Published:Updated:

`ஃபேமிலி ரூல்ஸ்' உருவாக்க வேண்டியது அவசியமா? பாய்ஸ், கேர்ள்ஸ், பேரன்ட்ஸ் - 3

Parenting (Representational Image)

சட்டதிட்டங்கள் இருப்பது என்பது சுதந்திரத்தைப் பறிப்பது என்பது ஆகாது. குடும்ப உறுப்பினர்களின் ஒழுக்கத்தை நெறிப்படுத்தவும், விதிகளை மீறாமல் எல்லோரும் கட்டுப்பாடாக வாழவும் அந்த விதிமுறைகள் நிச்சயம் வழிகாட்டும்.

`ஃபேமிலி ரூல்ஸ்' உருவாக்க வேண்டியது அவசியமா? பாய்ஸ், கேர்ள்ஸ், பேரன்ட்ஸ் - 3

சட்டதிட்டங்கள் இருப்பது என்பது சுதந்திரத்தைப் பறிப்பது என்பது ஆகாது. குடும்ப உறுப்பினர்களின் ஒழுக்கத்தை நெறிப்படுத்தவும், விதிகளை மீறாமல் எல்லோரும் கட்டுப்பாடாக வாழவும் அந்த விதிமுறைகள் நிச்சயம் வழிகாட்டும்.

Published:Updated:
Parenting (Representational Image)

சென்னையைச் சேர்ந்த மருத்துவரும் உளவியல் ஆலோசகருமான ஷர்மிளாவும் அவரின் டீன் ஏஜ் மகள் ஆஷ்லியும் `பேரன்ட்டீனிங்' என்ற பெயரில் பெற்றோர்களுக்கும் பதின்பருவ பிள்ளைகளுக்கும் விழிப்புணர்வு பயிற்சி வகுப்புகள் எடுப்பவர்கள். இதுவரை பத்தாயிரத்துக்கும் மேலான குடும்பங்களில் மாற்றங்களை நிகழ்த்திக் காட்டியிருப்பவர்கள். பிள்ளைகளைக் குறைசொல்லும் பெற்றோர்களுக்கு தன் வயதினரின் குரலாக ஆஷ்லியும், பதின்பருவத்தினரிடம் பெற்றோர்கள் உணரும் பிரச்னைகளை, எதிர்பார்க்கும் மாற்றங்களை பெற்றோர் சமூகத்துக் குரலாக ஷர்மிளாவும் பகிர்ந்துகொண்ட தகவல்கள் அவள் விகடன் இதழில், 13 அத்தியாயங்களில் வெளிவந்திருக்கின்றன. பெற்றோருக்கும் டீன் ஏஜ் பிள்ளைகளுக்குமான உறவுச்சிக்கல் பற்றி பகிர இன்னும் ஏராளமான விஷயங்கள் இருப்பதால் விகடன்.காமில் ஒவ்வொரு புதன்கிழமையும் பேசுகிறார்கள் டாக்டர் ஷர்மிளாவும் அவரின் மகள் ஆஷ்லியும்.

ஆஷ்லி - ஷர்மிளா
ஆஷ்லி - ஷர்மிளா

டாக்டர் ஷர்மிளா

கொஞ்சம் விநோதமான கற்பனைதான், ஆனாலும் முயற்சிதான் செய்து பார்ப்போமே...

ஒரு நாடு... அங்கே ஆள்வதற்கு அரசாங்கம் இல்லை, விதிப்பதற்கு சட்டங்கள் இல்லை, எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை, நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றால் எப்படி இருக்கும்? கொஞ்சம் கற்பனை செய்து பாருங்களேன்...

முதலில் `அடடா என்ன ஆனந்தமான வாழ்க்கை... கேள்வி கேட்க யாரும் இல்லை... சட்டங்களும் விதிகளும் இல்லை... யாரும் யாரையும் கட்டுப்படுத்த முடியாது... இப்படி ஒரு சுதந்திரமான வாழ்க்கை எவ்வளவு பேரானந்தமாக இருக்கும்' என்றுதானே நினைப்பீர்கள்? ஆனால், யதார்த்தம் அப்படி இருக்காது என்பதை வெகு விரைவில் உணர்ந்துவிடுவீர்கள். எந்தச் சட்டதிட்டங்களும் இல்லாத, கட்டுப்பாடுகள் இல்லாத அந்த வாழ்க்கை சுதந்திரமாக இருக்காது. மாறாக பிரச்னைகளை, சவால்களை அதிகப்படுத்தும். அந்த நாட்டு மக்களில் யாருமே நிம்மதியாக இருக்க வாய்ப்பில்லை. இதே விதிமுறைதான் குடும்பங்களுக்கும் பொருந்தும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கொஞ்சம் யோசித்துப் பார்ப்போமா... ஒரு குடும்பத்தில் எந்த விதிமுறைகளும் இல்லை, யாரும் யாரையும் கட்டுப்படுத்த மாட்டார்கள், யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் நடந்துகொள்ளலாம் என்ற நிலை இருந்தால் அந்தக் குடும்பத்தில் ஒழுக்கம் இருக்குமா? ஒவ்வொரு குடும்பத்துக்கெனவும் குறிப்பிட்ட விதிமுறைகள், கட்டுப்பாடுகள், சட்டதிட்டங்கள் இருப்பது என்பது சுதந்திரத்தைப் பறிப்பது என்பது ஆகாது. குடும்ப உறுப்பினர்களின் ஒழுக்கத்தை நெறிப்படுத்தவும், விதிகளை மீறாமல் எல்லோரும் கட்டுப்பாடாக வாழவும் அந்த விதிமுறைகள் நிச்சயம் வழிகாட்டும்.

பொது இடங்களில் பயணம் செய்யும்போது போக்குவரத்து விதிகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்படுவது நம் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவது என்று ஆகுமா? அதை நமக்கும் நம்மைச் சுற்றியுள்ளவருக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ஒரு விஷயமாகத்தானே பார்க்கிறோம்? அது போன்றதுதான் குடும்பத்துக்கான விதிமுறைகளும் நெறிமுறைகளும்.

ஷர்மிளா, ஆஷ்லி
ஷர்மிளா, ஆஷ்லி

குடும்ப விதிகளை உருவாக்கும்போது நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை...

- நீங்கள் மிக முக்கியமான ஓர் ஆவணத்தை உருவாக்குவது போன்றது இது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

- உங்கள் குடும்பத்தின் மதிப்பீடுகள் மற்றும் எதிர்பார்ப்புகளை உள்ளடக்கிய வழிகாட்டுதல் தொகுப்பாக இது இருக்க வேண்டும். இதை உயிருள்ள ஓர் ஆவணமாகப் பாருங்கள்.

- அவ்வப்போது தேவைக்கேற்ப இதில் புதிய விதிமுறைகளைச் சேர்க்கலாம் அல்லது எல்லைகளை மாற்றி அமைக்கலாம்.

- இப்படி ஓர் ஆவணத்தை உருவாக்குவதற்கு முன் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைத்து நபர்களுடனும் அமர்ந்து மனம் திறந்து பேசுங்கள். உங்களுடைய எதிர்பார்ப்புகள், கனவுகள், இலக்குகள் போன்றவற்றை விவாதியுங்கள்.

- நீங்களும் உங்கள் குடும்ப உறுப்பினர்களும் எப்படி இருக்க ஆசைப்படுகிறீர்கள் என்பதை வெளிப்படையாகப் பேசுங்கள்.

- ஒருவர் மட்டுமே விதிமுறைகளை உருவாக்கும் உரிமையை எடுத்துக்கொள்ளாமல் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் அது குறித்து பேசவும் பங்களிக்கவும் வாய்ப்பளியுங்கள்.

- எல்லோருடைய வார்த்தைகளையும் கவனித்து அதற்கேற்ப இந்த ஆவணத்தை உருவாக்குங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விதிகளை உருவாக்கிய பிறகு...

உங்கள் குடும்பத்துக்கான நடத்தை நெறிமுறையை ஆவணப்படுத்துவதை உங்கள் குழந்தைகளுடனும் குடும்ப உறுப்பினர்களுடனும் சேர்ந்து ஒரு குழுச் செயல்பாடாக மாற்றுங்கள்.

நெறிமுறைகளில் என்னவெல்லாம் சேர்க்கப்பட வேண்டும் என மற்றவர்கள் நினைக்கிறார்கள் என்பதையும் கேளுங்கள்.

பெற்றோராக உங்களுடைய எதிர்பார்ப்புகள், பொறுப்புகள், கடமைகள் ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் அந்த நெறிமுறைகள் இருக்க வேண்டும் என்பதையும் குழந்தைகளுக்குப் புரிய வையுங்கள். அதே நேரத்தில் அந்த விஷயங்களில் உங்கள் குழந்தைகள் ஏதேனும் அசௌகர்யத்தை உணர்ந்தால் அவற்றைக் காதுகொடுத்துக் கேளுங்கள்.

குடும்பத்துக்கு என இப்படி நெறிமுறைகளை வகுப்பதன் மூலம் குடும்ப மதிப்பீடுகளுக்கு ஒவ்வாத அல்லது எதிரான செயல்களை யாரேனும் செய்யும்போது இது நம் குடும்ப நெறிமுறைகளுக்கு எதிரானது, இங்கே அதற்கு அனுமதி இல்லை என்பதை எடுத்துச் சொல்வதும் எளிதாகும்.

ஷர்மிளா - ஆஷ்லி
ஷர்மிளா - ஆஷ்லி

ஆஷ்லி

``குடும்ப விதிகள் பற்றி அம்மா சொன்னபோது முதலில் எனக்கு ஆச்சர்யமாகவும் கொஞ்சம் அதிர்ச்சியாகவும் இருந்தது. `வீட்டுக்குள்யேயே விதியா... அதெல்லாம் இம்சை' எனக் கோபப்பட்டேன். ஆனால், அம்மா அதன் முக்கியத்துவத்தை எனக்குப் பொறுமையாக விளக்கினார். குடும்பத்துக்கான விதி என்றால், அது குழந்தைகளை `அதைச் செய்யாதே, இதைச் செய்யாதே' எனக் கட்டுப்படுத்துகிற விஷயமல்ல. ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களுக்கும் பொருந்துகிற பொதுவான விதிகள் என்றார். `நம்ம வீட்டுல உள்ளவங்க வெளியில போனாங்கன்னா, இத்தனை மணிக்குள்ள வீடு திரும்பணும்'னு ஒரு ரூல் இருக்கில்ல... அது உனக்கு மட்டுமா சொல்லப்படுது... வீட்டுல உள்ள எல்லாருக்கும்தானே... அதுமாதிரிதான் மத்த விதிகளும்' என்று உதாரணத்துடன் சொன்னதும் புரிந்தது. இப்போதெல்லாம் இதைச் செய்தால் விளைவு இப்படி இருக்கும் எனத் தெரிந்து அதைச் செய்வதா, வேண்டாமா என யோசித்து முடிவெடுக்கிறேன்.

``நம்ம குடும்பத்துக்கு இதெல்லாம் சரியா வராது'ன்னு தெரியாதா என்று தொடங்கி தொடரும் வாக்குவாதங்கள் இப்போதெல்லாம் எங்களுக்குள் வருவதே இல்லை.''

- ஹேப்பி பேரன்ட்டீனிங்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism