற தப்புக்காக வேற யாராவது அவளை மரியாதைக் குறைச்சலா பேசிட்டா செத்திருவேன் மேடம். அதான் எல்லாத்தையும் விட்டுடலாம்னு முடிவு பண்ணி, எனக்குத் தெரிஞ்ச வக்கீலுங்க, போலீஸ்காரங்க எல்லார்கிட்டயும் விஷயத்தைச் சொன்னேன். `நல்ல முடிவு எடுத்திருக்கடா... போய் குடும்பத்தைப் பாருடா'ன்னு நல்ல வார்த்தை சொல்லி அனுப்பிவச்சாங்க'' என்றவரைத் தொடர்ந்து, அவர் மனைவி கலாவிடம் பேசினோம்.

``கல்யாணப் பேச்செடுத்தப்போ, அவரு என்கிட்ட வெளிப்படையா பேசினாரு. `இனிமே பழைய வாழ்க்கைக்குத் திரும்ப மாட்டேன். கொஞ்சம் டைம் கொடுத்தியனா, முறைப்படி மனுக் கொடுத்து இதுலயிருந்து மீண்டு வந்திர்றேன்'னு சொன்னாரு. சொன்ன மாதிரியே செஞ்சிட்டாரு'' என்கிறார் நிறைவுடன்.

கமலக்கண்ணன் – கலா
கமலக்கண்ணன் – கலா

கமலக்கண்ணன், ``நைட்லதான் திருட்டுத்தொழில் பண்ணிக்கிட்டிருந்தேன். மறுபடியும் என் மேல ஏதாவது திருட்டுப்பழி வந்துட்டா என்ன பண்றதுன்னு யோசிச்சு, நைட்டு வேளைகள்ல நான் வீட்லதான் இருக்கேங்கிறதுக்கு ஆதாரமா என் வீட்ல, நான் குடியிருக்கிற தெருவுல கேமரா வெச்சிருக்கேங்க. இனிமே நானும் எல்லாரையும் மாதிரி நிம்மதியா வாழணும்ங்க'' என்கிறார்.

திருந்தியவர்களுக்குச் சமூகமும் சட்டமும் எப்போதும் வாய்ப்புக் கொடுக்கும். அந்த வாய்ப்புக் கமலக்கண்ணனுக்கும் கிடைக்கட்டும்!

அடுத்த கட்டுரைக்கு