கால மாற்றத்துக்குத் தகுந்தாற்போல் ஆண் - பெண் உறவு முறையிலும் புதிய வடிவங்கள் உருவாகின்றன. ஊரறிய, சமூக ஏற்போடு திருமணம் முடித்துதான் ஒன்றாக வாழ வேண்டும் என்றில்லாமல், காதல் இணையர் மணமுடிக்காமலேயே சேர்ந்து வாழ்வதுதான் லிவிங் டுகெதர் உறவு முறை. பெருநகர சூழலில் இந்த உறவு முறைக்குள் செல்லும் சாத்தியங்கள் எளிதாக இருக்கின்றன.

இவ்வுறவுக்குள் செல்கிறவர்கள், சமூக ஏற்பைப் பொருட்படுத்துவதில்லை. தான் வாழ விரும்புகிறவருடன் வாழ்வதற்கு திருமணம் அவசியமில்லை என்று நினைக்கின்றனர். மணமுடிக்கும் வரையிலும் இந்த உறவில் இருப்போம் என நினைக்கிறவர்களும் உண்டு. கலாசார பார்வைக்கு அப்பாற்பட்டு லிவிங் டுகெதர் உறவு முறை வெற்றிகரமானதா என்பதை இந்த அத்தியாயத்தில் உரையாடுவோம்…
``இந்த உறவு முறையில் சாதகங்களும் இருக்கின்றன…பாதகங்களும் இருக்கின்றன” என்கிறார் உளவியல் மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்...
``எதற்காக இந்த லிவிங் டுகெதர் உறவு முறைக்குள் செல்கிறார்கள் என்பது முக்கியமான கேள்வி. எல்லோரும் இதன் விளைவுகளை உணர்ந்துதான் செல்கிறார்கள் எனச் சொல்ல முடியாது. தெளிவுடன் இவ்வுறவுக்குள் செல்கிறவர்கள் இருக்கிறார்கள். டிரெண்டுக்காகவும், இதுதான் மாடர்ன் ரிலேஷன்ஷிப் என நினைத்துக்கொண்டு செல்கிறவர்களும் உண்டு.
காதல் உறவில் இடைவெளி இருக்கிறது. அதில் ஒருவரது முழுமையான குணத்தைக் கண்டறிய இயலாது. முகமூடிகூட அணிந்துகொண்டு நடிக்க முடியும். லிவின் உறவுக்குச் செல்கையில் முடிந்தளவு அவர்களின் குணாதிசயத்தைக் கண்டறிய இயலும் என்பதே இந்த உறவின் சாதகமான அம்சம். அந்தக் குணாதிசயம் கொண்டவர்களோடு வாழ்க்கை முழுவதும் பயணிக்க முடியும் என்றால் அதை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லலாம்.
இதன் பாதகம் என்னவென்றால், இந்த உறவில் சட்டம் மற்றும் பொருளாதார ரீதியான பாதுகாப்பு கிடையாது. எளிதில் இந்த உறவைத் துண்டித்துவிட்டுச் செல்ல முடியும். திருமண உறவில் பிரச்னை என்று வந்தால் குடும்ப அமைப்பு அதைச் சரி செய்ய முயலும். சின்னச் சின்ன பிரச்னைகள் இதன் வழியே சரிப்படுத்தப்படும். குழந்தைகள் பிறந்த பிறகு அவர்கள் மீதான பொறுப்புணர்வும் அந்த உறவைத் தக்க வைக்கும்.
லிவின் உறவில் சின்னச் சின்ன பிரச்னைகளுக்குக்கூட உறவைத் துண்டிக்கிற நிலை ஏற்படலாம். இதனால் இணையர் பிரிவின் துயரை அனுபவிக்கக்கூடும். கமிட்மென்ட் இல்லாத உறவுமுறையின் சிக்கல் இது. இந்த உறவுக்குள் செல்கிறவர்கள் இது சார்ந்த தெளிவோடு செல்வது சிறந்தது” என்கிறார் ஸ்வாதிக் சங்கரலிங்கம்.
``லிவிங் டுகெதர் தோல்விகரமான ஓர் உறவுமுறை” என்கிறார் மானுடவியலாளர் மோகன் நூகுலா…
``மேற்கத்திய நாடுகளில் அதிகம் காணப்படும் இந்த லிவிங் டுகெதர் கலாசாரம், இந்தியாவில் சமீப காலமாகத்தான் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், இந்தியா போன்ற நாடுகளில் இதுதொடர்பான ஆய்வுகள் குறைவாகவே உள்ளன. மேற்கத்திய நாடுகளில் திருமண உறவுகள் நீடிப்பதைப் போல், ஏன் லிவிங் டுகெதர் வாழ்க்கை நிலைப்பதில்லை எனப் பல்வேறு சமூகவியல் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
அந்த ஆய்வுகளில் லிவிங் டுகெதரில் வாழ்பவர்கள் ஒன்று திருமண உறவுக்குள் நுழைகிறார்கள் அல்லது திருமண உறவையே புறக்கணிக்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது. இந்த லிவின் உறவுக்குள் வரும் பலர் அதை ஒரு சோதனை முயற்சி என்ற பெயரில் செய்கிறார்கள். ஆனால், அவர்களுமே கூட நீண்டகாலம் அந்த உறவில் நீடிப்பதில்லை.
Also Read
ஏன் இந்த உறவுகள் நீடிப்பதில்லை என்பதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் மிக முக்கியமாக இந்த உறவை நீடிக்க வைக்கத் தேவையான தன்மைகள் இல்லை. திருமண உறவை தொடர வைக்கும் காரணமாகக் குழந்தைகள் இருக்கிறார்கள். அவ்வாறான எந்த இணைப்பும் இல்லாமல் இருப்பதாலேயே லிவின் உறவுகள் விரைவிலேயே முறிந்துவிடுகின்றன.
லிவிங் டுகெதரில் உள்ள மற்றொரு சிக்கல் அதில் ரொமான்ஸ் குறைவாக இருப்பது. அது வேறொன்றை ரொமான்ஸ் என்ற யூகித்துக்கொள்கிறது. இரண்டு பேருக்கு இடையில் ரொமான்ஸ் இல்லாதபோது அந்த உறவுக்குள் ஏன் செல்ல வேண்டும் என்ற கேள்வி இங்கு முக்கியமாகிறது.
ரொமான்ஸ் இல்லாமல் இருவரும் ஒரு புரிந்துணர்வுக்குள் வந்து, கருத்து ஒத்துப்போதல் என்ற அடிப்படையில் அந்த உறவைத் தொடர்ந்தால் அது சிறிது காலம் வரை நீடிக்கலாம். ஆனால், நீண்ட காலம் நீடிக்கும் வாய்ப்புகள் இல்லை என்பதே நிதர்சனம். அப்படி நட்பும் தெளிவும் இருந்தால் போதும் என்றால், அதற்கு லிவிங் டுகெதர் என்ற உறவே தேவையில்லை.
இயற்கையாக குடும்பம் உறவுகளுக்குள் இருக்கும் பிணைப்பைப்போல், ஆண் - பெண் உறவு இருப்பதில்லை. அப்படி ஆண் - பெண் உறவை நீடிக்க வைக்க இரண்டு விஷயங்கள் தேவைப்படுகின்றன. ஒன்று குழந்தை, இரண்டாவது செக்ஸ். செக்ஸ் ஒரு கட்டத்தில் சலிப்பைத் தரலாம். ஆனால், குழந்தைகள் தம்பதியரை இணைப்பவர்களாக இருக்கிறார்கள். ரத்த உறவே மனிதர்களுக்குத் தேவையாக இருக்கிறது என்கிற உணர்வுதான் திருமண உறவை நீடிக்க வைக்கிறது. லிவிங் டுகெதர் உறவு எப்போதும் திருமண உறவுடன் ஒப்பிட்டு பார்த்துக்கொள்கிறது. இதனால் லிவிங் டுகெதர் பெரும்பாலும் தோல்வியையே சந்திக்கிறது. திருமணத்தைப் பார்த்து அச்சப்படுபவர்களுக்கான ஒரு புகலிடமாக இருக்கிறதே தவிர, மற்றபடி உலக அளவில் இது தோல்வியடைந்த உறவு முறை. திருமண அமைப்பின் உரிமைகளும் இல்லாமல், நட்புக்குண்டான சுதந்திரமும் இல்லாமல் லிவின் உறவு திணறுகிறது. ஆகவேதான் அவை தொடர்ந்து தோல்வியடைந்து வருகின்றன. எந்த விதத்திலும் திருமண உறவுக்கு மாற்றாக லிவின் உறவை வைக்க முடியாது.
கிருபாகரன், ஐ.டி ஊழியர்: திருமணமோ, லிவிங் டுகெதரோ எதுவா இருந்தாலும் அதைப் பத்தியும், பார்ட்னர் பத்தியும் தெளிவு இருக்கணும். அது இல்லாம போறப்பதான் இந்த உறவுமே தோல்வியடையுது. ஆனா, திருமண உறவைத் தக்க வைக்க குடும்பம், சொந்த பந்தம், நண்பர்கள்னு பலர் இருக்காங்க. லிவிங் டுகெதரில் அந்த வாய்ப்பு குறைவாத்தான் இருக்கு. ஏன்னா பலர் அந்த உறவில் இருக்கிறதை குறுகிய வட்டத்தைக் கடந்து நண்பர்களுக்கே கூட சொல்றதில்லை.

அதேநேரம், ஒருத்தர் மேல ஒருத்தர் வைக்குற அன்பும், பொசசிவ்னெஸ்ஸும் இந்த உறவில் கடும் விவாதமா இருக்கு. இதனால அந்த உறவு பெரும் சிக்கலாகிடுது. லிவிங் டுகெதர் உறவு நீடிக்கணும்னா அதை வெளிப்படையாக அறிவிக்கணும். இரண்டு பேருக்கு இடையில் வரும் அனைத்து பிரச்னைகளையும் சமாளிக்கக் கத்துக்கணும். அப்படி சமாளிக்கும்போது, அந்த உறவைக் காப்பாத்தலாம். என்ன இருந்தாலும் இது நீடிச்சிருக்கிற உறவு கிடையாது.
ஜெனிபர், ஊடகவியலாளர்: இப்ப இருக்க தலைமுறை மத்தியில் இந்தக் கலாசாரம் அதிகமாயிட்டு இருக்கு. லிவிங் டுகெதரை பொறுத்தவரை பாசிட்டிவ், நெகட்டிவ் ரெண்டும் இருக்கு. லிவின் உறவுக்குள்ள போறோம்னா நாம காதலிக்கிறவங்க, எந்தளவுக்கு நம்பிக்கைக்கு உரியவங்களா நடந்துக்குறாங்கங்கிறது முக்கியம். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் அந்த உறவுக்குள் நாம போகலாம். அதில் இருக்கும் நல்லது என்னன்னா முன்னாடியே நமக்கு அவங்களை பத்தின புரிந்துணர்வு இருக்கும், அவங்களைப் பத்தி தெரிஞ்சுக்கலாம்.

லிவின்ல நமக்கு அவங்களோட ப்ளஸ், மைனஸ் எல்லாம் தெரிஞ்சதுக்குப் பிறகு ஒத்துப்போனால் அந்த உறவை திருமணம் வரை கொண்டு போகலாம். ஒத்துப்போகலைன்னா அந்த நிமிஷத்திலேயே பிரிஞ்சு போயிடலாம். கல்யாணத்துக்கு அப்புறம்னா சட்டம், சமூகம் எல்லாத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். என்னைப் பொறுத்தவரை லிவிங் டுகெதர் வாழ்க்கையை பெஸ்ட்டாதான் பார்க்குறேன்.