Published:Updated:

ஸாரி கேட்டு சிரிச்சாலே காதல் கூடும்! - மாற்றுத்திறனாளி தம்பதியின் நம்பிக்கைக் கதை

வாழ்தல் இனிது

பிரீமியம் ஸ்டோரி

தீபக் – நாகரத்தினம்... நம்பிக்கைக்குரிய மாற்றுத்திறனாளி தம்பதியர். `செரிப்ரல் பால்சி' (மூளை முடக்குவாதம்) பாதிப்புள்ள தீபக்கும், போலியா பாதிப்புள்ள நாகரத்தினமும் வீல்சேர் உதவியுடன்தான் வெளியில் செல்ல முடியும். தீபக்கை வீல்சேரில் தூக்கி வைக்கவே பிறர் உதவி தேவை. இந்த நிலையிலும், தமிழகத்திலிருக்கும் ஆயிரமாயிரம் பத்திரிகையாளர்களுக்கு நடுவே, வீல்சேரில் இருந்தபடியே பணியாற்றும் பத்திரிகையாளராக கவனம் ஈர்க்கிறார் தீபக். காதல் திருமணம் செய்துகொண்ட இவர்களின் இல்லற வாழ்க்கை கொள்ளை அழகு.

“பெற்றோர் எனக்காகவே அவங்க வாழ்க்கையை அர்ப்பணிச்சுகிட்டாங்க. ஸ்பீச் தெரபிஸ்ட்டான அம்மா, நிறைய பேச்சுக் கொடுத்து எனக்குள்ளே இருந்த திறமைகளை வெளிக்கொண்டுவந்தாங்க. அப்பாவுக்கு ஸ்போர்ட்ஸ்ல அதிக ஆர்வம். நான் டிவியில பார்த்தே எல்லா விளையாட்டையும் தெரிஞ்சு கிட்டேன். ஸ்போர்ட்ஸ்ல இருந்தே வெற்றி, தோல்வி, நம்பிக்கைனு வாழ்க்கைக்கான பிடிப்பையும் பலப்படுத்திகிட்டேன். திடீர் மாரடைப்பால் அப்பாவும், புற்றுநோயால் அம்மாவும் அடுத்தடுத்து உயிரிழக்க, தனியா வாழப் பழகினேன். சென்னையிலுள்ள வித்யா சாகர் அமைப்புல தங்கி, எம்.ஏ முடிச்சேன்.

ஸாரி கேட்டு சிரிச்சாலே காதல் கூடும்! - மாற்றுத்திறனாளி தம்பதியின் நம்பிக்கைக் கதை

கிரிக்கெட் கமென்ட்ரி பண்றதுக்குப் போதிய திறமை இருந்தும், தடுமாற்றத்துடன்கூடிய என்னோட பேச்சு அதுக்கு முட்டுக்கட்டையா இருந்தது. பத்திரிகையாளராக ஆசைப் பட்டேன். நம்பிக்கையோடு டிப்ளோமா இன் ஜர்னலிசம் முடிச்சேன். ‘தி இந்து’ ஆங்கிலப் பத்திரிகையில வேலை கிடைச்சது. என்னோட திறமையை முழுமையா புரிஞ்சுகிட்ட அலுவலக நிர்வாகம், எனக்காகவே வீல்சேர் போக சாய்வுதளம், தனிக் கழிப்பறை வசதிகளைச் செஞ்சு கொடுத்தாங்க. விளையாட்டுத்துறை சார்ந்த செய்திகளை எடிட் செஞ்சு, கட்டுரைகளை முழுமைப்படுத்துறது என்னோட வேலை. ஒரே கைலதான் கம்ப்யூட்டர்ல டைப் பண்ணுவேன். சீனியர் சப்-எடிட்டர் பொறுப்பிலுள்ள எனக்கு டெஸ்க் வேலைதான். ஆனா, எல்லா விளையாட்டுகளையும் டிவியில பார்த்தும் நோட்ஸ் எடுத்தும் வேலை செய்வேன்” என்கிற தீபக்குக்கு கிரிக்கெட் முதல் கபடி வரை எல்லா விளையாட்டுகளும் அத்துப்படி. வாழ்க்கையின் எல்லா நிகழ்வுகளையும் விளையாட்டுடன் பொருத்தி மகிழ்ச்சியாக வாழ்பவர், அதே உற்சாகத்தை மனைவிக்கும் கடத்துகிறார்.

“அம்மா சிங்கிள் பேரன்ட். குழந்தைப் பருவத்துல காய்ச்சல் இருந்தபோது எனக்கு போலியோ சொட்டு மருந்து விட்டிருக்காங்க. உடனே உடல்நலம் பாதிக்கப்பட்டு, போலியோ பாதிப்பால ஊனமாகிட்டேன். என்னால தவழ்ந்துதான் போக முடியும். அதனாலேயே, பத்தாவதுக்கு மேல படிக்க முடியல. பிறகு, ஓர் அமைப்புல வேலை செஞ்சிட்டிருந்தேன். ஒருநாள் இவர் என்னை எதேச்சையா சந்திச்சார். அப்போ இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம், நாளடைவில் காதலா மலர்ந்துச்சு. ‘மாற்றுத்திறனாளிகளா இருக்கும் ரெண்டு பேரும் சேர்ந்து வாழுறது சரிவராது’னு குடும்பத்துல எதிர்ப்பு இருந்துச்சு. முழுமையான புரிந்துணர்வுடன் கல்யாணம் செஞ்சுகிட்டோம்.

எங்களுக்குள்ள அப்பப்போ சண்டைகள், கருத்து வேறுபாடுகள் வரும். ஆனா, அன்னிக்கே ஸாரி கேட்டு சிரிச்சுடுவோம். ஆறு வருஷமா, பிறர் உதவியில்லாம சந்தோஷமா வாழுறோம். இவருக்கு விளையாட்டு ஆர்வம்தான் முதல் மனைவி. அதைப் புரிஞ்சுகிட்டு இவருக்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்பு கொடுக் கிறேன். இவரும் என் விருப்பங்களை ஊக்கப்படுத்துவார். வீட்டு நிர்வாகத்தை முழுமையா நான் பார்த்துக்கிறேன். எங்க ரெண்டு பேர் மனசுலயும் மற்றொருவரின் நலன்தான் நிறைஞ்சிருக்கும்” என்னும் நாகரத்தினத்தின் முகத்தில் வெட்கம்.

“நமக்கான உரிமையை நாமதான் கேட்டும் போராடியும் பெறணும். இது எல்லாருக்குமே பொருந்தும்னாலும், மாற்றுத்திறனாளிகளுக்கு ஒவ்வொரு தேவைக்குமே பொருந்தும். எனக்கு உதவியா மட்டும் இல்லாம, என் பணிச்சூழல் உட்பட எல்லா விஷயத்தையும் மனம்விட்டுப் பகிரும் துணையாவும் மனைவி இருக்கணும்னு உறுதியா இருந்தேன். ஆசைப் பட்டது போலவே வாழ்க்கைத்துணையும், பணிச் சூழலும் அமைஞ் சது என் வரம்” என்று நெகிழ்கிறார் தீபக்.

“‘இதெல்லாம் செய்ய முடியாது’, ‘ஐயோ பாவம்’னு இரக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகளை யாரும் முடக்க வேண் டாம். எங்களுக்கும் மன சும் ஆசைகளும் உண்டு. அதுக்கு உதவாட்டியும் பரவால்ல. புறக்கணிக்க வேண்டாம்”

- அன்பும் அக்கறையும் நிறைந்த நாகரத்தினத்தின் பேச்சில் பூரிக்கிறார் தீபக்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு