Published:Updated:

வெட்டாத மரம், கத்தாத வாத்து, காலிப்படகு... இறையன்பு ஐஏஎஸ் சொல்லும் `டாவோ' கதைகள்! #KuttiStory

இறையன்பு
இறையன்பு

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சீன மக்களின் வாழ்வில் விளக்கேற்றிய லாவோட்ஸு பற்றியும் அவரின் டாவோ சித்தாந்தம் பற்றியும் சின்னச்சின்ன கதைகளின் வாயிலாக இங்கே விவரிக்கிறார் இறையன்பு ஐஏஎஸ்.

''துயரமும் சூழலும் நம்பிக்கையின் காட்டாற்றுப் பயணத்தை நிறுத்திவிட முடியாது. நம்மை நாமே கடந்துசெல்வதுதான் வளர்ச்சி. நமக்குள்ளேயே அடுத்த தலைமுறையை அடையாளம் காண்பதுதான் முன்னேற்றம். அந்தத் தேடுதல்தான் இலக்கு, பயணம், அனுபவம் எல்லாமே'' என்று தன் கனவு பற்றிக் குறிப்பிடுபவர், இறையன்பு ஐஏஎஸ்.

அவர், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சீன மக்களின் வாழ்வில் விளக்கேற்றிய லாவோட்ஸு பற்றியும் அவரின் டாவோ சித்தாந்தம் பற்றியும் சின்னச்சின்ன கதைகளின் வாயிலாக இங்கே விவரிக்கிறார்.

இறையன்பு ஐஏஎஸ்
இறையன்பு ஐஏஎஸ்

"டாவோ... சீனத்தில் பூத்த மலர். டாவோ என்றால் 'வழி' என்று பொருள். 'டாவோ'வை முன்மொழிந்தவர் லாவோட்ஸு. அவர், தன் குருவை சந்திக்கச் செல்கிறார்.

அவரிடம் குரு, ''நீ உயரமான மரங்களைப் பார்த்தால், நிமிர்ந்து பார்த்துப் பணிவுடன் இரு'' என்றார்.

"அதன் பொருள் என்ன?" என்று குரு கேட்கிறார்.

லாவோட்ஸு, ''நம்மைவிட உயர்ந்தவர்களைப் பார்க்கும்போது மரியாதையுடன் இரு என்று அர்த்தம்" என்று கூறுகிறார்.

"சரி" என்று கூறிய குரு அவரிடம், ''சொந்த ஊருக்குச் செல்லும்போது பல்லக்கில் செல்லக்கூடாது ஏன்?'' என்று இரண்டாவது கேள்வியை வைத்தார்.

''தெரிகிறது, சொந்த ஊரில் நாம் நம்முடைய அந்தஸ்தைக் காண்பித்துக்கொள்ளக் கூடாது. பழைய நண்பர்களிடம் தொடக்கத்தில் பழகியது போலவே வேற்றுமை இல்லாமல் பழக வேண்டும்'' என்று கூறினார்.

"மிகச் சரி" என்று கூறிய குரு அவரை தன்னருகே அழைத்து, தன் வாயைத் திறந்துமூடினார். ''பொருள் புரிகிறதா?'' என்று கேட்டார். ''மென்மையான நாக்கு, அப்படியே இருக்கிறது. ஆனால், உறுதியான பற்கள் கீழே விழுந்துவிட்டன. மென்மையே நீடித்து நிற்கும். மென்மையே வெல்லும் என்பதை வலியுறுத்துகிறது'' என்று பதிலுரைத்தார்.

அதைத் தொடர்ந்து குரு சொன்னார்.

''மென்மையான தண்ணீர், வலிமையான பாறையை மோதி மோதி வழுவழுப்பானதாக மாற்றிவிடுகிறது!''

***

மென்மையான பஞ்சை உடைக்க முடியாது, கடினமான பாறையை உடைத்துவிட முடியும் என்று நம் பைந்தமிழ் பாடல் ஒன்று கூறுகிறது. பெண்மை தண்ணீரைப் போன்றது. ஆண்மை பாறையைப் போன்றது.

தண்ணீர் தொடத் தொட பாறை மென்மையாவதைப் போல், தொடக்கத்தில் ஆண்கள் உறுதியாக இருந்தாலும், பெண்கள் அவர்களை எளிதாகக் கரைத்துவிடுவார்கள்.

தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் நீரைப் போல் இருக்க வேண்டும்.

'பெண்மைத் தன்மைகொண்ட தலைமையே வெல்லும்' என்கிறது டாவோ. அதுதான் தாயுள்ளம். தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் தாயுள்ளத்துடன் நடந்துகொண்டால், அந்த அணி நிச்சயம் சிறப்பாக வெற்றிபெறும்.

***

Guru
Guru

லாவோட்ஸு வழியில் வந்தவர் சாங் ஷு. அவர் ஒருநாள் தன் சீடர்களுடன் செல்லும்போது, ஒரு புதிரைப் போட்டார்.

ஒரு காட்டிலிருந்த மரங்களை எல்லாம் வெட்டிக்கொண்டு இருந்தார்கள். ஆனால், ஒரே ஒரு மரத்தை மட்டும் அவர்கள் வெட்டவில்லை.

அவர், மரம் வெட்டுபவர் ஒருவரை அழைத்து, ''ஏன் இந்த மரத்தை நீங்கள் வெட்டவில்லை?" என்று வினவினார்.

''இந்த மரத்தால் எந்தப் பயனும் இல்லை. உடல் முழுவதும் முடிச்சுகளாக இருக்கிறது. இதை வைத்து நாம் எதுவும் செய்யமுடியாது. மரச் சாமான்கள் செய்ய லாயக்கற்றது. கிளைகள் எல்லாம் நஞ்சு. விறகாகவும் எரிக்கப் பயன்படுத்த முடியாது. இலைகள் யாவும் கசப்பு. கால்நடைகளுக்கான தீவனமாகவும் பயன்படுத்த முடியாது'' என்று கூறிச் சென்றனர்.

தொட்டுவிட முடியாததை, விட்டு விடுவதே மேலானது.

சீடர்கள் அவர் குறிப்பிட்டதைக் கவனித்தனர். அவர்களை அழைத்துக்கொண்டு ஒரு கிராமத்துக்குச் சென்றார்.

அங்கு ஒரு விவசாயியின் வீட்டில் அவர் தங்கினார்.

விவசாயி தன் வீட்டுச் சமையல்காரரை அழைத்து, ''இன்று இரவு உணவை நம் நண்பர்களுக்கும் சேர்த்துத் தயார் செய்'' என்று கூறினார்.

''எந்த வாத்தை இன்று உணவுக்காக எடுத்துக்கொள்வது? நம்மிடம் இருக்கும் வாத்துகளில் ஒன்று, வெளி நபர்கள் வரும்போது கத்துகிறது. இன்னொன்று மௌனமாக இருக்கிறது. எதை நான் சமையலுக்கு எடுத்துக்கொள்வது?'' என்று கேட்டான்.

''தெரியாதவர்கள் வந்தால் சத்தம் போடுகிற வாத்தை விட்டுவிடு. எதுவும் செய்யாமலிருக்கும் வாத்தை சமைத்துவிடு'' என்றார்.

``லாக் டௌன் நாள்களும், ஓஷோவின் வாழ்வில் ஒரு நாளும்!"- வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ் #KuttiStory

இரண்டு நிகழ்வுகளைப் பார்த்தோம். ஒன்றில் பயனில்லாத மரம் வெட்டப்படவில்லை. இன்னொன்றில் பயனுள்ள வாத்து உயிர் பிழைத்தது. நாம் இந்த உலகில் வாழ எப்படி இருக்க வேண்டும்? பயனுள்ளவர்களாக இருக்கவேண்டுமா, பயனற்றவர்களாக இருக்க வேண்டுமா?

