Published:Updated:

``கல்யாணமா... ஆளை விடுங்கடா சாமி" ~ திருமணத்துக்கு எதிரான மனநிலை சரியானதா? |OPEN-ஆ பேசலாமா - 6

திருமணம் ( சித்திரிப்புப் படம் )

இளமைப்பருவத்தில் பாலுறவுக்கான தேடலும் தேவையும் இருக்கும். ஒரு வயதுக்குப் பிறகு பாலுறவின் மீதான ஆர்வம் வடிந்து உணர்வுப்பூர்வமான அணுக்கமே தேவையாக இருக்கும். அப்போது அவர்கள் தனிமையை உணர்வார்கள். அத்தனிமை அவர்களைப் பெருமளவு பாதிக்கும்.

``கல்யாணமா... ஆளை விடுங்கடா சாமி" ~ திருமணத்துக்கு எதிரான மனநிலை சரியானதா? |OPEN-ஆ பேசலாமா - 6

இளமைப்பருவத்தில் பாலுறவுக்கான தேடலும் தேவையும் இருக்கும். ஒரு வயதுக்குப் பிறகு பாலுறவின் மீதான ஆர்வம் வடிந்து உணர்வுப்பூர்வமான அணுக்கமே தேவையாக இருக்கும். அப்போது அவர்கள் தனிமையை உணர்வார்கள். அத்தனிமை அவர்களைப் பெருமளவு பாதிக்கும்.

Published:Updated:
திருமணம் ( சித்திரிப்புப் படம் )

தற்காலத்தைய இளைஞர்களிடம் திருமணம் என்கிற அமைப்பின் மீதான நம்பிக்கை வெகுவாகக் குறைந்திருப்பதைக் காண முடிகிறது. ஒட்டுமொத்தமாக அனைவரையும் சொல்லிவிட முடியாது என்றாலும், கணிசமான அளவில் திருமணத்துக்கு எதிரான மனநிலையைக் கொண்டிருக்கின்றனர். திருமணம் என்கிற அமைப்பே தங்களது சுதந்திரத்துக்கு எதிரானது என்று உறுதியாக நம்புகிறார்கள். மணம் முடித்தவர்கள் தங்களது சுதந்திரம் பறிபோய்விட்டதாகப் பொதுவெளியில் புலம்புவதுகூட இப்படியான கருத்து வலுப்பெறுவதற்குக் காரணமாகிறது. இதில் உச்சபட்சமாக திருமணமே செய்து கொள்ளப்போவதில்லை என்று தீர்மானமாகச் சொல்பவர்கள் இருக்கிறார்கள்.

பாலுறவு மற்றும் இன்ன பிற தேவைகளுக்கென ஓர் இணையரை சேர்த்துக் கொண்டு வாழ்வோமே தவிர திருமணம் செய்து கொள்ள மாட்டோம் என்று திரைப்பிரபலங்கள் வெளிப்படையாகவே கூறுவதைக் கேட்டிருக்கிறோம். திருமண அமைப்புக்கு எதிரான இந்த மனநிலை எதனால் உருவாகிறது மற்றும் இதன் விளைவுகள் என்ன என்பது குறித்து இந்த அத்தியாயத்தில் உரையாடுவோம்...

``தன் உணர்வுகள் மற்றும் விருப்பத்துக்கு மதிப்பளிக்கும் நபரை மணந்துகொண்டு ஒத்திசைவோடு வாழ்வதுதான் சரியே தவிர திருமண அமைப்புக்கு எதிரான மனநிலை சரியானதல்ல" என்கிறார் உளவியல் மருத்துவர் ஸ்வாதிக் சங்கரலிங்கம்.

ஸ்வாதிக் சங்கரலிங்கம்.
ஸ்வாதிக் சங்கரலிங்கம்.

