Published:Updated:

`பிள்ளையைப் பார்த்ததே போதும்மா....!' - ஒன்றரை வயதில் கடத்தப்பட்ட மகனை 20 வயதில் சந்தித்த தந்தை

Avi Manthe with his Parent
Avi Manthe with his Parent

என் சம்சாரம் தண்ணிப் பிடிக்கிறதுக்காக 50 அடி தொலைவுல இருக்கிற குழாயடிக்குப் போயிருக்கா. அதுக்குள்ள பால்குடி மறக்காத எங்க பச்ச மண்ணை எவனோ தூக்கிட்டுப் போயிட்டான்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஒன்றரை வயதில் காணாமல்போன ஆண் குழந்தை, 20 வருடங்கள் கழித்து, வளர்ந்த இளைஞராக, தன் பெற்றோரை பார்க்க வந்திருக்கிறார். சென்னை புளியந்தோப்பு பகுதியில் வசிக்கிற நாகேஸ்வரராவ் - சிவகாமி தம்பதியரின் வாழ்க்கையில்தான் இப்படியொரு அதிசயம் நிகழ்ந்திருக்கிறது. நாகேஸ்வரராவிடமே பேசினோம்.

with mother Sivagamil
with mother Sivagamil

''பிள்ளை காணாமல்போன அந்த நாளை இன்னிக்கும் எங்களால மறக்க முடியலை. பிப்ரவரி மாதம் 18-ம் தேதி,1999-ம் வருஷம் எங்க பிள்ளை 'சுபாஷ்' காணாமப் போனான். அந்த வருஷம் எங்க ஏரியாவுல தண்ணிக் கஷ்டம். நைட்டு 7 மணி இருக்கும். என் சம்சாரம் தண்ணிப் பிடிக்கிறதுக்காக 50 அடி தொலைவுல இருக்கிற குழாயடிக்குப் போயிருக்கா. அதுக்குள்ள பால்குடி மறக்காத எங்க பச்ச மண்ணை எவனோ, கக்கத்துல தூக்கி வைச்சுக்கிட்டு, மேலே டவலைப் போர்த்தி தூக்கிட்டுப் போயிட்டான். இதை என் அண்ணன் பொண்ணுப் பார்த்துட்டு என் சம்சாரத்துக்கிட்டே சொல்லிடுச்சு. விஷயம் வேலையில இருந்த எனக்குத் தெரிஞ்சு, நான் பதறியடிச்சு ஓடிவந்தேன். எங்க ஏரியா ஆளுங்க 400 பேருக்கும் மேலே ராவெல்லாம் தேடுனோம்மா. புள்ள கெடைக்கல. போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளெயின்ட் கொடுத்தோம். பலனில்ல'' என வேதனையோடு விவரித்தார்.

அவரைத் தொடர்ந்து, தொலைந்த மகனைத் தேடி கண்டுபிடித்து பெற்றோருடன் சேர்த்து வைத்த வழக்கறிஞர் மோகனவடிவேல் பேசினார்.

'' குழந்தை காணாமல்போய் கிட்டத்தட்ட 5 வருடம் கழித்து நாகேஸ்வரராவ் தம்பதியர் என்னை சந்தித்தார்கள். மிகவும் கஷ்டப்படுகிற குடும்பம் அது. குழந்தையைக் கடத்திக் கொண்டுபோனவர்கள், திருவேற்காட்டில் இருந்த ஒரு அமைப்பிடம் குழந்தையின் பெயரை 'அஷ்ரஃப்' என்று மாற்றி  சில ஆயிரங்களுக்கு விற்றுவிட்டுச் சென்றுவிட்டனர். இந்தக் குழந்தையை அமெரிக்கத் தம்பதியர் சட்டப்படி  தத்தெடுத்துச் சென்றுள்ளனர். இதைப்பற்றியெல்லாம் எதுவும் அறியாத நாங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு போட்டோம்.

With Lawyer Mohana vadivel
With Lawyer Mohana vadivel

நீதிமன்றம் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, நான் மேலே சொன்ன அத்தனை தகவல்களையும் சி.பி.ஐ எங்களுக்குக் கொடுத்தது. இதில் சிக்கல் என்னவென்றால், சுபாஷ் தத்துக்கொடுக்கப்பட்ட அந்தத் தேதியில், 3 குழந்தைகள் வெளிநாட்டு தம்பதிகளுக்குத் தத்துக் கொடுக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மூன்று பேரையும் அந்தந்த நாட்டில் இருக்கிற இந்தியத் தூதரகங்கள், சேவை மனப்பான்மையுள்ள பத்திரிகையாளர்களை வைத்துத் தகவல்களைத் திரட்டினேன். இறுதியாக, புளியந்தோப்பில் காணாமல்போன சுபாஷ், அமெரிக்காவில் 'அவி மாந்தே (manthe)' என்ற பெயரில் வளர்ந்து வருகிறான் என்பது தெரிந்தபோது, பிள்ளைக்கு 13 வயது ஆகிவிட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிள்ளையை ஒரு போட்டோ எடுப்பதற்காக அனுமதிகேட்டோம். அதற்குக்கூட வளர்ப்புப் பெற்றோர் அனுமதிக்கவில்லை. பிறகுதான், சட்டப்படி முயற்சி செய்து டி.என்.ஏ பரிசோதனை செய்து, 'அவி மாந்தே'தான் புளியந்தோப்பில் கடத்தப்பட்ட குழந்தை சுபாஷ் என்பதை உறுதி செய்தோம். இது நடக்கும்போது அந்தச் சிறுவனுக்கு 15 வயது. பொறுமையாகக் காத்திருந்தோம். அவிக்கு 18 வயது ஆனபிறகு, எனக்கு 'ஹாய், ஹலோ, எப்படியிருக்கீங்க' என மெல்ல மெல்ல மெயில் பண்ண ஆரம்பித்தான். நான் அவனுடைய பெற்றோர் பற்றிச் சொன்னேன்'' என நடந்த விஷயங்களை விவரித்தார்.

With family
With family

இதன்பிறகு நம்மிடம் பேசிய நாகேஸ்வரராவ், ''புள்ளையை 20 வருஷம் கழிச்சுப் பார்த்தப்போ, ஏதோ தெய்வத்தைப் பார்க்கிற மாதிரி இருந்துச்சும்மா. மனசுவிட்டுப் பேச மொழிதான் தெரியல. அவன் குழந்தையா இருந்தப்போ விளையாடின பொம்மை, போட்ட டிரெஸ் எல்லாத்தையும் காட்டினோம். அழுதுட்டாரு. 'இப்பதான் டிகிரி முடிச்சிருக்கேன். ரெண்டு வருஷத்துல வேலையில செட்டில் ஆயிடுவேன். உங்கள என்னோட கூட்டிக்கிட்டுப் போயிடுறேன்'னு சொன்னாரு. பிள்ளையைப் பார்த்ததே போதும்மா. இதுக்கு மேல வேற என்னம்மா வேணும்'' என்பவர் குரல் பாசத்தில் உடைகிறது. 

அவி மாந்தே நாளை (வியாழக்கிழமை) இரவு மறுபடியும்  அமெரிக்கா கிளம்பவிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு