Published:Updated:

`இங்க வாழ்றதுக்கு எல்லோருக்கும் உரிமை இருக்கு!’ - கேரளாவின் தன்பாலின ஈர்ப்பு இணையர்

தன்பாலின ஈர்ப்பு இணையர்
தன்பாலின ஈர்ப்பு இணையர் ( facebook.com/Nikesh Usha Pushkaran )

`ஒருவருக்கு எதிர் பாலினத்தின் மீதும் தன் பாலினத்தின் மீதும் ஈர்ப்பு ஏற்படுவது இயற்கை. இந்தச் சமூகம் அவர்கள் மீது எந்தப் பாகுபாடும் காட்டக் கூடாது’ - நிகேஷ் உஷா புஷ்கரன் முகநூல் பதிவு இது.

கேரளாவைச் சேர்ந்த நிகேஷ் உஷா புஷ்கரன் - சோனு கடந்தாண்டு ஜூலை மாதம் குருவாயூர் கோயிலில் திருமணம் செய்துகொண்டனர். கேரளாவில் நடந்த முதல் சம்பவம் இது. இருவரும் ஒரே அப்பார்ட்மென்டில் வாழ்ந்துவருகிறார்கள். இவர்களது திருமணம் ஒரு வருடத்தைக் கடந்துவிட்டது. நிகேஷ் பிசினஸ் மேன் - சோனு ஐடி நிறுவன ஊழியர். காதல் திருமணத்துக்கே எதிர்ப்புகள் இருக்கும்போதும் இவர்களது திருமணம் அவ்வளவு எளிதில் நடந்துவிடவில்லை. முதல் பார்வையில் இவர்களுக்குக் காதல் வந்ததாகக் கூறுகிறார்கள்.

நிகேஷ் - சோனு
நிகேஷ் - சோனு
facebook.com/Nikesh Usha Pushkaran

கடந்தாண்டு ஜூலை மாதத்தில் `இன் ரிலேஷன்ஷிப்’ என நிகேஷ் முகநூலில் தனது உறவு குறித்து நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்குத் தெரிவித்தார். இதையடுத்து, சிறிது நாளில் வெளியிட்ட பதிவில், `நான் தன்பாலின ஈர்ப்பாளன். நான் என் துணையைத் தேர்வு செய்துவிட்டேன். அவர் எர்ணாகுளத்தில் இருக்கிறார். உங்கள் யாருக்காவது இது குறித்து பேச வேண்டும் என்றால் நேரடியாக என்னிடம் பேசுங்கள். அம்மா, சகோதரிகளிடம் பேசுவதை நிறுத்துங்கள். என் வாழ்க்கையை நான் தீர்மானித்துக்கொண்டேன். என் வாழ்க்கையைச் சந்தோஷமாக வாழ எனக்குத் தெரியும். என் முடிவை ஏற்க மறுப்பவர்கள் யாராக இருந்தாலும் விட்டு விலகுங்கள்” எனப் பதிவிட்டார். இந்த உறவினை மற்றவர்கள் ஏற்பது கடினம்தான். ஆனால், தன் முடிவைத் தெளிவாக அவர் பதிவு செய்தார்.

ஒரு டேட்டிங் ஆஃப் மூலம் இவர்களின் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. நிகேஷ் 14 வருடங்களாக தன்பாலின ஈர்ப்பாளர் ஒருவரைக் காதலித்து வந்திருக்கிறார். அந்த நபர் சமூகத்துக்கு, தனது நிலை குறித்து வெளிக்காட்ட விரும்பாததால், நிகேஷுடனான உறவை முறித்துக்கொண்டாராம். இந்தப் பிரிவால் மனதளவில் கடுமையாக காயப்பட்டிருக்கிறார் நிகேஷ். அப்போதுதான் சோனுவுடனான சந்திப்பு நிகழ்ந்துள்ளது. முதல் பார்வையிலே இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டது. இரண்டு மூன்று வாட்ஸ் அப் உரையாடல்களில் மூலம் சோனுதான் தனக்குச் சரியான துணை என்பதை முடிவு செய்ததாக ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் நிகேஷ் பேசியுள்ளார்.

நிகேஷ் - சோனு
நிகேஷ் - சோனு
facebook.com/Nikesh Usha Pushkaran

நிகேஷ் அம்மாவுக்கு தன் மகன், தன்பாலின ஈர்பாளர் என்கிற தகவல் தெரிந்திருந்ததாகவும், சோனுவின் அம்மாவுக்குத்தான் தன் மகன் பற்றிய செய்தி அதிர்ச்சியை அளித்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார் நிகேஷ். விஷயம் கேள்விப்பட்டதும் சோனுவை மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று குணப்படுத்துமாறு வேண்டினார்களாம் சோனுவின் பெற்றோர். தன்பாலின ஈர்ப்பு என்பது இயற்கையானது என மருத்துவர் தெரிவித்துவிட, சோனுவின் நீண்ட முயற்சிக்குப் பிறகு, திருமணத்துக்கு சம்மதித்தார்களாம். நிகேஷும் சோனுவும் குருவாயூர் கோயிலில் மோதிரம் மற்றும் மாலை மாற்றித் திருமணம் செய்துகொண்டதாகச் சொல்கிறார்கள்.

``எங்கள் உறவுகளை வெளிப்படையாகத் தெரிவித்தற்கு காரணம். இதுபோன்று இருப்பவர்கள் தைரியமாக வெளிவர வேண்டும் என்பதற்காகவே சமூகவலைதளத்தில் இதைப் பதிவு செய்தோம். ஃபேஸ்புக் பதிவால் சில பிரச்னைகள் எதிர்கொண்டோம். குடும்பத்தில் சில குழப்பமான சூழல் வெளியானது அதைச் சரிசெய்துதான் திருமணம் செய்தோம். சட்டப்பிரிவு 377-ஐ நீக்கியது மகிழ்ச்சி. தற்போது நாங்கள் இந்தச் சமூகத்தின் முன்பு ஒன்றாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எங்கள் திருமணம் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பின்னர் இதை அடுத்த கட்டத்துக்கு முன்னெடுத்துச் செல்லவுள்ளோம். குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்க முடிவு செய்துள்ளோம்” என்கின்றனர்.

நிகேஷ் - சோனு
நிகேஷ் - சோனு
facebook.com/Nikesh Usha Pushkaran

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட சட்டப்பிரிவு 377 கடந்தாண்டுதான் நீக்கப்பட்டது. `இயற்கையின் விதிகளுக்கு மாறாக ஓர் ஆண், பெண் உறவு கொண்டால் ஆயுள் தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனைக்கு உள்ளாவார்கள்' என்று பிரிவு 377 கூறியது. ``அரசியல் சட்டத்தின் 377-வது பிரிவு ரத்து செய்யப்பட வேண்டும். தன்பாலின உறவு என்பது சட்டவிரோதமானது அல்ல'' என தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு கடந்தாண்டு தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு பாலின சிறுபான்மையினர் பிரிவினருக்கு (LGBT) மகிழ்ச்சி அளித்தது.

அடுத்த கட்டுரைக்கு