எப்போது பயனுள்ளவர்களாக இருக்க வேண்டும், எப்போது பயன் இல்லாதவர்களாக இருக்க வேண்டும் என்பதில்தான் வாழ்வின் சூட்சுமம் அடங்கியிருக்கிறது.

இதைத் தெரிந்துகொள்வதில்தான் வாழ்வின் வெற்றி ரகசியம் அடங்கியிருக்கிறது.

****

டாவோ 'காலி படகு' என்னும் 'வெற்றுப் படகு' பற்றிய தத்துவத்தை முன்வைக்கிறது. நாம் ஒரு படகில் நதி ஒன்றில் பயணித்துக்கொண்டிருக்கிறோம். அப்போது, நம்முடைய படகின் மீது இன்னொரு படகு மோதுகிறது.

அந்தப் படகில் யாராவது இருந்தால், நமக்கு அந்தப் படகோட்டியின் மீது கோபம் வரும். அந்தப் படகில் எவரும் இல்லாவிட்டால், நமக்கு கோபம் வருவதில்லை.

நம்மை யாராவது கோபப்படுத்தவோ, துன்பப்படுத்தவோ, அவமானப்படுத்தவோ நினைத்தால் அவர்களை வெற்றுப்படகாக எண்ணி ஒதுக்கிவிட வேண்டும்.

அப்படிப்பட்ட வேளைகளில் உணர்ச்சி வசப்படாமல், ஆற்றலைச் செலவிடாமல், ஆக்கபூர்வமான வழியில் வாழ்க்கையைச் செலவிடலாம் என்பதே வெற்றுப்படகின் தத்துவம்.

***

Guru
Guru

இப்படியாக, 'டாவோ'வில் தத்துவ முத்துகள் கொட்டிக் கிடக்கின்றன.

2,600 ஆண்டுகளுக்கு முன்பு சொல்லப்பட்ட இந்த தத்துவங்கள் இன்றும் நம் வாழ்வியலோடு மிகவும் பொருந்திப்போகின்றன.

சமயத்தில் வெற்றுப் படகாக இருக்க வேண்டும். சமயத்தில் பயனில்லாத மரமாக இருக்க வேண்டும். வளைக்க முடிந்ததை உடைக்க முடியாது என்பதற்கேற்ப எல்லா நேரமும் நிமிர்ந்து நிற்காமல், வளைந்துகொடுத்து நம் இருப்பைக் காப்பாற்றிக் கொண்டு, நாணலைப் போல உலகுக்குத் தென்றலை வழங்க வேண்டும்.

டாவோ, உலகியல் ரீதியான வெற்றியை முன்னெடுக்கவில்லை. ஆன்மிக ரீதியான முழக்கத்தை முன்னெடுக்கிறது.

புற நிகழ்வுகளுக்காகத் தங்களை நிரூபிக்க முயலாமல், தங்களைத் தாங்களே அறிந்துகொள்வதில் முற்பட வேண்டும் என்கிறது டாவோ.

``கிச்சன் ஒரு ரொமான்டிக் ப்ளேஸ்... லாக்டௌனில் புதுக்கோட்டை முட்டைமசால் செய்கிறேன்!''- கோபிநாத்

பெருமைக்காகவும் புகழுக்காகவும் ஆசைப்படாமல், தன் உண்மையான சுயத்தை உணர்ந்தால்தான் சுயமுன்னேற்றத்தின் முதல் படியிலேயே ஒருவர் காலடி எடுத்துவைக்க முடியும். தன்னை அறியாமல் ஒருவரால் உலகை வெல்வது கடினம்.

கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் லாக்டௌன் நாள்களைத் தன்னை அறிதலுக்கு ஒவ்வொருவரும் பயன்படுத்தலாம்'' என்கிறார் இறையன்பு ஐஏஎஸ்.

அடுத்த கட்டுரைக்கு