
காதலுக்கு மரியாதை செய்யும் கேரள ஜோடி
‘`என்னோட பத்து வயசுல அந்த தீ விபத்து நடந்துச்சு. முகம் முழுக்க தீக்காயம்... வாழ்க்கையில விரக்தியும், அவமானமும் துரத்துச்சு. அதுலேருந்து மீண்டு அடையாளம் தெரியற மாதிரி வாழணும்ங்கிறது தான் பெருங்கனவா இருந்துச்சு. கேலி , கிண்டல்களை தைரியமா எதிர்கொள்ள ஆரம்பிச்சேன். ஸ்கூல் சீனியரா அறிமுகமான அகில், நல்ல நண்பரானார். இவர் வாழ்க்கை முழுக்க துணையா வந்தா நல்லா ருக்கும்னு தோணுச்சு. அந்த மேஜிக்கும் என் வாழ்க்கையில நடந்துச்சு” - அமிர்தாவின் பேச்சு கவிதையாக இருக்கிறது.
கேரளா மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த தம்பதியர் அமிர்தா - அகில். ‘அம்முஸ் - அப்புஸ்' என்ற பெயரில் வீடியோக்கள் வெளியிடுகிறார்கள்.

“என்னோட சின்ன வயசுல, நான் அழகா இருக் கேன்னு நிறைய பேர் சொல்லியிருக்காங்க. அப்போ அது எனக்குப் பெருசா தெரியல. தீக்காயம் ஏற்பட்டு, வீட்ல முடங்கினபோது என்னைப் பார்த்து யாராவது அழகா இருக்கேன்னு சொல்ல மாட்டாங்களானு ஏங்கியிருக்கேன். சின்ன வயசுல எனக்கு வலிப்பு நோய் இருந்துச்சு. ஒருநாள் ராத்திரி கரன்ட் இல்லாத போது, என் புத்தகம் கீழே விழுந்திருச்சு. அதை எடுக்க விளக்கோட கட்டிலுக்கடியில போனேன். அந்த நேரம் வலிப்பு வந்து, கை கால்களை உதறுனதுல விளக்கைத் தட்டிவிட்டுட்டேன். நான் போட்டிருந்த டிரஸ்ல தீப்பிடிச்சிருச்சு. கண்ணைத் திறந்து பார்த் தப்போ ஆஸ்பத்திரியில இருந்தேன். முகம் முழுக்க எரிஞ்சு போயிருந்தது. சில நாள் கழிச்சு கண்ணாடி யைப் பார்த்தபோது என் முகத்தைப் பார்க்க எனக்கே பயமா இருந்துச்சு’’ என்றவரின் வார்த்தையில் அந்தத் தருணம் வந்து போகிறது.

“சில மாசங்கள் ஸ்கூல்கூட போகலை. மறுபடி போன போது எல்லாரும் என்னையே பார்க்குற மாதிரி இருக் கும். அதனால மாஸ்க் போட்டுட்டுதான் வெளியில போவேன். பஸ்ல போனா எல்லாரும் வேடிக்கை பார்க்கி றாங்கன்னு அழுதேன். அம்மா எனக்காக கார் ஓட்ட கத்துக்கிட்டு கார்ல கூட்டிட்டுப் போனாங்க. தீ விபத்தால வலது கையைத் தூக்க முடியாமப் போச்சு. ‘விளையாட்டுல கவனம் செலுத்தினா சரியாகும்’னு டாக்டர் சொன்னாதும் பேட்மின்ட்டன் கத்துக்க ஆரம்பிச்சேன். கை மெதுவா சரியாக ஆரம்பிச்சுது. கைப்பந்து, இறகுப்பந்து, சைக் கிளிங்னு எல்லாத்துலேயும் களம் இறங்கினேன். நான் சந்திச்ச அவமானங்களையும், கோபங்களையும் கொஞ்சம் கொஞ்சமா மறக்க ஆரம்பிச்சேன். மாஸ்க்கை கழட்டிட்டு தன்னம்பிக்கையோட வெளியே போக ஆரம்பிச்சேன். ஆனாலும், என்னை யாரும் லவ் பண்ண மாட்டாங்க, கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்கன்னு மனசுக்குள்ள வெறுப்பும் இருந்துச்சு. அந்த நேரத்துல அகில் எனக்கு அறிமுகம் ஆனார். நண்பர்களா இருந் தோம். திடீர்னு ஒரு நாள் என்னை காதலிக்கிறதா சொன்னதும் திக்குமுக்காடிப் போயிட்டேன்’’ - வெட்கத் துடன் அமிர்தா முடிக்க, அகில் தொடர்கிறார்...
“காதலைச் சொன்னபோது அமிர்தா ரொம்ப தயங்கி னாங்க. இது சரியா வருமானு ரொம்ப யோசிச்சாங்க. நான் அவங்களோட மனசையும், அவங்களோட தைரியத் தையும்தான் பார்த்து காதலிக்க ஆரம்பிச்சேன். ஒன்பது வருஷங்கள் காதலிச்சோம். ரெண்டு வீட்டு சம்மதத்தோட கடந்த வருஷம் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். ரெண்டு பேரும் தனியார் நிறுவனத்துல வேலை பார்க்கிறோம்.
பார்ட் டைமா சோஷியல் மீடியாவுல வீடியோ போடலாம்னு சொன்னப்போ அமிர்தா கொஞ்சம் தயங்குனாங்க. அவங்க பயந்த மாதிரி சில நெகட்டிவ் கமென்ட்ஸும் வந்துச்சு. ஆனா, ரெண்டு பேரும் நெகட்டிவை பாசிட்டிவா பார்த்தோம். இப்போ நிறைய பேருக்கு எங்களைப் பிடிக்குது. நிறைய பொண்ணுங்க அமிர்தாவை பார்த்து இன்ஸ்பயர் ஆகுறாங்க. குறைபாடுகளோட இருக்குறவங்களையும் விபத்துல உறுப்புகளை இழந்தவங்களையும் அப்படியே ஏத்துக்கணும். அவங் களுக்குள்ளும் ஆயிரம் ஏக்கங்கள், ஆசைகள் இருக்கும்னு நாம எல்லாரும் உணர்ந்துட்டா, அவங்க ஜெயிச்சுரு வாங்க, அமிர்தா மாதிரி...’’ - அகில் முடிக்க, அமிர்தாவின் கண் களில் அவ்வளவு காதல்!