Published:Updated:

வேற எதுவும் தேவையில்லை... நீ மட்டும் போதும்... விதியை வென்ற காதல் ஜோடி

சங்கீதா - லீலா பிரசாத்
பிரீமியம் ஸ்டோரி
சங்கீதா - லீலா பிரசாத்

வீட்டுல நிச்சயம் சம்மதிக்க மாட்டாங்கனு தெரியும். ரெண்டு பேருக்கும் நல்ல வேலை கிடைச்ச பிறகு, காதலை வீட்டுல சொல்லுவோம்னு காத்திட்டிருந்தோம்.

வேற எதுவும் தேவையில்லை... நீ மட்டும் போதும்... விதியை வென்ற காதல் ஜோடி

வீட்டுல நிச்சயம் சம்மதிக்க மாட்டாங்கனு தெரியும். ரெண்டு பேருக்கும் நல்ல வேலை கிடைச்ச பிறகு, காதலை வீட்டுல சொல்லுவோம்னு காத்திட்டிருந்தோம்.

Published:Updated:
சங்கீதா - லீலா பிரசாத்
பிரீமியம் ஸ்டோரி
சங்கீதா - லீலா பிரசாத்

ராஜா ராணி படத்தில் ஜெய்யைத் திருமணம் செய்யத் தயாராகி, காத்திருந்து, கடைசியில் ஏமாற்றத் துடன் திரும்புவார் நயன்தாரா. ஜெய் வெளிநாட்டுக்குப் போய்விட்டதைக் கேள்விப்பட்டு உடைந்து அழுவார். ஒரு கட்டத்தில் ஜெய் இறந்துவிட்டதாக அவரின் நண்பர் மூலம் நயன்தாராவுக்குத் தகவல் வரும். இறந்ததாக நினைத்துக் கொண்டிருந்தவர் உயிரோடு இருப்பது க்ளைமாக்ஸில் தெரியவந்தாலும் கதையில் அவர்கள் இணைய மாட்டார்கள்.

கிட்டத்தட்ட இதே மாதிரியான ஒரு கதை தான் சென்னை, பெருங்குடி அருகேயுள்ள காரம்பாக்கத்தில் வசிக்கும் சங்கீதா - லீலா பிரசாத் வாழ்க்கையிலும் நடந்திருக்கிறது. ராஜா ராணி க்ளைமாக்ஸ் போல அல்லாமல் இவர்கள் இருவரும் இல்லறத்தில் இணைந்தது சுபமான முடிவல்ல, ஆரம்பம்.

“திருமணம் ஆகி ஒரு வருஷம் ஆகப் போகுது. பத்து வருஷ காதல் எங்களுடையது. நான் ஒரு தனியார் நிறுவனத்துல கம்ப்யூட்டர் வகுப்புகள் எடுத்துட்டு இருந்தேன். அங்க இவரு கம்ப்யூட்டர் கத்துக்க வந்தார். நட்பு காதலாச்சு. இவருதான் காதலைச் சொல்லி கல்யாணம் பண்ணிக்கலாமானு கேட்டாரு” - வெட்கம் பரவுகிறது சங்கீதாவின் முகத்தில்.

வீட்டுல நிச்சயம் சம்மதிக்க மாட்டாங்கனு தெரியும். ரெண்டு பேருக்கும் நல்ல வேலை கிடைச்ச பிறகு, காதலை வீட்டுல சொல்லுவோம்னு காத்திட்டிருந்தோம். நாங்க ஆசைப்பட்ட மாதிரியே இவருக்கு ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல வேலை கிடைச்சுது. சில மாசங்களுக்கு வெளிநாடு போகும் வாய்ப்பும் கிடைச்சுது. திரும்பி வந்ததும் வீட்டுல பேசி சம்மதம் வாங்கி கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணோம்.

திடீர்னு ஒரு நாள் காலையில் இவருடைய போன் ஸ்விட்ச் ஆஃப் ஆயிருந்துச்சு. பல முறை முயற்சி பண்ணேன். ஆனாலும், அவரைத் தொடர்புகொள்ள முடியல. இவருடைய வீட்டு முகவரிகூட தெரியாது. என் ஃபிரெண்ட்ஸ் எல்லாம் வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கச் சொன்னாங்க. ஆனாலும், என்னைத் தேடி வருவார்னு காத்துட்டு இருந்தேன்.

ஒரு நாள் இவருடைய ஃபிரெண்ட் நான் வேலை பார்த்த இடத்துக்கு வந்து ‘பிரசாத் ஒரு விபத்தில் இறந்துட்டான், நீ வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோ’னு சொன்னாங்க. உலகமே இடிஞ்சு போன மாதிரி இருந்துச்சு. ரெண்டு நாள் சாப்பிடாமல் ரூமுக்குள்ளயே அடைஞ்சு கிடந்தேன்” - வார்த்தைகள் வர மறுக்கின்றன சங்கீதாவுக்கு. அவரின் கைகளைப் பிடித்தபடி பேச ஆரம்பிக்கிறார் லீலா பிரசாத்.

சங்கீதா - லீலா பிரசாத்
சங்கீதா - லீலா பிரசாத்

“எதிர்பாராதவிதமா நடந்த அந்த விபத்துல முதுகுத் தண்டுவடம் உடைஞ்சு போயிருச்சு. என்னால் இனி நடக்க முடியாதுனு சொல்லிட்டாங்க. எல்லா வேலை களுக்கும் யாராவது உதவணும்ங்கிற நிலைமை. என்னோட இந்தச் சூழலை சங்கீதா எப்படி எடுத்துப்பானு ஒருபக்கம் பயம். இன்னொரு பக்கம் வாழ்க்கை முழுவதும் அவளை கஷ்டப்படுத்த வேண்டாம்னு தோணுச்சு. அதனால் நான் உயிரோட இல்லைனு என் நண்பர்கள் மூலம் சங்கீதாகிட்ட சொல்ல வெச்சேன்.

ஆனா, எப்படியோ விசாரிச்சு சங்கீதா என்னைத் தேடி எங்க வீட்டுக்கே வந்துட்டா. ‘எனக்கு விபத்து நடந்துருந்தா, நீ என்னை விட்டுட்டு வேற கல்யாணம் பண்ணிருப்பியா?'னு என் சட்டையைப் பிடிச்சு கேட்டா. வீட்டுல சொன்னோம். எங்க அம்மா, அப்பாவும் முதலில் தயங்கினாங்க. சங்கீதா தன் முடிவில் உறுதியாக இருந்தா. கடைசியா தன் பெற்றோரை எதிர்த்து, என்னைக் கல்யாணமும் பண்ணிக்கிட்டா. எனக்கான ஒவ்வொரு வேலையையும் பார்த்துப் பார்த்துச் செய்யுறா. வேலைக்கும் போயிட்டு இருக்கா. சங்கீதா மேல் இப்போ மரியாதையும் அதிகமா யிருக்கு. என்னை வீட்டிலிருந்தே ஆன்லைன் வேலைகள் செய்து சம்பாதிக்கப் பழக்கப்படுத்துனா. இப்போ ஃபேஷன் ஷோ, வீல் சேர் மாரத்தான்னு தாழ்வு மனப்பான்மை யிலிருந்து மீண்டு, வெளி உலகத் துக்குத் தெரிய ஆரம்பிச்சுருக்கேன். எனக்கு எல்லாமாகவும் இருக்கிறாள் என் மனைவி. எங்கள் பயணம் காத லோடு தொடரும்”- நம்பிக்கையோடு விடைபெறுகிறார்கள்.

காலமெல்லாம் வாழட்டும் இந்தக் காதல்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism