Published:Updated:

செக்ஸ் இவற்றிற்கெல்லாம் மருந்து எனச் சொன்னால் நம்புவீர்களா? - பெட்ரூம் - கற்க, கசடற! - 2

Couple (Representational Image
Couple (Representational Image ( Image by Free-Photos from Pixabay )

பாலியல் தொடர்பான புரிதல்களை ஏற்படுத்தும் புதிய தொடர்... இனி வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை மாலை 7 மணிக்கு... Vikatan.com-ல்..!

* உங்கள் சருமம் பொலிவாக வேண்டுமா?

* உங்கள் மனநிலை இனிமையாக வேண்டுமா?

* புற்றுநோய், இதயநோய் மற்றும் பிற உடல்நல அபாயங்களைக் குறைக்க விரும்புகிறீர்களா?

`ஆமாங்க ஆமாம்’ என்பதுதானே உங்கள் பதில்.

இவை எல்லாவற்றுக்குமான சர்வரோக நிவாரணி ஒரே ஒரு மாத்திரைதான்!

அது எங்கே கிடைக்கும் என டாக்டரையோ, பிரிஸ்கிரிப்ஷனையோ, பார்மசியையோ தேட வேண்டாம். ஏனெனில், அந்த மாத்திரை உங்களிடம்தான் உள்ளது.

நீங்கள் என்பது நீங்கள் மட்டுமே இல்லையே... உங்கள் துணையையும் சேர்த்தே சொல்கிறோம். நீங்கள் இணைந்து செயல்படும்போது மேலே கூறிய அத்தனை நற்பலன்களும் எந்த ராசிபலனும் பார்க்கத் தேவையின்றி உங்களுக்குக் கிடைக்கும்!

அந்த மந்திர மாத்திரையின் பெயர்தான் செக்ஸ்!

Love (Representational Image)
Love (Representational Image)
Image by StockSnap from Pixabay

அன்பினால் ஆகாதது ஒன்றுமில்லை. அன்பின் வழியே காமம் ஊடுருவும்போது, அது உங்கள் இருவரின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பல ஆச்சர்யமான வழிகளில் அதிகரிக்கும். இருவர் அல்லாத ஒருவராக மட்டுமே இருந்தாலும் இந்தப் பலனை ஓர் உச்சக்கட்டத்தின் மூலம் பெற முடியும். அதெப்படி என்று வியப்பவர்கள் கண்களை மூடிக்கொண்டு யோசிக்கவும்.

செக்ஸ் உங்களை ஆச்சர்யப்படுத்தக்கூடிய பல நன்மைகளைக் கொண்டுள்ளது. நீங்கள் உடலுறவு கொள்ள சில ஆரோக்கியமான காரணங்கள் - இதோ...

இதற்கெல்லாம் காரணம் வேறு வேண்டுமோ? கரும்பு தின்னக் கூலியா என்பதுபோல இருக்கிறதுதானே?

செக்ஸின் ஆரோக்கிய நன்மைகளை நிரூபிக்கும் நிறைய ஆய்வு முடிவுகள் ஒருமித்துக் கூறுவது இதுதான்... செக்ஸ் என்பது காமம் என்கிற உடலுறவு மட்டுமே அல்ல; அதையும் தாண்டிப் புனிதமானது!

* செக்ஸ் என்பது உடற்பயிற்சி!

ஆமாம்... எந்தவோர் உடல் செயல்பாட்டையும் போலவே, ஆரோக்கியமான உடலுறவு உங்கள் இதயத்துக்கு இதமானது. அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கார்டியாலஜி முன்னெடுத்த ஓர் ஆய்வில், மாதத்துக்கு ஒரு முறை அல்லது அதற்கும் குறைவாக உடலுறவு கொள்கிறவர்களைவிட, வாரத்துக்கு இரண்டு முறை அல்லது அதற்கு மேற்பட்ட முறை உடலுறவு கொள்ளும் ஆண்களுக்குப் பக்கவாதம், மாரடைப்பு போன்ற இதயநோய்கள் ஏற்படும் அபாயம் குறைவு என்று கண்டறியப்பட்டுள்ளது.

`உடலுறவில் ஈடுபடுவது இதயத்துக்குத் தீங்கானது; இதய நோயாளிகள் அந்தப் பக்கம் திரும்பக் கூடாது’ என்றெல்லாம்கூட முன்னர் சொல்லி வந்தார்கள். அந்தக் கவலை வேண்டாம்... பாலியல் செயல்பாடு மற்றும் இதயநோய் குறித்த அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷனின் அறிவியல் அறிக்கை உடலுறவு கொள்வது பாதுகாப்பானது என்றே கூறுகிறது.

Couple (Representational image)
Couple (Representational image)
Pexels

செக்ஸ் செயல்பாடு ஐந்து வளர்சிதை மாற்றச் செயல்களுக்குச் சமம் (MET) என்று அறிவியலாளர்கள் இதை அளக்கவும் செய்திருக்கிறார்கள். போகிற போக்கில் இன்னொன்றும் சொல்லிவிடலாம். செக்ஸில் ஆணுக்கோ, பெண்ணுக்கோ அளவு எந்த விதத்திலும் முக்கியமானதல்ல... சிறியதோ, பெரியதோ - இருப்பதைக் கொண்டு சிறக்கச் செய்வதுதான் சிறப்பான செக்ஸ்.

சரி... உடற்பயிற்சிக்கு வருவோம். MET (Metabolic Equivalent of Task) என்பது ஒரு செயல்பாட்டின்போது செலவிடப்படும் ஆற்றலின் (கலோரி) அளவீடுதான். உடற்பயிற்சி செய்வது, மிதமான வேகத்தில் நடப்பது போன்றவற்றுக்குக் கிடைப்பது 3 MET மட்டுமே. ஏரோபிக் பயிற்சி போன்ற செயல்பாடுகளுக்கு 5 MET கிடைக்கிறது. செக்ஸும் ஏறத்தாழ ஏரோபிக்ஸுக்கு இணையான செயல்பாடுதானே? அதனால் இதற்கும் அதே 5 MET. ஏரோபிக் என்றவுடன் `சதி லீலாவதி’ படத்தில் ரமேஷ் அரவிந்த்துக்கு முதுகுப்பிடிப்பு ஏற்பட்டது செக்ஸுக்கு முன்பா, பின்பா என்கிற சந்தேகத்தை இங்கு எழுப்ப வேண்டாம்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும்... உடலுறவு கொள்வது உண்மையிலேயே ஒரு நல்ல உடற்பயிற்சிதான். ஓர் ஆய்வின்படி... சராசரியாக 25 நிமிட பாலியல் அமர்வுகளில் ஆண்கள் சராசரியாக 4 கலோரிகளை ஒரு நிமிடத்துக்குச் செலவழித்தனர். பெண்கள் 3 கலோரிகளைக் கழித்தனர். டிரெட்மில்லில் உழைப்பதைவிட இது மிகவும் மகிழ்ச்சியான செயல்பாடுதானே!

* இனிமையான வலி நிவாரணி!

ஓர் ஆச்சர்யமான விஷயம் தெரியுமா? உங்கள் இணையைப் பார்ப்பது... ஏன் அவரது புகைப்படம்கூட உங்கள் வலியைக் குறைக்க உதவும். குறிப்பாக, மாதவிடாய் வலிகளை! கலிஃபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் நிகழ்த்தப்பட்ட ஓர் ஆய்வில், மயக்க மருந்து நிபுணர்கள் பங்கேற்பாளர்களுக்கு அவர்களின் காதல் இணையின் புகைப்படங்கள் அல்லது கவர்ச்சிகரமான அந்நியர்களின் புகைப்படங்களைக் காட்டினர்.

Love
Love
representational image

காதல் இணையைப் பார்ப்பது வலியின் உணர்வைக் கணிசமாகக் குறைப்பதாக அவர்கள் கண்டறிந்தனர். எனவே, வலியை உடலுறவுக்கு ஒரு தடையாக நீங்கள் நினைத்தாலும், அந்த நேரத்துக்கும் முயற்சிக்கும் தகுதியான பாலியல் நன்மையை அது அளிக்கும். ஆகவே, உங்கள் காதலைப் பார்க்கத் தினம் தினம் சிறிது நேரம் ஒதுக்குங்கள்!

பெண்களுக்கு நல்ல புணர்ச்சியின் மூலம் மாதவிடாய்ப் பிடிப்புகளிலிருந்து சிறிது நிவாரணம் கிடைக்கும் என்று சில ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

குறைவான மன அழுத்தம் மற்றும் முறையான ரத்த அழுத்தம்

நல்ல மனநிலையை அதிகரிக்கும் எண்டார்பின்கள் மற்றும் பிற ஹார்மோன்களை உயர்த்துவதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்க செக்ஸ் உதவுகிறது. உடற்பயிற்சியின் ஒரு வடிவமாக, அது உங்களை அமைதிப்படுத்தவும் உதவும். ஸ்காட்டிஷ் ஆய்வொன்று இப்படிச் சொல்கிறது... மன அழுத்த நிகழ்வுகளின் போது ரத்த அழுத்தம் கன்னாபின்னாவென எகிறுவதை பாலியல் செயல்பாடு தடுக்கிறது. முழுமையான உடலுறவு கொள்கிறவர்களுக்கு இந்தப் பலன் அதிகமாகக் கிடைத்தாலும், உள் செலுத்துதல் அல்லாத உடலுறவு மற்றும் சுயஇன்பம் ஆகியவையும்கூட அமைதி அடைய உதவும்.

புரோஸ்டேட் புற்றுநோய் அபாயம் குறைப்பு

ஐரோப்பிய யூராலஜி இதழில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வில், மாதத்துக்கு 21 முறைக்கு மேல் விந்து வெளியேற்றும் ஆண்களுக்கு, மாதத்துக்கு நான்கு முதல் ஏழு முறை மட்டுமே இதைச் செய்யும் ஆண்களுடன் ஒப்பிடும்போது, புரோஸ்டேட் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 20 சதவிகிதம் குறைவு என்று கண்டறியப்பட்டுள்ளது.

Sleep
Sleep
Photo by Kinga Cichewicz on Unsplash
`ஆர்கஸம்' இனியும் ஆபாசம் அல்ல; உங்களின் ஆரோக்கியமே! - பெட்ரூம்... கற்க கசடற! - 1

போனஸ்: சிறந்த தூக்கம்

புரோலாக்டின் என்கிற ஹார்மோன் புணர்ச்சி காரணமாக வெளியிடப்படுகிறது. இது நல்ல தூக்கம் வர வைப்பதோடு, நிம்மதியாக உணரவும் உதவும். திருப்திகரமான அமர்வுக்குப் பிறகு நீங்களும் உங்கள் இணையும் இனிமையாகத் தூங்குவதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. நன்கு தூங்கி புத்துணர்ச்சியுடன் எழுந்திருக்கவும் இது உதவும்.

மகிழ்ச்சியான மனநிலை மற்றும் வலுவான உறவு

உடலுறவுக்குப் பிறகு நீங்கள் மிகவும் நேர்மறையான கண்ணோட்டத்தைப் பெறுவது உறுதி, ஆரோக்கியமான பாலுறவின்போது விந்தணு வெளியாகும்போது நிகழும் நரம்பியல் செயல்பாடு மனநிலையை மேம்படுத்துகிறது. உங்கள்மீது அக்கறை கொண்ட இணையுடன், உங்கள் நம்பிக்கையான இணையுடன் நல்ல செக்ஸ் தொடர்பைக் கொண்டிருந்தால் மனநிலை என்றும் மகிழ்நிலைதான்!

மேலும், விறுவிறுப்பான இந்தச் செயல்பாட்டின் மூலம், உங்கள் இணையுடன் உறவு தாண்டிய நீடித்த திருப்தியைப் பெற முடியும் என உளவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இரண்டுவார கால பாலியல் நாள்குறிப்பை வைத்திருந்த புதுமணத் தம்பதிகள் ஓர் ஆய்வில் பரிசோதிக்கப்பட்டனர். விருப்பத்துடன்கூடிய பாலியல் செயல்பாடுகளுக்குப் பிறகு, அந்த ஜோடிகள் 48 மணிநேரம் வரை அதே திருப்தி மனநிலையில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். `ஆஃப்டர் க்ளோ' என்றழைக்கப்படும் இந்த இனிய அனுபவத்தை அனுபவிக்கும் அதிர்ஷ்டசாலிகள் தங்கள் உறவில் நாளுக்கு நாள் மகிழ்ச்சி அதிகரிப்பதாகவும் தெரிவித்தனர்.

Couple
Couple
Image by Free-Photos from Pixabay

ஒளிரும் இளமைச் சருமம்

இது கட்டுக்கதைபோலத் தோன்றினாலும்கூட அறிவியல்ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மையே. அதற்குப் பின் நன்றாக உறங்கி, காலையில் எழும்போது பிரகாசமாக உணர்கிறீர்களா? இது உங்கள் கற்பனை மட்டுமல்ல; உடலுறவுக்குப் பிறகு நீங்கள் நன்றாக உணர்கிறீர்கள் என்பதன் ஓர் அறிகுறிதான்.

ஆம்... நீங்கள் இளமையாக இருக்கவும் செக்ஸ் உதவுகிறது. மன அழுத்த நிவாரணம், சிறந்த மனநிலை மற்றும் உங்கள் சருமத்தின் கீழ்ப்பகுதியின் ரத்த ஓட்டம் ஆகியவை அந்தப் பிரகாசத்துக்குக் காரணமாக இருக்கலாம்.

ஆரோக்கியமான பாலியல் வாழ்க்கையை அனுபவிப்பது வாழ்வின் மிகப்பெரிய மகிழ்ச்சிகளில் ஒன்றாகும். இணையுடனான நெருக்கத்தை அனுபவிப்பது உங்கள் நீண்டகால ஆரோக்கியத்துக்கு ஒரு வரப்பிரசாதம். இந்த மகிழ்ச்சியைத் தவறவிடலாமா!

- சஹானா

அடுத்த கட்டுரைக்கு