Published:Updated:

காதலிலும் திருமணத்திலும் ஃபீலிங் ஒண்ணுதானே... ஆனா ஏன் இந்தப் பாகுபாடு? #LetsSpeakRelationship

ஆ.சாந்தி கணேஷ்

''காதலில் தாம்பத்தியம் என்கிற பகிர்தலோ, குழந்தை என்கிற புது உறவோ இல்லாத காரணத்தால்தான், 'ஒத்துவராத காதலை உதறிவிடலாமே' என்று உலகம் சொல்கிறது.''

திருமணம்
திருமணம்

காதலில் ஒருவர் அடிக்கடி பிரச்னைகளைச் சந்தித்து வந்தால் பிரிந்து விடுவது நல்லது என்று சுலபமாகச் சொல்லிவிடுகிறோம். ஆனால், தி௫மண உறவில் பிரிந்து விடுவது நல்லது என்று அவ்வளவு எளிதாகக் ௯றுவது இல்லை. ஆனால், காதலிலும் திருமணத்திலும் ஈடுபாடு ஒன்றுதான். ஏன் இந்தப் பாகுபாடு? Uravugal@vikatan.com-க்கு விகடன் வாசகி தென்னரசி இந்தக் கேள்வியை அனுப்பியிருந்தார். இதற்கான பதிலை உளவியல் ஆலோசகர் லக்ஷ்மி பாய் அவர்களிடம் கேட்டோம்.

குடும்பம்
குடும்பம்

``திருமணத்துக்கு நம் சமூகம் அந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது என்பதுதான் இதற்குக் காரணம். அந்த வகையில் இந்தப் பாகுபாட்டின் பின்னணியில் இருப்பது மிகவும் பாசிட்டிவான விஷயம்தான் தென்னரசி. நியாயமாகப் பார்த்தால், நாம் எல்லோருமே இதற்கு மகிழ்ச்சிதான் அடைய வேண்டும்.

ஒரு காதலில் அடிக்கடி பிரச்னை வருகிறது என்றால், அது பின்னாளில் திருமணத்தில் இணைந்தால் அந்த உறவு நெடுநாள் நீடிக்காது என்ற காரணத்தில்தான், 'பிரிந்து விடுவது நல்லது' என்று மற்றவர்கள் அறிவுரை செய்கிறார்கள். தவிர, காதலில் தாம்பத்தியம் என்கிற பகிர்தலோ, குழந்தை என்கிற புது உறவோ இல்லாத காரணத்தால்தான், 'ஒத்துவராத காதலை உதறிவிடலாமே' என்று உலகம் சொல்கிறது.

ஒரு திருமணம் தோல்வியடைந்து விவாகரத்து வரைச் செல்லும்போதுகூட, அதை எப்படியாவது சரி செய்துவிட வேண்டும் என்றுதான் வழக்கறிஞர்கள் எங்களைப் போன்ற உளவியல் ஆலோசகர்களிடம் அனுப்புகிறார்கள். அந்தளவுக்கு நாமெல்லாருமே திருமண உறவுக்கு முக்கியத்துவம் தருகிறோம்.

ஒரு காதலில் இரண்டு பேர், இதுவே ஒரு திருமணத்தில் இரண்டு குடும்பங்கள் இணைகின்றன. ஒருவேளை அந்தத் தம்பதியருக்கு குழந்தைகளும் இருந்து, அந்தத் தம்பதியர் பிரிந்தால், அடுத்த தலைமுறையும் சேர்ந்தல்லவா பாதிக்கப்படும் தென்னரசி?

குடும்பம்
குடும்பம்

காதலிலும் திருமணத்திலும் ஈடுபாடு ஒன்றுதானே என்று கேட்டிருக்கிறீர்கள். திருமணம் என்கிற அமைப்பில் இருக்கிற கமிட்மென்ட், இந்தக் கால காதலில் மட்டுமல்ல, எந்தக் காலக் காதலிலுமே இருந்ததில்லையே... (சிலர் விதிவிலக்காக இருக்கலாம்) அப்படியிருந்தால் நீங்கள் சொல்வது சரியாக இருக்கும்.

அடுத்ததாக, ஒரு காதல் போனால் இன்னொரு நல்ல காதல் தாராளமாகக் கிடைக்கும். ஆனால், ஒரு திருமணம் ரத்தாகும்போது, சம்பந்தப்பட்டவர்களுக்கு அடுத்த நல்ல வாழ்க்கைக்கு எத்தனை சதவிகிதம் வாய்ப்பிருக்கிறது; அப்படியே அமைந்தாலும் குழந்தைகளுடன் சேர்ந்து ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிற அளவுக்கு இங்கு எத்தனை ஆண்களுக்கு பரந்த மனப்பான்மை இருக்கிறது? இவற்றையெல்லாம் மீறி, ஒரு பெண்ணுக்கு மறுமணம் நடந்தாலும், வளர்ப்பு அப்பா அந்தக் குழந்தையை அன்பாகத்தான் நடத்துவார் என்பதற்கு என்ன உறுதி இருக்கிறது. இத்தனை விஷயங்களையும் யோசித்துதான் நம் சமூகம், காதலைவிட திருமணத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது; ஈடுபாடு காட்டுகிறது.''

#LetsSpeakRelationship
#LetsSpeakRelationship