Published:Updated:

`அவளின் அந்தக் குணம்தான் காதலை உணரவைத்தது!' -வித்தியாசக் காதலை விவரிக்கும் கேரள வைரல் ஜோடி

பிரணவ் - சஹானா ஜோடி
News
பிரணவ் - சஹானா ஜோடி ( marunadan tv )

சில வருடங்களாக காதலித்துவந்த சஹானா என்ற பெண்ணைக் கரம்பிடித்துள்ளார் பிரணவ். இதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி நெட்டிசன்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

திருச்சூர் மாவட்டம் இரிஞ்சாலக்குடா பகுதியைச் சேர்ந்த இளைஞர் நல்லபதி பிரணவ். 27 வயதான அவர், சில வருடங்களுக்கு முன் மற்றவர்களைப் போல துறுதுறுவென அந்தப் பகுதியில் வலம்வந்தவர். நண்பர்களால், ஊர்க்காரர்களால் டுட்டுமோன் என அன்பாக அழைக்கப்பட்டு வந்த பிரணவ், அப்பகுதி மக்களின் செல்லப்பிள்ளையாக இருந்துள்ளார். ஆனால், ஆறு வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் அவரை முற்றிலும் முடக்கியது. ஆம், எதிர்பாராத விபத்தில் சிக்கிய பிரணவ்வால் அதன்பிறகு எழுந்து நடமாட முடியாத நிலை. எப்போதும் வீல்சேரிலேயே அவரது வாழ்க்கை முடங்கியது.

பிரணவ் - சஹானா
பிரணவ் - சஹானா
facebook

பிரணவ் உடல் அளவில் முடங்கினாலும், மனதளவில் அவருக்கு எந்தவித முடக்கமும் ஏற்படவில்லை. தன்னை எப்போதும் உற்சாகமாகவே வைத்துக்கொண்டார். நண்பர்கள், உறவினர்கள், பெற்றோர்கள் உறுதுணையுடன் ஊர் திருவிழாக்களில் பங்கேற்பது, கல்யாண நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என விபத்தால் தனக்கு ஏற்பட்ட முடக்கத்தைத் தடையாக நினைக்காமல் வாழ்ந்துவந்தார். அப்படிப்பட்ட பிரணவ்வின் காதல் திருமணம்தான் கேரளாவில் தற்போது வைரல் டாப்பிக்காக உள்ளது. சில வருடங்களாகக் காதலித்துவந்த சஹானா என்ற பெண்ணைக் கரம்பிடித்துள்ளார் பிரணவ். இதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி நெட்டிசன்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பலரும், `காதல் என்பது இரு உடல்களுக்கிடையில் இல்லை. இரு மனங்களினுடயது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது, இந்தத் திருமணம். அன்பின் வார்த்தைகள் நிறைவேறியது...' என்று வலைதளங்களில் பிரணவ் என்ற டுட்டுமோனுக்கும் சஹானாவுக்கும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். இதற்கிடையே, திருமணத்துக்குப் பிறகு மணமக்கள் இருவரும் ஊடகங்களிடம் தங்களது காதல் கதையைப் பகிர்ந்து வருகின்றனர்.

பிரணவ் - சஹானா
பிரணவ் - சஹானா
facebook

பிரணவ்வுக்குச் சொந்த ஊர் திருச்சூர் என்றால், சஹானாவின் சொந்த ஊர் திருவனந்தபுரம். இருவரும் பரிச்சயம் என்பது ஃபேஸ்புக் மூலம்தான். பிரணவ் எப்போதும் வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நபர். இவர் திருவிழா, நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வீடியோ, போட்டோ போன்றவற்றை வலைதளங்களில் பதிவேற்றி வந்துள்ளார். இது வைரலாகவும் மாறியுள்ளது.

அப்படி பிரணவ்வின் சில வைரல் போஸ்டுகளைப் பார்த்துதான் சஹானாவுக்கு அவர்மீது விருப்பம் வந்துள்ளது. பின்னர் பிரணவ்வுக்கு ஃபேஸ்புக்கில் ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் கொடுத்திருக்கிறார். ஆனால் பிரணவோ அதை ஏற்கவில்லை. இதன்பின் ஃபேஸ்புக்கில் அவரது போன் நம்பரை எடுத்து வாட்ஸ் அப் மூலம் மெசஜ் செய்திருக்கிறார். இப்படிதான் இவர்களது பழக்கம் ஆரம்பித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பேச ஆரம்பித்தபோதே தனது காதலை வெளிப்படுத்தி இருக்கிறார் சஹானா. ஆனால், தனது நிலையை உணர்ந்து பிரணவ் அதை மறுத்துவிட்டாலும் சஹானா தனது காதலில் உறுதியாக இருந்துள்ளார். ``என்னுடைய அவஸ்தை எனக்குத் தெரியும். அதை அவளிடம் பலமுறை எடுத்துச்சொல்லிட்டேன். இருந்தும் அவள் கேட்கவில்லை.

பிறகு எனது பெண் நண்பர்கள் மூலம் எனக்கு வேறு ஒரு காதல் இருக்கிறது என்றுகூறி அவளை திசைதிருப்ப முயற்சி செய்தேன். அது சரிப்பட்டு வரவில்லை. பின்னர் எனது நண்பர்கள் மூலம் நிலைமையை எடுத்துச் சொன்னேன். அவர்கள் மூலம் அவளை திட்டியும் பார்த்தேன். ஆனால் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாத சஹானா என்மீதான காதலில் உறுதியாக நின்றார்.

பிரணவ் - சஹானா
பிரணவ் - சஹானா
facebook

அவளின் இந்தப் பிரியம் அவளின் காதலை உணரவைத்தது. நானும் அவளை விரும்ப ஆரம்பித்தேன். சில நாள்கள் போன் மூலமாகவே எங்கள் காதல் நீடித்தது. ஒருகட்டத்தில் இந்த விவகாரம் அவள் வீட்டிற்கு தெரியவே, என்னைப் பார்க்க திருச்சூர் வந்துவிட்டாள். அதுதான் நாங்கள் முதன்முதலில் நேரில் பார்த்த தருணம். சரி நேரில் பார்த்த பின்பாவது என்னுடைய அவஸ்தையை உணர்ந்து பின்வாங்கிவிடுவாள் என எண்ணினேன்.

நான் நினைத்தது பொய்யாக முடிந்தது. என்னைப் பார்த்தபின்பும் காதலில் உறுதியாக இருந்தாள். இனியும் ஒண்ணும் செய்ய முடியாது என்று விஷயத்தை வீட்டில் சொல்லிவிட்டேன்" எனக் கூறும் பிரணவ், தனது வீட்டில் உள்ளவர்கள் மூலமாகவும் சஹானாவைத் திரும்ப அனுப்ப முயன்றுள்ளார். ஆனால் அவர்களின் அத்தனை முயற்சியும் தோல்வியிலேயே முடிந்துள்ளது.

சஹானா தனது காதலில் விடாப்பிடியாக நிற்க மறுநாளே கோயிலில் வைத்து இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. சஹானா வீட்டிலிருந்து வெறும் 500 ரூபாயுடன் கிளம்பியுள்ளார். பிரணவ் வீட்டில் எதிர்ப்புத்தெரிவித்தபோதுகூட, ``வாழ்ந்தால் பிரணவ்கூடதான்" என உறுதியாகக் கூறிய சஹானா தனது காதல் குறித்து பேசுகையில், ``ஃபேஸ்புக் வீடியோக்கள் பார்த்துதான் அவர்மீது எனக்கு இஷ்டம் வந்தது.

அவரிடம் பேசிப் பழகியபோது அவரின் மனதைப் புரிந்துகொண்டேன். எல்லாருடைய வீட்டைப் போலதான் என் வீட்டிலும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது நிச்சயம். சாதி, மதம் தாண்டி காதலிப்பதால் அந்த எதிர்ப்பைச் சமாளித்து ஆக வேண்டும். அதனால் இனியும் என் வீட்டில் இருப்பது சரியல்ல என்று புறப்பட்டுவந்துவிட்டேன்.

பிரணவ் - சஹானா
பிரணவ் - சஹானா
facebook

என் தோழிகள்கூட எனக்கு நிறைய அட்வைஸ் கொடுத்தனர். ஆனால் என் விருப்பத்தை மாற்றத் தயாராக இல்லை. எனது திருமணத்தை விரைவில் நடத்த முடிவு செய்தேன்" என நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார். ஆத்மார்த்தமான அன்பின் அர்த்தம்தான் காதல்.

வெறும் தோற்றம் மட்டுமே காதலை நிர்ணயித்துவிடாது... அன்பின் பரிமாற்றமே அர்த்தமுள்ள காதல்.. இனம், மதம், மொழி, நிறங்கள், ஏற்றத்தாழ்வுகள் இவற்றைக் கடந்து அன்பால் இணைந்த காதலே ஆயிரம் துன்பங்களையும் கடந்து இணைகிறது. இதோ அந்த அன்பின் சாட்சியாகக் காதலின் நீட்சியாக நிற்கிறார்கள் பிரணவ் - சஹானா காதல் தம்பதியர்.