Published:Updated:

ஆம்... ஆண்களைப் புரிந்துகொள்வதில்தான் இருக்கிறது இந்நாளின் வெற்றி! #InternationalMensDay

சாண் பிள்ளை என்றாலும் ஆண் பிள்ளை எனக் கொண்டாடுகிறது நம் கலாசாரம். பல பெண் சிசுக்கள் கருவிலேயே அழிக்கப்படுகிறார்கள். அதையும் மீறி பிறந்துவிட்டால், இருக்கவே இருக்கிறது கள்ளிப்பால்.

நவம்பர் 19, 2020... ஒவ்வோர் ஆண்டும் சர்வதேச ஆண்கள் தினமாகக் கருதப்படுகிறது. சுமார் 80 நாடுகளில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

இதன் சரித்திரம்

தாமஸ் ஓஸ்டர் என்பவரால் 1992-ம் ஆண்டு முதல்முறையாக ஆண்கள் தினம் கொண்டாடப்பட்டது. ஆனால், அது 19-ம் தேதி அன்று இல்லை. நவம்பர் மாதமும் இல்லை. பிப்ரவரி மாதம் 7-ம் தேதிதான் அவரால் ஆண்கள் தினமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், டாக்டர் ஜீரோம் டீலுக்சிங் என்பவரால் இது 1999-ம் ஆண்டு இப்போதுள்ள தேதிக்கு மாற்றப்பட்டது.

InternationalMen'sDay
InternationalMen'sDay

காரணம்

ஒருவேளை பிப்ரவரியில் பலர் வேலன்டைன்ஸ் டே பரபரப்பில் மூழ்கியிருப்பார்கள் என்ற நல்ல எண்ணத்தில்தானோ என்னவோ, இவர் தன் தந்தையின் பிறந்தநாளான நவம்பர் 19-ம் தேதிக்கு அதை மாற்றிக் கொண்டாடத் தொடங்கினார்போல.

தவிர 1989-ம் ஆண்டு இதே தினத்தில்தான் வேர்ல்டு கப் கால்பந்துப் போட்டியில் டிரினிடட் மற்றும் தொபேகோ அணிகள் இணைந்து இறுதிச்சுற்றில் இடம்பெறக்கூடிய தகுதியைப் பெற்றுத் தந்தனர். இந்த வெற்றியையும் இணைத்துக் கொண்டாட அவர் செய்த தேர்வுதான் இந்த நாள்.

ஜான் எஃப் கென்னடியின் வார்த்தையில் "ஓர் ஆண் அவன் என்ன செய்ய வேண்டுமோ அதைக் கட்டாயம் செய்து முடிக்கிறான். அதன் விளைவாக அவனுக்கு ஏற்படக்கூடிய தனிப்பட்ட பாதிப்புகள், ஆபத்துகள், அழுத்தங்கள் என்று அனைத்தையும் கடந்தது. காரணம் இதுதான் மனித அறநெறி.

அத்தனையும் சத்தியமான வார்த்தைகள். இந்தக் காரணத்தால்தான் ஒவ்வோர் ஆண்டும் ஆண்கள் நலனைப் பாதுகாக்கும் வகையில் ஒரு விஷயம் அந்த வருடத்தின் முக்கிய கருத்தாக முன் வைக்கப்படுகிறது. 2019-ம் ஆண்டு ஆண்கள் மற்றும் சிறுவர்களின் தற்கொலை, உடல்நலம் தவிர பாலியல் துன்பங்களிலிருந்து பாதுகாப்பு போன்றவை முன்வைக்கப்பட்டன.

Men's Day
Men's Day

சரி, முன்வைக்கப்படும் இத்தகைய கருத்துகள் செயல்படுத்தப்படுகின்றனவா என்பதுதான் கேள்வி. செயல்படுத்தப்படாமல் போகும்போது, இந்தத் தினத்தைக் கொண்டாடுவது அர்த்தமில்லாமல் போகிறது.

அப்படிப் பார்க்கும்போது நாம் தெரிந்துகொள்ள வேண்டியது `November' இயக்கத்தைப் பற்றி. 2003-ம் ஆண்டு மெல்பர்ன் நகரில் இது தொடங்கப்பட்டது. அதன் கொள்கையின்படி நவம்பர் மாதம் முழுவதும் ஆண்கள் மீசை, தாடியை ஷேவ் செய்யாமல் விட்டுவிடுவார்கள். இது ஆண்களின் ஆரோக்கியம் மற்றும் மனநலம் கெடுவதைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை உண்டுபண்ணும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது. சர்வதேச ஆண்கள் தினம் நவம்பர் மாதத்துக்குத் தள்ளி வைக்கப்பட இதுவும் ஒரு காரணம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்போது ஒரு கேள்வி எழலாம். ஆணும் பெண்ணும் சமம் என்று அனைவரும் போராடி வரும்போது, எதற்காக ஆண்களுக்கும் பெண்களுக்கும் தினங்கள் தனித்தனியாகக் கொண்டாடப்படுகின்றன? இது சமூக பாகுபாட்டை அல்லவா ஏற்படுத்துகிறது?

இந்தக் கேள்விக்கு சிவனில் சரி பாதிதான் சக்தி என்பதே பதில். ஆனால், இடதுபக்க உடலும் வலது பக்க உடலும் ஒரே உபாதைகளுக்கா ஆளாகின்றன? இல்லையே. இந்தப் பாகுபாடுகளும் முரண்களும் இயற்கையின் விளையாட்டு. நாம் என்னதான் சரிசமம் என்று வாதாடினாலும் இந்த மாறுதல்கள் இருக்கத்தான் செய்யும்.

InternationalMen'sDay
InternationalMen'sDay

இதை மனதில் நிறுத்தி ஆண்களுக்கும் பாதுகாப்பு, தேவைகள், துன்பங்கள் இருக்கின்றன என்பதை உணர்ந்து, அவற்றை முன்னிலைப்படுத்தவே இந்த சர்வதேச ஆண்கள் தினம்.

சாண் பிள்ளை என்றாலும் ஆண் பிள்ளை எனக் கொண்டாடுகிறது நம் கலாசாரம். பல பெண் சிசுக்கள் கருவிலேயே அழிக்கப்படுகிறார்கள். அதையும் மீறி பிறந்துவிட்டால், இருக்கவே இருக்கிறது கள்ளிப்பால்.

ஆக, இவ்வளவு உயர்த்திப் பேசப்படும் ஆண்களுக்கு நம் நாட்டில் தனியாக எதற்காக ஒரு தினம்?

``உணர்வுகள் இல்லாதவர்கள் அல்ல; வெளிப்படுத்தாதவர்களே ஆண்கள்!" #InternationalMensDay

ஆண் என்ற பெருமை பல நேரங்களில் தலையில் சூட்டப்படும் முள் மகுடமே. ஓர் ஆண் வேலைக்குப் போகாமல் சும்மா வீட்டில் உட்கார முடியாது. அப்படி உட்கார்ந்தால் வெட்டிப்பயல், தண்டச்சோறு போன்ற பல அடைமொழிகள் அவனுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.

இதையே வேறொரு கோணத்தில் இருந்து பார்க்கலாம். இந்தநிலை மேல்மட்ட குடும்பங்களில் மாறி வருகிறது. ஆனால், அடித்தட்டு குடும்பங்களில் இன்னும் நிலை மாறவில்லை. பெண் குழந்தை பிறந்தால் செலவாகவும் ஆண் குழந்தை பிறந்தால் வரவாகவும்தான் பார்க்கிறார்கள். இதனால்தான் பல ஏழைக் குடும்பங்களில் பிள்ளைகளைப் படிக்க அனுப்பாமல் வேலைக்கு அனுப்புகிறார்கள். இவர்களுக்கு அவன் வேலைபார்ப்பது ஒருவேளை கஞ்சி குடிப்பதற்கு உதவுகிறது. பட்டாசு தொழிற்சாலையில் வேலை பார்க்கும் சிறுவர்களே சாட்சி.

School Children
School Children
Aman Shrivastava on Unsplash

தவிர, சிறுமிகளை வேலைக்கு அனுப்புவதைவிடச் சிறுவர்களை அனுப்புவது பாதுகாப்பு என்றும் பார்க்கப்படுகிறது. ஆனால், பாலியல் வன்முறைகள் சிறுவர்களுக்கும் நிகழ்கின்றன. அவை கவனிக்கப்படுவதில்லை மற்றும் பேசப்படுவதில்லை.

சர்வதேச ஆண்கள் தினம் என்பது சிறுவர்களையும் இணைத்ததுதான். அந்தக் கொண்டாட்டம் இன்று ஒருநாளோடு முடிவடையப்போகிறது என்றால் அது தேவையே இல்லை. சிறுவர்களின் பாதுகாப்பு பற்றிய சிந்தனையும் அதைச் செயல்படுத்தும் செயல்களுமே இந்த நாளுக்கு முழுமையான அர்த்தத்தைக் கொடுக்கும்.

பல குடும்பங்களில் ஆண்கள் மட்டுமே குடும்பத்தை நடத்திச் செல்லப் பொறுப்பேற்கிறார்கள். இந்த கொரோனா பேரிடர் காலத்தில், வேலையை இழந்த பலர் படும் மனவேதனை சொல்லி மாளாது. நிறைய தற்கொலைகள், அதற்கான முயற்சிகள், அதைநோக்கிய சிந்தனைகள்...

ஆண்களுக்கான இந்தத் தினத்தில் அவர்களின் மன உளைச்சலையும் வேதனையையும் புரிந்துகொள்ள முயற்சி செய்வோம்.

பிலிப் டான்சர் எனும் ஜெர்மானியர், ஆண்கள் பாதுகாப்பு ஆர்வலர்கள் குழுமத்தில் ஒருவர். இவரின் கருத்துபடி, ஓர் ஆண் என்பவன் மூன்று காரணங்களால் அவ்வாறு கருதப்படுகிறான். வீடு ஒன்று வாங்க வேண்டும், அடுத்து மரம் ஒன்றை நட வேண்டும், கடைசியாகப் பிள்ளை ஒன்றை உருவாக்க வேண்டும்.

InternationalMen'sDay
InternationalMen'sDay

ஆனால், நடைமுறையில் ஓர் ஆணின் பங்கு இவ்வளவுதானா? சமூகத்தில் மகனாக, கணவனாக, தந்தையாகப் பல உருவங்களில் அவன் இயங்க வேண்டியிருக்கிறது. ஒரு நாடகத்தில் நடிக்கிறோம். அதில் நமக்கு கொடுக்கப்பட்டுள்ள கதாபாத்திரத்தைத் திறம்படச் செய்தால் நல்ல நடிகன் என்று பெயர் எடுக்கிறோம். ஆனால், நிஜ வாழ்வில் இப்படி மகனாக, கணவனாக, அண்ணனாக, தம்பியாக, அப்பாவாக எல்லாமாக இருந்து நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பது ஓர் ஆணை எப்பேர்ப்பட்ட மன உளைச்சலுக்கு ஆளாக்கக் கூடும்?

இந்த சர்வதேச ஆண்கள் தினத்தில், ஆண்களுக்கும் பிரத்யேக பிரச்னைகள் இருக்கும் என்பதைப் புரிந்துகொள்வோம். அடுத்து அவற்றைக் குறைப்பதற்கான வழிகளை மேற்கொள்ள முயற்சி செய்வோம். ஆண்கள் தினமோ, பெண்கள் தினமோ ஒரு நாளில் முடிவதில்லை.

ஆண் இல்லாமல் பெண் இல்லை. பெண்ணைப் போற்றுவோம், ஆணையும் காப்பாற்றுவோம்.

- லதா ரகுநாதன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு