Published:Updated:

``பப்பி லவ் ஆபத்தானதா?’’- பெற்றோர்களின் கவனத்துக்கு

ஒருவருக்கு, தன் மீது ஒரு குழந்தை அதீத ஆர்வம் காட்டுகிறது என்று தெரியவரும் பட்சத்தில், அவர் அக்குழந்தையைப் பக்குவத்துடன் கையாள வேண்டும். 'நீ பெரியவளானதும்/பெரியவனானதும் என்னைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்' போன்ற பேச்சுகளைத் தவிர்க்க வேண்டும்.

'பப்பி லவ்' - இந்த வார்த்தையைப் படித்தவுடன் உங்கள் கண் மட்டும்தான் கட்டுரையில் இருக்கும். மனம், உங்களுக்கு பப்பி லவ் வந்த பள்ளிக்காலத்தை நோக்கி நாலு கால் பாய்ச்சலில் ஓடிக்கொண்டிருக்கும். 'லவ்' என்றால் என்னவென்றே தெரியாத வயதில், உங்கள் பக்கத்து வீட்டு அக்கா மீதோ, வகுப்புத் தோழன் மீதோ, வகுப்புத் தோழி மீதோ, பாசமாக இருக்கிற கிளாஸ் டீச்சர் மீதோகூட இந்த பப்பி லவ் ஏற்பட்டிருக்கலாம்.

பப்பி லவ்
பப்பி லவ்

நாம் தெருவில் நடந்து செல்லும்போது அங்குள்ள ஓர் அழகான நாய்க்குட்டி நம் பின்னாடியே வர ஆரம்பித்துவிடும். கொஞ்ச நேரத்தில் இன்னொருவர் அந்தத் தெருவில் வந்தால் அவர் பின்னால் போக ஆரம்பித்துவிடும். பப்பி லவ்வும் இப்படித்தான். காதல் என்ற வார்த்தையின் கனமும் மதிப்பும் தெரிகிற வரையில், தன் மனதுக்குப் பிடித்தவரின் பின்னால் எல்லாம் போகும். இதில் ஆபத்தோ, அடிக்கடி மாறிக்கொண்டே இருந்தாலும் அபத்தமோ இருக்காது. ஏனென்றால், இது வரையறைகளுக்கு அப்பாற்பட்டது.

'இது விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதாக இருக்கும்போது ஏன் இந்தக் கட்டுரை?' என்று நீங்கள் கேட்கலாம். காரணம் இருக்கிறது!

பப்பி லவ்
பப்பி லவ்

சமீபத்தில் கேள்விப்பட்ட ஒரு சம்பவம் இந்தக் கட்டுரையை எழுதுவதற்கான அவசியத்தை ஏற்படுத்தியது. சென்னையில் ஒரு தம்பதி, ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்துள்ளனர். அந்தக் குழந்தை பள்ளியில் தன்னுடன் படித்த சக மாணவனுக்கு முத்தம் கொடுத்துவிட்டாள் என்ற காரணத்தால், அவளை அழைத்து வந்த ஆசிரமத்திலேயே திருப்பி விட்டுவிட்டு வந்துவிட்டனர். அறிவுரை சொல்லித் திருத்த வேண்டிய பெற்றோரே பிள்ளையைப் புரிந்துகொள்ளாமல் இவ்வளவு கொடுமையான தண்டனை அளித்தது, துயரம். அதற்காக, இது கண்டிக்க அவசியமில்லாத விஷயம் என்று சொல்லவில்லை. தண்டனைக்குப் பதிலாக, இங்கே இருந்திருக்க வேண்டிவை கண்காணிப்பும் உரையாடலும்.

காதலில் வயிற்றில் பறக்கும் பட்டாம்பூச்சியும், துயரத்தில் வயிற்றைச் சுழற்றும் பட்டாம்பூச்சியும் ஒன்றே... எப்படி?!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரெண்டாம் கிளாஸ், மூணாம் கிளாஸில் சக வகுப்புத் தோழன்/தோழியைப் பிடித்துப்போகும் பப்பி லவ், நினைத்துச் சிரிப்பதற்கான நினைவுகளை மட்டுமே தரக்கூடியது. ஆனால் இதுவே, ஒரு குழந்தை வயதில் தன்னைவிட மூத்தவரிடம் கொள்ளும் அன்பு, கொஞ்சம் கவனம் கொடுக்க வேண்டியது. காலங்காலமாக சினிமாக்கள், டீச்சர், பக்கத்து வீட்டு அக்கா என ஒரு சிறுவன் தன்னைவிடப் பெரிய பெண் மீது ஈர்ப்பு கொள்வதைக் காட்டுகின்றன.

பப்பி லவ்
பப்பி லவ்

அதுவே, ஒரு சிறுமி வயது அதிகமான ஓர் ஆண் மீது கொள்ளும் ஈர்ப்பைக் காட்டுவதில்லை. பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் பெருகிக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், தங்கள் குழந்தைகளின் பப்பி லவ்வை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற புரிந்துணர்வு பெற்றோர்களுக்கு அவசியமாகிறது.

``உறவுகளை வலுப்படுத்த எதிர்பார்ப்புகளைக் கட்டுக்குள் வைப்பது எப்படி?" - விரிவான வழிகாட்டி

இது பற்றி குழந்தை மனநல ஆலோசகர் கண்ணனிடம் பேசினோம்.

"சிறு வயதில் குழந்தைகளுக்குத் தன்னைவிட வயதில் அதிகமான எதிர்பாலினத்தவர் மீது ஈர்ப்பு வருவது இயற்கை. பெண் குழந்தைகளோடு ஒப்பிடுகையில் ஆண் குழந்தைகள் இதைச் சற்று அதிகமாக வெளிப்படுத்துவர். இதனால் பெரிய விளைவுகள் வருவது அரிதுதான் என்றாலும் குழந்தைகள் திசை மாற வாய்ப்புள்ளது.

குழந்தை மனநல ஆலோசகர் கண்ணன்
குழந்தை மனநல ஆலோசகர் கண்ணன்

குழந்தைகள் அதிகமாக அன்பை எதிர்பார்ப்பவர்கள். அந்த அன்பு பெற்றோரிடமிருந்து போதுமான அளவுக்குக் கிடைக்காத பட்சத்தில் அவர்களுடைய கவனம் வேறு யாரையாவது நோக்கித் திரும்பும். எது சரி, எது தவறு என்று பகுத்துப் பார்க்கத் தெரியாத வயதில் ஏற்படும் இந்த கவனச் சிதறலால் அவர்களின் வாழ்க்கையேகூட பாதிக்கப்படலாம்.

மேலும், நமக்குப் பரிச்சயமான விஷயங்களைப் பிறரிடமும் தேடுதல் இயல்பான ஒன்று. இதனால்தான் குழந்தைகளுக்கு தன் அம்மாவைப்போலவோ, அப்பாவைப்போலவோ உள்ளவர்களை அதிகம் பிடித்துப்போகிறது. ஆனால், தற்போதுள்ள சூழ்நிலையில் குழந்தைகள் பிறரிடம் கொள்ளும் ஈர்ப்பைப் பயன்படுத்தி அவர்கள் தவறாக வழிநடத்தப்படலாம் என்பதுதான், இயல்பாகக் கடக்க வேண்டிய பப்பி லவ் பற்றிப் பேச வேண்டியதன் அவசியத்தை ஏற்படுத்துகிறது.

பப்பி லவ்
பப்பி லவ்

இதற்கு ஒரே தீர்வு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீது கொள்ளும் கவனம்தான். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் மனம் விட்டுப் பேச வேண்டும். மூன்று வயதிலேயே குட் டச், பேட் டச் பற்றிச் சொல்லிக்கொடுக்க வேண்டும். 10 வயதுக்கு மேல், அவர்களுக்குப் புரியும் விதத்தில் ஹார்மோன் செயல்பாடுகள், உடல் வளர்சிதை மாற்றங்கள் போன்ற அடிப்படை பாலியல் கல்வியைக் கற்றுக்கொடுக்க வேண்டும். நம்மிடம் உள்ள பெரிய தவறு, எல்லாவற்றையும் மூடி மறைத்துப் பேசுவதுதான். இது பற்றி குழந்தைகளிடம் வெளிப்படையாகப் பேச பெற்றோர்கள் முன்வர வேண்டும்.

காதல் ஆன் த வே... இவையெல்லாம்தான் அறிகுறிகள்!#VikatanPhotoCards

சில குழந்தைகள் இருப்பார்கள். பப்பி லவ்வில் அளவுக்கு அதிகமான ஈர்ப்புடனும் பிடிவாதத்துடனும். இவர்களை அதிக கவனத்துடன் கையாள வேண்டும். அதற்கு, இவர்கள் அன்புகொண்டுள்ள சம்பந்தப்பட்ட நபரின் பங்களிப்பும் அவசியம். ஒருவருக்கு, தன் மீது ஒரு குழந்தை அதீத ஆர்வம் காட்டுகிறது என்று தெரியவரும் பட்சத்தில், அவர் அக்குழந்தையை பக்குவத்துடன் கையாள வேண்டும். 'நீ பெரியவளானதும்/பெரியவனானதும் என்னைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்' போன்ற பேச்சுகளைத் தவிர்க்க வேண்டும்.

பப்பி லவ்
பப்பி லவ்

மாறாக, 'நீ ஸ்கூல் முடிச்சு, காலேஜ் முடிக்கும்போது ஆன்ட்டி/அங்கிள் கிழவனாயிடுவேனாம்... நீ அழகா ப்ரின்ஸ்/ப்ரின்சஸ் மாதிரி இருப்பியாம்... அப்போ உனக்கு இன்னொரு ப்ரின்ஸ்/ப்ரின்சஸ்தான் பிடிக்குமாம்...' போன்ற, அவர்களின் எண்ணத்தைப் பக்குவப்படுத்தும் விதமான பேச்சுகளைப் பேச வேண்டும். சில குழந்தைகள் இதில் பிடிவாதமாக இருப்பார்கள். அவர்களுக்குப் பெற்றோர்களால் புரியவைக்க முடியாத நிலையில் மனநல ஆலோசகரிடம் அழைத்துச் செல்லலாம்.

மொத்தத்தில், எப்போதும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மீது அவர்களின் சுதந்திரத்தைப் பாதிக்காத அளவிற்கு ஒரு கண் வைத்துக்கொள்ள வேண்டும். இதற்குப் பெற்றோர்களும் தங்களைப் பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டும்" என்றார்.

பப்பி லவ்
பப்பி லவ்

பப்பி லவ் என்பது அழகான, இதமான ஒன்றுதான். நினைத்துப் பார்க்கும்போது அது நிகழ்கால, எதிர்காலக் காயங்களுக்கு மருந்தாக இருக்க வேண்டுமே தவிர அதுவே தழும்புகளைத் தந்ததாக இருந்துவிடக் கூடாது. ஆதலால் 'பப்பி லவ்' பற்றிய சரியான புரிந்துணர்வைக் குழந்தைகளிடம் எடுத்துச் செல்வோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு