Published:Updated:

`இது ஒண்ணும் சம்மர்கட் இல்ல...' - கன்னட ராக் ஸ்டார் மகளின் செல்லக்கோபம்... ஒரு கியூட் க்ளிக்!

ராக் ஸ்டார் யஷ் குடும்பம்
ராக் ஸ்டார் யஷ் குடும்பம்

கடந்தாண்டு காதுகுத்தியாகிவிட்டது. தலைமுடி மொட்டையடிக்க ஏற்பாடு. குட்டிகளுக்கு மொட்டையடிப்பது அவ்வளவு சுலபமாக நடந்துவிடுமா என்ன...

கன்னடத் திரையுலக ராக் ஸ்டார், யாஷ்! கே.ஜி.எஃப் சேப்டர் 1 படத்தில் பட்டையைக் கிளப்பியவர். வருகிற ஜூலையில் வெளியாகவிருக்கும் கே.ஜி.எஃப் 2-ம் பாகத்தை எதிர்நோக்கியிருக்கிறார். யாஷ், ஊருக்கே ராக் ஸ்டாராக இருந்தாலும் வீட்டில் லவ்லி ஹப்பி, ஃபிரெண்ட்லி டாடிதான்!

ஆயிரா
ஆயிரா

மனைவி ராதிகா பண்டிட், 3 வயது பெண்குழந்தை ஆயிரா, அழகான குடும்பம். ஆயிராவுடன் க்ளிக்கிய படங்களை தம்பதியர் இருவரும் தங்களது இன்ஸ்டா பக்கங்களில் நிரப்பியிருக்கிறார்கள். அத்தனையும் லைக்ஸ் அள்ளி வருகின்றன. எல்லாவற்றையும்விட நேற்றைய படம், டாப் கியூட்.

படம் சொல்லும் கதை இதுதான். சுட்டிப் பாப்பா ஆயிராவுக்குக் கடந்தாண்டு காதுகுத்தியாகிவிட்டது. தலைமுடி மொட்டையடிக்க ஏற்பாடு. குட்டிகளுக்கு மொட்டையடிப்பது அவ்வளவு சுலபமாக நடந்துவிடுமா என்ன... காதுகுத்தின்போது 1 வயதுதான். வெறும் அழுகைதான். இப்போது பேசத் தொடங்கியிருக்கிறாள். எப்படிச் சமாளிப்பது..?

அட, ஐடியா! பாப்பாவிடம், `சம்மர்கட்' என சப்பைக்கட்டு கட்டியிருக்கிறார். பாப்பாவும் சம்மதம் சொல்ல, அடிச்சாச்சு மொட்டை! மேடமத்துக்கு செம்ம கோபம். செலிபிரேஷனின் போட்டோ செஷன். முகம் சுளித்து, புருவங்களை நெருக்கி, உதடுகள் துடிக்க ஆங்கிரியின் உச்சத்துக்குச் சென்றிருக்கிறார், ஆயிரா பாப்பா.

'இது சம்மர்ன்னு எனக்குத் தெரியும், ஆனா, இது சம்மர்கட்டே இல்ல!' என்று ஆயிரா பாப்பா பாஷ்ஷிடம் சொல்கிற, அந்தக் கடுப்பும் கவலையும் கலந்த மொமெண்ட்டை மிஸ் செய்யாமல் படம் பிடித்திருக்கிறார்கள். ஆயிராவின் கோபம்கூட கன்னம் கிள்ளிக் கொஞ்சிடச் சொல்கிறது.

கடந்தாண்டு காதுகுத்து நடந்த நாளில் அதை போட்டோவுடன் பதிவிட்ட ராதிகா பண்டிட், "முதல்முறையாக அவரது கண்களில் கண்ணீரைப் பார்த்தேன். ஆயிரா அழுததும் எங்கள் மனம் உடைந்தது. ராக்ஸ்டாரும் கண்ணீர்விட்டு அழுதார்" எனப் பதிவிட்டிருந்தார்.

``பாப்பா அழுதா... அதனால் நான் ஒரு ஐடியா செய்தேன்'' | Viral Video

ராக் ஸ்டாரின் ஆனந்தக் கண்ணீர், சுட்டி பேபியின் குட்டிக்கோபம் என அந்தக் குடும்பம் அழகிய உணர்வுகளால் இழைக்கப்பட்டு வருகிறது. மழலை வாழும் வீட்டில் மகிழ்ச்சிக்கு ஏது பஞ்சம்!

அடுத்த கட்டுரைக்கு