Published:Updated:

நிலாச்சோறு, ஃபேமிலி ட்ரீ, கறுப்பு வெள்ளை ஆல்பம்... உறவுகளைக் கொண்டாடுவோம் ஊரடங்கில்!

Family time
Family time

உங்கள் குடும்பத்தில் மெரிட்டில் படித்து முன்னுக்கு வந்த டாக்டர் மாமா பையன், லாயர் சித்தி மகள் போல யாராவது இருந்தால் அவர்களுடன் உங்கள் பிள்ளைகளை வீடியோ காலில் பேச வையுங்கள். இன்ஸ்பிரேஷனாக உணர்வார்கள்!

’கொரோனா நம் மனங்களில் ஏற்படுத்தியிருக்கிற பயத்தைச் சற்றுத் தள்ளி வைத்துவிட்டு யோசித்தால், அது நமக்கெல்லாம், 'உங்கள் வீட்டில் உட்கார்ந்து சற்று ஓய்வெடுங்கள்; உங்கள் குடும்பத்தினருடன் சந்தோஷமாகப் பேசி மகிழ்ந்திருங்கள்’ என ஒரு வாய்ப்பு தந்திருப்பதை உணரலாம்’’ என்கிறார் மனநல மருத்துவர் ஜெயந்தினி. அவரிடம், கொரோனா நமக்களித்துள்ள இந்த விடுமுறையில் குடும்ப உறவுகளை எப்படி மேம்படுத்துவது என்று கேட்டோம்.

Relationship
Relationship

"இவ்வளவு காலமாக வேலை வேலையென்று ஓடிக் கொண்டிருந்ததால், உறவுகளிடமிருந்து உடல்ரீதியாக தள்ளியிருந்தோம். இந்த விடுமுறைக் காலத்தில் அவர்களுடன் இணையம் வழி மனரீதியாக இணைந்திருக்கலாம். கூடவே, நம் வீட்டுக் குழந்தைகளுக்கு நம் அத்தனை உறவினர்களையும் அறிமுகப்படுத்துவதோடு, அவர்களுடைய வயதுக்கு ஏற்றபடி உங்கள் குடும்பத்தின் ஃபேமிலி ட்ரீ பற்றியும் பேசலாம்" என்று உற்சாகமாக உரையாட ஆரம்பித்தார்.

``தனித்தன்மை இல்லாத மனிதர்களே கிடையாது. உங்கள் பாட்டன், பாட்டி, பூட்டன், பூட்டி ஆகியோரைப் பற்றித் தெரிந்தால், அவர்களைப் பற்றி உங்கள் பிள்ளைகளிடம் நிறைய பேசுங்கள். சுதந்திரத்துக்கு முன்னால் பிறந்த உங்கள் முன்னோர்களின் அனுபவங்கள் பற்றி உங்களுக்கு சிறிதே தெரியுமென்றாலும், அவற்றை பிள்ளைகளிடம் கட்டாயம் பகிர்ந்துகொள்ளுங்கள். பழம்பெருமைகளை நம் பிள்ளைகளிடம் பகிர்ந்துகொள்ள இது மிக மிகச் சரியான தருணம்.

மனநல மருத்துவர் ஜெயந்தினி
மனநல மருத்துவர் ஜெயந்தினி

அந்தக் காலத்து காலணா, அரையணா, ஓட்டைக்காலணா, ஓரணா, இரண்டணா போல பழங்கால நாணயங்களைச் சேகரித்து வைத்திருந்தீர்களென்றால், 'காலணாவுக்கு நாலு இட்லி' போன்ற அந்தக் காலத் தகவல்களைப் பிள்ளைகளிடம் சொல்லலாம். கூடவே, அதை முகநூலிலும் பகிரலாம். இந்தக் காசெல்லாம் இல்லையென்றால், 5 பைசா, 10 பைசா, 20 பைசா, 25 பைசா ஆகியவற்றைப் பற்றியாவது பிள்ளைகளிடம் பகிரலாம். முந்தைய தலைமுறைகளின் பொருளாதார நிலைமையை ஃபார்வர்டு வாட்ஸ் அப் மெசேஜ்களில் ரசிக்கிற உங்கள் பிள்ளைகளுக்கு உங்கள் அனுபவங்களையும் சொல்லுங்களேன்.

உறவுகள்
உறவுகள்

இதேபோல, உங்கள் குடும்பத்தில் மெரிட்டில் படித்து முன்னுக்கு வந்த டாக்டர் மாமா பையன், லாயர் சித்தி மகள் போல யாராவது இருந்தால் அவர்களுடன் உங்கள் பிள்ளைகளை வீடியோ காலில் பேச வையுங்கள். இன்ஸ்பிரேஷனாக உணர்வார்கள்.

எல்லார் வீடுகளிலும் இருக்கிற பழைய ஆல்பங்களை தூசி தட்டி எடுக்கவும் இதுதான் நேரம். டஸ்ட் அலர்ஜி இருப்பவர்கள் மாஸ்க் போட்டுக்கொண்டே தூசி தட்டுவது நல்லது. ஆல்பங்களை பிள்ளைகளுடன் புரட்டுங்கள். கூடவே சொந்தங்களின் கதைகளையும்...

ஸ்விகி, ஹோட்டல்ஸ், பிரியாணி என்று சப்புக்கொட்டிக் கொண்டிருந்த நாக்குகள் வீட்டுச் சாப்பாட்டை ருசிக்க ஆரம்பித்துவிட்டதுதானே... அப்படியே மொட்டை மாடியில் நிலாச்சோறு, கையில் பிசைந்துப் போடுவது என்று இரவுகளைக் குடும்பத்துடன் கொண்டாடுங்கள். அப்படியே உங்கள் காதல் கதைகள், அதனால் கிடைத்த நன்மை, தீமைகள் ஆகியவற்றையும் நாசுக்காகப் பகிரலாம். இதன் மூலம் உங்கள் பிள்ளைகளுக்கும் தங்கள் காதலை அடுத்தகட்டத்துக்கு எப்படி நகர்த்தலாம் என்ற தெளிவு கிடைக்கலாம்.

ஊரடங்கும் உறவுகளும்...
ஊரடங்கும் உறவுகளும்...

டிவியும் செல்போனும் இல்லாமலே நீங்கள் சந்தோஷமாக இருந்ததைச் சொல்லுங்கள். கூடவே இளைய தலைமுறையின் பழக்க வழக்கங்கள், பேச்சு வார்த்தைகளை நீங்கள் தெரிந்துக்கொள்வதற்கான வாய்ப்பாக இந்த நாள்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஹேவ் எ ஹேப்பி ஊரடங்கு.’’

144 தடை உத்தரவு... என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது? சில கேள்விகளும் விடைகளும்! #FAQ
அடுத்த கட்டுரைக்கு