பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“உலகத்துலயே சிறந்த அழகி என் மனைவிதான்!”

“உலகத்துலயே சிறந்த அழகி என் மனைவிதான்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“உலகத்துலயே சிறந்த அழகி என் மனைவிதான்!”

பார்வைத்திறன் இருந்து, செவித்திறன் இல்லாதவங்களுக்குத்தான் நார்மல் சைகை மொழி உதவும்.

பார்க்காத காதல், பழகாத காதல் என வித்தியாசமான காதல் கதைகளிலிருந்து தனித்துவமானது மிரண்டா – ரெக்ஸியின் காதல்.

பார்வைத்திறன் மற்றும் செவித்திறன் இல்லாத மிரண்டா, தனக்கிருக்கும் சவால்களையெல்லாம் மீறி, திறமையால் சாதித்தவர். தன் குடும்பத்தையும் வசதியான வாழ்க்கையையும் உதறிவிட்டு, மிரண்டாவைக் கரம்பிடித்திருக்கிறார் ரெக்ஸி. காதல் இவர்கள் இருவரையும் இணைத்திருக்கிறது.

நம் வருகையை அமெரிக்கன் சைகை மொழியில் மிரண்டாவிடம் தெரிவித்தார் ரெக்ஸி. கைகுலுக்கி என்னை வரவேற்ற மிரண்டா, நிதானமாகப் பேசத் தொடங்கினார். “சின்னவயசுல ஓரளவுக்குத்தான் எனக்குச் செவித்திறன் இருந்துச்சு. பலரும் என்னைப் பார்வையற்றவனாக நினைச்சாங்களே தவிர, என் செவித்திறன் பிரச்னையை யாருமே புரிஞ்சுக்கலை. நான் படிக்கிறதுக்கான சிறப்பு வசதிகளும், ஆசிரியர்களும் எந்த ஸ்கூல்லயும் இல்லை. அதனாலயே சென்னையின் பல பள்ளிகளுக்கு மாறி மாறிப் போய்ப் படிச்சேன்.

மிரண்டா – ரெக்ஸியின் காதல்.
மிரண்டா – ரெக்ஸியின் காதல்.

பார்வைத்திறன் இருந்து, செவித்திறன் இல்லாதவங்களுக்குத்தான் நார்மல் சைகை மொழி உதவும். இதுவும் எனக்கு உதவாது! எனவே, சின்ன வயசுல பெரும்பாலும் யாருமே என்கூட பேசமாட்டாங்க. விவரிக்க முடியாத சவால்களையும் வலிகளையும் கடந்துதான் படிச்சேன். ஆனாலும், ப்ளஸ் டூ-ல 83 சதவிகிதம் மார்க் வாங்கினேன். 14 வயதுக்குப் பிறகு படிப்படியா குறைஞ்சு, ஒருகட்டத்துல எனக்குச் செவித்திறனே இல்லாமப்போயிடுச்சு. ஆனாலும், தன்னம்பிக்கையோடு ரெண்டு எம்.ஏ பட்டங்களை முடிச்சேன். பிரத்யேக பாடப் புத்தகங்கள் இல்லாததால, என்னோட சிவில் சர்வீஸ் கனவு வெறும் கனவாகவே போயிடுச்சு.

சரி, அதுதான் கைவிட்டுப் போயிடுச்சுன்னு கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான யு.ஜி.சி தகுதித் தேர்வுக்குத் தயாரானேன். என்னைப் போன்ற செவித்திறன் இல்லாதவங்களுக்குத் தனிக் கேள்வித்தாள் தயாரிக்க வாய்ப்பில்லைன்னு தேர்வுக்குழு சொல்லிட்டாங்க. சென்னை உயர்நீதிமன்றத்துல வழக்கு தொடர்ந்தேன். மூணு வருஷ போராட்டத்துக்குப் பிறகு வெற்றி கிடைச்சுது. அந்தத் தேர்வுல எனக்குக் கொடுக்கப்பட்ட பிரெய்லி கேள்வித்தாள்ல நிறைய தவறுகள். மீண்டும் நீதிமன்றத்துல முறையிட்டேன். 2013-ம் ஆண்டு சாதகமான தீர்ப்பு கிடைச்சுது. அந்தத் தேர்வில் வெற்றிபெற்ற முதல் இந்தியர் நான்தான். ஆனா, இந்த விஷயம் இதுவரை யாருக்குமே தெரியாது. சென்னை நிப்மெட் கல்லூரியில கெளரவ விரிவுரையாளரா ஒரு வருஷம் வேலை செஞ்சேன். பிறகு, கல்லூரியின் புதிய இயக்குநரா பொறுப்பேற்றவர், ‘நீங்க மேற்கொண்டு இங்க வேலை செய்ய மாற்றுத்திறனாளிகளுக்கான கோர்ஸ் ஏதாவது படிக்கணும்’னு உறுதியா சொல்லிட்டார். அதுக்காக பி.எட் (ஸ்பெஷல் எஜுகேஷன்) படிச்சேன். அப்போதான் ரெக்ஸி என் வாழ்க்கைக்குள்ள வந்தார்” - மிரண்டாவின் முகத்தில் வெட்கம் படர்கிறது. ரெக்ஸி உற்சாகமாகப் பேச ஆரம்பிக்கிறார்.

“என் பூர்வீகம் திருச்சி. அப்பா ரயில்வே அதிகாரி. மாற்றுத்திறனாளிகளுக்கு உதவணும்னு பி.எஸ்ஸி (Rehabilitation science) படிச்சேன். ரெண்டாவது வருடம் படிக்கும்போது, நிப்மெட் காலேஜ்ல இன்டர்ன்ஷிப் போனேன். அங்க பி.எட் படிச்சுட்டிருந்த இவருடன் பழகி, இவரது திறமைகளைக் கண்டு வியந்தேன். உள்ளங்கையில் விரலால் எழுதியும் விரல் அசைவுகளாலும் உரையாடுற மிகக் கடினமான அமெரிக்கன் சைகை மொழி இவருக்கு அத்துப்படி. இவர்கூட பழகணுங்கிறதுக்காகவே அந்த சைகை மொழியைக் கத்துக்கிட்டேன். இன்டர்ன்ஷிப் முடிஞ்சதும், இவரைத் தினமும் பார்க்க முடியாத வருத்தத்துடன் திருச்சிக்குப் போனேன். அதேசமயம் தினமும் இ-மெயிலில் உரையாடுவோம்.

ஒருகட்டத்துல நாங்க புரப்போஸ் பண்ணிக் கிட்டோம். ஒருநாள் அவர் குடும்பத்துடன் என் வீட்டுக்கு வந்து பொண்ணு கேட்டார். அப்போதான் அவரோட அப்பா, அக்கா, அண்ணனுக்குப் பார்வைத்திறனும் செவித்திறனும் இல்லேன்னும் அம்மாவுக்குக் காது கேட்காதுன்னும் தெரிஞ்சது. ஆனாலும், இவர் மனசுதான் எனக்கு உயர்வா தெரிஞ்சது. அம்மாவைத் தவிர, என் மொத்தக் குடும்பமும் எங்க காதலை எதிர்த்தாங்க. தொடர்ந்து போராடி, பல பிரச்னைகளுக்கு மத்தியில நிச்சயதார்த்தம் முடிஞ்சு ஒரு வருஷம் எங்க காதல் தொடர்ந்துச்சு. 2018 டிசம்பர்ல நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.

சமீபத்துல வீட்டில் வழுக்கி விழுந்துட்டேன். தடுமாறி நானே எழுந்து, பிறகு அவருக்குத் தெரியப்படுத்தினேன். `என்னால உனக்கு எவ்ளோ கஷ்டம். நிச்சயம் உனக்கு ஒரு நல்ல வாழ்க்கையைக் கொடுப்பேன்’னு அழ ஆரம்பிச்சுட்டார். ஷேவ் பண்றது, குளிக்கிறது, டிரஸ் மாத்திக்கிறது, கடைக்குப் போறது உட்பட இவரின் எல்லா வேலையையும் தானே செய்துப்பார். எனக்கு உடல்நிலை சரியில்லாட்டி, இவரே சமைப்பார். இப்படிக் கல்யாணத்துக்குப் பிறகும்கூட தொடர்ந்து என்னை இம்ப்ரஸ் பண்ணிட்டே இருக்கார்.

மிரண்டா – ரெக்ஸியின் காதல்.
மிரண்டா – ரெக்ஸியின் காதல்.

சவால்கள் மற்றும் புறக்கணிப்புகளைக் கடந்து உரிய கல்வித் தகுதிகளுடன் இருந்தும்கூட இவருக்குச் சரியான வேலை கிடைக்கலை. அந்த வருத்தம் இவரை ரொம்பவே பாதிச்சிருக்கு. அதனால, இப்போ எனக்கு வேலை கிடைச்சும்கூட இவரைத் தனியா விட்டுட்டு நான் வேலைக்குப் போக முடியாத சூழல். அதனால ஒரே இடத்துல இருவருக்கும் வேலை தேடி தினமும் அலையறோம். எங்க கல்வித் தகுதியின் அடிப்படையில அதுக்கு யாராச்சும் உதவினா பயனுள்ளதா இருக்கும்” என்கிறார் ரெக்ஸி ஆதங்கத்துடன்.

புகைப்படம் எடுப்பதற்கு இவர்களின் வீட்டுக்கு அருகிலுள்ள கானத்தூர் கடற்கரைக்குச் சென்றோம். மனைவியின் கரம் பிடித்து நீரில் நடந்தவாறே உற்சாகமாகப் பேசினார் மிரண்டா. “பி.எட் முடிச்சதும், நிப்மெட் காலேஜ்ல எம்.எட் படிக்கச் சொன்னாங்க. அதையும் முடிச்சுட்டேன். யு.ஜி.சி தேர்வுல வெற்றிபெற்ற தகுதியும் இருக்கு. ஆனாலும், என்னோட குறைபாட்டைச் சுட்டிக்காட்டி வேலை தர மறுக்கிறாங்க. இவ்வளவு வருஷமா ஸ்பான்ஸர்ஸ் மூலமாதான் படிச்சேன். இப்போ இந்தியாவின் பல கல்வி நிறுவனங்கள்ல விழிப்புணர்வுக் கருத்தரங்குகள்ல பேசுறேன்.

இதனால் மாதம் சில ஆயிரம் பணம் கிடைக்குது. தவிர, ரெக்ஸியின் குடும்பத்தினர் கொஞ்சம் பண உதவி செய்றாங்க. இவங்க அம்மா மட்டுமே அவ்வப்போது வந்து எங்களைப் பார்ப்பாங்க. இப்போ என் குடும்பத்துலயும் யாரும் எங்களுக்கு ஆதரவா இல்லை. என் குறைபாடுகளைவிடவும், குடும்ப எதிர்ப்புகளை மீறி ரெக்ஸி எடுத்த முடிவுதான் சவாலானது. ரெக்ஸியின் உருவம் எப்படி இருக்கும்னு என் மனசுல கற்பனை செஞ்சு வெச்சிருக்கேன். அதில், இந்த உலகத்துலயே சிறந்த அழகி என் மனைவிதான்” - நெகிழ்ச்சியாகக் கூறும் மிரண்டாவின் தோள்மீது சாய்ந்தவாறு சிரிக்கிறார் ரெக்ஸி.