Published:Updated:

நெகிழ்ச்சியூட்டும் கேரளத்து ‘உடன்பிறப்பே’ கதை

 ஸ்வாதி -  சூரஜ்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்வாதி - சூரஜ்

தம்பியால புது வாழ்க்கை பெற்றேன்! - அக்காவால சினிமா ஸ்டார் ஆனேன்!

நெகிழ்ச்சியூட்டும் கேரளத்து ‘உடன்பிறப்பே’ கதை

தம்பியால புது வாழ்க்கை பெற்றேன்! - அக்காவால சினிமா ஸ்டார் ஆனேன்!

Published:Updated:
 ஸ்வாதி -  சூரஜ்
பிரீமியம் ஸ்டோரி
ஸ்வாதி - சூரஜ்

இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் தயாரித்து, கிராமத்து அப்பாவாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘கூகுள் குட்டப்பா’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், சமீபத்தில் வெளியானது. மலையாளத்தில் ஹிட் அடித்த ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’ படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்தப் படம்.

வெளிநாட்டு வேலைக்குச் செல்லும் மகன், தனிமையில் சிரமப்படும் தன் அப்பாவுக்கு உதவியாக ரோபோ ஒன்றை வழங்குகிறார். நவீன உலகத்துடன் ஒன்றிப்போக முடியாத பழைமைவாதியான அந்தக் கிராமத்து அப்பாவின் மனதை, தன் சேட்டைகளால் கொள்ளை கொள்கிறது ரோபோ. கிராமத்து அப்பாவுக்கும் ரோபோவுக்கும் இடையேயான பாசப் பிணைப்பை, சிரிப்பும் நெகிழ்ச்சியுமாகக் காட்சிப்படுத்தி, ரசிகர் களைக் கவர்ந்தது இந்தப் படம்.

படம் பார்த்த பலருக்கும், `நமக்குத் துணையாக இதுபோல ரோபோ ஒன்று இருந்தால் நன்றாக இருக்குமே' என்ற ஆவல் ஏற்பட்டிருக்கும். மலையாள வெர்ஷனில் ரோபோவாக நடித்த சூரஜ் தேலக்காடுவுக்கும், அவரின் அக்கா ஸ்வாதிஸ்ரீக்கும் இடையேயான பாசம், `இப்படியோர் உடன்பிறப்பு நமக்கும் இருக்கக்கூடாதா' என்ற ஏக்கத்தைக் கூட்டுகிறது.

நெகிழ்ச்சியூட்டும் கேரளத்து ‘உடன்பிறப்பே’ கதை

சூரஜ் மூன்றரை அடி உயரமும், ஸ்வாதி இரண்டரை அடி உயரமும் உடையவர்கள். இதனால், இருவருமே பல்வேறு சமூகப் புறக்கணிப்புகளை எதிர்கொண்டுள்ளனர். தாழ்வுமனப்பான்மையால் வீட்டுக்குள் தன்னை முடக்கிக்கொண்ட ஸ்வாதி, தன் தம்பி மீடியாவில் சுடர்விடுவதற்குப் பின்னிருந்து ஊக்கமளிக்கிறார். மலையாள சினிமாவில் வளர்ந்துவரும் திரைக்கலைஞரான சூரஜ், துவண்டுபோன அக்காவை மீட்டெடுத்து, பொதுவெளியில் இயங்க வைக்க உற்சாகப்படுத்துகிறார். மலப்புரம் மாவட்டம் தேலக்காடு கிராமத்தைச் சேர்ந்த இந்த உடன்பிறப்புகளுடன் பேசினோம்.

“எனக்கும் தம்பிக்கும் மூணு வயசு வித்தியாசம். பிறக்கும்போதே ரெண்டு பேரும் எடை குறைவா கவும், உடல் வளர்ச்சிக் குறைபாட் டுடனும் இருந்தோம். வங்கிப் பணியாள ரான அப்பா, தன் சக்திக்கு மீறி எங்களுக் கான சிகிச்சைக்கு ரொம்பவே மெனக்கெட்டார். ஆனாலும், எங்களுக்கு இருக்கும் ஹார்மோன் பாதிப்பை குணப்படுத்த முடியாதுனு டாக்டர்கள் சொல்லியிருக்காங்க. இந்த விஷயத்தை, குழந்தைப் பருவத்திலேயே பக்குவமா புரிய வெச்ச பெற்றோர், நாங்க மனம் தளரக்கூடாதுனு ரொம்பவே நம்பிக்கையூட்டினாங்க” என்று பால்ய கால நினைவுகளுடன் ஸ்வாதிஸ்ரீ இடைவெளிவிட, தொடர்கிறார் சூரஜ்.

நெகிழ்ச்சியூட்டும் கேரளத்து ‘உடன்பிறப்பே’ கதை

“அக்காவும் நானும் ஒரே ஸ்கூல்லதான் படிச்சோம். மாணவர்களுடன், சில ஆசிரியர் களும் எங்களை உருவகேலி செஞ்சிருக்காங்க. எங்க போனாலும் பலரும் எங்களை வித்தி யாசமா பார்க்குற பாகுபாட்டை, பக்குவப் படாத வயசுல ஏத்துக்க எங்களுக்கு சிரமமா இருந்துச்சு.

‘இதெல்லாம் ஒரு பிரச்னையே இல்ல. எதிர் மறை விமர்சனங்களைப் புறந்தள்ளிடுங்க’ன்னு பெற்றோர் ஆறுதல் சொல்வாங்க. ஆனாலும் அக்கா, பத்தாவதுக்குப் பிறகு, வீட்டுக்குள்ளேயே அடைஞ்சுட்டாங்க. ‘என்ன மாதிரி இல்லாம, நீயாச்சும் உன் திறமையை வெளிப்படுத்தி முன்னுக்கு வரணும்’னு தினமும் ஊக்கப்படுத்து வாங்க” அக்காவின் அன்பில் நெகிழும் சூரஜ், ஸ்வாதியின் ஊக்கத்தால் பள்ளிக்காலத்தி லேயே மேடை நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து திறமையை வளர்த்துக்கொண்டுள்ளார்.

“கேரளாவுல பிரபலமான யூத் ஃபெஸ்டிவல் நிகழ்ச்சியில திறமையை வெளிப்படுத்தின பலரும் சினிமா நட்சத்திரங்களா ஜொலிக்குறாங்க. 2012-ல் அந்த நிகழ்ச்சியில சூரஜ் மிமிக்ரி பண்ணி, ரெண்டாம் இடம் பிடிச்சான். அதன் பிறகு, மலையாள சேனல் களின் ரியாலிட்டி நிகழ்ச்சிகள்ல மிமிக்ரி, காமெடி கலைஞனாகவும், போட்டியாளராவும், கெஸ்ட் ரோல்லயும் பங்களிப்பு செஞ்சு பார்வையாளர்களைச் சிரிக்க வைக்குறான். பல படங்கள்ல காமெடியனா நடிச்சிருக்கான்.

‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ படத்துல நடிச்ச 50 நாள்களும், அஞ்சரை கிலோ எடை கொண்ட கவச உடையை பல மணி நேரம் போட்டுகிட்டு, மூச்சுவிடவே சிரமப்பட்டுத்தான் நடிச்சான். அதுக்குப் பலனா, ‘நிஜ ரோபோவா?’ன்னு பலரும் ஆச்சர்யப்பட்டு தம்பியின் நடிப்பைப் பாராட்டினாங்க. தமிழ்ல ரீமேக்காகும் ‘கூகுள் குட்டப்பா’ படத்திலும் ரோபோவா நடிக்குற வாய்ப்பு தம்பிக்குக் கிடைச்சது. ஆனா, சில காரணங்களுக்காக மறுத்துட்டான்.

மம்மூட்டி, பிருத்விராஜ் உள்ளிட்ட பல பிரபலங்களுடன் நடிச்சிருக்கான். என்னைப் போலவே இவனும் பல்வேறு புறக்கணிப்புகளை எதிர்கொண்டாலும், சந்தோஷமா வாழப் பழகி, அந்தக் குணத்தை எனக்கும் கடத்தினான். அப்பா ஸ்தானத்துல என்னை வழிநடத்துறான்” தம்பியின் திறமைக்குச் சான்றளிக்கிறார் ஸ்வாதி.

நெகிழ்ச்சியூட்டும் கேரளத்து ‘உடன்பிறப்பே’ கதை

“ரெண்டு பேருமே பி.காம் படிச்சிருக்கோம். கொஞ்ச காலம் வேலைக்குப் போனேன். ‘உன்னால மத்தவங்கள மாதிரி எல்லா வேலைகளையும் செய்ய முடியாது’னு பணியிடத்துலயும் புறக்கணிப்புகள் தொடர்ந்துச்சு. யாரா இருந்தாலும் திறமைக்கும் குணத்துக்கும்தானே முக்கியத்துவம் கொடுக் கணும்? ஆனா, உயரம் குறைவான தோற்றம் பல இடங்கள்லயும் என் வளர்ச்சிக்கும் மகிழ்ச்சிக்கும் தடையாவே இருந்துச்சு. அதனால, வேலையிலிருந்து விலகிட்டேன். ‘பக்குவ மில்லாத சிலரின் பேச்சுக் காக, உன் அடையாளத்தை இழந்துடாதே’னு தம்பி நம்பிக்கை கொடுத்ததால, இப்போ வெளியிடங் களுக்கு அதிகம் போறேன்” என்று புது மனுஷியாகப் பெருமிதத்துடன் கூறும் ஸ்வாதிக்கு வயது 28. கேரளா பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வுக்கு நம்பிக்கையுடன் தயாராகிறார்.

“இந்தச் சமூகத்துல சிலரின் கேலி, கிண்டல், புறக்கணிப்புகளால, அடுத்தகட்டத்துக்கு முன்னேற முடியாம பலரும் முடங்கிப் போறாங்க. ஊக்கம் கொடுக்க முடியாட்டியும், எங்களைப் போன்றோரின் வளர்ச்சிக்குத் தடையா இருக்காதீங்க” என்று அழுத்தமான குரலில் மெசேஜ் சொல்லும் சூரஜ்... “காமெடி நடிகரா புகழ் பெறணும். தமிழ் சினிமாவிலும் நடிக்க ஆசைப்படுறேன். நல்ல வாய்ப்புகள் இருந்தா சொல்லுங்க” என்று வெள்ளந்தியாகப் புன்னகைக்கிறார்.

“நம்ம கதைகூட சினிமாவா எடுக்கப்படலாம்டா தம்பி” என்று குழந்தையாகச் சிரிக்கிறார் ஸ்வாதி.

‘பாசமலர்’ அண்ணன் தங்கையாக இருவரும் நம் மனதில் பதிகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism