Published:Updated:

காதலை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்ல உதவும் கண்ணியமான தொடுதல்கள்!

தொடுதல்
தொடுதல்

காதலில் நடக்கும் கண்ணியமான தொடுதல்கள் காதலர்கள் இருவருக்குமிடையே ஒருநம்பிக்கையையும் பாதுகாப்பு உணர்வையும் தங்கள் காதலைத் திருமணம் நோக்கி நகர்த்திச் செல்ல ஒரு தூண்டுதலையும் தரும்.

சின்னச் சின்ன ஸ்பரிசங்களின் அவசியம்:

"காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால் சின்ன தகரம் கூட தங்கம் தானே!" - தொடுதலின் மகத்துவத்தை மிக அழகாகச் சொல்லும் பாடல் வரிகள். உண்மையில் அன்பானவர்களின் கண்ணியமான சின்ன தொடுதலுக்கு எதையும் மாற்றக்கூடிய சக்தி உள்ளது. இது காதலில் மட்டும் இல்லை. பெற்றோர்கள், குழந்தைகள், சகோதரர்கள், நண்பர்கள் என யார் மீதும் நமக்கு உள்ள அதீத அன்பை வெளிப்படுத்த வார்த்தைகளைவிட சின்னச் சின்ன தொடுதல்களும் அரவணைப்புகளுமே அதிகம் உதவுகின்றன. "கட்டிப்பிடி வைத்தியமும்" இந்தத் தொடுதல் ட்ரிக்தான்.

தொடுதல்
தொடுதல்

தொடுதல் மந்திரம்:

தொடுதல், 'உணர்வை' மட்டும் அல்ல 'உயிரையும்' தரும் என்றால் நம்ப முடிகிறதா? - ஆனால், இது உண்மை! ஆலன்-பார்பரா பீஸ் எனும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தம்பதியர் "ஆண்கள் ஏன் கேட்பதில்லை?" என்ற தங்கள் புத்தகத்தில் தொடுதலின் மாயங்கள் பற்றி அழகாக விவரித்துள்ளனர்.

தொடுதல் பற்றி நடத்தப்பட்ட பல ஆய்வுகளில் இதன் முக்கியத்துவம் தெரியவந்துள்ளது. பிறந்த குரங்கு குட்டிகளைத் தொடாததால் மனச்சோர்வு, நோய் ஏற்பட்டு சிறு வயதிலேயே அவை மரணம் அடைந்துவிடுவதை ஹார்லோ மற்றும் சிமர்மேன் எனும் அறிஞர்கள் நடத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கைவிடப்பட்ட குழந்தைகளிடமும் இதேபோன்ற விளைவுகள் ஏற்பட்டன.

தொடுதல்
தொடுதல்

10 வாரங்களிலிருந்து ஆறு மாதம் வரையுள்ள குழந்தைகள் மீது நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், குழந்தைகளை வருடிக்கொடுக்குமாறு கூறப்பட்டபோது குழந்தைகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்படுவது குறைந்தது. ஆனால், வருடிக்கொடுக்காத குழந்தைகளுக்கு அதிக அளவில் ஏற்பட்டன. அன்பாகத் தொட்டு வளர்க்கப்பட்ட குழந்தைகள் மேலான, ஆரோக்கியமான, சந்தோஷமான பெரியவர்களாக வளர்ந்தனர். ஆனால், காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு ஓடும் நமக்கு இப்போதெல்லாம் குழந்தைகளைத் தூக்கிக் கொஞ்சுவதுகூட அரிதாகிவிட்டது என்பதே கவலைக்குரிய விஷயம்!

பெண்களுக்குத் தொடுதல் உணர்வு அதிகம்:

மனித உடலில் சருமம்தான் மிகப்பெரிய உறுப்பு. அது இரண்டு சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ளது. சருமத்தில் அங்கங்கே வலி உணரும் மையங்கள், குளிர் உணரும் மையங்கள் மற்றும் தொடுதலை உணரும் மையங்கள் உள்ளன. பிறந்ததிலிருந்தே பெண்கள் அதிக தொடு உணர்ச்சி உள்ளவர்கள். வளர்ந்த ஒரு பெண்ணின் தொடு உணர்வு ஆணைவிட 10 மடங்கு அதிகமாக, தொடுவதையும் அழுத்தத்தையும் உணர்வதாக உள்ளது. ஆணின் சருமத்தைவிட பெண்ணின் சருமம் மெல்லியது. குளிர்காலத்தில் வெம்மை தரவும், அதிக காலம் நீடித்திருக்கவும், பெண்ணின் சருமத்துக்கடியில் அதிகப்படியான கொழுப்பு அடுக்கு உள்ளது.

தொடுதல்
தொடுதல்
காதலில் வயிற்றில் பறக்கும் பட்டாம்பூச்சியும், துயரத்தில் வயிற்றைச் சுழற்றும் பட்டாம்பூச்சியும் ஒன்றே... எப்படி?!

எனவே, ஆணின் தொடு உணர்ச்சி மையங்களைவிட 10 மடங்கு அதிக உணர்வுள்ளதாகப் பெண்ணின் தொடு உணர்ச்சி மையங்கள் இருப்பதால், அவர்கள் தங்கள் காதலரையும் குழந்தைகளையும், நண்பர்களையும் அணைப்பதற்கு அவ்வளவு முக்கியத்துவம் தருகிறார்கள். கண நேரத்தில் நிகழும் தொடுதலுக்குப் பின் இத்தனை ரகசியங்கள் இருக்கின்றன!

எனவே, தொடுதல் எந்த வகையிலெல்லாம் உறவுகளை மேம்படுத்தும் என்பது பற்றி உளவியல் ஆலோசகர் வசந்தி பாபுவிடம் கேட்டோம்.

பெற்றோர் - குழந்தைகளுக்கு இடையேயான அரவணைப்பு:

உளவியல் ஆலோசகர் வசந்தி பாபு
உளவியல் ஆலோசகர் வசந்தி பாபு

அன்பான தொடுதல்களும் அரவணைப்பும் தரும், நம்பிக்கையையும் ஆறுதலையும் வேறு எதுவும் தந்துவிட முடியாது. குறிப்பாக, குழந்தைகளிடம் பெற்றவர்கள் தொட்டுக் காட்டும் அரவணைப்பு இன்றியமையாதது. ஒரு குழந்தை பிறந்தவுடனேயே தாயிடமிருந்து அதற்கு இந்தத் தொடுதலும் அரவணைப்பும் கிடைக்க வேண்டும். பாலூட்டுவது, மார்புடன் அணைத்துக்கொள்வது போன்றவையெல்லாம் பிறந்த குழந்தைகளை அரவணைக்கும் சிறந்த வழிகள். அவர்கள் வளரும்போதும் பதின்பருவத்தில் இருக்கும்போதும் இந்த அரவணைப்பு முக்கியம்.

இதுபோல் சின்னச் சின்ன அன்புக்காகத்தான் அவர்கள் ஏங்கிக் கொண்டிருப்பார்கள். அது பெற்றோர்களிடமிருந்தே கிடைக்கும்போது அவர்கள் வழி தவறிச் செல்வதற்கான வாய்ப்புகள் குறைவு. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் வெற்றி பெறும் நேரங்களில் தட்டிக் கொடுத்தும் தோல்வியடையும் நேரங்களில் அரவணைத்தும் பழகி வந்தால் பெற்றோர்-பிள்ளைகளுக்கு இடையே அன்பு, பாசம் என்பதைத் தாண்டி ஒரு சிறந்த நட்பும் கட்டமைக்கப்படும்.

கணவன் - மனைவி சின்ன சின்ன ஸ்பரிசங்கள்:

அன்பின் மொழிதான் தொடுதல். கணவன்-மனைவி என்று வரும்போது அவர்களின் தாம்பத்ய உறவைத் தவிர்த்து அவ்வப்போது ஏற்படும் சின்னச் சின்ன தொடுதல்களும் தோள் சாய்தலும் கைகோத்தலும், கால் வருடல்களும் அவர்களின் காதலை அதிகப்படுத்தும். இருவரின் புரிந்துணர்வையும் மேம்படுத்தும்.

தொடுதல்
தொடுதல்

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கணவர் சோர்ந்திருக்கும்போது மனைவியின் ஒரு சின்ன, அழுத்தமான கைப்பற்றுதல் தரும் ஆறுதலை வேறு எந்தப் பொருளாலும் தந்துவிட முடியாது. அதுபோல் மனைவிக்கு கணவனின் நெஞ்சோடு சேர்த்த அணைப்புக்கும் வருடல்களுக்கும் இணையாக இந்த உலகத்தையே கொடுத்தாலும் ஈடாகாது. எனவே, கணவன்-மனைவி உறவை வலுப்படுத்த அவ்வப்போது நிகழும் சின்னச் சின்ன தொடுதல்கள் அவசியமான ஒன்று என்பதை தம்பதியர் கவனத்தில் கொள்ள வேண்டும்.

