Published:Updated:

ஃபேஸ்புக்கில், விவாகரத்தானவர்கள் என்று இத்தனை பேர் ஸ்டேட்டஸ் வைத்திருக்கிறார்களா? #Infographics

விவாகரத்து குறித்து சில புள்ளி விவரங்களை இங்கே பார்க்கலாம்....

விவாகரத்து
விவாகரத்து

திருமணம் என்பது, ஒருவரின் வாழ்வில் நடக்கும் முக்கிய நிகழ்வு. நாள் பார்த்து, நட்சத்திரம் பார்த்து, பெரியவர்கள் ஆசியுடன் இரு மனங்களும் இணைந்து வாழவே திருமணம் செய்து வைக்கப்படுகிறது. ஆனால், சில திருமணங்கள் விவாகரத்தில் முடிந்துவிடுகின்றன. ஈகோ, சந்தேகம், சந்தேகத்தையொட்டி எழும் அதீத கற்பனைகள், ஒருவரின் உறவுகளை மற்றவர் அலட்சியப்படுத்துவது, பொருளாதார சிக்கல், திருமணத்துக்கு வெளியிலான உறவு என்று பல காரணங்களால் விவாகரத்து ஏற்படுகிறது. விவாகரத்து சிலருக்கு தவறான இணையிலிருந்து விடுபட வழி செய்கிறது என்பதும் உண்மைதான்.

விவாகரத்து
விவாகரத்து

பலருக்கு விவாகரத்துக்குப் பின்பு மன உளைச்சலும் ஏற்படுவதுண்டு. விவாகரத்துக்கான காரணங்களைத் தாண்டி விவாகரத்துகள் குறித்து சில புள்ளி விவரங்களை இங்கே பார்க்கலாம்....

விவாகரத்து என்பது கிராமப் புறங்களைக் காட்டிலும் நகர்ப் புறங்களில்தான் அதிகரித்து வருகிறது என்கின்றன ஆய்வுகள். இந்தியாவிலேயே படித்தவர்கள் அதிகம் இருக்கும் மாநிலம் கேரளா என்கிறது மத்திய அரசின் புள்ளி விவரப் பட்டியல். அதே கேரளத்தில்தான் விவாகரத்துகளும் அதிகம் நடைபெறுகிறது என்று 2015-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர் பதிலளித்தார்.

அந்த அறிக்கையில் 2015-ம் ஆண்டு மட்டும் கேரளத்தில் 52,541 விவாகரத்து வழக்குகள் விசாரிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியிட்டது மத்திய அரசு. இந்தப் பட்டியலில் கேரளா முதலிடத்திலும், மகாராஷ்டிரா 2-வது இடத்திலும், கர்நாடகம் 3-வது இடத்திலும் உள்ளன. 2014-ம் ஆண்டு கேரளத்தில் மட்டும், 1 மணிநேரத்துக்கு 5 விவாகரத்துகள் வழங்கப்பட்டதாகவும், நாளொன்றுக்கு 130 விவாகரத்துகள் வழங்கப்பட்டதாகவும் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டது மத்திய அரசு. இந்திய அரசின் இந்தப் புள்ளி விவரப் பட்டியல் ஒருபுறம் இருக்க, உலக அளவில் மிகக் குறைந்த அளவில் விவாகரத்து வழங்கப்படுவது இந்தியாவில்தான் என்கிறது 'OECD' என்கிற அமைப்பு.

விவாகரத்து
விவாகரத்து

இந்தியாவில், திருமணமானவர்களில் 1 சதவிகிதம் பேர் மட்டுமே விவாகரத்து செய்கிறார்கள் என்கிறது 'OECD' அமைப்பின் 'Family Database' ஆய்வறிக்கை. மேலும், லக்ஸம்பர்க் நாட்டில் 87 சதவிகிதம் பேரின் திருமணம் விவாகரத்தில்தான் முடிகிறது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உலக அளவில், ஃபேஸ்புக்கில், தனது ஸ்டேட்டஸில் விவாகரத்தானவர் என்று வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 63 லட்சம் என்கிறது ஃபேஸ்புக் நிறுவனம்.

இந்தியாவில் விவாகரத்தானவர் என்று 88,000 ஆண்களும் 22,000 பெண்களும் தங்களது ஃபேஸ்புக் பக்கத்தில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளனர்.

விவாகரத்து
விவாகரத்து
விகடன் இன்ஃபோகிராபிக்ஸ்

உலக நாடுகளோடு ஒப்பிடும்போது இந்தியாவில் வழங்கப்படும் விவாகரத்துகளின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவில் வழங்கப்படும் விவாகரத்துகள் பல மடங்கு அதிகரித்துள்ளன. திருமண வாழ்க்கையில் பல பிரச்னைகள் வரலாம். அந்தப் பிரச்னைகளில், எந்தெந்தப் பிரச்னைகளுக்கு நாம் காரணம் என்று கண்டறிந்து கணவன், மனைவி இருவரும் நிதானமாக யோசித்து, விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் விவாகரத்துகள் குறையும் என்கிறார்கள் மனநல நிபுணர்கள்.