தேர்வெழுத வந்த தாய்மார்கள், தங்கள் கைக்குழந்தைகளைப் பெண் காவலர்களிடம் ஒப்படைத்துவிட்டுத் தேர்வெழுதச் சென்றனர். பெண் காவலர்கள் அந்தக் குழந்தைகளை அக்கறையுடன் அன்பாகப் பார்த்துக்கொண்டதால், குழந்தைகளும் நிம்மதியாகக் காவலர்களின் கைகளில் சுகமாகத் தூங்கின.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அஸ்ஸாமில் நடந்த இந்த நெகிழ்ச்சிக் காட்சிகளின் புகைப்படம்தான் சோஷியல் மீடியா முழுவதும் தற்போது வைரலாகிக்கொண்டிருக்கிறது.
அஸ்ஸாம் மாநிலத்தில் 'டெட் ' நுழைவுத் தேர்வு சமீபத்தில் நடைபெற்றது. அன்றைய தினத்தில் பலரும் கலந்துகொண்டு தேர்வெழுதினர். தாய்மார்களும் தேர்வெழுதுவதற்காகத் தங்கள் கைக்குழந்தைகளோடு தேர்வு மையத்துக்கு வந்தனர். இங்கேதான் அந்த நெகிழ்ச்சியூட்டும் காட்சிகள் நடைபெற்றன.

தேர்வு மையத்தில் பாதுகாப்புக்கு நின்றிருந்த பெண் காவலர்கள், தேர்வெழுத வந்த தாய்மார்களின் குழந்தைகளைப் பத்திரமாகத் தங்கள் கைகளில் வாங்கிக்கொண்டு, தேர்வு முடியும்வரை அந்தக் குழந்தைகளைத் தாலாட்டித் தூங்க வைத்துள்ளனர். குழந்தைகளும் அழாமல் அவர்கள் கைகளில் நிம்மதியாகத் தூங்கியிருக்கின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தராங் மாவட்டத்தின் தேர்வு மையங்களில் நடந்த இந்த அழகான தருணங்களைப் படம் பிடித்துத் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அஸ்ஸாம் காவல்துறை, 'தாய், பொதுவானவள். நீங்கள் யாரென்பது இங்கே முக்கியமில்லை. தாய்மை, உங்கள் செயல்பாட்டில் அடங்கியுள்ள ஒன்று' எனக் குறிப்பிட்டுப் பதிவு செய்திருக்கிறது.

இந்த ட்விட்டர் பதிவும் புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன. அந்தக் காவலர்களுக்குப் பாராட்டுகளும் அன்பும் குவிகின்றன.
அந்த இரும்புக் கரங்களின் கதகதப்பில் மழலைகள் தூங்கும் காட்சி, அழகு!