காதலில் தொடுதல்:

'கண்கள் படாமல் கைகள் தொடாமல் காதல் வருவதில்லை..." - கொஞ்சம் பழைய பாடல்தான். ஆனாலும், எக்காலத்துக்கும் பொருந்தும் பாடல். முதலில் கண்களாலும் பிறகு கைகளாலும் தழுவிக் கொள்ளும் காதல்! காதலில் தொடுதல் என்பது அந்தக் காதலை வலுவாக்கும் காரணிகளில் ஒன்று. காதலின் தொடக்கத்தில் இருவருக்குமே கைகள் கோப்பது, தோளில் சாய்வது போன்ற தொடுதல்களுக்கு தயக்கம் இருக்கத்தான் செய்யும்.

தொடுதல்
தொடுதல்
``ஓ... இதனால்தான் பெண்களுக்கு டெடி பியரை பிடிக்கிறதா?"- இவ்வளவு நாள் தெரியாமல் போச்சே!

ஆனால், அதையும் தாண்டி எதார்த்தமாக விரல்படும்போதோ, நடந்து செல்லும்போது தோள்கள் உரசும்போதோ உடலில் 4,000 வாட்ஸ் மின்சாரம் பாயும், வயிற்றில் பட்டாம்பூச்சிகள் அடித்துக் கொள்ளும். அப்போதெல்லாம் காதலர்கள் சிறகுகள் இல்லாமலே வானத்தில் பறப்பார்கள்! காதலில் நடக்கும் கண்ணியமான தொடுதல்கள் காதலர்கள் இருவருக்குமிடையே ஒருநம்பிக்கையையும் பாதுகாப்பு உணர்வையும் தங்கள் காதலைத் திருமணம் நோக்கி நகர்த்திச் செல்ல ஒரு தூண்டுதலையும் தரும்.

நண்பர்களும் தொடுதலும்:

நெருங்கிய நண்பர்களிடம் பெரும்பாலும் இந்தத் தொடுதல் கலாசாரத்தை அதிகமாகப் பார்க்கலாம். இதில் ஆண், பெண் பாலின பேதம் இருக்காது. எந்த வன்மமும் இருக்காது. நீ என்னுடைய தோழன், தோழி என்ற உரிமை கொண்டாடுதலே அதிகம் இருக்கும். தோள்மீது கை போட்டுக்கொண்டு போட்டோ எடுத்துக்கொள்ளவது, கைகோத்துக்கொண்டு ஒன்றாகச் சுற்றுவதெல்லாம் இந்த மனநிலைதான். இது மனதுக்கு ஒருவிதப் பாதுகாப்பையும் சந்தோஷத்தையும் தரும். இதனால்தான் எவ்வளவு பெரிய பிரச்னையாக இருந்தாலும் நண்பர்களிடம் எளிதாகப் பகிர்ந்துகொள்ள முடிகிறது.

தொடுதல்
தொடுதல்

மேலும், நமம் திருமண சடங்குகளில் பாத பூஜை, கன்னிகா தானம் போன்றவை தொடுதலை அடிப்படையாகக் கொண்டவை. திருமணம் முடிந்து பெண்கள் தன் கணவன் வீட்டுக்குச் செல்லும்போது தன் அம்மா, அப்பா, சகோதர்கள் போன்றவர்களை அழுத்தமாக அணைத்துவிட்டுச் செல்வார்கள். இந்த அணைப்பிலும் தொடுதலில் ஓராயிரம் கதைகள் பொதிந்து இருக்கும்.

`பள்ளித் தோழியைச் சந்தித்தால் தற்போதைய காதல் என்னவாகும்?'  -இளைஞரின் குழப்பம் #LetsSpeakRelationship

மனம் உடைந்து இனி வாழவே முடியாது என்று கண்ணீர்விட்டுக் கொண்டிருப்பவர்களிடம் எவ்வளவு அறிவுரை சொன்னாலும் வேலைக்காகாது; கேட்க மாட்டார்கள். அதே நேரத்தில் எதுவும் செல்லாமல் நாம் தரும் நம்பிக்கையான அணைப்போ, தலை வருடலோ அவர்களின் கண்ணீரை நிறுத்திவிடும். இதுதான் வார்த்தைகளுக்கும் உணர்வுகளுக்கும் உள்ள வித்தியாசம். வார்த்தைகளுக்கு எங்கு எல்லை முடிகிறது அங்கு தோன்றுவதுதானே உணர்வு!

ஆக, தொட்டால் பூ மலருமா... தெரியவில்லை, ஆனால், உங்கள் அன்பும் காதலும் மலரும் என்பது மட்டும் நிச்சயம்!

அடுத்த கட்டுரைக்கு