Published:Updated:

`` `ஒரு எமோஷன்ல' மனைவியை அடிப்பவர்கள், தன் மேலதிகாரியை அடிக்க முடியுமா?''- `தப்பட்' எழுப்பும் கேள்வி

தப்பட்
தப்பட்

பத்துக்கு ஒன்பது ஆண்கள் தன் துணையை அடிப்பதை தவறு என்றே உணராதவர்களாகத்தான் இன்னமும் இருக்கிறார்கள். மீதமிருக்கிற ஓர் ஆணும், `ஏதோ உணர்ச்சிவசப்பட்டு அடிச்சிட்டேன்' என்கிற வெற்று வார்த்தைகளுடன் தன் தவற்றை கடந்துவிடப் பார்க்கிறான்.

''நீ ஏன் கணவன்கூட வாழ மறுக்கிறே... அவன் குடும்பத்தினரால உனக்குப் பிரச்னையா?''

''இல்ல.''

''திருமணம் தாண்டி வேறொரு உறவுல இருக்கானா?''

''இல்ல.''

''அப்போ, நீ திருமணம் தாண்டி வேறொரு உறவுல இருக்கியா?''

''இல்ல.''

''அப்போ, என்ன காரணத்துக்காக உன் கணவன்கூட சேர்ந்து வாழ மறுக்கிறே?''

''அவர் என்னை அடிச்சிட்டார்.''

''ஒரு தடவை அடிச்சதுக்காகவா உன் கணவரைவிட்டுப் பிரியணும்னு நினைக்கிறே?''

''அவர் என்னை அடிச்சிருக்கக் கூடாது.''

நடிகை டாப்ஸி பன்னு நடித்திருக்கிற 'தப்பட் (கன்னத்தில் அறைதல்)' என்கிற இந்திப் பட டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதில்தான் இந்த வசனங்கள்.

thappad
thappad

'புருஷன் அடிக்கிறதுக்கெல்லாம் அவனை விட்டுப் பிரியுறதா', 'கணவன், மனைவியை அடிக்கிறதெல்லாம் சகஜம்தானே', 'பொம்பளைதான் கொஞ்சம் பொறுத்துப் போகணும்' - இத்தனை கருத்து முத்துகளும் 'தப்பட்' டிரெய்லரிலிருந்து அதற்கான கமென்ட்ஸ்வரை ஒலித்துக்கொண்டே இருக்கின்றன. மனைவியை அடிக்கிற ஆண்களை படித்தவன், படிக்காதவன், நல்லவன், கெட்டவன், ஏழை, பணக்காரன் என்று எந்த அடையாளத்துக்குள்ளும் அடைத்துவிட முடியாது. மனைவியைக் கணவன் அடிப்பதென்பது, தாகமெடுத்தால் தண்ணீர் குடிப்பதுபோல இயல்பான விஷயமாகத்தான் நம் சமூகத்தால் பார்க்கப்படுகிறது. தன்னுடைய கோபம், வெறுப்பு, ஸ்ட்ரெஸ் என எல்லாவற்றையும் மனைவியின் கன்னத்தில் பளாரென ஓர் அறையின் மூலம் இறக்கி வைத்துவிடலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

நம்முடைய பல படங்களில், நாயகன் அடித்தால் நாயகிக்குக் காதல் வந்துவிடும். `அடிப்பதும் காதலில் சேர்த்திதான்' என்று அந்தக் காதல்(?) காட்சிகளுக்கு வக்காலத்து வாங்குவார்கள் இயக்குநர் ஆண்கள்.

தான் மரியாதை தரவேண்டிய இடங்களில், கையை ஓங்கினால் வேலை போய்விடும் என்கிற அச்சம் இருப்பதால் அங்கே ஆண்களுக்கு தங்கள் எமோஷன்ஸை கட்டுப்படுத்திக்கொள்ளத் தெரிகிறது, முடிகிறது.
`இந்த வீடியோ, என் கண்களில் கண்ணீரை வரவைக்கிறது!' - பெண்ணின் பதிவால் நெகிழ்ந்த டாப்ஸி

பத்துக்கு ஒன்பது ஆண்கள் தன் துணையை அடிப்பதை தவறு என்றே உணராதவர்களாகத்தான் இன்னமும் இருக்கிறார்கள். மீதமிருக்கிற ஓர் ஆணும், `ஏதோ உணர்ச்சிவசப்பட்டு அடிச்சிட்டேன்' என்கிற வெற்று வார்த்தைகளுடன் தன் தவற்றை கடந்துவிடப் பார்க்கிறான். எண்ணிக்கை வேண்டுமானால் முன்பின்னாக இருக்கலாம். ஆனால், இது நடந்துகொண்டேதான் இருக்கிறது.

மனமும், உடலும், அதைவிட முக்கியமாக சுயமரியாதையும்... பாதிக்கப்பட்ட மனைவியின் இடத்திலிருந்து யாரும் யோசிப்பதே இல்லை. அப்படி யோசிக்க வேண்டும் என்கிற உணர்வாவது ஆண்களிடம் இருக்கிறதா என்பதும் இன்று வரை புரியாத புதிர்தான்! 'தப்பட்' பட டிரெய்லரிலும், 'மோசமான சம்பவம் நடந்திடுச்சு; அதை மறந்திடு' என்றுதான் மனைவியை சமாதானம் செய்ய முயல்கிறார் அந்தக் கணவன்.

sad couple
sad couple
Representational image

'ஏதோ ஒரு எமோஷனில் மனைவியை அடித்துவிட்டேன்' என்கிற ஆண்கள், ஏதோ எமோஷனில் தங்கள் தலைமை அதிகாரியையோ, பெற்றோரையோ அடிக்கிறார்களா?' என்றொரு கமென்ட், 'தப்பட்' பட டிரெய்லரின் யூடியூப் பக்கத்தில் வருகிறது. இந்தப் பிரச்னையின் மிகச்சரியான கோணம் இந்த கமென்ட்தான். தான் மரியாதை தரவேண்டிய இடங்களில், கையை ஓங்கினால் வேலை போய்விடும் என்கிற அச்சம் இருப்பதால் அங்கே ஆண்களுக்கு தங்கள் எமோஷன்ஸை கட்டுப்படுத்திக்கொள்ளத் தெரிகிறது, முடிகிறது. கை ஓங்கினால் இவள் நம்மை ஒன்றும் செய்யமாட்டாள் அல்லது செய்ய முடியாது என்கிற தைரியத்தில், மனைவியின் கன்னத்தில் சுலபமாக தன் கோபத்தை இறக்கி வைத்துவிடுகிறார்கள்.

இது குறித்து உளவியல் ஆலோசகர் திவ்யபிரபா சொல்கையில், ''பெண்களை சக உயிராக மதிக்காத ஒரு காலமும் இங்கே இருந்தது. காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. பெண்கள் கல்வி, வேலைவாய்ப்பு எனத் தங்களை தாங்களே உயர்த்திக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். பெண்ணாகப் பிறப்பதே திருமணம் செய்துகொள்வதற்காகத்தான் என்றிருந்த காலமும் மனப்பான்மையும் மாறி, 'வாழ்க்கையில் சாதிக்க வேண்டும்; இதற்கிடையில் கல்யாணம் செய்துகொள்ளத்தான் வேண்டுமா' என்று பெண்கள் யோசிக்கிற காலகட்டம் இது.

thappad
thappad
"வாழ்க்கை அழகா, அர்த்தமுள்ளதா மாறியிருக்கிறதா ஃபீல் பண்றேன்..!'' - நிவேதா - தேவா அன்பு அத்தியாயம்

சுயமரியாதை என்பது ஆண், பெண் இருபாலருக்குமே பொதுவான உணர்வுதான். பல நூற்றாண்டுகளாக அது ஆணுக்கு மட்டுமே சொந்தமான உணர்வுபோல வாழ்ந்துவிட்டோம். அதனால்தான், அவர்களுடைய ஏச்சு, பேச்சு, அடி, உதை, கை ஓங்குதல், பல பேருக்கு முன்னால் அடிப்பது என அத்தனையையும் பொறுத்துக்கொண்டிருந்தார்கள் பெண்கள். படித்த பெண்கள்கூட வேலைக்குப் போகாத ஒரே காரணத்தால் குடும்ப வன்முறைகளைப் பொறுத்துக்கொண்டுதான் இருந்தார்கள்.

இந்தப் பெண்கள் பொருளாதார ரீதியில் முழுக்க முழுக்க கணவனையே நம்பியிருந்ததால்தான், வீட்டுப் பெரியவர்களும், 'ஆம்பளைன்னா அப்படித்தான் இருப்பான்; பொம்பளைதான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்' என்று பெண்களை மூளைச்சலவை செய்துவைத்திருந்தார்கள். இல்லறத்தில் மனைவியின் தேவை ஏற்படும் நேரத்தில் 'அடிக்கிறதும் காதல்ல சேர்ந்ததுதான்' என்று கணவர்களும், பெண்களை மூளைச்சலவை செய்து வைத்திருந்தார்கள்.

`இந்த வீடியோ, என் கண்களில் கண்ணீரை வரவைக்கிறது!' - பெண்ணின் பதிவால் நெகிழ்ந்த டாப்ஸி
கணவனின் அன்பு மட்டும் போதாது, எனக்கான மரியாதையும் வேண்டும் என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள் பெண்கள். இதை சமுதாய மாற்றம் என்று சொல்வதைவிட, சமுதாய வளர்ச்சி என்றுதான் சொல்ல வேண்டும்.
உளவியல் ஆலோசகர் திவ்யபிரபா

மறுபடியும் சொல்கிறேன், காலம் மாறிவிட்டது. சொந்தக் காலில் நிற்கிற பெண்களுக்கு சுயமரியாதையும் வந்துவிட்டது. 'தப்பட்' பட டிரெய்லரில் நடிகை டாப்ஸி கேட்பதுபோலவே, கணவனின் அன்பு மட்டும் போதாது, எனக்கான மரியாதையும் வேண்டும் என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள் பெண்கள். இதை சமுதாய மாற்றம் என்று சொல்வதைவிட, சமுதாய வளர்ச்சி என்றுதான் சொல்ல வேண்டும். இந்த வளர்ச்சியை அடையாத ஆண்கள்தான், மனைவியை கணவன் அடிப்பது வெகு சாதாரண விஷயம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

தன் உணர்வுகளை எப்படி கட்டுப்படுத்துவது, எப்படி வெளிப்படுத்துவது என்றே தெரியாமல் இருக்கிற ஆண்களை ஹியூமன் வேல்யூ தெரியாதவர்கள் என்றே சொல்ல வேண்டும்.

பெண்களை மதிக்கக் கற்றுத்தராத குடும்பத்திலிருந்து வருகிற ஆண்களிடம், மனைவியை கை ஓங்குகிற பழக்கம் சர்வ சாதாரணமாக இருக்கும். இவர்கள் தங்களை மாற்றிக்கொள்ளத்தான் வேண்டும்.

Thappad
Thappad

ஒரு திருமணத்தில் இரண்டு தனிமனிதர்கள் இணைகிறார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் சரிசமமானவர்கள். பரஸ்பரம் காதலையும் மரியாதையையும் பகிர்ந்து வாழ வேண்டியவர்கள். இது புரிந்தால் எந்த வீட்டிலும் 'தப்பட்' நிகழாது'' என்கிறார் அழுத்தமாக.

நீங்களும் கமென்ட் பண்ணுங்க!
இந்தக் கட்டுரையை வாசிக்கிற பல பெண்களுக்கும் 'தப்பட்' நிகழ்ந்திருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் உங்கள் உணர்வுகளையும் இதுகுறித்த உங்கள் கருத்துகளையும் கமென்ட்டில் பதிவு செய்யுங்களேன்..!
அடுத்த கட்டுரைக்கு