``திருமணம் செய்து கொள்ள மறுப்பது அவரவரது தனிப்பட்ட விருப்பம் என்கிற அடிப்படையில் அதனை நாம் கேள்வி கேட்க முடியாது. பொதுப்படையாக திருமண அமைப்புக்கு எதிரான கருத்தை முன் வைக்கிறார்கள் என்றால் அது தவறான புரிதல் என்றுதான் சொல்ல வேண்டும். திருமணம் என்பது பன்னெடுங்காலமாக நம் சமூகக் கட்டமைப்பின் அங்கமாக இருக்கிறது. என் வாழ்க்கையை இவருடன்தான் பங்கிட்டுக்கொள்ளப் போகிறேன் என்பதை பொதுவெளியில் அறிவிக்கக்கூடிய தீர்மானம் அது. ஆண் - பெண் உறவு இன்றியமையாத சூழலில் திருமண அமைப்புதான் அதனை நீடித்து நிற்ககக்கூடிய உறவாக்குகிறது. அதாவது சொந்தமாக வீடு கட்டிக் குடியேறும்போது காலத்துக்கும் இது நமக்கானது என்கிற உணர்வு எழுவதைப் போன்றுதான் திருமண உறவும்.

திருமணத்துக்கு எதிரான அல்லது அதனை மறுக்கிற மனநிலை ஒருவித பயத்தின் காரணமாகவே உருவாகிறது. திருமணம் என்பது வாழ்நாள் முழுவதுக்குமான கமிட்மென்ட். இதன் விளைவாக தனது சுதந்திரம் பறிபோய் விடுமோ, தான் விரும்பியதைச் செய்ய முடியாமல் போய் விடுமோ என்கிற பயம்தான் இந்த எண்ணத்துக்கு அடிப்படையாக இருக்கிறது. மணமுடித்தவர்கள் சண்டை போட்டுக்கொள்வது மற்றும் விவாகரத்து செய்வது போன்றவை எல்லாம் மேலும் பயத்தை விளைவிப்பதாகவும், திருமணம் செய்துகொண்டு ஏன் அல்லல்பட வேண்டும் என்கிற உணர்வைக் கொடுக்கக்கூடியதாகவும் இருக்கின்றன.

எந்த கமிட்மென்ட்டும் இல்லாமல் ஒரு பார்டனருடன் இருப்பேன் எனும்போது அங்கே அந்த உறவுக்கான நிலைத்தன்மை இருக்காது. பொதுவாக எல்லோருக்கும் உடல், உளவியல், உணர்ச்சி, சமூகம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றுக்கான தேவை இருக்கிறது. திருமணத்துக்கு எதிரான மனநிலையைக் கொண்டிருப்பவர்கள் பொருளாதார ரீதியில் தன்னிறைவு பெற்றவர்களாக இருப்பர். சமூகத்தை அவர்கள் பொருட்படுத்திக் கொள்ள மாட்டார்கள். பாலுறவு சார்ந்த தேவையைப் பூர்த்தி செய்து கொள்ளும் வாய்ப்பும் அவர்களுக்கு இருக்கும். ஆக, திருமணத்துக்கான தேவையே இல்லை என அவர்கள் உணரக்கூடும். பாலுறவு மட்டுமே உடலுக்கான தேவையில்லை. அதைத் தாண்டி உடல் நலனில் அக்கறை செலுத்த ஒருவர் தேவை. உணர்ச்சி மற்றும் உளவியல் சார்ந்து இது போன்ற தேவைகளை நிலையான உறவுமுறையில்தான் பெற முடியும். எந்த கமிட்மென்ட்டும் இல்லாமல் பரஸ்பரம் உடலைப் பகிர்ந்து கொள்ளும் உறவில் இந்த உளவியல் மற்றும் உணர்ச்சிகள் சார்ந்த தேவைகள் பூர்த்தியாகும் என்பதில் எந்த உத்தரவாதமும் இல்லை.

உணர்வுபூர்வமான பிணைப்பு உண்டாகவில்லை என்றால் அவர்கள் எந்த அடிப்படையில் செக்ஸ் தவிர்த்து மற்றவற்றுக்கெல்லாம் துணை நிற்பார்கள்.... திருமணம் அந்த உணர்வுபூர்வமான பிணைப்பை உண்டாக்குகிறது. எத்தனை வேலைகள் இருந்தாலும் கணவனுக்கோ, மனைவிக்கோ உடல்நிலை சரியில்லை என்றால் அதற்குதான் முக்கியத்துவம் தருவோம். ஏனென்றால் நாம்தான் அவர்களுக்குச் செய்ய வேண்டும் என்கிற கமிட்மென்ட்.

திருமணம்
திருமணம்

திருமணம் போன்ற தீர்மானமான உறவு பாதுகாப்புணர்வைக் கொடுக்கிறது. எடுத்துக்கொள்ள நிறைய வாய்ப்புகள் இருக்கிற சூழலில் ஒன்றில் ஃபிக்ஸ் ஆகாமல் அடுத்தடுத்த வாய்ப்பைத் தேடிப் போய்க்கொண்டே இருப்பார்கள். கமிட்மென்ட் இல்லாத உறவில் வாழ்கிறவர்கள் இந்த உறவில் இருந்து தனக்கு என்ன கிடைக்கிறது என்பதை மட்டுமே பார்ப்பார்களே தவிர நாம் என்ன கொடுக்கப்போகிறோம் என்பதைப் பார்க்க மாட்டார்கள். இளமைப்பருவத்தில் பாலுறவுக்கான தேடலும் தேவையும் இருக்கும். குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு பாலுறவின் மீதான ஆர்வம் வடிந்து உணர்வுபூர்வமான அணுக்கமே தேவையாக இருக்கும். அப்போது அவர்கள் தனிமையை உணர்வார்கள். அந்தத் தனிமை அவர்களைப் பெருமளவு பாதிக்கும்.

திருமண உறவின் கமிட்மென்ட் நமக்கு நல்லதைத்தான் கொடுக்கிறது. நாம் திசை மாறிப்போகையில் அதனை சரி செய்ய நம் இணையர் இருப்பார். மனைவி திட்டுவதற்கு பயந்து குடிக்காத அல்லது அளவாகக் குடிக்கிற கணவர்கள் இருக்கிறார்கள். உடல் நலம், பொருளாதாரம் என அனைத்திலும் ஒருவருக்கொருவர் தங்களை மேம்படுத்திக் கொள்ள வழி வகையாக இருக்கும். திருமணம் என்கிற அமைப்பு வெறும் பாலியல் தேவை மற்றும் குழந்தை பெற்றுக் கொள்வதற்காக மட்டுமல்ல. அது மனிதர்களின் தனிமைக்கு எதிரானது. சமூக அமைப்பு சீராக இயங்க திருமணம் தேவை. திருமணத்தை ஒட்டிய விழாக்கள், குழந்தை பெற்றுக்கொள்வதில் உண்டாகும் மகிழ்ச்சி, அவை வாழ்க்கையின் பற்றுதலாக இருந்து அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்திச் சென்று கொண்டிருக்கின்றன. திருமணத்தை பயத்தோடு அணுகுவதுதான் சிக்கலே. அழுத்தங்கள் இல்லாத இடம் எதுவுமில்லை. திருமண உறவிலும் பல அழுத்தங்கள் இருக்கவே செய்யும். முடிந்தவரை நமக்கான இணையரைத் தேர்ந்தெடுத்து அவரோடு ஒத்திசைந்து வாழ்வதன் வழியேதான் நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டுமே தவிர, திருமண அமைப்பையே எதிர்ப்பது தவறானது" என்கிறார் ஸ்வாதிக் சங்கரலிங்கம்.

``தனக்கான ஒருவன் / தனக்கான ஒருத்தி என்கிற கருத்தே இன்றைக்கு இல்லாமல் போய்விட்டதுதான் காரணம்" என்கிறார் மானுடவியலாளரான மோகன் நூகுலா...

``திருமண அமைப்பே இன்றைக்குப் பலருக்கும் சிறை போன்று தோன்றுகிறது. முந்தைய தலைமுறையினரிடம் வாழ்க்கை என்பது நிச்சயமற்றது, பாதுகாப்பற்றது என்கிற எண்ணம் மேலோங்கியிருக்கையில், திருமணம்தான் வாழ்க்கையை பாதுகாப்பாக நகர்த்திக் கொண்டுபோகும் என நம்பினார்கள். தனக்குத் திருமணம் எப்போது நடக்கும் என்று பேராவலோடு எதிர்பார்த்தார்கள். ஒரு பெண்ணோடு வாழ்நாள் முழுவதும் வாழ திருமண அமைப்பு ஒன்றே வழி என்றிருந்தது. இன்றைக்கு அதை மீறுவதற்கான சமூக சூழல் உருவாகியிருக்கிறது. அத்தோடு, தன்னால் யாருடனுமே வாழ்நாள் முழுவதும் வாழ முடியாது என்கிற மனநிலையும் உண்டாகியிருக்கிறது. சமூகத்தின் போக்கிலிருந்து துண்டித்துக் கொண்டு தங்களைத் தனிமனிதர்களாக உணர்வதன் உச்சமாகத்தான் திருமணத்துக்கு எதிரான மனநிலையைப் பார்க்க முடியும்.

மோகன் நூகுலா
மோகன் நூகுலா
படம் : சொ.பாலசுப்ரமணியன்

தங்களை தனிமனிதராக உணர்பவர்களிடத்தில் என்னதான் இன்னொருவர் வாழ்க்கைக்குத் தேவைப்பட்டாலும் அது அந்தத் தருணத்துக்கானது மட்டும்தானே தவிர வாழ்நாள் முழுவதற்குமானதல்ல என்கிற எண்ணம் தானாக உருவாகி விடுகிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்கிற கலாசார அமைப்பு மீறப்பட்டு விட்ட பிறகு பல்வேறு வாய்ப்புகளை நோக்கி நகர முடியும் என்கிற மனநிலையின் வெளிப்பாடே இது.

முன்னர் அரசு வேலை மீது வாழ்நாள் உத்தரவாதம் இருந்தது. அரசாங்க வேலை கிடைத்துவிட்டால் வாழ்க்கை செட்டில் ஆகி விடும் என்கிற எண்ணம் இருந்தது. இன்றைக்கு சமூகம் மாறி விட்டது. ஒரு நிறுவனத்திலிருந்து இன்னொரு நிறுவனத்துக்கு எளிதில் மாறிச்செல்ல முடிகிறது. ஒரு நிறுவனத்தைச் சார்ந்து மட்டுமே இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதுவே திருமண உறவிலும் எதிரொலிக்கிறது. பல்வேறு வாய்ப்புகள் உள்ள சூழலில் ஒரு நபரைச் சார்ந்து மட்டுமே வாழ வேண்டிய தேவை இல்லை என்கிற மனநிலை உண்டாகிறது.

நிறைய பேருக்கு திருமணத்தை விட குழந்தை வளர்ப்பின் மீதான பயம் இன்னும் பெரியதாக இருக்கிறது. வீட்டு விசேஷங்களில் உறவினரின் குழந்தையைத் தூக்கி விளையாடாத தலைமுறை இன்றைக்கு உருவாகி இருக்கிறது. ஏன் லெக்கிங்ஸ் போடுற, நைட்டி போட்டுட்டு ஏன் வெளிய போற, ஏன் ஃபோனை நோண்டிட்டே இருக்க என்பது போன்ற பிற்போக்குத்தனமான உறவினர்களின் கேள்விகளுக்கு இன்றைய தலைமுறையினர் பதில் சொல்லக்கூட விரும்புவதில்லை. இதன் தொடர்ச்சியாகவே, கணவனுக்கோ, மனைவிக்கோ மட்டும் ஏன் பதில் சொல்ல வேண்டும் என்கிற எண்ணம் இயல்பாக எழுகிறது.

திருமணம்
திருமணம்

இன்றைக்கு தனக்கான ஒருவன், தனக்கான ஒருத்தி என்கிற கருத்து இல்லை. இவர்களுக்கு சமூகம் என்பது இல்லாத ஒரு கற்பனை. என்னை யாரும் தீர்மானிக்கக்கூடாது என்கிற முடிவுக்குள் வந்த பிறகு அங்கே சமூகம் இருப்பதில்லை. இங்கே சிஸ்டம்தான் இருக்கிறது. இந்த சிஸ்டம் இவர்களுக்கு வாழ்வாதாரமான வேலையையும், வருமானத்தையும் கொடுக்கிறது. தனிமனிதர்களாக தங்களை உணர்வதன் விளைவாக சமூகம் இல்லாத காலகட்டத்தை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம். திருமணம் என்பது சமூக கட்டுமானத்துக்கான அடிப்படை வேராக இருந்திருக்கிறது. இன்றைக்கு சமூக வலைத்தளங்கள், தொழில்நுட்பங்கள் நம்மை ஆக்கிரமித்து விட்டன. இப்போது எந்தக் கேள்விகளும் இல்லாத உறவு நிலைதான் தேவையானதாக இருக்கிறது. ஒருவரையொருவர் சார்ந்திருத்தல் என்பதே திருமண உறவின் சாரம். தற்போது, தானும் யாரைச் சார்ந்தும் இல்லை. தன்னைச் சார்ந்தும் யாரும் இருக்கக்கூடாது என்கிற எண்ணம் மேலோங்கியிருக்கிறது. சமூகத்துக்கு அப்பாற்பட்ட மன அமைப்புதான் இதுபோன்று திருமணத்தை எதிர்க்கிறவர்களை இயக்கிக் கொண்டிருக்கிறது" என்கிறார் மோகன் நூகுலா.

பார்வைக் கோணம்

பானு அன்பு, ஓவியர்: ப்ரியங்கா சோப்ரா மாதிரி பல திரைப் பிரபலங்கள் கல்யாணமே பண்ணிக்கப் போறதில்லைன்னு உறுதியா சொல்லியிருக்காங்க. தனக்கான இணையரைப் பார்த்தப்புறம் கல்யாணம் பண்ணியிருக்காங்க. கல்யாணம் வேண்டாம்னு சொல்றவங்க அவங்க விரும்புற மாதிரியான ஒரு நபரை சந்திக்காதவங்களாகூட இருக்கலாம். அவங்களுக்கு ஏத்த மாதிரி இணையர் அமையுறப்போ கல்யாணம் பண்ணிக்குவாங்க. பொருளாதார ரீதியா வலுவா இருக்கிறவங்கதான் கல்யாணமே பண்ணிக்கப் போறதில்லைன்னு சொல்றாங்க. இன்னைக்கு 25 வயசுப் பொண்ணுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் அளவுக்கு சம்பளம் தர வேலைவாய்ப்புகள் இருக்கு. செலவெல்லாம் போக, மாசம் ஒரு லட்சத்தை முழுசா எந்தக் கேள்வியும் இல்லாம செலவு பண்ணலாம்ங்கிற மன அமைப்புல வளர்றவங்களுக்கு யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லைங்குற எண்ணம் தானா வருது.

பானு அன்பு
பானு அன்பு

என்னைக் கேட்டா எனக்குப் பிடிச்ச நபரை நிச்சயம் கல்யாணம் பண்ணிக்குவேன். அதுல ரெண்டு பேருமே individuals ஆ தான் இருப்போம். ரெண்டும் சேர்ந்து ஒண்ணாகும்னு சொல்றது தப்பு. நவீன காலத்துல பொருளாதார பாதுகாப்புங்குறது அந்த individuality-க்குள்ள வரும். அவங்கவங்க சம்பளம் அவங்கவங்களுக்கானது. இதையெல்லாம் புரிஞ்சுக்கிட்டு திருமணம் பண்றது நல்லது. ஒரு கம்பேனியன்ஷிப் கண்டிப்பா தேவை. அதுக்காக கல்யாணம் பண்ணிக்குவேன். கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்றதும் அவங்கவங்க தனிப்பட்ட முடிவுன்னுதான் பார்க்கணும்.

சுந்தர்ராம் கிருஷ்ணன், ஒளிப்பதிவாளர்: முந்தைய தலைமுறையில பார்த்தா, ஒரு வேலை, குடும்பம், குழந்தைகளோட கடைசி காலம் வரைக்கும் நல்லா இருந்தாலே போதும்ங்குற மனநிலைதான் இருந்துச்சு. இன்னைக்கு நாம எல்லோருமே ஏதாவது ஆகணும்ங்கிற identity crisis எல்லார்கிட்டயும் இருக்கிறதைப் பார்க்க முடியுது. இன்னும் வேணும் இன்னும் வேணும்ங்கிறதுதான் இந்தத் தலைமுறையோட பிரச்னையா பார்க்குறேன். நான் நினைச்சதைப் பண்ண முடியாம போயிடுமோங்குற பயம்தான் கல்யாணத்துக்கு எதிரான மனநிலையை உருவாக்குது.

நம்ம நினைச்சதை எல்லாம் ஏன் பண்ணனும் அப்படிங்கிற கேள்வியைக் கேட்டுக்கிறதே இல்லை. தனக்கான சுதந்திரம் வேணும்னு நினைக்கிறாங்க. அந்தச் சுதந்திரத்துக்கும் எல்லைகள் இருக்குங்கிற உண்மையைப் புரிஞ்சுக்க மாட்டேங்குறாங்க. என்ன கஷ்டம் வந்தாலும் பார்த்துக்கலாம்ங்குறதெல்லாம் போய் கஷ்டம் வந்தா தூக்கிப் போட்டுப் போயிடுவேன்ங்குற மனநிலைதான் எங்களோட தலைமுறைகிட்ட இருக்கு.

சுந்தர்ராம் கிருஷ்ணன்
சுந்தர்ராம் கிருஷ்ணன்

இவங்க, இது மாதிரியான மாடல்ஸை மேற்கத்திய நாடுகளின் தாக்கத்தில் இருந்துதான் எடுத்துக்குறாங்க. திருமணம் வேணாம்னு சொல்றதெல்லாம் ஃபெயிலியர் மாடல். சமூக கட்டமைப்பு சிதைஞ்சு போறப்போ அங்கே போதைப்பழக்கம், மனநோய் எல்லாம் பெருகுது. இந்த அடிப்படையையே புரிஞ்சுக்காமதான் இவங்க கல்யாணமே வேணாம்னு பேசிட்டிருக்காங்க. முதல்ல கல்யாணத்து மேல இருக்கிற பயமே தேவையில்லாதது. ஒருத்தருக்கொருத்தர் பரஸ்பரம் பேசி புரிஞ்சுக்கிட்டு வாழ்க்கையை நகர்த்திட்டுப் போறதுதான் முக்கியமே தவிர எஸ்கேப் ஆகிறதுல எந்த நன்மையும் இல்லை. ஒவ்வொரு சமூகமும் அதோட நெறிகளுக்குட்பட்டு இருக்கிறதுதான் நல்லது. கல்யாணம்ங்கிறது நல்ல சமூகத்துக்கான அச்சாணி மாதிரி. அதுக்கு எதிரான மனநிலையை உருவாக்கிக்கவே கூடாது. திருமண அமைப்புல எந்தச் சிக்கலுமே இல்லையான்னு கேட்டா இருக்குதான்... அதுக்காக அந்த சிஸ்டத்தையே தூக்கி வீசிட முடியாதுன்னுதான் சொல்வேன்".