லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

ஆண்களைப் புரிந்துகொள்வோம்! - 10 - தோழியா... காதலியா...

ஆண்களைப் புரிந்துகொள்வோம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஆண்களைப் புரிந்துகொள்வோம்

ஓர் உண்மைச் சம்பவத்தைச் சொல்கிறேன். நண்பன் காதலிக்கிறான் என்று தெரிந்ததும் அந்தப் பெண்ணும் சரியென்று தலையாட்டிவிட்டாள்.

ண்களைப் பற்றி பெண்களுக்குப் புரிய வைக்கும் நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் தொடரில் இதுவரை, 'பிளே பாய்ஸ் - சாக்லேட் பாய்ஸ் நல்லவர்களா என்பதில் ஆரம்பித்து, மார்பக ஈர்ப்பு, மனைவியை கை ஓங்குதல், மனைவியைவிட நண்பர்களை அதிகம் நேசிக்கும் கணவர்களின் இயல்பு, ஆண்களின் தாழ்வு மனப்பான்மை, உருகி உருகிக் காதலித்தவன் திருமணத்துக்குப் பிறகு பாராமுகம் காட்டுவதன் காரணம், அம்மாவை நேசிக்கிற அத்தனை ஆண்களும் மனைவியை நேசிப்பவர்களா, வீட்டு வேலைகளை தங்கள் தினசரி கடமையாக ஆண்கள் ஏன் செய்வதில்லை, ஆண்களை முதலில் ஈர்ப்பது பெண்ணின் புற அழகா அல்லது இயல்பா ஆகியவற்றைப் பற்றி விரிவாகப் பேசியிருந்தோம். இந்த இதழில், தோழியை எப்போது காதலியாகப் பார்க்க ஆரம்பிக்கிறார்கள் ஆண்கள் என்பதைத் தெரிந்துகொள்ளவிருக்கிறோம். இதுபற்றி நமக்குச் சொல்லவிருப்பவர் உளவியல் ஆலோசகர் வருண்.

''நெருங்கிய நட்பில் துளிர்க்கிற காதலை பிலியா (philia) என்று உளவியல் சொல்கிறது. இந்தக் காதல் எதிர் பாலினத்துடன் அல்லாமல் ஒரே பாலினத்துடன்கூட ஏற்படலாம். இவர்கள் ஒரே நம்பிக்கைகளைக் கொண்டவர்களாக, ஒத்த சிந்தனையுள்ளவர்களாக இருப்பார்கள். ஒருவர் மீது ஒருவர் மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பார்கள். அதனால் ரகசியங்களைக்கூட பகிர்ந்துகொள்வார்கள். நேசிப்பவரின் குறைகளை அப்படியே ஏற்றுக்கொள்கிற அளவுக்கு மிகுந்த அன்புடன் இருப்பார்கள். இதன் அடுத்த நிலையில் உடல்ரீதியான ஈர்ப்பு வர ஆரம்பிக்கும். இதை 'eros' என்கிறது உளவியல். இதை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு செல்வதை 'pragma' என்போம். காதல் தொடர்ந்து இருப்பதற்காகச் செய்யப்படுகிற முயற்சிகள்தான் 'pragma'. ஆக, ஒரு தோழி காதலியாவது திடீரென ஏற்பட்டு விடாது. பிலியா, எரோஸ், ப்ராக்மா ஆகிய மூன்று நிலைகளில் வளர்ந்துதான் அது காதலாகும். மேலே சொன்ன அறிகுறிகள் உங்கள் நட்பில் இடம்பிடிக்க ஆரம்பித்தால் உங்கள் நண்பன் உங்களைக் காதலிக்கவும் ஆரம்பித்துவிட்டான் என்று புரிந்துகொள்ளலாம்.

ஆண்களைப் புரிந்துகொள்வோம்! - 10 - தோழியா... காதலியா...

நட்பு காதலாக மாறும்போது, உருவம் தாண்டி இயல்புக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும். பெண் முதலில் காதலைச் சொன்னால், அவளை தவறாக நினைக்காது. பிரேக் அப் ஆனாலும் ஆசிட் வீசத் துணியாது. அவளுடைய பிரச்னைகளுக்குக் காது கொடுக்கும். பெண்ணுடைய இடத்திலிருந்து யோசிக்கிற பக்குவம் இருக்கும். இத்தனை பிளஸ் இருந்தாலும், திருமண வாழ்க்கைக்கு முதல் பார்வையில் வருகிற காதலைவிட நட்பில் துளிர்க்கிற காதலே சிறந்தது என்பதை மட்டும் சொல்ல முடியாது. இது நபருக்கு நபர் மாறுபடும் என்பதோடு, இதுதொடர்பான ஆராய்ச்சி முடிவுகள் நம்மிடம் இல்லை. ஆனால், பேசி, பழகி, ஒருவரையொருவர் புரிந்துகொண்டு, பரஸ்பரம் செளகர்யமாக உணர்ந்தபின் திருமணம் செய்துகொண்டால், அந்த உறவில் பிரச்னைகளைத் தாங்குகிற ஷாக் அப்சார்பர் நன்றாக இருக்கும்'' என்று தோழமை காதலாக மாறுவதன் நன்மைகளை அடுக்கியவர், ''தற்காலத்தில் சொல்லப்பட்டு வருகிற பெஸ்ட்டீ கூட பிலியாதான். இதனுடன் எரோஸ், ப்ராக்மா இரண்டும் சேரும்போது அது காதலாகலாம்'' என்கிறார்.

உளவியல் ஆலோசகர் திவ்யபிரபா பேசுகையில், ''தோழியைச் சார்ந்து இருக்க ஆரம்பிப்பது, டேக் இட் ஃபார் கிராண்ட்டடாக தோழியை நடத்துவது, வாழ்க்கையின் முக்கியமான தருணங்களில் தோழி தன்னுடன் இருக்க வேண்டும் என்று விரும்புவது, உடல்ரீதியாக தோழியுடன் நெருக்கம் காட்ட முனைவது போன்றவை, ஓர் ஆண் தன்னுடன் நட்பாக இருக்கிற பெண்ணை காதலிக்க ஆரம்பிக்கிறான் என்பதற்கான அடையாளங்கள். இப்படியொன்று உங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்தால், நண்பனே காதலன் ஆகிவிட்டால் நல்ல கணவனாகவும் இருப்பான் என்று கண்மூடித்தனமாக நம்பிவிடக் கூடாது.

வருண், திவ்யபிரபா
வருண், திவ்யபிரபா

ஓர் உண்மை சம்பவம் சொல்கிறேன். நண்பன் காதலிக்கிறான் என்று தெரிந்ததும் அந்தப் பெண்ணும் சரியென்று தலையாட்டி விட்டாள். ஆனால், திருமணமானதும் நண்பனுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடுவதற்கான உணர்வு அந்தப் பெண்ணுக்கு வரவில்லை. ஆண் மட்டுமே தோழியை காதலியாகப் பார்த்தால் போதாது. பெண்ணும் தோழனை காதலனாகப் பார்த்தால் மட்டுமே அந்த உறவு முழுமையடையும். அதனால், தோழனே என்றாலும் தனக்கு அவன்மீது ஈடுபாடு இருக்கிறதா என்பதை யோசித்து முடிவெடுங்கள். கூடவே, தனக்குக் கணவனாவதற்கும் தன் வீட்டுக்கு மருமகனாவதற்கும் நண்பன் ஏற்றவனா என்பதையும் நிதானித்து முடிவெடுங்கள்'' என்கிறார்.

ஒரு பெண்ணுடன் நிறைவான ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருக்கும்போதும் இன்னொரு பெண்ணிடம் காதல் வயப்படுவது ஏன்... அடுத்த இதழில்

``தோழி மனைவியாகிறது வரம்!’’

சின்னத்திரை பிரபலம் ரியோ

``நம்மளைப் பத்தி எல்லாமே தெரிஞ்ச தோழி மனைவியா அமைஞ்சா அதைவிட வாழ்க்கையில பெரிய கிஃப்ட் இருக்க முடியாதுங்க. நம்ம நிறை, குறை எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டு நம்மோட வாழுறதுக்கு ரெடியா இருக்கிறவங்க, அதுக்கப்புறம் வாழ்க்கையில என்ன நடந்தாலும், எவ்ளோ பெரிய பிரச்னைகள் வந்தாலும் நம்மளை விட்டுட்டுப் போக மாட்டாங்க.

ஆண்களைப் புரிந்துகொள்வோம்! - 10 - தோழியா... காதலியா...

என் காதலை எடுத்துக்கிட்டீங்கன்னா, தோழிதான் காதலியாகி மனைவியுமாகியிருக்காங்க. ஒரு காலேஜ் கல்ச்சுரல்ஸ்ல ரெண்டு பேரும் மீட் பண்ணோம். பேசினோம். ஃபிரெண்ட்ஸானோம். அதுக்கப்புறம் என் ஆபீஸ்ல இன்டர்ன்ஷிப் செய்யுறதுக்காக வந்தாங்க. அதுக்கப்புறம் ஒண்ணாவே ஆபீஸுக்குப் போறது, வர்றது, சாப்பிடுறது, ஆபீஸ்லேயும் ஒண்ணாவே இருக்கிறதுன்னு குளோஸ் ஃபிரெண்ட்ஸா கிட்டோம். அதுக்கப்புறம் என் குடும்பத்தோட அவங்க பழகுறது, அவங்க குடும்பத்தோட நான் பழகுறதுன்னு நட்பு இன்னும் இறுக ஆரம்பிச்சது.

அவங்களுக்கு என்னைப் பார்த்தவுடனே லவ் வந்திருக்கு. நான் அவங்களை ஆரம்பத்துல ஃபிரெண்டாதான் பார்த்தேன். ஆனா, ஏதோ ஒரு புள்ளியில இந்தப் பொண்ணு நமக்கு மனைவியா அமைஞ்சா நல்லாருக்குமேன்னு ஆண்களுக்குத் தோணுமில்லையா... அப்படி எனக்கும் அவங்ககிட்ட தோண ஆரம்பிச்சது. ஆனா, நான் ரொம்ப சாதாரண குடும்பத்துல பொறந்து வளர்ந்தவன். அதனால, மனசுக்குள்ள அவங்க மேல லவ் வந்த பிறகும், ‘இப்போ லவ்வை சொல்ற இடத்துல நாம இல்ல. சொல்ல வேணாம்’கிற மனநிலையில இருந்தேன். அதனால, அவங்களே காதலைச் சொன்னதுக்கப்புறமும், கல்யாணம், குடும்பம்னு பொறுப்புகளை ஏத்துக்க பயமா இருந்ததால சம்மதம் சொல்றதுக்கு நான் கொஞ்சம் டைம் எடுத்துக்கிட்டேன்.

ஒரு கட்டத்துல ‘உனக்கும் அவங்க மேல லவ் இருக்கு. இவங்களைவிட நல்ல பெண் உனக்கு வாழ்க்கையில கிடைக்க மாட்டாங்க’ன்னு மனசு சொல்லுச்சு. அப்புறம்தான் என் காதலைச் சொன்னேன். எங்க நட்புல, எங்க ரெண்டு பேருக்குமே ஒருத்தர் மேல ஒருத்தருக்கு காதல் இருந்ததால இதோ இப்போ எங்க திருமண வாழ்க்கை ரொம்ப நல்லா இருக்கு. நல்ல தோழி மனைவியாகிட்டா நம்ம வாழ்க்கைபூரா அவங்க நமக்கு நல்ல வழிகாட்டியாகவும் இருப்பாங்க. அது ஒரு வரம். அந்த வரம் கிடைச்சவங்க மிஸ் பண்ணிடாதீங்க.’’